TNPSC Thervupettagam

சாக்ரடீஸ் பேசுகிறார்

August 28 , 2024 139 days 192 0

சாக்ரடீஸ் பேசுகிறார்

  • நீங்களே சொல்லுங்கள். ‘உன்னை நம்பு, நம்பிக்கைதான் எல்லாம்’ என்று சொல்பவர்களை மதிப்பீர்களா அல்லது ‘உன்னை நம்பாதே. நம்பிக்கை அனைத்தையும் பாழாக்கும்’ என்று சொல்பவர்களையா? எனக்குத் தெரிந்து பெரும்பாலான உலகம் நம்பிக்கை அளிப்பவர்களையே நேசிக்கிறது.
  • எந்தக் கரம் உற்சாகத்தோடு முதுகில் தட்டிக்கொடுக்கிறதோ அந்தக் கரத்தையே எல்லாரும் முத்தமிடுகிறார்கள். எந்தக் குரல் இனிப்பாகப் பேசுகிறதோ அதையே எல்லாரும் விரும்பிக் கேட்கிறார்கள். நீ சிறந்தவன், நீ அறிவாளி, நீ திறமைசாலி என்று யார் புகழ்கிறார்களோ அவர்களையே உலகம் மகிழ்ச்சியோடு ஏற்கிறது.
  • நான் உங்களைத் தட்டிக்கொடுக்கப் போவதில்லை. உங்களுக்கு அளிப்பதற்கு இனிப்பான சொற்கள் எதுவும் என்னிடம் இல்லை. உங்களுக்குத் தேவைப்படும் தன்னம்பிக்கையை என்னால் அளிக்க முடியாது. ஒன்று மட்டுமே சொல்வேன் உங்களிடம். உங்களை நம்பாதீர்கள்.
  • உங்கள் மதிப்பெண்களை, உங்கள் பரிசுகளை, உங்கள் பதக்கங்களை, உங்களுக்குக் கிடைத்த பாராட்டுகளை, உங்களுக்குக் கிடைத்த கைகுலுக்கல்களை, உங்களுக்குக் கிடைத்த அங்கீகாரங்களை நம்பாதீர்கள். உங்கள் அறிவையும் புத்திசாலித்தனத்தையும் நம்பாதீர்கள். உங்கள் புத்தகங்களை, உங்களுக்குக் கொடுக்கப்பட்ட போதனைகளை, உங்களுக்குக் கொடுக்கப்பட்ட அறிவுரைகளை நம்பாதீர்கள்.
  • நீங்கள் இன்று பிறந்த குழந்தை என்று நினைத்துக்கொள்ளுங்கள். இன்றுதான் முதல் முறையாகக் கண் திறந்து உலகைக் காண்பதாகக் கற்பனை செய்துகொள்ளுங்கள். மிக மிக அடிப்படையானவை தவிர, உங்களுக்கு எந்தப் பெரிய சொல்லும் தெரியாது. எந்தப் பெரிய பொருளும் தெரியாது.
  • எது குறித்தும் எந்தக் கருத்தும் உங்களுக்கு இல்லை. எது நல்லது, எது கெட்டது, யார் நல்லவர், யார் கெட்டவர், எது சரி, எது தவறு எதுவுமே உங்களுக்குத் தெரியாது. உங்களைச் சுற்றி நடைபெறும் எல்லா உரையாடல்களையும் நீங்கள் இப்போதுதான் கவனிக்க ஆரம்பித்திருக்கிறீர்கள். சரியா?
  • உங்களைச் சுற்றி நடைபெறும் உரையாடல்களை இப்போது கவனியுங்கள். அவர் நல்லவர். இவர் அழகாக இருக்கிறார். அந்த இடம் அருமையாக இருக்கிறது. இது பெரிய தவறு, அப்படி நடந்திருக்கக் கூடாது. இதுதான் இருப்பதிலேயே சிறந்த பள்ளிக்கூடம். இது மோசமான செயல். அவர் அற்புதமான எழுத்தாளர். அவர் பெரிய கடவுள்.
  • இப்படி எல்லாம் நிறைய பேர் உணர்ச்சிகரமாக நிறைய பேசுவார்கள். அவர்களிடம் சென்று பொறுமையாகக் கேளுங்கள். நல்லவர் என்றால் என்ன? அழகு என்றால் என்ன? அருமை என்றால் என்ன? தவறு என்றால் என்ன? சிறந்தது என்றால் என்ன? மோசமானது என்றால் என்ன? அற்புதம் என்பதன் பொருள் என்ன? கடவுள் என்றால் யார்?
  • இதென்ன, இதுகூடவா தெரியாது என்பதுபோல் அவர்கள் உங்களைப் பார்ப்பார்கள். பொறுத்துக்கொள்ளுங்கள். ஆனால், மீண்டும் கேளுங்கள். நல்லவர் என்றால் என்ன, நல்லது செய்பவர் நல்லவர் என்று அவர் சொல்வார். எது நல்லது என்று கேளுங்கள். அவர் தடுமாற ஆரம்பிப்பார்.
  • அழகு என்னும் சின்னஞ்சிறிய சொல்லுக்கு அர்த்தம் கேட்டுப் பாருங்கள். நூறு புத்தகங்களைக் கரைத்துக் குடித்தவர்களாலும்கூட எளிமையாக இந்தச் சொல்லை விளக்க முடியாததைக் காண்பீர்கள். எது அருமை, எது மோசம்? எது சரி, எது தவறு? ஏன் இதை மோசம் என்கிறீர்கள்? ஏன் இன்னொன்றை அற்புதம் என்று கொண்டாடுகிறீர்கள்?
  • சரி, போகட்டும். ஒருவருக்கு அழகாகத் தோன்றும் ஒன்று இன்னொருவருக்கு ஏன் அழகாகத் தோன்றுவதில்லை? சிறந்தவர் என்று சிலர் ஒருவரை அழைக்கிறார்கள். அவரையே மோசமானவர் என்று இன்னும் சிலர் ஒதுக்குகிறார்கள். ஒருவருக்கு நல்ல எழுத்தாளர், இன்னொருவருக்குச் சுமார், வேறாருவருக்கு அலுப்பூட்டுபவர். நீங்கள் நீதி என்று நினைப்பதை இன்னொருவர் அநீதி என்கிறார்.
  • சட்டத்தின் பொருள் உங்களுக்கு ஒன்றாகவும் இன்னொருவருக்கு வேறாகவும் ஏன் மாறுகிறது? எல்லாரும் போற்றும் கடவுளைக்கூட ஏன் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகக் காண வேண்டும்? ஒரே கவிதைக்கு எப்படிப் பல பொருள்கள் இருக்க முடியும்? ஒரே பாடல் எப்படி வெவ்வேறு உணர்வுகளை இருவருக்கு ஏற்படுத்த முடியும்?
  • அப்படியானால் நான் இதுவரை சேர்த்து வைத்திருக்கும் அறிவின் உண்மையான மதிப்பு என்ன? இந்த எளிய சொற்களுக்கே என்னால் விளக்கம் அளிக்க முடியவில்லை என்றால் நான் கற்று வைத்திருக்கும் பெரிய, பெரிய விஷயங்களின் நிலை என்ன? அவை குறித்து எனக்கு உண்மையிலேயே எவ்வளவு தெரியும்? இங்கிருந்து விவாதிக்க ஆரம்பியுங்கள்.
  • நீங்கள் பெற்ற கல்வியை ஆராயுங்கள். உங்களுக்குக் கிடைத்த மதிப்பெண்களை ஆராயுங்கள். உங்களுக்கு வந்து விழுந்த மாலைகளை எல்லாம் கவனமாக நீக்கிவிட்டு, உங்களுக்குக் கிடைத்த ஆகா, ஓகோக்களை எல்லாம் ஒதுக்கித் தள்ளிவிட்டு, நீங்கள் உங்கள்மீது வைத்திருக்கும் அசாத்தியமான நம்பிக்கையைத் துறந்துவிட்டு, உங்களையே கேள்வி கேட்க ஆரம்பியுங்கள். எந்த அடித்தளத்தின்மீது நீங்கள் அனைத்தையும் கட்டி எழுப்பி இருக்கிறீர்களோ அந்த அடித்தளம் ஆட்டம் காண்பதைக் காண்பீர்கள்.
  • அதன் பின் நிறுத்தி நிதானமாகக் கற்க ஆரம்பியுங்கள். கற்க ஆரம்பிக்கும்போதே கேள்வி கேட்கவும் ஆரம்பியுங்கள். கிடைத்த பதிலை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல், அதன்மீது இன்னொரு கேள்வியை வீசுங்கள். எந்த அவசரமும் இல்லை. யாரையும் நீங்கள் முந்த வேண்டியதில்லை.
  • ஒவ்வோர் அடியாக எடுத்து வையுங்கள். உலகம் உங்கள் உள்ளங்கைக்குள் வருமா என்று தெரியாது. ஆனால், எதைக் குறித்தும் உள்ளங்கை அளவுகூட உறுதியாகத் தெரிந்துகொள்ள முடியாது என்பதைத் தெரிந்துகொள்வீர்கள். அந்தக் கணத்தில் உங்கள் கல்வி தொடங்குகிறது.
  • ‘எல்லாம் தெரியும்’ என்று சொல்பவர்களைவிட ‘எதுவும் தெரியாது’ என்று சொல்கிறவர்கள்தான் அதிகம் கற்றுக்கொள்கிறார்கள். - சாக்ரடீஸ், உலகப் புகழ்பெற்ற தத்துவமேதை.

நன்றி: தினமணி (28 – 08 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்