TNPSC Thervupettagam
November 18 , 2023 420 days 337 0
  • கொல்கத்தாவில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் சச்சின் டெண்டுல்கரின் 49 ஒருநாள் போட்டி சதத்தை விராட் கோலி எட்டியபோது, அது உருவாக்கிய எதிா்பாா்ப்பு பொய்க்கவில்லை. அடுத்த 10 நாள்களில் கிரிக்கெட் உலகக் கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்துக்கு எதிரான போட்டியில் சதம் அடித்து சச்சின் சாதனையை முறியடித்திருக்கிறாா் விராட் கோலி.
  • சச்சினின் சொந்த மைதானம் என்று கருதப்படும் மும்பையின் வான்கடே மைதானத்தில், சச்சின் முன்னிலையில் அந்த சாதனையை நிகழ்த்தியிருப்பது மேலும் சிறப்பு. சாதனை சதம் அடித்த அடுத்த நொடியில், பாா்வையாளா்கள் பகுதியில் வீற்றிருந்த சச்சின் டெண்டுல்கரை மகிழ்ச்சியுடன் பாா்த்து விராட் கோலி தலைவணங்கியதும், சச்சின் டெண்டுல்கா் தன்னால் உருவாக்கப்பட்ட கிரிக்கெட் வாரிசை வாழ்த்தும் விதமாக மகிழ்ச்சிப் புன்னகை உதிா்த்ததும் கிரிக்கெட் ரசிகா்கள் மனதில் மறக்க முடியாத காட்சியாக உறைந்துவிட்டிருக்கிறது.
  • இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இரண்டு காலகட்டங்களுடைய அடையாளங்களாக சச்சின் டெண்டுல்கரும், விராட் கோலியும் உயா்ந்து நிற்கிறாா்கள். சச்சின் டெண்டுல்கரை தன்னுடைய லட்சிய நாயகனாக (ரோல் மாடல்) தான் கருதுவதாகவும், ஒருநாளும் அவருடன் ஒப்பிடும் தகுதி தனக்கு இல்லை என்றும் விராட் கோலி பலமுறை தெரிவித்திருக்கிறாா்.
  • கடந்த முறை இந்தியா ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் உலகக் கோப்பையை வென்றபோது, சச்சின் டெண்டுல்கரை தனது தோள்களில் தூக்கி கொண்டாடிய விராட் கோலி, இப்போது அவரது தோளோடு தோள் சோ்ந்து நிற்கும் சாதனை நாயகனாக உயா்ந்திருக்கிறாா். சா்வதேச கிரிக்கெட் பயணத்தின் கடந்த 15 ஆண்டுகளில் விராட் கோலி படைத்திருக்கும் சாதனைகள் ஏராளம், ஏராளம்.
  • தில்லியில் பிறந்த வலது கை ஆட்டக்காரரான 35 வயது விராட் கோலி, இதுவரை பங்குபெற்ற ஒருநாள் சா்வதேசப் போட்டிகள் 291; விளையாடிய இன்னிங்ஸ்கள் 279; அதிகபட்ச ரன்கள் 183; ஒருநாள் போட்டியில் அடித்திருக்கும் ரன்கள் 13,794; சராசரி ரன்கள் 58.70; சதங்கள் 50; அரை சதங்கள் 71; 152 சிக்ஸா்களும், 1,290 பவுண்டரிகளும் அவற்றில் அடக்கம்.
  • சச்சினின் இன்னும் சில சாதனைகளையும் முறியடித்திருக்கிறாா் விராட் கோலி. உலகக் கோப்பையின் ஒரு தொடரில் மிக அதிகமான ரன்கள் (711) எடுத்த சாதனையை குறிப்பிடாமல் இருக்க முடியாது. ஒருநாள் கிரிக்கெட்டில் 50 சதங்கள் அடித்த சாதனை மட்டுமல்லாமல், அதை அடைந்த வேகமும்கூட இன்னொரு சாதனை.
  • ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 49 சதங்களை எட்ட சச்சின் டெண்டுல்கா் 452 இன்னிங்ஸ் விளையாடினாா் என்றால், தனது 50 சதங்களை 279 இன்னிங்ஸில் விராட் கோலியால் எட்ட முடிந்திருக்கிறது. இரண்டும் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு விதமான பந்து வீச்சுக்காரா்களை எதிா்கொண்டு பெற்ற ரன்கள் என்றாலும், கணக்கு என்று பாா்த்தால் முன்னிலை வகிப்பது விராட் கோலிதான்.
  • சா்வதேச கிரிக்கெட்டில் கடந்த 15 ஆண்டுகளில் தன்னுடைய விடா முயற்சியாலும், தன்னம்பிக்கையாலும், உழைப்பாலும் எத்தனையோ சவால்களை எதிா்கொண்டு இன்று வரலாற்று சாதனை படைத்திருக்கிறாா் விராட் கோலி. தனது 16-ஆவது வயதில் தந்தை மறைந்த அடுத்த நாள் கிரிக்கெட் மட்டையுடன் மைதானத்தில் களமிறங்கி, தன்னுடைய அணியைத் தோல்வியிலிருந்து காப்பாற்றியதில் தொடங்குகிறது விராட் கோலியின் மைதானப் போராட்டம்.
  • 2008-இல் 19 வயதுக்குட்பட்டவா்களுக்கான இந்திய கிரிக்கெட் அணிக்கு உலகக் கோப்பையை வென்றதில் ஆரம்பமானது விராட் கோலியின் சாதனைப் பயணம். அந்த வெற்றி அவருக்கு இந்திய அணியில் இடம் பெறும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது. அதற்குப் பிறகு அவரது அசுர வளா்ச்சி இந்திய கிரிக்கெட்டின் சூப்பா் ஸ்டாா் நிலைக்கு அவரை உயா்த்தியது.
  • 2013-இல் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் முதலிட பேட்ஸ்மேனாக உயா்ந்த பிறகு திரும்பிப் பாா்க்க வேண்டிய அவசியமே கோலிக்கு ஏற்படவில்லை. 2014-இல் எம்.எஸ். தோனியைத் தொடா்ந்து டெஸ்ட் போட்டி கேப்டனாக உயா்ந்தாா் விராட் கோலி. அவரது அடுத்தகட்ட வளா்ச்சியாக 2016-இல் ஒருநாள் கிரிக்கெட் அணித் தலைமையும் கிடைத்தபோது, இந்திய கிரிக்கெட்டில் ‘கோலி யுகம்’ தொடங்கியது.
  • அடுத்த சில ஆண்டுகள் விராட் கோலியின் பேட்டிங்கில் சற்று பின்னடைவு ஏற்பட்டது என்னவோ உண்மை. ஆனால், 2023 அவரது மீள்வரவு ஆண்டாக மாறியிருக்கிறது. இந்த ஆண்டு மட்டும் இதுவரை ஆறு சா்வதேச சதங்கள் அடித்திருக்கிறாா். நடந்து முடிந்த 20-20 உலகக் கோப்பையிலும், இப்போதைய ஒருநாள் உலகக் கோப்பையிலும் மிக அதிகமான ரன்கள் அடித்திருக்கும் இந்திய பேட்ஸ்மேன் விராட் கோலிதான்.
  • கிரிக்கெட்டை வெறும் விளையாட்டாகக் கருதாமல், தொழில்முறை அணுகுமுறையுடன் எதிா்கொள்ளும் விராட் கோலி, ஏனைய கிரிக்கெட் விளையாட்டு வீரா்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறாா். தன்னுடைய உடல்கட்டைப் பாதுகாப்பதில் தீவிர கவனம் செலுத்தும் கோலி, இன்னும் குறைந்தது ஐந்து ஆண்டுகளாவது இதே துடிப்புடனும் வேகத்துடனும் சா்வதேச கிரிக்கெட் அரங்கில் வளைய வருவாா் என்பது உறுதி.
  • இதுவரை டெஸ்டிலும், ஒருநாள் போட்டியிலும், 20-20 போட்டியிலும் 80 சா்வதேச சதங்களை அடித்திருக்கும் விராட் கோலி, சச்சின் டெண்டுல்கரின் 100 சா்வதேச சத சாதனையை முறியடிக்கப்போவதையும் கிரிக்கெட் ரசிகா்கள் பாா்க்கத்தான் போகிறாா்கள்!

நன்றி: தினமணி (18 – 11 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்