- ரயில்வே துறையில் முக்கிய முடிவுகளை எடுக்கும் உயர் அதிகார அமைப்பான ரயில்வே வாரியத்தின் தலைவராகவும் தலைமைச் செயல் அதிகாரியாகவும் ஜெயா வர்மா நியமிக்கப்பட்டுள்ளார். 1905இல் அமைக்கப்பட்ட ரயில்வே வாரியத்தின் 118 கால வரலாற்றில் இந்தப் பதவியை வகிக்கும் முதல் பெண் என்கிற பெருமையை ஜெயா பெற்றுள்ளார்.
- வெளிநாட்டுப் போர்ப் பயிற்சியில் ஈடுபட்ட முதல் இந்தியப் பெண் விமானி என்கிற புதிய சரித்திரத்தை அவனி சதுர்வேதி படைத்தார்.
- சியாச்சின் பனிப் பாறைப் பகுதியில் நிலை நிறுத்தப்பட்டுள்ள படைப்பிரிவின் ஒரு முன்னணிப் பதவியில் நியமிக்கப்பட்ட முதல் பெண் கேப்டன் சிவா சௌகான்.
- இந்திய ராணு வத்தின் கேப்டன் சுர்பி ஜக்மோலா, எல்லைச் சாலைகள் அமைப்பின் வெளிநாட்டுப் பணிப் பிரிவில் நியமிக்கப்பட்ட முதல் பெண் அதிகாரி.
- ‘வாயு சேனா’ விருது பெற்ற இந்திய விமானப்படையின் முதல் பெண் அதிகாரி தீபிகா மிஸ்ரா.
- இந்திய விமானப் படை மேற்குப் பிரிவின் முன்னணி போர்ப் பிரிவின் தலைமைப் பொறுப்புக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஷாலிசா தாமி, இந்திய விமானப் படையின் முதல் பெண் கமாண்டர்.
- தமிழகத்தைச் சேர்ந்த முத்தமிழ் செல்வி 8,850 மீட்டர் உயரமுள்ள உலகின் மிகவும் உயரமான எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியில் ஏறிய முதல் தமிழ்ப் பெண்.
- மும்பையைச் சேர்ந்த சுரேகா யாதவ், ‘வந்தே பாரத்’ ரயிலை இயக்கிய முதல் பெண் ஓட்டுநர்.
- ரயானா பர்னவி, விண்வெளிக்குச் சென்ற முதல் சவுதிப் பெண்.
நன்றி: இந்து தமிழ் திசை (31 – 12 – 2023)