- வரும் 2024 மக்களவைத் தேர்தலில் முக்கிய முழக்கமாக இருக்கப் போகிறது சாதிவாரி கணக்கெடுப்பு. இன்றைக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இதை நாடெங்கும் பேசிக் கொண்டிருந்தாலும் இதற்கு முன்னோடி பிஹார் முதல்வர் நிதிஷ் குமார். எப்படியாவது 2024 தேர்தலில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து கூட்டணி அமைத்து பிரதமர் ஆகிவிட வேண்டும் என்ற அவரது கனவின் முதல்படிதான் சாதிவாரி கணக்கெடுப்பு. வழக்குகள் தடைகளுக்குப் பிறகு ஒருவழியாக கணக்கெடுப்பு முடிவடைந்தது. இந்த முடிவுகளை வெளியிட சரியான நேரத்துக்காகக் காத்துக் கொண்டிருந்தபோதுதான் இடையில் ராகுல் காந்தி இதனைக் கையிலெடுத்து விட்டார். அதனால் அவசர அவசரமாக இதை வெளியிட வேண்டிய கட்டாயம் நிதிஷ்குமாருக்கு. மண்டல் கமிஷன் என்றதும் நினைவுக்கு வருவது வி.பி.சிங். அதுபோலத் தானும் ஆக வேண்டும் என்று கனவு கண்டார் நிதிஷ் குமார். ஆனால் மண்டல் கமிஷனால் பயனடைந்தது முலாயம் சிங் யாதவ், லாலு பிரசாத் யாதவ் போன்றவர்கள்தான். வி.பி.சிங் அதன் பிறகு அரசியலில் அடையாளம் தெரியாமல் போனார் என்பதை நிதிஷ் குமார் மறந்து விட்டார் போல.
- சாதிவாரி கணக்கெடுப்புதான் மக்களிடையே வறுமையைப் போக்கவும் ஏற்றத்தாழ்வுகளை சமன்செய்யவும் ஒரே வழி என்பது போல இங்கே தமிழகத்தில் கூட பல கட்சிகள் கோரிக்கை வைக்கின்றன. ஆனால் சாதிவாரி கணக்கெடுப்பு எப்பேர்ப்பட்ட எதிர்பாராத விளைவுகளை உண்டாக்கப் போகிறது, சமுதாயத்தைப் பிளவுபடுத்தப் போகிறது என்பதைப் பற்றி யாரும் நினைத்துக் கூடப் பார்ப்பதில்லை. தேர்தல் அரசியலும் வாக்கு வங்கியுமே பிரதானமாகத் தெரிகிறது.
- வறுமையில் வாடுகின்ற மக்களுக்கு வாய்ப்புக்கள் கொடுக்கப்பட வேண்டும், அவர்களை வறுமையிலிருந்து மீட்க வேண்டும். இதற்கு அவர்கள் என்ன சாதி என்பது அவசியமா? ஏழைகள் அனைவரையும் முன்னேற்றுவதுதானே ஒரு ஜனநாயக அரசின் கடமையாக இருக்க வேண்டும்? இத்தகைய சாதிவாரி கணக்கெடுப்புகள் என்பது பொருளாதார அளவுகோல்களையும் கணக்கில் எடுத்துக் கொள்கிறது. ஒருவேளை ஒரு குறிப்பிட்ட சாதியினர் பொருளாதார அளவீடுகளிலும் கல்வி வேலைவாய்ப்புகளிலும் பிற சாதியினரை விடவும் அதிகம் முன்னேறியிருப்பதாகத் தெரிந்தால் அவர்களுக்கான இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படுமா அல்லது குறைக்கப்படுமா? வாய்ப்பே இல்லை. ஒருவேளை இன்னொரு குறிப்பிட்ட சாதியினர் பொருளாதாரத்திலும் கல்வி வேலைவாய்ப்புகளிலும் மிகவும் பின்தங்கியிருக்கும் பட்சத்தில் அவர்களுக்கான இடஒதுக்கீடு அதிகரிக்கப்படுமா? அல்லது அவர்களுக்கென தனி உள்ஒதுக்கீடு வழங்கப்படுமா? இதுவும் சிக்கலைத்தான் தோற்றுவிக்கும்.
- சாதிவாரிப் பிரதிநிதித்துவம் என்பதே சாதிவாரி கணக்கெடுப்பு என்ற கோரிக்கையைப் பின்தொடரப் போகிறது. நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு முடிவுகள் வெளிவந்துவிடுகின்றன என்று வைத்துக் கொள்வோம். அதன் பிறகு சாதிவாரிப் பிரதிநிதித்துவம் என்ற கோரிக்கை மிகப்பெரிய அளவில் வலுப்பெறும். இதுதான் சமூகத்தில் பிரச்சினையைத் தோற்றுவிக்கப் போகிறது.
- பிஹாரில் கணக்கெடுப்புக்குப் பிறகு இடஒதுக்கீடு சதவீதம் 65 10 என்று உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உயர்வு பிற்படுத்தப்பட்ட சமுதாயத்துக்கு இடஒதுக்கீடு விகிதத்தை உயர்த்துகிறது. இது உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானது என்பதால் நிச்சயம் வழக்குகளைச் சந்திக்க நேரிடும். ஆனால் விகிதாச்சார இடஒதுக்கீடு என்பதை எத்தனை காலத்துக்குத் தள்ளிப் போட முடியும்? பிஹாரில் யாதவர்கள் தங்களது மக்கள்தொகை சதவீதத்தை விடவும் அதிக அளவில் அரசு அதிகாரங்களில் ஆதிக்கம் செலுத்துகின்றனர் என்ற குற்றச்சாட்டு வலுப்பெற்று வருகிறது. வாக்கு வங்கிக்காக அரசியல் கட்சிகள் வெளிப்படையாக இந்தக் குற்றச்சாட்டுகளைக் கூறாமல் மவுனம் சாதித்தாலும், மக்களிடையே இந்த உணர்வு தலைதூக்கியுள்ளது. இதுதான் சமுதாயத்தைப் பிளவுபடுத்தக் கூடிய அபாயம்.
- தமிழகத்தை எடுத்துக் கொண்டால் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயங்களாக 265 சமூகங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. விகிதாச்சார இடஒதுக்கீடு என்பதை ஏற்றுக் கொண்டால் ஒவ்வொரு சாதிக்கும் எத்தனை சதவீதம் கிடைக்கும்? ஒரு சமுதாயம் 0.75% இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அப்போது அவர்களுக்கு 0.75% மட்டும்தான் இடஒதுக்கீடு கிடைக்குமா? இத்தகைய குழப்பங்களைத் தீர்க்க பல சமுதாயங்களை ஒன்றிணைத்து இடஒதுக்கீடு வழங்கலாமென்றால் அதுதான் ஏற்கெனவே நடைமுறையில் இருக்கிறதே? அப்புறம் எதற்கு இந்தக் கணக்கெடுப்பு?
- சாதிவாரி கணக்கெடுக்குப் பின் விகிதாச்சார இடஒதுக்கீடு என்பதை எண்ணிக்கையில் அதிகமுள்ள சமுதாயங்கள் ஆதரிப்பதும், எண்ணிக்கையில் குறைவாக உள்ள சமுதாயத்தினர் எதிர்ப்பதும் நிகழ்வதைத் தடுக்க முடியுமா? இது ஒட்டுமொத்த சமுதாயத்தில் பிளவை உண்டாக்காதா?
- ஒருவேளை விகிதாச்சார இடஒதுக்கீடு என்பது மக்கள்தொகையின் அடிப்படையில் என்பதை எல்லா சமுதாயத்தினரும் ஏற்றுக் கொண்டால் அது இன்னமும் அதிகமான சிக்கலை உண்டாக்கும். தமிழகத்தில் உள்ள கல்வி வேலைவாய்ப்புகளில் 265 சமுதாயத்தினருக்கும் எப்படி ஒதுக்கீட்டை அமல்படுத்தப் போகிறார்கள்? ஏற்கெனவே பட்டியல் இனத்தவருக்கான இடஒதுக்கீட்டில் ரோஸ்டர் முறை அமலில் உள்ளது. அதுபோல இதற்கும் கொண்டுவரப்பட வேண்டும். ஒரு அரசு அலுவலகத்தில் 100 பேர் தேர்ந்தெடுக்கப்படப் போகிறார்கள் என்றால் அதனை இந்த 265 சமுதாயத்தினருக்கும் எப்படி பிரித்துக் கொடுக்கப் போகிறோம்?
- இதைவிடவும் பெரிய சிக்கல் மத்திய அரசுப் பணிகளில் காத்திருக்கும். ஒரு மாநிலத்தில் உள்ள ஒரு சமுதாயத்தையும் இன்னொரு மாநிலத்தில் உள்ள ஒரு சமுதாயத்தையும் ஒன்றுதான் என்று வகைப்படுத்த எத்தனை பேர் ஒப்புக்கொள்வார்கள்? ஒரே சமுதாயத்திலேயே ஏராளமான உட்பிரிவுகள் இருக்கும்போது இது சாத்தியமில்லாத ஒன்று. பிராமணர்கள் என்று எடுத்துக் கொண்டால் அவர்களுக்குள்ளேயே எத்தனை உட்பிரிவுகள். இதில் தமிழக பிராமணரையும் ஒரு பிஹார் பிராமணரையும் ஒரே வகைக்குள் கொண்டு வர முயன்றால் ஏராளமான காரணங்களைக் காட்டி அதற்கும் எதிர்ப்பு வரலாம். ஆக, ஒட்டுமொத்தமாக இந்தியாவில் சுமார் 5,000 சமுதாயங்கள் இருப்பதாக வைத்துக் கொள்வோம். ஒவ்வொரு சமுதாயத்துக்கும் அவர்களது மக்கள் தொகைக்கேற்ப இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டுமென்றால் எவ்வளவு குழப்பங்களை உருவாக்கும் என்பது புரிகிறதா?
- தமிழகத்தில் ஏற்கெனவே வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு என்ற கோரிக்கை பல காலமாக வைக்கப்பட்டு வந்தது. கடந்த அதிமுக ஆட்சியில் 10.5% வழங்கப்பட்டு பிறகு அது ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டால் அது நிச்சயம் விகிதாச்சார இடஒதுக்கீடு என்ற கோரிக்கையைப் பலப்படுத்தும்.
- நாடெங்கும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முழக்கமிடும் ராகுல் காந்தி, கர்நாடகத்தில் அந்த அறிக்கையை வெளியிட முயற்சி செய்யாதது ஏன்? எந்தெந்த சமுதாயத்தினர் மிகவும் பின்தங்கியுள்ளனர் என்பதை கண்டறிந்து அவர்களை முன்னேற்றுவதற்காகவே இந்தக் கணக்கெடுப்பு என்று கூறினால், கல்வி வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ள அனைத்து மக்களை யும் முன்னேற்றுவதுதானே ஒரு சாதி சமய வேறுபாடுகளற்ற அரசின் கடமையாக இருக்க வேண்டும்? அது மட்டுமன்றி, மிகவும் பின்தங்கியிருப்பதாகக் கண்டறியப்பட்ட ஒரு சில சமுதாய மக்களை முன்னேற்ற சிறப்பு நடவடிக்கைகள் எடுத்தால் மற்ற சமுதாயத்தினர் எங்களுக்கும் அது போன்ற நடவடிக்கைகள் வேண்டும் என்று கேட்டால் அதனை மறுக்க முடியுமா? எல்லோருக்கும் அதே நடவடிக்கைகள் என்றால் பிறகு கணக்கெடுப்பு எதற்கு?
- ஒருவேளை பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் எத்தனை சதவீதம் இருக்கின்றனர் என்று கண்டறிந்து அவர்களுக்கான இடஒதுக்கீட்டை உயர்த்தும் முயற்சி என்றால் அதற்கு சாதிவாரி கணக்கெடுப்பு தேவையே இல்லையே? இத்தகைய கணக்கெடுப்பு இல்லாமல்தானே தமிழகத்தில் 69% இடஒதுக்கீட்டை அமல்படுத் தினார் அன்றைய முதல்வர் ஜெயலலிதா.
- ஆக, எந்த வகையில் பார்த்தாலும் சாதிவாரி கணக்கெடுப்பு என்பது ஒரு சில எதிர்க்கட்சிகளின் ஆட்சியைப் பிடிக்கும் தந்திர மேயன்றி மக்களுக்கு நன்மை செய்வதற் கானது அல்ல.
நன்றி: இந்து தமிழ் திசை (27 – 11 – 2023)