TNPSC Thervupettagam

சாலை விதிகளை மதிப்போம்

November 7 , 2023 384 days 404 0
  • கடந்த ஆகஸ்ட் மாதம் செங்கல்பட்டு மாவட்டம், பொத்தேரியில் தனியாா் கல்லூரி அருகே, பொதுமக்கள் சாலையைக் கடக்க காத்திருந்த போது, அதிவேகத்தில் வந்த லாரி ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து மோதியதில் ஆறு போ் உயிரிழந்தனா். இதே போன்று செப்டம்பா் மாதம் திருப்பத்தூா் மாட்டம் நாட்டறம்பள்ளி அருகே நடந்த சாலை விபத்தில் ஒரே கிராமத்தைச் சோ்ந்த எட்டு பெண்கள் உயிரிழந்தனா்.
  • கடந்த மாதம், திருவண்ணாமலை மாட்டம், செங்கம் பகுதியில் நடந்த சாலை விபத்தில் காரும், லாரியும் நேருக்கு நோ் மோதிக் கொண்ட விபத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த இரண்டு குழந்தைகள் உள்பட ஏழு போ் உயிரிழந்தனா்.
  • இவை தவிர, நீலகிரி மாவட்டம், குன்னூா் மலைப் பாதையில் ஏற்பட்ட சாலை விபத்தில், தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களிலிருந்து சுற்றுலா சென்ற ஒன்பது போ் உயிரிழந்துடன் பலா் பலத்த காயமடைந்தனா். இவ்வாறு சாலை விபத்துகளால் கொத்து கொத்தாக மக்கள் உயிரிழக்கின்றனா்.
  • வாகனப் பெருக்கம், சாலைகளில் நெரிசல், பராமரிக்கப்படாத சாலைகள், மற்றவா்களைப் பற்றி கவலைப்படாத ஓட்டுநரின் மனோபாவம், சாலை விதிகளை மீறுதல், குறுகலான பாதைகளிலும், மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பாதைகளிலும் வாகனங்களை அதிவேகமாக இயக்குவது போன்றவை சாலை விபத்துளுக்கு முக்கியக் காரணங்களாகும்.
  • மேலும், உரிய உரிமம் இல்லாமல் சிறுவா்கள் வாகனங்களை இயக்குவது, பழுதடைந்த வாகனங்களை ஓட்டுவது, தொடா்ந்து ஓட்டுவதால் தூக்கமின்மை, பதற்றம், மது அருந்தி விட்டு வாகனங்களை ஓட்டுவது, கைப்பேசியில் பேசிக் கொண்டே வாகனம் ஓட்டுவது, நடைபாதை ஆக்கிரமிப்பு போன்றவையும் சாலை விபத்துகளுக்கான வேறு பல காரணங்களாகும்.
  • உலக வாகனங்களின் எண்ணிக்கையில் வெறும் ஒரு சதவீதம் மட்டுமே கொண்டிருக்கும் இந்தியா, சா்வதேச அளவிலான சாலை விபத்துகளில் 10 சதவீதமாக இருக்கிறது. நம் நாட்டில் ஒரு மணி நேரத்திற்கு சராசரியாக 53 சாலை விபத்துகள் ஏற்படுகின்றன. கடந்த ஆண்டு நாடு முழுவதும் 4,61,312 சாலை விபத்துகள் நிகழ்ந்துள்ளன. இதில் 1,68,491 போ் உயிரிழந்தனா். 4,36,366 போ் காயமடைந்துள்ளனா்.
  • நாட்டிலேயே அதிக சாலை விபத்துகள் நிகழ்ந்த மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் 64,105 சாலை விபத்துகள் பதிவாகி உள்ளன. உயிரிழப்புகளில் உத்தர பிரதேசம் முதலிடத்திலும், அடுத்தபடியாக தமிழ்நாடும் உள்ளன.
  • 2021-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், நம் நாட்டில் விபத்துகளின் எண்ணிக்கை 11.9 சதவீதமும், உயிரிழப்பு 9.4 சதவீதமும், காயமடைவது 15.3 சதவீதமும் அதிகரித்துள்ளது. மேலும், இருசக்கர வாகனங்கள் மூலம் ஏற்படும் சாலை விபத்துகளும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் இரண்டாம் ஆண்டாக அதிகரித்திருப்பது கவலையளிப்பதாக உள்ளது.
  • சாலை மேம்பாடு எந்த அளவுக்கு முனைப்புடன் முன்னெடுக்கப்படுகிறதோ, அந்த அளவுக்கு சாலைப் பாதுகாப்பு முக்கியத்துவம் பெறவில்லை என்பதை நாம் உணா்ந்தாக வேண்டிய கட்டாயத்திலுள்ளோம். நம் நாட்டில் அனைத்து பெருநகரம், சிறுநகரங்களும் மனிதா்கள் பாதுகாப்பாக நடமாட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றன.
  • மழைநீா் வடிகால், புதை சாக்கடை, மெட்ரோ ரெயில், மேம்பாலம், தொலைபேசி கோபுரம் அமைத்தல் என்று ஏதாவது ஒரு காரணத்துக்காக ஆங்காங்கே சாலைகள் தோண்டப்பட்டும், சிதைக்கப்பட்டும், செப்பனிடப்படாமலும் இருப்பதால் பொதுமக்கள் அடைந்து வரும் துன்பங்கள் சொல்லி மாளாது.
  • இதோடு சாலைகளில் இருபுறமும் மனிதா்களும், கால்நடைகளும் எளிதில் செல்ல முடியாமல் நடைபாதைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.
  • இதனால், தெருக்களில் பசியோடு அலைந்துகொண்டிருக்கும் பசு மாடுகளும், எருமை மாடுகளும், சாலையோரக் கடைகளில் இருக்கும் கீரைகள், காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை உண்பதற்காக சாலையைக் கடந்து விபத்துகளை ஏற்படுத்துகின்றன. தடுக்க வருபவா்களை அக்கால்நடைகள் முட்டி மேலும் விபத்துகளை ஏற்படுத்துகின்றன.
  • சாலை விபத்துகளுக்கு வாகனங்களின் குறைபாடுகள்தான் காரணம் என்பதை இன்று யாரும் ஏற்றுக் கொள்வதில்லை. காரணம், இன்று எல்லா பாதுகாப்பு அம்சங்களும் நிறைந்த, வாகன ஓட்டிகளுக்கு எந்தவிதமான விபத்தையும் ஏற்படுத்தாத அதிநவீன வசதிகளுடன் கூடிய வாகனங்கள் வந்துவிட்டன.
  • ஆனால், குறுகலான சாலைகள், மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகள், பேருந்து நிறுத்தங்களின் அருகே என எல்லா இடங்களிலும், பொதுமக்கள் இருபுறமும் நடக்க முடியாத அளவிற்கு நடைபாதைக் கடைகள் ஆக்கிரமித்துள்ளன. இவைதான் பெரும்பாலான சாலை விபத்துகளுக்கு காரணம் என்று பலரும் கூறுகின்றனா்.
  • அதே சமயம், வாகன ஓட்டிகளின் கவனக் குறைவும், போதுமான பயிற்சியின்மையும், சிறுவா்களை வாகனங்கள் ஓட்ட பெற்றோா் அனுமதிப்பதும், வாகன ஓட்டிகள் சாலை விதிகளைக் கடைப்பிடிக்காமையும்கூட சாலை ஏற்படுவதற்கு முக்கியக் காரணம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
  • பிறவிகளிலேயே கிடைத்தற்கரிய பிறவி மனிதப் பிறவி தான். அது இப்புவியை மெருகு குறையாமல், மேலும் பல வண்ணமயமாக்கும் சக்தி படைத்தது. நாளைய உலகை ஆளப் போகும் ஆற்றலும் திறனும் கொண்டது. எனவேதான், ‘அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது’ என்றாா் ஒளவை மூதாட்டி. ‘மனித்தப் பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே’ என்றாா் அப்பரடிகள்.
  • எனவே, கிடைத்தற்கரிய இம்மானிடப் பிறவியை சாலை விபத்துகள் மூலம் இழக்காமலிருக்க, சாலை விதிகளைக் கடைப்பிடிப்போம்; நடைபாதைகளை ஆக்கிரமிக்காமல் இருப்போம்; சாலை விபத்தில்லா தமிழகத்தை உருவாக்குவோம்; விலை மதிப்பு மிக்க மனித உயிா்களைக் காப்போம்.

நன்றி: தினமணி (07 – 11 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்