TNPSC Thervupettagam

சான்றிதழ் சரிபார்ப்பு: பழங்குடியினருக்குப் பாரம் ஆகலாமா?

November 18 , 2024 62 days 83 0

சான்றிதழ் சரிபார்ப்பு: பழங்குடியினருக்குப் பாரம் ஆகலாமா?

  • அரசுத் துறையிலோ, பொதுத் துறை நிறுவனங்களிலோ 30-35 ஆண்டுகள் பணியாற்றிவிட்டு ஓய்வுபெறும் நாளில், ‘உங்களின் சான்றிதழ் மெய்த்தன்மை குறித்த விசாரணை நிலுவையில் இருக்கிறது. எனவே, உங்களுக்கு ஓய்வுகாலப் பலன்களோ, ஓய்வூதியமோ வழங்குவது நிறுத்திவைக்கப்படுகிறது’ என்று சொன்னால் எப்படி இருக்கும்? இப்படி ரயில்வே, வங்கி, காப்பீட்டு நிறுவனம், துறைமுகம், இந்திய உணவுக் கழகம், மத்திய-மாநில அரசுப் பணி எனப் பல்வேறு துறைகளில் பணியாற்றிய ஆயிரக்கணக்கான பட்டியல் பழங்குடி ஊழியர்கள் தமிழ்நாட்டில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • பழங்குடியினர் அல்லாதவர்கள் போலியாகப் பழங்குடிச் சான்றிதழ் பெற்றுப் பணியில் சேர்ந்திருந்தால் அவர்களைக் களையெடுப்பது அவசியம்தான். ஆனால், அனைவரையுமே சந்தேகத்துக்கு உரியவர்களாகக் கருதி விசாரணைக்கு உட்படுத்துவது சரியா என்பதுதான் இப்போது எழுந்திருக்கும் கேள்வி.
  • தமிழ்​நாட்டின் வரலாற்றுப் பெருமை:
  • ‘கம்யூனல் ஜி.ஓ.’ என்று பிரபல​மாகப் பேசப்​படும் வகுப்பு​வாரிப் பிரதி​நி​தித்துவம் 1928இல் நீதிக்​கட்சி ஆட்சியில் சட்டமாக்​கப்​பட்டது. இதை எதிர்த்து, உயர் நீதிமன்​றத்தில் வழக்கு நடைபெற்று ‘கம்யூனல் ஜி.ஓ. கல்வித் துறையில் செல்லாது’ என்று தீர்ப்​பு அளிக்​கப்​பட்டது, உச்ச நீதிமன்​றமும் அதை உறுதி​செய்தது.
  • இதையடுத்து, அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்று பெரும் போராட்டம் நடைபெற்றது. அரசமைப்புச் சட்டத்தில் இடஒதுக்கீடு என்கிற அம்சம் இடம்பெறு​வதற்கு முன்பே கல்வி, வேலைவாய்ப்பில் வகுப்பு​வாரிப் பிரதி​நி​தித்துவம் என்பதை நடைமுறைப்​படுத்திய பெருமை அன்றைய மதராஸ் மாகாணத்​துக்கு உண்டு.
  • இப்படிப்பட்ட வரலாற்றுப் பெருமைமிக்க தமிழ்​நாட்​டில், இடஒதுக்​கீட்டின் அடிப்​படையிலான உரிமை​களைப் பழங்குடி​யினர் அனுபவிப்​பதில் பலவிதமான இடையூறுகளை எதிர்​கொள்​கின்​றனர். இந்திய அரசமைப்புச் சட்டத்தின் கூறுகள் 15, 16 ஆகியவை சமூகத்​திலும் கல்வி​யிலும் பின்தங்​குதலுக்கு உள்ளான சமூகத்​தினருக்குக் கல்வி​யிலும், வேலைவாய்ப்​பிலும் வாய்ப்புகள் வழங்கிட வேண்டும் எனக் கூறுகின்றன.
  • சமூகப் பின் தங்​குதலிலிருந்து வெளியே வரக் கல்வியும் - வேலையும் அவசியம். வழங்கப்​படும் சாதிச் சான்றிதழ் மூலம் படிக்கும் வாய்ப்பும் வேலை பெறும் உரிமையும் கிடைக்​கிறது. பட்டியல் சாதியினர், பழங்குடி​யினருக்கு அரசமைப்பு மூலம் கிடைக்கப் பெற்றுள்ள உரிமைகள், சலுகைகள் உண்மை​யானவர்​களுக்குக் கிடைக்க வைக்க வேண்டும். இவர்களுக்கு உரியதைப் போலியானவர்கள், அந்தச் சாதிகளைச் சாராதவர்கள் பெற்று​விடக் கூடாது என்ற நோக்கத்தோடு ‘சான்​றிதழ் மெய்த்​தன்மை சரிபார்ப்பு’ மேற்கொள்​ளப்​படுவது சரியானதே. எனினும், இதில் பல வழிகாட்டு​தல்கள் பின்பற்​றப்​படு​வ​தில்லை என்பதுதான் பிரச்​சினை.
  • அலட்சியம் செய்யும் அதிகாரிகள்:
  • பட்டியல் சாதியினர், பழங்குடி​யினரின் சமூகம் குறித்த சான்றிதழ் மெய்த்​தன்மை குறித்து விசாரித்து முடிவுசெய்​வதற்கு அடிப்​படையாக விளங்​குவது 2.4.1994 அன்று உச்ச நீதிமன்றம் வழங்கிய வரலாற்றுச் சிறப்பு​மிக்க தீர்ப்பு. மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த ‘குமாரி மாதுரி பட்டேல் எதிர் பழங்குடி​யினர் கூடுதல் ஆணையர்’ வழக்கில் வழங்கப்பட்ட இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து, மத்திய அரசின் பணியாளர் நலத் துறை, ஓய்வூ​தி​யம் ​- ஓய்​வூ​தியர் நலத் துறை, பல ஆணைகளையும் சுற்றறிக்கைகளையும் அனுப்​பி​யுள்ளன.
  • தேசியப் பழங்குடி​யினர் ஆணையம், தேசியப் பட்டியல் சாதியினர் ஆணையம் ஆகியவையும் பல வழிகாட்டு​தல்களை வழங்கி​யுள்ளன. உயர் நீதிமன்​றங்கள் பல உத்தர​வு​களை​யும், மாநில அரசுகள் பல்வேறு அரசாணை​களையும் வெளியிட்​டுள்ளன. இருப்​பினும் ‘சான்​றிதழ் மெய்த்​தன்மை அறிதல்’ தொடர்பான சிக்கல்கள் இன்றுவரை தொடர்​கின்றன.
  • சான்றிதழ் மெய்த்​தன்மை குறித்த விசாரணை நிலுவையில் இருக்​கிறது என்பதற்காக ஓய்வூ​தி​யத்​தையோ, ஓய்வூ​தியப் பலன்களையோ நிறுத்​திவைக்கக் கூடாது என்று மத்திய ஓய்வூ​தி​யம்​-ஓய்​வூ​தியர் நலத் துறை 30.11.2021 அன்று அனைத்துத் துறைகளுக்கும் இது தொடர்பான உத்தரவை (Office Memorandum) அனுப்​பி​யுள்ளது. ஆனால், இந்த உத்தரவை எந்த நிறுவனமும் பின்பற்று​வ​தில்லை.
  • 1994ஆம் ஆண்டுதான் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வழங்கப்​பட்டது என்பதால், 1995-க்குப் பிறகு பெற்ற இனச்சான்​றிதழ் குறித்​துத்தான் மெய்த்​தன்​மைக்கு உட்படுத்த வேண்டும் என்று 25.5.2005இல் வெளியிடப்பட்ட மற்றொரு உத்தரவு குறிப்​பிடு​கிறது. ஆனால், 1980க்கு முன்பாகப் பெறப்பட்ட சான்றிதழ்​கள்கூட தமிழ்​நாட்டில் விசாரணைக்கு உட்படுத்​தப்​படு​கின்றன.
  • வேலையில் அல்லது உயர் கல்வி நிறுவனங்​களில் சேர்ந்த ஆறு மாத காலத்​துக்குள் மெய்த்​தன்மை குறித்த விசாரணையை முடிக்க வேண்டும் என்று மற்றொரு உத்தரவு குறிப்​பிடு​கிறது. ஆனால், ஓய்வு பெற்றவர்கள், படிப்பை முடித்​தவர்கள், ஏன் இறந்து போனவர்​களின் சான்றிதழ்​களுக்​குக்கூட மெய்த்​தன்மை விசாரணை தொடர்​கிறது.
  • இத்தகைய சூழ்நிலை​யில், நீதிமன்ற உத்தர​வு​களைப் பெற்றாலும் அவற்றை உடனடியாக நடைமுறைப்​படுத்​தாமல் காலங்​கடத்தும் போக்கு அதிகாரி​களிடம் இருக்​கிறது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கு என்கிற கட்டத்தை எட்டு​கிற​போதுதான் சில அதிகாரிகள் நடைமுறைப்​படுத்து​கிறார்கள்.
  • போலிகளைக் கண்டு​பிடிக்​கிறோம் என்கிற பெயரில் உண்மையான பழங்குடி ஊழியர்​களைச் சித்ர​வதைக்கு ஆட்சி​யாளர்கள் உள்ளாக்கு​கின்​றனர். அரசின் சட்டங்கள், விதிகளுக்கு உள்பட்டுத்தான் ஆட்சி​யாளர்கள் செயல்பட முடியுமே தவிர, தங்களின் சொந்த விருப்பு வெறுப்பின் அடிப்​படையில் செயல்​படுவது சட்ட விரோத​மானது; ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளாக்​கப்பட வேண்டியது.
  • கேள்விக்​குறியான எதிர்​காலம்:
  • பழங்குடி​யினரைப் பொறுத்தவரை பழங்குடி​யினர் நலத் துறைச் செயலாளர் தலைமையிலான மாநிலக் கூர்நோக்குக் குழுதான் மெய்த்​தன்மை குறித்து இறுதி முடிவு எடுக்க முடியும். ஓய்வு பெற்று 10 ஆண்டு​களுக்கு மேலானவர்​களின் சான்றிதழ் குறித்த விசாரணைகூட முடிக்​கப்​படாமல் இருப்​பதைச் சுட்டிக்​காட்​டியதற்குப் பிறகு, தற்போது மாநில அளவில் மூன்று கூர்நோக்குக் குழுக்கள் செயல்​படு​கின்றன. அப்படி​யிருந்தும் ஆயிரக்​கணக்​கானோர் தொடர்பான விசாரணை பல்லாண்​டுகளாக நிலுவையில் இருக்​கிறது.
  • இது ஒருபுறமிருக்க, கடந்த அக்டோபர் மாதம் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் 296 பழங்குடி​யினரின் சான்றிதழை ரத்துசெய்து உத்தர​விட்​டுள்​ளார். ஒரு கோட்டாட்​சியர் கொடுத்த மொத்தச் சான்றிதழையும் ஒட்டுமொத்தமாக ரத்துசெய்த சம்பவம் தமிழ்​நாட்டில் இதற்கு முன் நடந்த​தில்லை. சான்றிதழ் வழங்கும் அதிகாரம் படைத்த அதிகாரி வழங்கிய சான்றிதழை மேலதிகாரி ரத்து செய்யலாம் என்பதை நியாயப்​படுத்​தினால், சான்றிதழ் பெற்ற எவருக்கும் பாதுகாப்​பில்லை என்றே கருத வேண்டி​யிருக்​கிறது.
  • மற்றொன்று, ரத்து செய்வதற்கான அதிகாரமும் மாநிலக் கூர்நோக்குக் குழுவுக்கு மட்டுமே உண்டு என்று அரசாணை தெளிவாகக் குறிப்​பிடு​கிறது. வேண்டு​மானால், விசாரணை அறிக்கையை அவர் துறைச் செயலா​ள​ருக்கு அனுப்​பி​யிருக்​கலாம். அவசர கோலத்தில் எடுத்த முடிவின் காரணமாக வேலையில் இருக்கும் அல்லது உயர் கல்வி பயின்​று​கொண்​டிருக்கும் பலருடைய வாழ்க்கை கேள்விக்​குரியதாக மாறியிருக்​கிறது.
  • ‘சான்​றிதழ் மெய்த்​தன்மை’ விசாரணைக்கான வழிகாட்டு​தல்​களையும் உச்ச நீதிமன்றம் வழங்கி​யிருக்​கிறது. புகார் வந்தவுடன் காவல் துறை துணைக் கண்காணிப்​பாளர் தலைமையிலான விஜிலென்ஸ் செல் விசாரணையை மேற்கொண்டு, ஒரு மாத காலத்​துக்குள் அறிக்கை அளிக்க வேண்டும்.
  • அறிக்கையின் நகல் சம்பந்​தப்​பட்​ட​வருக்கு அளிக்​கப்​பட்டு, அவரின் விளக்​கத்தைப் பெற வேண்டும். மானிட​வியல் ஆய்வாளர்கள் மூலம் சரிபார்க்க வேண்டும். இதற்கென்று 14 பேர் தமிழ்​நாட்டில் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர். அதற்குப் பிறகு, மாநிலக் கூர்நோக்குக் குழு இறுதி முடிவு எடுத்து அறிவிக்க வேண்டும். இவை அனைத்தும் அரசாணை எண் 104இல் குறிப்​பிடப்​பட்டுள்ளன.
  • அரசு அதிகாரிகளே அரசாணைகளை மதிப்​ப​தில்லை அல்லது படிப்​ப​தில்லை என்பதுதான் சோகம். விஜிலென்ஸ் சார்பில் விசாரணைக்குச் செல்லும் காவலர்கள் ‘குற்​றவாளி’ என்ற கோணத்​திலேயே விசாரிப்பது என்கிற நடைமுறை தவறானது. மனுதாரர் அளிக்கும் ஆவணங்​களில் திருப்தி ஏற்பட​வில்லை என்றால், வழக்கை விஜிலென்ஸ் செல்லுக்கு அனுப்​பலாம்; அதற்கான காரணத்தை மாநிலக் கூர்நோக்குக் குழு குறிப்பிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்​பளித்​துள்ளது.
  • பழங்குடி​யினரைப் பொறுத்தவரை 100 சதவீதம் மெய்த்​தன்மை விசாரணைக்கு உட்படுத்துவது என்கிற முடிவும் அம்மக்​களிடையே பெரும் மன உளைச்சலை ஏற்படுத்​தி​யுள்ளது. அனைவரையும் சந்தேகத்​துடன் அணுகுவது இப்படியான விளைவைத்தான் ஏற்படுத்​தும்.
  • இந்நிலை​யில், நிலுவையில் உள்ள அனைத்து விசாரணை​களையும் குறிப்​பிட்ட காலவரையறையைத் தீர்மானித்து முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். மத்திய அரசின் உத்தர​வுகள், நீதிமன்றத் தீர்ப்புகள், மாநில அரசின் உத்தர​வு​களைப் பின்பற்றி அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்பதே அம்மக்​களின் வேண்டுகோள்​.

நன்றி: இந்து தமிழ் திசை (18 – 11 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்