- லட்சியம் இருந்தால் மட்டுமே இலக்குகளை எட்டிவிட முடியாது. நல்ல விளைவுகளெல்லாம் நம்முடைய செயல்படும் திறன் சார்ந்தவை.
- அப்படிப்பட்டவைதான் சவுதி அரேபியா அரசின் பட்டத்து இளவரசரும் துணைப் பிரதமருமான சல்மான் பின் அப்துலாஜிஸ் பருவநிலை மாற்றம் எனும் அச்சுறுத்தலை எதிர்த்துப் போராடுவதற்கு எடுத்திருக்கும் இரண்டு முன்முயற்சிகள்: ஒன்று, ‘சவுதி பசுமை முன்னெடுப்பு’, இரண்டு, ‘மத்தியக் கிழக்கு பசுமை முன்னெடுப்பு’.
- சவுதி தலைமையில் அந்நாட்டில் நடைபெற்ற ஜி 20 மாநாட்டின் தாரக மந்திரங்களுள் ஒன்று ‘புவிக்கோளைப் பாதுகாப்பது’ ஆகும்.
- கட்டுப்படியாகக் கூடிய, நம்பகமான, பாதுகாப்பான எரிசக்திக்கும் பொருளாதார வளர்ச்சிக்குமான கருவியாகச் சுழற்சி முறை கரிமப் பொருளாதார (சிசிஇ) தளத்தை ஜி20 தலைவர்கள் ஒப்புக்கொண்டனர்.
- பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்குப் பிராந்திய அளவிலான முயற்சிகளை மேற்கொள்ள சவுதி அரேபியா தன்னை ஒப்புக்கொடுத்துள்ளது. மேலும், இந்தத் திசையில் சீராகப் போய்க்கொண்டும் இருக்கிறது.
- சவுதி பசுமை முன்னெடுப்பு பசுமைப் பரப்பை அதிகரித்து, கரிம உமிழ்வைக் குறைத்து, மாசுவையும் மண்ணின் தன்மை சீர்குலைவதையும் தடுத்து, கடலின் உயிர்ச் சூழலைப் பாதுகாக்கவும் உறுதிபூண்டுள்ளது.
- இந்த முன்னெடுப்பின் பகுதியாக சவுதியில் 1,000 கோடி மரங்கள் நடப்படும். உலகளாவிய கரிமப் பங்களிப்பில் 4%-க்கும் மேலாகக் கரிம உமிழ்வைக் குறைப்பதை சவுதி தன் லட்சியமாகக் கொண்டிருக்கிறது.
- 2030-க்குள் சவுதியின் 50% புதுப்பிக்கத் தக்க எரிசக்தியை உருவாக்கும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டத்தின் மூலம் இது சாத்தியப்படும்.
- போதுமான அளவை விடவும் அதிக அளவில் செயல்பட வேண்டியது காலத்தின் தேவை என்பதை உணர்ந்திருக்கும் சவுதி அரேபியா தனது ஒட்டுமொத்த நிலப்பரப்பில் 30%-க்கும் அதிகப் பரப்பை, அதாவது ஏறத்தாழ 6 லட்சம் சதுர கிமீ பரப்பை, பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக மாற்றுவதற்கு முயற்சிகள் மேற்கொண்டிருக்கிறது. இது உலகளாவிய இலக்கான 17%-ஐயும் விட அதிகம்.
- மத்தியக் கிழக்குப் பசுமை முன்னெடுப்பின் ஒரு பகுதியாக, வளைகுடா கூட்டுறவுக் குழு நாடுகளுடனும் பிராந்தியக் கூட்டாளிகளுடனும் சேர்ந்து கூடுதலாக 4 ஆயிரம் கோடி மரங்களை மேற்காசியப் பகுதியில் நடுவதற்கு சவுதி அரேபியா முயற்சிகளை மேற்கொள்ளும். உலக அளவில் ஒரு லட்சம் கோடி மரங்களை நடுதல் என்னும் இலக்கில் இது 4% ஆகும்.
- இதன் மூலம் உலகத்தின் கரிம அளவை 2.5% குறைக்க முடியும். அந்தப் பிராந்தியத்தில் பெட்ரோலிய, எரிவாயு உற்பத்தியால் ஏற்படும் கரிம உமிழ்வை 60% அளவுக்குக் குறைக்கவும், இவ்வகையில் உலக அளவிலான உமிழ்வை 10% குறைக்கவும் தனது நிபுணத்துவத்தை சவுதி அரேபியா தனது பக்கத்து நாடுகளுடன் பகிர்ந்து கொண்டு வருகிறது.
பசுமை யுகம்
- சவுதி அரேபியா தற்போது கரிமப் பிடிப்புக்கும் பயன்பாட்டுக்குமான உலகிலேயே மிகப் பெரிய நிலையத்தை இயக்கிக்கொண்டிருக்கிறது.
- ஆண்டுதோறும் 5 லட்சம் டன்கள் கார்பன் டையாக்ஸைடை உரங்களாகவும் மெத்தனாலாகவும் மாற்றுகிறது. சவுதி அரேபியா மிகவும் மேம்பட்ட எண்ணெய்ப் பிரிப்பு நிலையத்தைக் கொண்டிருக்கிறது. அந்நிலையம் ஆண்டுதோறும் 8 லட்சம் டன்கள் கார்பன் டையாக்ஸைடைப் பிடித்துவைத்துக்கொண்டு சேமித்துவைக்கிறது.
- கூடுதலாகக் கரிமத்தைப் பிடித்துவைக்கவும், அதனை வேறு வகையில் பயன்படுத்தவும், சேகரித்துவைக்கவுமான கட்டமைப்பை உருவாக்கும் முயற்சியில் சவுதி இருக்கிறது.
- கரிமத்தை நீக்குவதில் இயற்கை சார்ந்த தீர்வுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்பதை அது நம்புகிறது. சவுதியின் பட்டத்து இளவரசர் அரசு முறைப் பயணமாக இந்தியாவுக்கு பிப்ரவரி 2019-ல் வந்தபோது சர்வதேச சூரிய சக்திக் கூட்டணியில் சவுதியும் கைகோத்தது.
- இப்படியாக, புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் கூட்டுறவை முன்னெடுத்தது. அதே ஆண்டின் பிற்பகுதியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சவுதிக்கு வந்தபோது புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொடர்பானவை உள்ளிட்ட முக்கியமான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பலவும் கையெழுத்திடப்பட்டன.
- இதே உத்வேகத்தையும் தொடர்ச்சியையும் உறுதிப்படுத்த சவுதி அரேபியா ‘மத்தியக் கிழக்குப் பசுமை முன்னெடுப்பு’ என்ற வருடாந்திர மாநாட்டை நடத்தவிருக்கிறது.
- உலக நாடுகளின் தலைவர்கள், அறிவியலர்கள், சுற்றுச்சூழலியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கும் இந்த மாநாட்டில் அந்த முன்னெடுப்புக்கு எப்படிச் செயல் வடிவம் கொடுப்பது என்பது விவாதிக்கப்படுகிறது.
- இந்தத் திட்டத்தை இந்த ஆண்டின் நான்காவது கால் பகுதியிலிருந்து தொடங்கி அடுத்த இருபது ஆண்டுகளுக்குச் செயல்படுத்துவதுதான் இந்த முன்னெடுப்பின் நோக்கம்.
- தனது நிலப் பரப்புக்குப் பாசன வசதி செய்வதற்குப் போதுமான நிதியாதாரங்கள் இல்லை என்பதையும் உணர்ந்திருக்கும் சவுதி அரேபியா, பிற நாடுகளின் பங்களிப்புடன் சுத்திகரிக்கப்பட்ட நீரைக் கொண்டு பாசனம் செய்வதற்கான புதிய வழிமுறைகள் கண்டறிய விழைகிறது. மேக விதைப்பு போன்ற முயற்சிகளும் இதில் உள்ளடக்கம்.
- 2016-ல் ‘தொலைநோக்குத் திட்டம் 2030’-ஐ சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் அறிமுகப்படுத்தினார். இது சவுதி அரேபிய குடிமக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான முழுமையான வரைபடம் ஆகும். இதன் பகுதியாக, சுற்றுச்சூழல் துறையை முழுமையாக மறுகட்டமைப்பு செய்வதை சவுதி அரேபியா மேற்கொண்டதுடன் 2019-ல் சுற்றுச்சூழல் சிறப்புப் படைகளையும் உருவாக்கியுள்ளது.
- நியோம், தி லைன் ஆகிய நகரங்களின் மூலம் சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழிடங்கள் என்ற கருத்தாக்கத்தை சவுதி ஏற்கெனவே மாற்றியமைத்திருக்கிறது. நியோம் இருக்கும் இடமும் ஹைட்ரஜன் உற்பத்தியில் சவுதி அரேபியாவுக்குப் பல அனுகூலங்களைத் தருகிறது.
- உலக வங்கியைப் பொறுத்தவரை சுற்றுச்சூழலுக்கு உகந்த கட்டமைப்பில் செலவிடப்படும் ஒவ்வொரு டாலரும், நான்கு டாலர்கள் அளவிலான பலன்களைத் தருகிறது. சவுதி பசுமை முன்னெடுப்பு, மத்தியக் கிழக்குப் பசுமை முன்னெடுப்பு ஆகியவற்றின் தொடக்கமானது ஒரு பசுமை யுகத்தின் ஆரம்பத்தைக் குறிக்கிறது.
நன்றி: இந்து தமிழ் திசை (30 - 04 – 2021)