TNPSC Thervupettagam

சாதிக்கு எரியூட்டுவோம்

December 24 , 2022 679 days 528 0
  • சுடுகாடு தொடர்பான இரு வழக்குகளில் உயர் நீதிமன்றம் சமீபத்தில் அளித்த தீர்ப்பு நம் கவனம் ஈர்க்கிறது.
  • கள்ளக்குறிச்சி மாவட்டம், மடூர் கிராமத்தில் அருந்ததியர் சாதியினருக்குச் சுடுகாடு அமைக்க நிரந்த இடம் ஒதுக்கக் கோரி இருவர் மனு தாக்கல் செய்திருந்தனர். அம்மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.மகாதேவன் ‘சாதிப் பாகுபாடு இன்றிப் பொதுவிடத்தில் சுடுகாடு அமைக்க இடம் ஒதுக்க வேண்டும்’ என்று அரசுக்கு உத்தரவிட்டார்.
  • மேலும் தம் தீர்ப்பில் ‘ஒவ்வொரு கிராமத்திலும் சாதிப் பாகுபாடு இன்றி அனைவருக்குமான பொதுச்சுடுகாடு அமைக்க வேண்டும்’ எனவும் ‘பொதுச் சுடுகாட்டை அமைத்துள்ள உள்ளாட்சிகளை ஊக்குவிக்கும் வகையில் ஊக்கத்தொகை வழங்க வேண்டும்; விதிகளை மீறிச் செயல்படுவோருக்கு அபராதம் விதிப்பதோடு தண்டனையும் வழங்க வேண்டும்’ எனவும் அரசுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
  • இன்னொன்று சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டத்தைச் சேர்ந்த நாவக்குறிச்சி கிராமத்தில் வண்டிப் பாதையில் அடக்கம் செய்யப்பட்ட உடலைத் தோண்டி எடுக்கும்படி அருகில் உள்ள நிலை உரிமையாளர் தொடர்ந்திருந்த வழக்கு. இதில் தனி நீதிபதி ‘உடலைத் தோண்டி எடுக்க வேண்டும்’ என உத்தரவிட்டிருந்தார். அதன் மேல்முறையீட்டில் நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், குமரேஷ் பாபு ஆகியோரைக் கொண்ட அமர்வு தனி நீதிபதியின் உத்தரவை ரத்துசெய்தது.
  • மதம், சாதி சார்பற்ற அரசாக இருந்தபோதும் சாதிகளுக்குத் தனித்தனிச் சுடுகாடுகளை உருவாக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது வேதனை தருகிறது’ என நீதிபதிகள் குறிப்பிட்டனர். மேலும் ‘படைத்தவனை நோக்கி ஒரு மனிதன் பயணப்படும் போதாவது சமத்துவம் இருக்க வேண்டும்; சுடுகாடுகளை அனைவருக்கும் பொதுவானதாக மாற்ற வேண்டும்’ என்றும் தம் தீர்ப்பில் தெளிவாகக் கூறினர். 

அஞ்சா நெஞ்சன் அழகிரிசாமி

  • நீதிபதி ஆர்.மகாதேவன் தம் தீர்ப்பில் ‘தமிழ்நாட்டில் உள்ள சுடுகாடுகளில் வைக்கப்பட்டுள்ள சாதிப் பெயர்ப் பலகைகளை அகற்ற வேண்டும்’ என அரசுக்கு உத்தரவிட்டார். இச்செய்திகளைப் படித்ததும் பெரியார் தொடர்பான சம்பவம் ஒன்று நினைவுக்கு வந்தது. திராவிட இயக்க முன்னோடித் தலைவர்களுள் ஒருவர் பட்டுக்கோட்டை கே.வி.அழகிரிசாமி (1900 -1949). சுயமரியாதை இயக்கத்தைப் பெரியார் தொடங்கும் முன்னரே பட்டுக்கோட்டையில் ‘சுயமரியாதை சங்கம்’ தொடங்கிப் பிரச்சாரம் செய்துவந்தவர். மிகச் சிறந்த மேடைப் பேச்சாளர். ‘அஞ்சா நெஞ்சன்’ என்று போற்றப்படுபவர். அவர் உரைகளைக் கேட்டு வளர்ந்தவர் கலைஞர் மு.கருணாநிதி. அந்த ஈர்ப்பால்தான் தம் மகனுக்கு ‘அழகிரி’ எனப் பெயர் சூட்டினார். 
  • இத்தகைய பல சிறப்புகளைக் கொண்ட பட்டுக்கோட்டை அழகிரி தம் 49ஆம் வயதில் (28.03.1949) அகால மரணமடைந்தார். அப்போது இரங்கல் தெரிவித்த பெரியார் ‘நண்பர் அழகிரிசாமி முடிவு எய்தியது பற்றி நான் மிகவும் துக்கப்படுகிறேன். அழகிரிசாமி எனக்கு 30 ஆண்டு நண்பரும் என்னை மனப்பூர்வமாய் நிபந்தனை இல்லாமல் பின்பற்றிவருகிற ஒரு கூட்டுப் பணியாளருமாவார். இந்த 30 ஆண்டுக் காலத்தில் என் கொள்கையிலும் திட்டத்திலும் எவ்வித ஆலோசனையும் தயக்கமும் கொள்ளாமல் நம்பிக்கை வைத்து அவைகளுக்காகத் தொண்டாற்றி வந்தவர். கொள்கை வேற்றுமை, திட்ட வேற்றுமை என்பது எனக்கும் அவருக்கும் ஒருநாளும் காண முடிந்ததில்லை. அவருடைய முழு வாழ்க்கையிலும் அவர், இயக்கத் தொண்டைத் தவிர வேறு எவ்விதத் தொண்டிலும் ஈடுபட்டதில்லை. அப்படிப்பட்ட ஒருவர் உண்மையான வீரமும் தீரமும் உள்ளவர் இச்சமயத்தில் முடிவெய்திவிட்டது என்பது எனக்கு மிகவும் வருத்தத்தைக் கொடுக்கிறது என்பதோடு இயக்கத்துக்கும் பதில் காணமுடியாத பெருங்குறை என்றே சொல்லுவேன்’ (தொகுதி 6, கிளர்ச்சிகளும் செய்திகளும் 1, ப.3121) என்று குறிப்பிட்டார்.

இது சூத்திரர்கள் இடம்!

  • அழகிரியின் உடல் தஞ்சாவூர் நகரத்தில் உள்ள சுடுகாட்டில் புதைக்கப்பட்டது. அவரது ஆறாம் ஆண்டு நினைவு நாள் (28.03.1955) அன்று தஞ்சாவூரில் இருந்தார் பெரியார். அழகிரியின் நினைவிடத்தைக் கண்டு மாலையிட்டு அஞ்சலி செலுத்தி வரலாம் என நினைத்துச் சென்றார். அந்தச் சுடுகாடு இரண்டாகப் பிரிக்கப்பட்டிருந்தது. பார்ப்பனர்களுக்குத் தனிப்பகுதி. பார்ப்பனரல்லாதவர்களுக்குத் தனிப்பகுதி.
  • சுடுகாட்டின் பின்புறம் ஓர் ஓரத்தில் பார்ப்பனரல்லாதவர்களுக்கு என ஒதுக்கப்பட்டிருந்த பகுதியில் மைல் கல் போல ஒன்று நட்டு வைக்கப்பட்டிருந்தது. அதில் ‘சூத்திரர்கள் இடம்’ எனச் செதுக்கப்பட்டிருந்தது. சூத்திரர்களுக்கு என ஒதுக்கப்பட்டுப் பெயர்க்கல்லும் வைத்திருந்த அப்பகுதியில்தான் பட்டுக்கோட்டை அழகிரி புதைக்கப்பட்டிருந்தார். அங்கே அவருக்கு நினைவுச் சின்னமும் எழுப்பியிருந்தனர். சூத்திரப் பட்டம் போக வேண்டும் என வாழ்நாள் முழுக்கப் போராடிய தலைவரின் உடல் ‘சூத்திரர்கள் இட’த்தையே அடைந்திருந்ததைப் பெரியார் பார்த்தார்.
  • அதே பகுதியில் நெடும்பலம் சாமியப்ப முதலியாரும் (1896 – 1954) அடக்கம் செய்யப்பட்டு அவருக்கும் நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டிருந்தது. தஞ்சாவூர் மாவட்டம் நெடும்பலம் கிராமத்தைச் சேர்ந்தவர் அவர். 2,500 ஏக்கர் நிலம் கொண்டிருந்த பெருநிலக்கிழார். ஆங்கிலேயர் காலத்துச் சட்டமன்றத்தில் உறுப்பினராக இருந்தவர். செங்கிப்பட்டி என்னும் ஊரில் உள்ள காசநோய் மருத்துவமனைக்கு 210 ஏக்கர் நிலத்தைத் தானமாக வழங்கியவர். ஆங்கிலேய அரசாங்கத்திடம் ‘தனித் திராவிட நாடு’ கேட்டு 1942இல் விண்ணப்பம் தந்த நால்வர் குழுவில் ஒருவர். இறப்புக்குப் பின் அவருக்கும் ‘சூத்திரர்கள் இடமே’ கிடைத்திருந்தது.   

பெரியாரின் வேண்டுகோள்

  • அழகிரியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு வருத்தத்தோடு திரும்பிய பெரியார் ‘சூத்திரர்கள் இடம்’ எனப் பெயர் கொண்ட கல்லைப் பெயர்த்தெடுத்து அப்புறப்படுத்த வேண்டும் எனத் தஞ்சாவூர் நகராட்சிக்கு வேண்டுகோள் விடுக்க முடிவுசெய்தார். தம் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பிய பிறகு ஓர் அறிக்கை மூலமாகத் தஞ்சாவூர் நகராட்சிக்குத் தம் வேண்டுகோளை 05.04.1955 அன்று வைத்தார். ‘பேதச் சின்னத்தை அகற்றுக’ என்னும் தலைப்பில் அமைந்த அவ்வேண்டுகோள் வருமாறு: 
  • ‘1. தஞ்ச நகர புதைகாடு, சுடுகாடு என்பதாக இருக்கும் இடத்தில் பின்புறம் கோடியில் ‘சூத்திரர்கள் இடம்’ என்பதாகக் கல்லில் அடித்து (மைல் கல் போல்) நட்டு இருக்கும் அந்தக் கல்லானது தஞ்சை நகராட்சிக்குச் சேர்ந்ததாயிருந்தால் தஞ்சை நகராட்சி மன்றத்தார் அருள்கூர்ந்து அக்கல்லை அப்புறப்படுத்திவிட வேண்டுமாய் வேண்டிக் கொள்ளுகிறேன்.
  • ஏனெனில் அந்தக் கல் திராவிட மக்கள் இனத்தையே இழிவுபடுத்தும் அறிகுறியாகக் காட்சி அளிக்கிறது. இன்று மக்களுக்குள்ள உணர்ச்சியைப் பொறுத்தும் மனிதத் தன்மையைப் பொறுத்தும் திராவிட நாட்டில் எந்த இடத்திலானாலும் இப்படிப்பட்ட பேதச் சின்னமும் இழிவுச் சின்னமும் பேத நடைமுறையும் இருந்து வருவது சிறிதும் ஏற்கக் கூடியதும் பொறுக்கக் கூடியதும் அல்ல என்றே கருதுகின்றேன்.
  • 2. மேலும் இப்படியாகவும் மற்றும் இதுபோன்ற தன்மையதாகவும் இருந்து வரும் பேதச் சின்னமும் இழிவுச் சின்னமும் நடைமுறையும் தமிழ்நாட்டில் இன்று தஞ்சையில் மாத்திரமல்லாமல் மற்றும் எந்த ஊரில், எந்த நாட்டில் இருந்தாலும் அந்த இடத்தில் உள்ள திராவிடத் தோழர்கள் அருள்கூர்ந்து அரசாங்கத்திற்கும் அந்தந்த இடத்தைச் சேர்ந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் அதை நீக்கிவிடும்படி வேண்டுகோள் செய்து கொள்வதோடு அருள்கூர்ந்து நமக்கும் அவசியம் தெரிவிக்க வேண்டுமாய்ப் பொதுமக்களை வேண்டிக் கொள்ளுகிறேன்.’ (தொகுதி 1, சமுதாயம் 1, ப.66, 67)
  • தஞ்சாவூர் நகராட்சிக்கு மட்டுமல்லாமல், தமிழ்நாட்டில் எங்கே இத்தகைய நடைமுறை இருப்பினும் அதைப் போக்க வேண்டும் எனத் தம் எண்ணத்தைப் பெரியார் வெளிப்படுத்தியுள்ளார். தனிமனிதச் சுதந்திரம், சுயமரியாதை ஆகியவற்றைப் பெரிதும் மதித்தவர் பெரியார். அதேசமயம் சாதி அடிப்படையில் இழிவுபடுத்துவதை எல்லா நிலையிலும் எதிர்த்தவர். சாதி ஒழிப்பின் ஒரு கூறாக அனைத்துச் சாதியினருக்குமான பொதுவிடங்களை உருவாக்குவதைக் கருதி வந்தவர். தனிப் பாதைகளாக இருந்த சாதிப்பாதைகளை எதிர்த்தவர்; பொதுப்பாதைகள் வேண்டும் எனப் போராடியவர். தனிக் கிணறுகள் கூடாது; பொதுக்கிணறுகள் வேண்டும் எனக் கருத்துரைத்தவர். அனைவருக்கும் உரிய பொதுவிடங்களைப் பிரித்துச் சாதிரீதியாக ஒதுக்குவதைத் தொடர்ந்து கண்டித்து வந்தவர். 
  • ‘…கள்ளுக்கடை, வேசி வீடு முதல் கடவுள் சந்நிதானம் என்பது வரையில் தங்களுக்கு வேறு உரிமையும் மற்றவர்களுக்கு வேறு உரிமையும் இருக்க வேண்டுமென்று சொல்லிக் கொண்டு மக்களை வதைத்துக் கொண்டும் இருக்கின்றதுமான அக்கிரமங்கள்..’ 
  • 'கக்கூசுகளில் போர்டு பலகை போட்டு ஆண் பெண்களுக்குப் பிரித்திருப்பது போல் இன்றைக்கும் (1928இல்) அநேக இடங்களில் (போர்டு) பலகை போட்டு ‘பிராமணர்களுக்கு மாத்திரம்' என்று பிரித்திருப்பது சட்டப்பூர்வமா அல்லது பலகைப் பூர்வமா என்று கேட்கின்றோம்’
  • (தொகுதி 1, சமுதாயம் 2, ப.394, 395)
  • இப்படியெல்லாம் இந்தத் ‘தனி’ என்பதைக் கண்டித்து எழுதுகின்றார். 1929இல் சைவர்கள் ஒன்று கூடித் ‘தீண்டத்தகாதவர்கள் என்பவர்களுக்குத் தனிக் கோயில் கட்டிக் கொடுக்க வேண்டும்’ எனத் தீர்மானம் செய்ததைக் கண்டிக்கும் அவர் ‘இந்த மாதிரி வருணாசிரம தருமங்களும் இந்த மாதிரி சைவர்களும் நமது நாட்டில் உள்ளவரை எந்த விதத்தில் பார்ப்பனியம் ஒழிய முடியும்? எந்த விதத்தில் சமத்துவம் உண்டாகும்? எந்த விதத்தில் மக்கள் ஒற்றுமைப்பட்டு மானத்துடன் வாழ முடியும்?’ (மேற்படி, ப.406) என்று கேட்கிறார்.
  • இன்றைய சாதி வித்தியாசத்திற்கு ஆதாரமாயுள்ள ரோடு, கிணறு, பள்ளிக்கூடம், சாவடி முதலியவைகள்…’ (சமுதாயம் 1, ப.140) என்று சாதி வேறுபாடுள்ள இடங்களை வரிசைப்படுத்துபவர் கோயில் நுழைவுப் போராட்டம் பற்றிச் சொல்லும்போது ‘கோயிலில் பிரவேசித்து நாம் செய்யும் ஒவ்வொரு முயற்சியும் சாதி வித்தியாசத்தை ஒழிக்கச் செய்யும் முயற்சியே ஒழிய வேறில்லை’ (மேற்படி) என்று சொல்கிறார். ரோடு, கிணறு, பள்ளிக்கூடம், சாவடி, கோயில் முதலிய இடங்களைப் பொதுவாக்குவது சாதி ஒழிப்பு முயற்சி என்று தெளிவாக்குகிறார்.

முழுமை அடையாத பொதுவிடங்கள்

  • பெரியார் போராடிய ‘பொதுவிடங்கள்’ இன்னும் முழுமையாக அமையவில்லை என்பதையே முன்னர் பார்த்த இரண்டு வழக்குகளும் காட்டுகின்றன. நீதிபதிகள் ‘பொதுச் சுடுகாடு’ அமைக்க வேண்டும் என அரசுக்கு உத்தரவிடும் நிலை இன்று ஏற்பட்டுள்ளதே மிகப் பெரிய முன்னேற்றமாகத் தோன்றுகின்றது. தமிழ்நாட்டுக் கிராமங்களில் பெரும்பாலும் தனிக் கிணறுகள் ஒழிந்துவிட்டன. நீர்த்தேக்கத் தொட்டிகள் கட்டிக் குழாய் மூலம் அனைவருக்கும் நீர் வழங்கும் முறையால் இது சாத்தியாமாகியுள்ளது. ஒரு சாதியினர் குடியிருப்புக்குள் செல்லும் பாதையைப் பிறர் பயன்படுத்தக் கூடாது என்பதும் ஒழிந்தது. அரசுடைமை கொண்டிருக்கும் எந்தப் பாதையிலும் யார் வேண்டுமானாலும் போய் வரலாம் என்னும் பொதுப் பாதை முறை வந்துவிட்டது. 
  • ஆனால், ஒவ்வொரு சாதிக்கும் தனித்தனிக் குடியிருப்பு, தனித்தனிக் கோயில், தனித்தனிச் சுடுகாடு என்றே இன்றும் உள்ளன. இவற்றில் மாற்றம் ஏற்படுவது எளிதல்ல. தனிக்குடியிருப்புகள் ஒழிவது எக்காலமோ? பெரியார் சொன்ன ‘கிராமங்கள் ஒழிய வேண்டும்’ என்பது சாத்தியமானால்தான் தனிக்குடியிருப்புகள் ஒழியக்கூடும். கோயில்களை அரசு எடுத்துக்கொண்டால் பொதுவாக்கலாம்.
  • ஏற்கெனவே, அறநிலையத் துறையிடம் இருக்கும் கோயில்களைத் தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும் என மதவாத சக்திகள் குரலெழுப்பிக்கொண்டிருக்கும் சூழலில் புதிதாக ஒரு கோயிலை அரசு தன் கட்டுப்பாட்டில் கொண்டுவர இயலுமா என்பது தெரியவில்லை. அறநிலையத் துறை சமீபத்தில் எந்தக் கோயிலையும் தன் ஆளுகைக்குள் கொண்டுவரவில்லை. ஆகவே, பொதுக் கோயில் என்பதும் கிராமங்களில் இப்போதைக்குச் சாத்தியமில்லை. இந்நிலையில் பொதுச் சுடுகாடு என்பதை நீதிமன்றம் வலியுறுத்துவதை முக்கியமான முன்னெடுப்பாகக் காணலாம். அது சாத்தியமாகக்கூடியதுதான்.
  • நகரங்களில் பொதுச் சுடுகாடுகள் உள்ளன. மின்மயானம் இருக்கிறது. கிராமங்களிலிருந்து மின்மயானத்திற்குக் கொண்டு செல்ல இயலாது. எடுத்துச் செல்லும் வண்டிக்கும் மின்மயானத்திற்கும் செலுத்த வேண்டிய கட்டணம் மிகுதி. 108 ஆம்புலன்ஸ் இலவசமாகச் செயல்படுவது போல ‘அமரர் ஊர்தி’களையும் இலவசமாக்கி மின்மயானங்களையும் கட்டணமில்லாமல் பயன்படுத்த அரசு வழி செய்தால் நல்லது. அப்போதும் பல கிலோ மீட்டர் தூரத்தைக் கடந்து உடலை எடுத்துவர மக்கள் விரும்ப மாட்டார்கள். கூட்டமாகக் கூடிச் சடங்குகள் செய்வதே வழக்கம் என்பதால் நகரத்திற்கும் கிராமத்திற்கும் இடையேயுள்ள தூரம் எளிதல் கடக்க முடியாதது என்றே சொல்லலாம்.  

அரசுக்குக் கிடைத்திருக்கும் நல்வாய்ப்பு

  • கிராமங்களில் ஒரே ஊரில் ஒவ்வொரு சாதிக்கும் என ஒன்றுக்கும் மேற்பட்ட சுடுகாடுகள் உள்ளன. அதேசமயம் சில சாதிகளுக்குச் சுடுகாடுகளே இல்லை. கிடைக்கும் இடத்தில் புதைக்க வேண்டியிருக்கிறது. சுடுகாடுகள் இருந்தாலும் எளிதில் சென்றடைய முடியாத இடத்தில் உள்ளன. சில கிலோ மீட்டர் சுற்றிச் செல்ல வேண்டியிருக்கிறது. சுடுகாடுகளுக்குச் செல்லப் பாதைகள் கிடையாது. தம் குடியிருப்புப் பகுதிக்குள் உடலை எடுத்துச் செல்லக் கூடாது என ஆதிக்க சாதியினர் தடுக்கின்றனர். உயிருள்ள மனிதர் நடமாடப் பொதுப் பாதைகள் வந்துவிட்டாலும் இறந்த உடல்கள் செல்லப் பொதுப் பாதைகள் இல்லை.
  • சுடுகாட்டுப் பிரச்சினைகள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. இவற்றை நிரந்தரமாகத் தீர்க்கப் ‘பொதுச் சுடுகாடு’தான் ஒரே வழி. ‘படைத்தவனை நோக்கி ஒரு மனிதன் பயணப்படும் போதாவது சமத்துவம் இருக்க வேண்டும்’ என நீதிபதிகள் வேதனைப்படுவதைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. ‘சமரசம் உலாவும் இடம்’ எனத் திரைப்பாடல் சொல்வதை உண்மையாக்க சரியான தருணம் இது. எல்லா உள்ளாட்சிகளிலும் பொதுச் சுடுகாடுகளை அமைக்க அரசு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 
  • கிராமங்களில் இருக்கும் சுடுகாடுகள் எந்தத் தனிமனிதருக்கும் உடைமையானவை அல்ல. எந்தச் சாதியாருக்கும் பட்டாப் போட்டுக் கொடுத்தவை அல்ல. அவை அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் புறம்போக்கு நிலங்கள். ஆகவே, தனிச் சுடுகாடுகள் அமைந்திருக்கும் புறம்போக்கு நிலப்பகுதிகளை அரசு கையகப்படுத்த வேண்டும். அவற்றை அனைத்துச் சாதியாருக்கும் பொதுவான சுடுகாடாக அறிவிக்க வேண்டும்.
  • பொதுச் சுடுகாட்டை ஊராட்சிக்கு ஒன்று அல்லது இரண்டு என மக்கள்தொகைக்கு ஏற்ப அமைத்துவிட்டுக் கூடுதலாக இருக்கும் சுடுகாடுகளைப் புனரமைத்து ஊராட்சிகளின் பிற தேவைகளுக்குப் பயன்படுத்தலாம். பொதுச்சுடுகாடுகளை அமைக்கும் ஊராட்சிகளுக்கு நீதிபதி ஆர்.மகாதேவன் சொல்லியிருப்பதைப் போல ஊக்கத்தொகை வழங்கலாம். அமைக்காத ஊராட்சிகளுக்கு நிதி ஒதுக்க முடியாது எனச் சொல்லலாம். பொதுவிடங்களை உருவாக்குவது சாதி ஒழிப்போடு தொடர்புடையது எனக் கருதிய பெரியாரின் கொள்கையை நடைமுறைப்படுத்த அரசுக்கு இப்போது நல்வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

நன்றி: அருஞ்சொல் (24 – 12 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்