TNPSC Thervupettagam

சவுதியின் புதிய சட்டம் புலம்பெயர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு விடியலை தருமா?

September 16 , 2024 122 days 98 0

சவுதியின் புதிய சட்டம் புலம்பெயர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு விடியலை தருமா?

  • புலம்பெயர்ந்த வீட்டுப் பணியாளர்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் தற்போது சவுதி அரேபிய அரசு கொண்டு வந்திருக்கும் புதிய சட்டம் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. சவுதியில் பிறவகை தொழிலாளர்களுக்கு கிடைக்கும் பாதுகாப்பு வீட்டுப் பணியாளர்களுக்கு கிடைப்பதில்லை. முறைசாரா தொழிலாளர்களாக இருப்பதால் பாதுகாப்பான வேலை சூழ்நிலைகள் அவர்களுக்கு இல்லை; அதிக வேலை, குறைவான ஆண்டு விடுமுறை நாட்கள், குறைவான சம்பளம், பாதுகாப்பின்மை என்று பல நெருக்கடிகளை புலம்பெயர்ந்த வீட்டுப் பணியாளர்கள் எதிர்கொள்கின்றனர்.
  • இந்நிலையில் இந்தச் சூழலை மாற்றி அமைக்கும் வகையில், வீட்டுப் பணியாளர்கள் தொடர்பாக சவுதி புதிய சட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. வளைகுடா நாடுகளில் வீட்டுப் பணியாளர்கள் டிரைவர், சமையல்காரர், தோட்ட வேலை செய்பவர், செவிலியர், தையல்காரர், செக்யூரிட்டிகள், குழந்தைகளை பராமரித்தல், வீட்டை சுத்தம் செய்தல், முதியவர்களுக்கு சேவை செய்தல் என பல்வேறு வகையான வீட்டுப் பணிகள் உள்ளன. வளைகுடா நாடுகளில் பணிபுரியும் மொத்த தொழிலாளர்களில் வீட்டுப் பணியாளர்களின் எண்ணிக்கை 12.3% ஆகும். அங்கு 66 லட்சம் வீட்டுப் பணியாளர்கள் உள்ளனர்.
  • சவுதி அரேபியாவில்தான் அதிக வீட்டுப் பணியாளர்கள் உள்ளனர். அங்கு 39 லட்சம் வீட்டுப் பணியாளர்கள் உள்ளனர். இது சவுதியின் மொத்த தொழிலாளர்களின் எண்ணிக்கையில் 25 சதவீதம் ஆகும். இவர்களில் 27 லட்சம் பேர் ஆண்கள், 12 லட்சம் பேர் பெண்கள். பெரும்பான்மையாக, இந்தியா, பிலிப்பைன்ஸ், வங்கதேசம், இலங்கை ஆகிய நாட்டைச் சேர்ந்தவர்கள் சவுதியில் வீட்டுப் பணியாளர்களாக பணியாற்றுகின்றனர்.
  • சவுதி அரேபியாவில் அதிக அளவில் ஆண்கள் (70%) வீட்டுப் பணியாளர்களாக உள்ளனர். அந்நாட்டில் பெண்கள் வாகனங்கள் ஓட்டுவதற்கு சமீபத்தில் அனுமதி அளிக்கப்பட்டாலும் அதிக அளவில் ஆண்களே டிரைவர்களாக பணிபுரிகின்றனர். ஐக்கிய அரபு நாடுகள் மற்றும் கத்தாரில் ஆண்களை விட அதிக அளவில் பெண்கள் வீட்டு பணியாளர்களாக உள்ளனர். லெபனானில் புலம் பெயர்ந்த பெண் தொழிலாளர்கள் மட்டுமே வீட்டு பணியாளர்களாக பணியமர்த்தப்படுகின்றனர்.

கஃபாலா முறை:

  • சவுதி அரேபியாவில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கஃபாலா முறையின் கீழ் பணியமர்த்தப்படுகிறார்கள். அதன்படி, வெளிநாட்டிலிருந்து தொழிலாளர்களை வேலைக்கு எடுக்கும் ஸ்பான்சர்ஷிப் உரிமையை தங்கள் நாடுகளில் உள்ள கம்பெனிகளுக்கு அல்லது தனி நபர்களுக்கு அந்நாட்டு அரசு வழங்குகிறது.
  • வெளிநாட்டிலிருந்து அழைத்து வரப்படும் பணியாளர்களின் பாஸ்போர்ட், விசா, ஒப்பந்த ஆவணங்கள் அனைத்தையும் ஸ்பான்சர்கள் தங்கள் வசம் வைத்துக் கொள்வார்கள்.கஃபாலா முறை புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு எதிராக இருப்பதாக பொதுவாகவே குற்றச்சாட்டுகள் இருக்கின்றன . இந்த நடைமுறையில் வேலைவாய்ப்பை மாற்றிக் கொள்ளுதல், வேறு இடங்களில் பணிபுரிதல், தாயகத்துக்கு திரும்புதல் ஆகியவற்றுக்காக ஸ்பான்ஸர்களின் அனுமதியைப் பெறுவதில் சிக்கல்கள் உள்ளது.
  • விசா உரிமத்துக்காக அரசாங்கத்துக்கு தாங்கள் செலுத்திய கட்டணங்களை ஸ்பான்சர்கள் பணியாளர்களிடம் வசூலிப்பார்கள். தவறினால் ஊதிய நிறுத்தம் அல்லது ஊதிய குறைப்பு செய்யப்படும். இதனால், சவுதியில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் விஷயத்தில் மனித உரிமைகள் மீறப்படுகின்றன என்ற குற்றச்சாட்டுகள் பரவலாக முன்வைக்கப்பட்டன. இந்நிலையில் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ளும் புலம்பெயர்ந்த வீட்டுப் பணியாளர்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் சவுதி புதிய சட்டத்தைக் கொண்டுவந்துள்ளது.
  • புதிய சட்டத்தின் முக்கிய அம்சங்கள்:
  • சவுதியின் புதிய சட்டத்தில், தினசரி அதிகபட்சமாக 10 மணி நேர வேலை, வாரத்தில் ஒரு நாள் விடுமுறை, பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்கள் பணியாளரிடமே இருக்க வேண்டும், சில விதிமுறைகளுக்கு உட்பட்டு பணியாளர்கள் தங்களின் வேலை ஒப்பந்தத்தை எவ்வித சலுகை இழப்புகளும் இல்லாமல் முறித்துக் கொள்ள அனுமதி, நியாயமற்ற பணி நீக்கங்களுக்கு நஷ்ட ஈடு, ஆண்டுதோறும் சம்பளத்துடன் கூடிய ஒரு மாத விடுமுறை தாயகம் திரும்புவதற்கு உண்டான விமான டிக்கெட் செலவுகளை முதலாளிகள் ஏற்றுக் கொள்ளுதல், சுதந்திரமாக தொடர்பு கொள்ளுதல், பணியாளர்களுக்கான கட்டாய காப்பீடு என புலம்பெயர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு சாதகமான பல புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. சவுதியில் இந்தியர்கள் அதிக எண்ணிக்கையில் பணிபுரிகின்றனர். அந்த வகையில் தற்போது கொண்டுவரப்பட்டிருக்கும் புதிய சட்டம் இந்தியாவைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு பலனுள்ளதாக அமையும்.

புதிய சட்டம் ஏன்?

  • உலகம் பெட்ரோல், டீசல் புதைபடிவ எரிபொருள் பயன்பாட்டிலிருந்து விலகி புதுப்பிக்கத்தக்க எரிபொருள் பயன்பாட்டைக் நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. சவுதியின் பொருளாதாரத்தில் பெட்ரோல் ஏற்றுமதி பங்கு முக்கிய வகிக்கிற நிலையில், சவுதி மாற்று பொருளாதார வாய்ப்பை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.
  • சவுதி வேலைச் சூழலில் வெளிநாட்டினர்களே பிரதான பங்குவகிக்கிற நிலையில், ஊழியர்கள் சார்ந்த விதிமுறைகளை மேம்படுத்த வேண்டிய கட்டாயத்தில் அந்நாடு உள்ளது. குறிப்பாக சர்வதேச தொழிலாளர் அமைப்பின் தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டிய நிர்பந்தம், மனித உரிமை அமைப்புகளின் விமர்சனங்களை தவிர்த்தல், அரேபிய தேசியவாதத்தின் அடிப்படையாக இருக்கக் கூடிய சமூக நீதி மற்றும் தொழிலாளர்கள் உரிமைகள் ஆகியவற்றை நிலை நிறுத்துதல், பிற அரபு நாடுகளையும் தொழிலாளர்கள் பாதுகாப்பினை உறுதிப்படுத்த ஊக்கப்படுத்துதல், புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் சொந்த நாடுகளுடன் தூதரக பதட்டங்களை நீக்கி உறவுகளை மேம்படுத்துதல் ஆகியவற்றை செய்ய வேண்டிய சூழலில் சவுதி உள்ளது. இதன் காரணமாக சவுதி தற்போது வீட்டுப் பணியாளர்கள் சார்ந்து இந்த புதிய சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. முன்னதாக, கடந்த ஜூலை மாதம் புலம்பெயர்ந்த வீட்டுப் பணியாளர்களை ஊதிய பாதுகாப்பு முறையின் கீழ் சவுதி அரசு கொண்டுவந்தது.

சவால்கள்:

  • புதிய சட்டம் நம்பிக்கை அளித்தாலும் சில சிக்கல்கள் தொடரத்தான் செய்கின்றன. பொதுவான தொழிலாளர் சட்டங்களுக்குள் வீட்டுப் பணியாளர்கள் முழுமையாக கொண்டுவரப்படவில்லை. குறைந்தபட்ச ஊதியம், வேலை நேரத்தினை வரையறை செய்தல், கூடுதல் வேலை நேரத்துக்கான ஊதியத்தை கணக்கிட்டு வழங்குவது ஆகியவற்றில் தெளிவின்மை காணப்படுகிறது.
  • புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு நல சட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் இதுவரை சவுதி அரேபியா உறுதியாக இருந்ததில்லை. புதிய சட்டத்தில் உள்ள சலுகைகளை எடுத்துக் கூறி பயன்படுத்துவதற்கு மொழி பிரச்சினை ஒரு மிகப்பெரிய சவாலாக உள்ளது. பிரச்சினைகளை எடுத்துக் கூறும் வகையில் நேரடி தொழிலாளர் ஆய்வுகள் இல்லாமை சிக்கல்களை நீடிக்கவே செய்யும். சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்படும் போது கிடைக்க வேண்டிய பலன்களை பெறுவதற்கு தூதரக உதவிகள் போதுமானதாக இல்லை.

செய்ய வேண்டியவை:

  • சர்வதேச தொழிலாளர் அமைப்பின் தலைமை இயக்குனர் கில்பர்ட் ஹவுன்ங்போ, கடந்த ஆண்டு சர்வதேச வீட்டுப் பணியாளர்கள் தினமான ஜூன் 16-ம் தேதி, “வீட்டுப் பணியாளர்களின் சேவைகள் அங்கீகரிக்கப்படாமல் பாதுகாப்பற்ற நிலையில் நீடிக்கின்றன. வீட்டுப் பணியாளர்களுக்கு கண்ணியமான வேலை பெற்றுத்தராமல் சமூக நீதியை அடைய முடியாது. ஆகவே வீட்டுப் பணியாளர்கள் மாநாட்டின் 189-வது தீர்மானத்துக்கு அனைத்து நாடுகளும் ஒப்புதல் அளிக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார். அவரின் கூற்று நனவாக வேண்டுமெனில் சவுதி தனது சட்ட சீர்திருத்தங்களை உறுதியாக நடைமுறைப்படுத்த வேண்டும். சர்வதேச அமைப்புகளும் பணியாளர்களின் சொந்த நாடுகளும் சவுதி அரசுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தி பணியாளர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (16 – 09 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்