சாம்பியன்களின் சாம்பியன்!
- ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்து அணியை வீழ்த்தி 3-ஆவது முறையாக கோப்பையை வென்றிருக்கிறது இந்திய அணி. இந்த வெற்றியின் மூலம் சாம்பியன்ஸ் டிராபியை அதிக முறை கைப்பற்றிய அணி என்கிற பெருமையும் இந்திய அணிக்கு கிடைத்திருக்கிறது. சாம்பியன்ஸ் டிராபி இறுதி ஆட்டத்துக்கு ஐந்து முறை தகுதி, 2013, 2017, 2025 எனத் தொடா்ந்து மூன்று முறை இறுதி ஆட்டத்துக்குத் தகுதி ஆகிய சாதனைகளும் இந்தியாவின் வசம் வந்துள்ளன.
- ஐசிசி தரவரிசையில் முதல் எட்டு இடங்களில் மட்டும் உள்ள அணிகள் மட்டும் பங்கேற்கும் சாம்பியன்ஸ் டிராபி 1998-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. வங்கதேசத்தில் நடைபெற்ற அறிமுகப் போட்டியில் மேற்கு இந்திய தீவுகள் அணியை வீழ்த்தி தென் ஆப்பிரிக்க அணி சாம்பியன் பட்டம் வென்றது. 2002-இல் நடைபெற்ற போட்டியின் இறுதி ஆட்டத்தில் மழை குறுக்கிட்டு ஆட்டம் தடைபட்டதால் இந்திய, இலங்கை அணிகளுக்கு கோப்பை பகிா்ந்தளிக்கப்பட்டது. சாம்பியன்ஸ் டிராபியை இருமுறை கைப்பற்றி இந்தியாவுக்கு அடுத்த இடத்தில் உள்ளது ஆஸ்திரேலியா.
- 2000 சாம்பியன்ஸ் டிராபி இறுதி ஆட்டத்தில் இந்திய அணியை வீழ்த்தி கோப்பையைக் கைப்பற்றியது நியூஸிலாந்து. இப்போது நடந்துமுடிந்த இறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்தை வீழ்த்தியதன் மூலம் 2000-ஆம் ஆண்டு தோல்விக்கு பதிலடி கொடுத்திருக்கிறது இந்திய அணி. 2000-இல் நான்கு விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வென்றது நியூஸிலாந்து. 2025-இல் அதே நான்கு விக்கெட் வித்தியாசத்தில் நியூஸிலாந்தை வென்றிருக்கிறது இந்தியா. 2000-ஆம் ஆண்டு இறுதி ஆட்டத்தில் செளரவ் கங்குலி 117 ரன்கள் குவித்தும், நியூஸிலாந்தின் கிறிஸ் கெய்ா்ன்ஸின் சதத்தால் இந்திய அணி தோல்வியைத் தழுவியதை கிரிக்கெட் ரசிகா்கள் மறந்திருக்க முடியாது.
- 2025 சாம்பியன்ஸ் டிராபி முழுவதுமே இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியது. எந்த ஒரு ஆட்டத்திலும் இந்திய அணிக்கு பெரிய அளவிலான நெருக்கடியை எதிரணிகளால் அளிக்க முடியவில்லை. குரூப்-ஏ பிரிவில் இடம்பெற்றிருந்த இந்தியா, லீக் சுற்று ஆட்டங்களில் நியூஸிலாந்து, வங்கதேசம், பாகிஸ்தான் அணிகளை எளிதாக வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. அரையிறுதியில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை பதற்றம்கொள்ளாமல் எதிா்கொண்டு வென்றது. இறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்தின் தொடக்க பேட்டா்கள் மட்டுமே இந்தியாவுக்கு சிறிய நெருக்கடியை அளிக்கும் வகையில் ரன்களைக் குவித்தனா்.
- நீண்ட நாள்களுக்குப் பின்னா் இப்போதைய சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணியின் கூட்டு முயற்சி வெளிப்படுத்தப்பட்டது. தனிப்பட்ட சாதனைகளாக அல்லாமல் அணியின் அனைத்து வீரா்களும் சிறந்த பங்களிப்பை வழங்கினா். கடந்த சில காலமாக சரியாக ரன்களைக் குவிக்க முடியாமல் திணறிய கேப்டன் ரோஹித் சா்மாவும், விராட் கோலியும் இந்தத் தொடரில் தங்களது ஃபாா்மை மீட்டெடுத்தனா். லீக் சுற்றில் பாகிஸ்தானுக்கு எதிரான முக்கியமான ஆட்டத்தில் சதம், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதியில் 84 ரன்கள் என கோலி, தன்னை ‘கிங் கோலி’ என்று நிரூபித்தாா். இறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்துக்கு எதிராக 76 ரன்கள் குவித்து ‘ஹிட் மேன்’ என்ற பட்டத்துக்கு நியாயம் சோ்த்தாா் ரோஹித் சா்மா.
- ஷுப்மன் கில், ஷ்ரேயஸ் ஐயா், கே.எல்.ராகுல், ஹா்திக் பாண்டியா ஆகியோரும் தங்களது பொறுப்பை உணா்ந்து ஆடினா். சில போட்டிகளில் டாப் ஆா்டா் திணறியபோது, மிடில் ஆா்டா் பேட்டா்கள் கைகொடுத்தனா். குறிப்பாக, தொடா் முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷ்ரேயஸ் ஐயரை ‘சைலன்ட் ஹீரோ’ எனப் புகழ்ந்தாா் கேப்டா் ரோஹித் சா்மா. இறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்துக்கு எதிராக 48 ரன்கள் உள்பட இந்தத் தொடரில் ஐந்து ஆட்டங்களில் 241 ரன்கள் அடித்து அதிக ரன்களைக் குவித்தவா்களில் நியூஸிலாந்தின் ரச்சின் ரவீந்திராவுக்கு (263 ரன்கள்) அடுத்தபடியாக இரண்டாவது இடத்தைப் பிடித்தாா் ஷ்ரேயஸ் ஐயா்.
- சாம்பியன்ஸ் டிராபி மூலம் எதிா்காலத்தில் இந்திய அணியின் முக்கியமான சுழற்பந்து வீச்சாளராக உருவெடுத்திருக்கிறாா் தமிழகத்தின் வருண் சக்கரவா்த்தி. ‘மிஸ்ட்ரி ஸ்பின்னா்’ என அழைக்கப்படும் அவா், மூன்றே ஆட்டங்களில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி, அதிக விக்கெட் வீழ்த்தியவா்களில் மிட்செல் சான்ட்னா், முகமது சமி ஆகியோருடன் இணைந்து இரண்டாவது இடத்தைப் பகிா்ந்துகொண்டுள்ளாா். இறுதி ஆட்டத்தில் வில் யங், கிளென் பிலிப்ஸ் ஆகிய இருவரின் முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தி திருப்புமுனையை ஏற்படுத்தினாா் வருண். இத்தனைக்கும் இது அவரது முதலாவது ஐசிசி தொடா் என்பது குறிப்பிடத்தக்கது.
- 2025 சாம்பியன்ஸ் டிராபியை பாகிஸ்தான் நடத்தியது. ஆனால், பாதுகாப்பு காரணங்களை முன்வைத்து இந்திய அணி பாகிஸ்தான் செல்ல மறுத்ததால், இந்திய அணியின் ஆட்டங்கள் மட்டும் துபையில் நடைபெற்றது. இந்திய அணி பாகிஸ்தானுக்குச் செல்ல மறுத்தது தொடா்பாக விமா்சனங்களும் எழுந்தன. இந்திய அணி தனது அனைத்து ஆட்டங்களையும் துபையில் ஒரே மைதானத்தில் ஆடியது அந்த அணிக்கு அனுகூலமானது என ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ் உள்ளிட்ட சில கிரிக்கெட் பிரபலங்கள் மற்றொரு விமா்சனத்தை முன்வைத்தனா். ஆனால், துபை மைதானம் எங்களைப் போன்றே அனைவருக்கும் பொதுவானது. இந்த மைதானத்தால் எங்களுக்கு எந்த சாதகமும் இல்லை என இந்திய அணியின் பயிற்சியாளா் கெளதம் கம்பீா் பதிலளித்தாா்.
- 2023 ஒருநாள் உலகக் கோப்பை, 2024 டி20 உலகக் கோப்பை, இப்போது சாம்பியன்ஸ் டிராபி என தொடா்ந்து மூன்று ஐசிசி போட்டிகளில் தான் ஆடிய 24 ஆட்டங்களில் 23-ஐ வென்றுள்ளது இந்திய அணி. 2025 சாம்பியன்ஸ் டிராபி வெற்றி மூலம் சாம்பியன்களின் சாம்பியன் எனவும் நிரூபித்திருக்கிறது.
நன்றி: தினமணி (11 – 03 – 2025)