TNPSC Thervupettagam

சாதிவாரிக் கணக்கெடுப்பைத் தள்ளிப் போடக் கூடாது

July 30 , 2021 1098 days 479 0
  • மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த ராய், மக்களவையில் கேள்வியொன்றுக்கு எழுத்துபூர்வமாக அளித்த பதிலிலிருந்து, பட்டியல் சாதியினருக்கும் பழங்குடியினருக்கும் மட்டுமே சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று தெரிகிறது.
  • சாதிவாரிக் கணக்கெடுப்பின் வாயிலாகத் தங்களது இடஒதுக்கீட்டு உரிமையைச் சட்டரீதியாக உறுதிசெய்துகொள்ள முடியும் என்று எண்ணியிருந்த பிற்படுத்தப்பட்டோர் சமூகங்களிடம் இது கடுமையான ஏமாற்றத்தை உருவாக்கியுள்ளது.
  • பிற்படுத்தப்பட்டோர் சமூகங்களின் மக்கள்தொகை குறித்த தகவல்கள் ஒன்றுக்கொன்று முரணாக இருப்பதால், அவர்களது சமூகநீதிக் கோரிக்கைகள் பலவீனமடையும் வாய்ப்பும் உள்ளது.
  • இடஒதுக்கீட்டின் விகிதாச்சாரம் குறித்து உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்காகக் காத்திருக்கும் பல வழக்குகளில் சாதிவாரிக் கணக்கெடுப்பு அறிவியல்பூர்வமான சான்றுகளாக அமைந்து தீர்வுகளை அளிக்க உதவக்கூடும் என்பதால், அதை மீண்டும் ஒருமுறை தள்ளிப்போடக் கூடாது.
  • மக்கள்தொகைக் கணக்கெடுப்பு குறித்து 2019 மார்ச் மாதமே அறிவிக்கப்பட்டு விட்டாலும் பெருந்தொற்று காரணமாக அப்பணிகள் ஒத்திவைக்கப்பட்டிருந்தன.
  • தற்போது பெருந்தொற்றின் வேகம் குறைந்திருப்பதையொட்டி கணக்கெடுப்பு தொடங்கப் படவுள்ளது.
  • பட்டியல் சாதியினருக்கும் பழங்குடியினருக்கும் அவர்களின் எண்ணிக்கைக்கேற்ப மக்களவையிலும் மாநிலச் சட்டமன்றங்களிலும் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் அவர்களுக்கு மட்டும் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப் படவுள்ளதாக உள்துறை இணையமைச்சர் தனது பதிலில் தெரிவித்துள்ளார்.
  • 2011-ல் சாதிவாரிக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டதாகச் சொல்லப்பட்டாலும் அது குறித்த எந்த விவரங்களும் வெளியிடப்படவில்லை.2021-ல் சாதிவாரிக் கணக்கெடுப்பையும் சேர்த்தே நடத்த வேண்டும் என்று மஹாராஷ்டிரம், ஒடிஷா போன்ற மாநிலங்கள் கோரிக்கை விடுத்திருந்ததாக உள்துறை இணையமைச்சரின் பதிலிலேயே கூறப்பட்டுள்ளது.
  • அமைச்சரின் இந்தப் பதிலுக்குப் பிறகு, மத்திய அரசின் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு பாஜக கூட்டணியில் இருப்பவரும், பிஹார் முதல்வருமான நிதீஷ் குமார் கோரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
  • தமிழ்நாட்டிலும், பாஜகவின் கூட்டணியில் உள்ள அதிமுக, பாமக ஆகிய கட்சிகள் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்திவருகின்றன.
  • அதிமுக ஆட்சிக்காலத்தில் சாதிவாரியாகப் புள்ளிவிவரங்களைச் சேகரிக்க ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி குலசேகரன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது.
  • என்றாலும், இவ்வாறு தனித்தனியாகத் திரட்டப்படும் புள்ளிவிவரங்களைக் காட்டிலும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக அவற்றைத் திரட்டுவது இன்னும் எளிதானது. சாதிவாரிக் கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த முன்வராத பட்சத்தில் மாநில அரசுகள் தாங்களே அதை நடத்த வேண்டும் என்றும் விவாதிக்கப்படுகிறது.
  • மக்கள்தொகைக் கணக்கெடுப்புப் பணியானது பெரும் எண்ணிக்கையிலான மனித சக்தியையும் கட்டமைப்பையும் வேண்டுவது. மேலும், மாநிலக் கட்சிகள் தங்களது வாக்கு அரசியலுக்காகச் சமரசங்கள் செய்துகொள்ளவும் நேரலாம்.
  • எனவே, மக்கள்தொகைக் கணக்கெடுப்புப் பணியில் முன்னனுபவம் பெற்ற மத்திய அரசு அதை நடத்துவதுதான் சரியானது... நம்பகமானதும்கூட.

நன்றி: இந்து தமிழ் திசை (30 - 07– 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்