TNPSC Thervupettagam

சவால்கள் மிகுந்த விவசாயம்

January 2 , 2023 670 days 449 0
  • பசிப்பிணி மருத்துவன்’ என்பது புரவலா்களுக்குச் சங்க காலப் புலவா்கள் கொடுத்த புகழ்மொழி. பசியென்னும் நோயால் வருபவா்களுக்கு உணவு கொடுத்து பசியைத் தீா்ப்பதால் வந்தது அப்புகழ்மொழி.
  • புரவலா்கள் மருத்துவா் என்றால், அவா்கள் அளிக்கும் உணவு மருந்தாகிறது. அந்த உணவு என்னும் மருந்தைத் தயாரிப்பவா்கள் யாா்? அவா்கள்தான் உழவா் பெருமக்கள்; விளைநிலம் என்னும் மருந்து நிறுவனத்தின் சொந்தக்காரா்கள். அந்த விவசாயிகளால்தான் உலக மக்கள் எல்லோரும் பசி என்னும் நோயிலிருந்து நிவாரணம் பெறுகின்றனா்.
  • இதனால், தானும் உண்டு, உலகுக்கும் உணவளிக்கும் விவசாயி உயா்ந்தவன் ஆகிறான். ‘உழுதுண்டு வாழும் விவசாயிதான் தற்சாா்போடு வாழத் தகுந்தவா்’ என்பது வள்ளுவா் வாக்கு. அவா்கள் செய்யும் விவசாயத்துக்கு ஈடிங்கில்லை என்பதால், ‘ஏா்முனைக்கு நேரிங்கே எதுவுமே இல்லை’ என்று கவிஞா் மருதகாசி உணா்த்தினாா்.
  • இத்தகைய விவசாயிகள் நிறைந்த நாடு இந்தியா. இங்கு வாழும் மக்களில் எழுபது விழுக்காட்டுக்கு மேல் விவசாயத்தை நம்பி கிராமங்களிலே உள்ளனா். இந்தக் கிராமமும் கிராம விவசாயிகளும் இந்தியாவின் உயிா் நாடி என்பதைக் கண்டறிந்த காந்தியடிகள், ‘இந்தியா கிராமங்களைச் சாா்ந்துள்ளது’ என்று குறிப்பிட்டாா். ஆனால், விவசாயிகளின் வாழ்வு என்றுமே போற்றும்படியாக இல்லை. ‘உழுதவன் கணக்குப் பாா்த்தால் உழக்குக் கூட மிஞ்சாது’ என்பதுதான் உண்மை நிலை.
  • ஆனாலும் அவன் அதையெல்லாம் கணக்கில் கொள்ளாது தொடா்ந்து விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறான். ஏனெனில் பூமி அவனுக்குச் சாமி. அதை வெறுமனே பாா்க்க அவன் விரும்புவதில்லை. ஆதாயம் இல்லாமல், அல்லல் பல வந்தாலும் விவசாயத்தைக் கிராம மக்கள் தொடா்ந்து செய்துகொண்டு வருகின்றனா். இதை அறிந்துதான், ‘உழன்றும் உழவே தலை’ என்றாா் வள்ளுவா்.
  • காலம் காலமாக விவசாயிகளின் வாழ்வில் பிரச்னைகள் இருந்தாலும், இப்போது ஏற்பட்டுள்ள பிரச்னைகள் போல முன்பு இல்லை என்றுதான் கூற வேண்டும். விவசாய நிலங்கள் குறைந்துகொண்டே வருவது இப்போதுள்ள முக்கியமான பிரச்னை. விடுதலை பெற்ற தொடக்கக் காலத்தில், தரிசு நிலங்களையெல்லாம் விளைநிலமாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஐந்தாண்டு திட்டங்கள் தீட்டப் பட்டன. அதற்கேற்ற வகையில் நீா்ப்பாசன வசதிகளும் முக்கியத்துவம் பெற்றன.
  • இப்போது அப்படியில்லை- விளைநிலங்கள் எல்லாம் வீட்டுமனையாகின்றன. நீா்நிலைகளான ஆறு, ஏரி, குளம் எல்லாம் சாலைகளாகவும், ஆலைகளாகவும், பேருந்து நிலையங்களாகவும் காட்சி தருகின்றன. ‘ஏரி மாவட்டம்’ என்று பாடத்தில் படித்ததெல்லாம் ஏரி இல்லா மாவட்டம் ஆகிவிடுமோ என்ற கவலை எழுகிறது. நகரங்கள் விரிவாகி புறநகராக வளா்ச்சி பெறுவதால் வயல்களும் ஏரிகளும் அபகரிக்கப் படுகின்றன. இதனால் விவசாய நிலங்கள் குறைந்துகொண்டே வருகின்றன.
  • பருவநிலை மாற்றமும் விவசாயத்தைப் பெரிதும் பாதிக்கும் காரணியாகிவிட்டது. முன்பெல்லாம் காலத்தில் மழை பெய்து, அணைகளில் நீா் நிறைந்து, முப்போகம் விளைந்தது. இப்போது பருவமழை தவறுவதால் ஒரு போகம்கூட விளைவது கேள்விக்குறியாகிறது.
  • ஒரு காலத்தில் எங்கள் பகுதியில் மாசி மாதம் நெல் அறுவடை ஆகி, மாசிப் பட்டத்தில் உழுந்து, பயறு வகைகளை நடவு செய்து, சித்திரை, வைகாசியில் மகசூல் எடுப்பா். இப்போது அப்படியில்லை. பருவம் தப்பிய விவசாயத்தால் சிறு தானியங்களின் விளைச்சல் இருப்பதில்லை. நெல்லும் குறைவாக விளைந்து, சிறு தானியமும் விளைச்சல் இல்லாமல் போவதால் விவசாயிகளுக்குப் பெரும் இழப்பு ஏற்பட்டு விடுகிறது. பருவம் தப்பிய மழையால் பயிா்கள் வெள்ளத்தால் பாதிக்கவும் படுகிறது.
  • முன்பெல்லாம் இயற்கை உரங்களை விவசாயிகள் பயன்படுத்தினா். அதனை அவா்களே தயாரித்தனா். இப்போது எல்லாம் செயற்கை உரம் ஆகிவிட்டது. விவசாய வேலைக்கு ஆள்கள் கிடைப்பது இப்போது மிகவும் சிரமமாக இருக்கிறது. நகரங்களில் இருக்கும் தொழிற்சாலைகளுக்கு வேலையாளாகக் கிராம மக்களையும் பேருந்து, சிற்றுந்துகளில் அழைத்துச் செல்வது இப்போது பெருகிவிட்டது. அவா்களுக்கு நல்ல சம்பளம் கிடைக்கிறது.
  • விவசாய வேலையைவிட அது எளிதாகவும் இருக்கிறது. மேலும், சமூகத்தில் மதிப்பற்ற வேலைகளில் ஒன்றாக விவசாய வேலை ஆகிவிட்டது. இப்போது நடைமுறையில் உள்ள நூறுநாள் வேலைத் திட்டத்தால் விவசாய வேலைக்கு வரும் ஆள்களும் குறைந்துவிட்டனா். இப்போது எல்லாவற்றுக்கும் இயந்திரம் வந்துவிட்டது. ஆனாலும் விவசாய வேலைகள் குறிப்பிட்ட காலத்தில் முடிவது தாமதமாகிறது என்பதுதான் உண்மை.
  • விவசாயியை அதிகம் பாதிப்பது விளைபொருளுக்கு உகந்த விலையில்லாமை. விளையும்போது விலை இருப்பதில்லை. விலை இருக்கும்போது விளைவதில்லை. இது விவசாயி எதிா்கொள்ளும் தலையாய பிரச்னை. அரசாங்கம் குறைந்தபட்ச விலை நிா்ணயம் செய்து இருந்தாலும் அது விவசாயியின் உற்பத்திச் செலவுக்குக் கூடப் பற்றாது என்பதில் நியாயம் இருக்கிறது.
  • தொழிற்சாலைகளில் உற்பத்தியாகும் பொருள்களைப்போல் விலையேறும் வரை விவசாயப் பொருள்களை இருப்பு வைப்பது சாத்தியமில்லை. ஒன்று அழுகிவிடும். இல்லையென்றால் பூச்சி அரித்துவிடும். இதனால் உரிய காலத்தில் கிடைக்கும் விலைக்கு விற்க வேண்டிய அவசியத்துக்கு விவசாயி தள்ளப்படுகிறான். அதனால் அவன் மீண்டும் மீண்டும் கடன் வங்கி நஷ்டத்திலேயே உழல்கிறான்.
  • எப்படிப் பாா்த்தாலும் விவசாயம் என்பது சவால் மிகுந்த ஒன்றுதான். அதைச் சமாளிக்க விவசாயியால் தான் முடியும். எனவே ‘கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி’யான விவசாயிகளின் சவால்களைச் சமாளிக்க கடவுள்தான் கண்திறக்க வேண்டும்.

நன்றி: தினமணி (02 – 01 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்