TNPSC Thervupettagam

சவாலாகிவரும் நிலத்தடி நீர் சரிவு

June 13 , 2024 18 days 53 0
  • தமிழகத்தில் கடந்த 2023 ஏப்ரல் மாதத்தைவிட இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 26 மாவட்டங்களில் நிலத்தடி நீர் பெருமளவு குறைந்துள்ளது; நீர் கிடைக்கும் ஆழம் அதிகரித்துள்ளது என்ற செய்தி கவலையளிப்பதாக உள்ளது. இதில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் அதிக அளவாக சென்ற ஆண்டைக் காட்டிலும் 9.2 மீட்டரிலிருந்து 10.85 மீட்டர் ஆழத்துக்கு நிலத்தடி நீர் சரிந்துள்ளது.
  • இது தவிர, சேலம் மாவட்டத்தில் 5.62 மீட்டரிலிருந்து 7.83 மீட்டராகவும், திருப்பூரில் 6.08 மீட்டரிலிருந்து 7.63 மீட்டராகவும், பெரம்பலூரில் 6.15 மீட்டரிலிருந்து 9.19 மீட்டராகவும், சென்னையில் 0.5 மீ. என்ற அளவிலும் நிலத்தடி நீர் சரிந்துள்ளதாக தமிழக நீர்வளத் துறையின் அண்மைக்கால ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
  • தருமபுரி, தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் நிலத்தடி நீர் அதிகரித்துள்ளது. இதற்கு காரணம் கடந்த ஆண்டு தென் மாவட்டங்களில் பெய்த பெருவாரியான மழைப்பொழிவே ஆகும். இந்நிகழ்வு நிலத்தடி நீர் உயர்வில் மழையின் முக்கியத்துவத்தையும், நிலத்தடி நீரை உயர்த்த மழை நீர் சேகரிப்பு அவசியம் என்பதையும் நமக்கு உணர்த்துவதாக உள்ளது.
  • சென்னையில் கடந்த ஆண்டு 743.1 மி.மீ. அளவுக்கு பெய்த மழை, இந்த ஆண்டு 613.3 மி.மீ.-ஆக குறைந்துள்ளது. இது கடந்த ஆண்டைவிட 18% குறைவான மழைப்பொழிவு ஆகும். இதனால், நிலத்தடி நீர் வெகுவாக சரியும் ஆபத்து உள்ளது. கங்கை நதியைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் நிலத்தடி நீர் குறைந்து வருவதாக "நேச்சர்ஸ் சயிண்டிஃபிக் ரிப்போர்ட்' ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது.
  • நிலத்தடி நீர் குறைந்து வருவது என்பது அன்றாட நீர் தேவைக்கு மிகுந்த சவாலாக உள்ளது. சராசரியாக தனி நபர் ஒருவருக்கு குடிநீர் உள்பட பிற தேவைகளுக்கு நாளொன்றுக்கு சென்னை போன்ற பெருநகரங்களில் 135 லிட்டரும், நகர்ப்புறங்களில் 90 லிட்டரும், ஊராட்சிப் பகுதிகளில் 70 லிட்டர் தண்ணீரும் தேவைப்படுகிறது.
  • நிலத்தடி நீரின் அளவு குறைவதால் தமிழ்நாட்டில் 544 கூட்டுக் குடிநீர் திட்டங்கள் இருந்தும்கூட, தேவையான அளவுக்கு தண்ணீர் தரமுடியாத நிலை தமிழ்நாடு குடிநீர் வாரியத்திற்கு ஏற்படுகிறது. 2030-ஆம் ஆண்டு வாக்கில் சென்னையைச் சுற்றியுள்ள 1,189 சதுர கி.மீ. பகுதிகளில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் என சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
  • 2030-இல் சென்னையில் குடிநீர் பற்றாக்குறை சுமார் 46 கோடி லிட்டர் என்ற அளவுக்கு இருக்குமெனவும், 2050-ஆம் ஆண்டில் இது சுமார் 96 கோடி லிட்டராக இருக்குமெனவும் நீரியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
  • இந்தியாவின் 140 கோடி மக்களின் நீர்த் தேவைக்கு நிலத்தடி நீரே முக்கிய ஆதாரமாக உள்ளது. உலக அளவில் கால் பங்கு நிலத்தடி நீர் இந்தியர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. நிலத்தடி நீரின் அளவு 2008-முதல் 2010 ஆண்டு வரை பெரும்பாலான நாடுகளில் பெருமளவு குறைந்துள்ளது. இதில் இந்தியாவில் மட்டும் 23% வரை குறைந்துள்ளதாகவும், 2050-க்குள் இந்தியாவிலுள்ள 50 மாவட்டங்களில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் எனவும் உலக வங்கியின் ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது.
  • நிலத்தடி நீர் கிடைக்கும் ஆழம் அதிகரிக்கும்போது அதனுடன் வேதிப் பொருள்கள் கலக்கும் ஆபத்தும் உள்ளது. இது குறித்து கடந்த ஆண்டு மத்திய நிலத்தடி நீர் வாரியம் அளித்த அறிக்கையில், இந்தியாவில் உள்ள 25 மாநிலங்களில் 230 மாவட்டங்களில் ஆர்சனிக், ஃப்ளுரோஸிஸ் போன்ற நச்சு வேதிப் பொருள்கள் நிலத்தடி நீரில் கலந்திருப்பது குறித்து தெரிவித்திருந்தது.
  • இத்தகைய வேதிப் பொருள்கள் கலந்த நீரை அருந்தும்போது மனிதர்களுக்கு புற்றுநோய், நுரையீரல் பாதிப்பு, சிறுநீரகம் தொடர்புடைய நோய்கள் வர வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.
  • இந்தியாவில் நிலத்தடி நீரை உறிஞ்ச பயன்படுத்தும் ஆழ்குழாய் கிணறுகள் தற்போது 3 கோடிக்கும் அதிகமாக உள்ளன. விவசாயத்துக்கு அளிக்கப்படும் இலவச மின்சாரம், குடிநீர் விற்பனை போன்றவை நிலத்தடி நீரை பெருமளவு குறைப்பதாக உள்ளது.
  • நீர்நிலைகளைப் பாதுகாக்க 2007-இல் தமிழக அரசு கொண்டு வந்த சட்டத்தை மீறி பல நீர்நிலைகள் கட்டடங்களாக மாறியுள்ளன. இந்தச் சட்டத்தை கடுமையாக்குவது தற்போது மிக அவசியம். இல்லையென்றால் நிலத்தடி நீர் சேமிப்பு குறித்த அக்கறையும் விழிப்புணர்வும் பொதுமக்களுக்கு இல்லாமல் போகக்கூடும்.
  • தமிழக அரசின் நிலத்தடி நீர் ஒழுங்குமுறைச் சட்டம்-1988 குறித்தான விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்த வேண்டும். இதன்படி விதிமுறைகளை மீறி நிலத்தடி நீரை எடுப்பவர்களுக்கு உரிய அபராதம் விதிக்கலாம் அல்லது உரிமத்தை ரத்து செய்யலாம். இந்த விதிகளை நடைமுறைப்படுத்துவது அவசியம்.
  • நிலத்தடி நீரைப் பராமரிப்பது குறித்து நீரியல் நிபுணர்கள் பொதுமக்களுக்கும், மாணவர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
  • மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் அமைப்பதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. இதன் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். மத்திய நீர்வளத் துறை அமைச்சராக இருந்த கஜேந்திர சிங் ஷெகாவாத் நீர்வள இயக்கம் மழை நீர் சேகரிப்பு 2024 பிரசாரத்தை அண்மையில் தில்லியில் தொடங்கி வைத்தார். இதன் முக்கிய நோக்கம் மகளிர் இயக்கங்கள் வாயிலாக மழைநீர் சேகரிப்பை அதிகரித்து நிலத்தடி நீரை உயர்த்த வேண்டும் என்பதே ஆகும்.
  • நிலத்தடி நீர் போதுமான அளவு இருந்தால் மட்டுமே நீர்நிலைகளில் நீர் தங்கும். அப்போதுதான் நிறைவான தண்ணீர்த் தேவையை நாம் பெற முடியும் என்பதை அனைவரும் உணர வேண்டும்.

நன்றி: தினமணி (13 – 06 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்