- சென்னையில் உயிரிழப்புக்கு வித்திடும் சாலை விபத்துகளின் எண்ணிக்கையும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் கடந்த இரண்டு ஆண்டுகளாகக் குறைந்துவருவது வரவேற்புக்குரியது. சென்னைப் பெருநகரக் காவல் துறை எடுத்துவரும் நடவடிக்கைகளும் தமிழ்நாடு அரசின் ஆம்புலன்ஸ் சேவைகள் மேம்படுத்தப்பட்டிருப்பதும் இந்த நல்ல மாற்றத்துக்கு வழிவகுத்திருக்கின்றன..
- இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை சென்னையில் 332 சாலை விபத்து மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக அண்மையில் வெளியான புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. கடந்த ஜூன் மாதம் சென்னை பெருநகரக் காவல் துறை வெளியிட்ட அறிக்கையின்படி 2021 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் சாலை விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 269 ஆக இருந்தது.
- 2022இன் முதல் ஆறு மாதங்களில் 240 மரணங்களும் 2023 ஜூன் வரையிலான காலத்தில் 214 மரணங்களும் நடந்துள்ளன. அதாவது, ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் நிகழ்ந்த சாலை விபத்து மரணங்கள் 2021ஐ ஒப்பிட, 2022இல் 19.7%, 2023இல் 10% குறைந்துள்ளன.
- ஒட்டுமொத்த ஆண்டைக் கணக்கெடுத்தால் 2021ஐவிட 2022இல் விபத்து உயிரிழப்புகள், உயிரிழப்புக்கு வித்திட்ட விபத்துகளின் எண்ணிக்கை இரண்டும் முறையே 11.52% மற்றும் 11.84% குறைந்துள்ளன. ஒட்டுமொத்த தமிழ்நாட்டு அளவில் 2022இன் முதல் ஆறு மாதங்களில் 8,770 ஆக இருந்த சாலை விபத்து மரணங்கள், இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 8,133 (7%) ஆகக் குறைந்திருப்பதாக ஜிவிகே ஈ.எம்.ஆர்.ஐ என்னும் லாபநோக்கற்ற ஆம்புலன்ஸ் சேவை அமைப்பு வெளியிட்ட புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
- சாலை விதிகள் தீவிரமாக அமல்படுத்தப்படுவதும் விதிமீறல்கள் மீதான அபராதங்கள் அதிகரித்திருப்பதும் விபத்துகள் குறைவதற்கு வழிவகுத் திருப்பதாகக் காவல் துறையினர் கூறுகின்றனர். குறிப்பாக சென்னையில், இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிவது 85% அதிகரித்துள்ளதாகக் காவல் துறை கூறுகிறது.
- அத்தோடு, அடிக்கடி சாலை விபத்து நடக்கும் பகுதிகள் கண்டறியப்பட்டு, அங்கு அதிக ஆம்புலன்ஸ்களைப் பயன்படுத்துவதற்கான பணிகளைத் தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வு - குடும்ப நல அமைச்சகம் மேற்கொண்டுவருகிறது. இதனால் விபத்துக்குள்ளானோரை உடனடியாக ஆம்புலன்ஸில் ஏற்றி விபத்து நிகழ்ந்த ஒரு மணி நேரத்துக்குள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது துரிதமாக நிகழ்கிறது.
- மேலும், அரசின் ‘இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48’ திட்டத்தின் கீழ் சாலை விபத்துக் குள்ளானோருக்கு முதல் 48 மணி நேரத்துக்குக் கட்டணமில்லாச் சிகிச்சை வழங்கப்படுவதால், தனியார் மருத்துவமனைகளும் விபத்துக்குள்ளானோரைச் சேர்த்துக்கொண்டு சிகிச்சை அளிக்கத் தயங்குவதில்லை. சாலை விபத்து மரணங்களைக் கட்டுப்படுத்துவதில் சென்னை காவல் துறையின் செயல்பாடுகளை மாநிலத்தின் பிற பகுதிகளும் பின்பற்ற வேண்டியது அவசியம். அக்டோபர் 15 அன்று திருவண்ணாமலையில் காரும் லாரியும் மோதிக்கொண்டதில் இரண்டு குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் இறந்திருக்கிறார்கள்.
- சென்னையிலும் சாலை விபத்து மரணங்கள் ஒப்பீட்டளவில் முந்தைய ஆண்டுகளைவிடக் குறைந்திருப்பினும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை கணிசமாகவே உள்ளது. சாலை விபத்துகளால் ஏற்படும் மூளைச் சாவு, உறுப்புகள் செயலிழப்பு போன்ற பிற கோரமான விளைவுகளும் கட்டுக்குள் கொண்டுவரப்பட வேண்டும். ஒட்டுமொத்தமாகச் சாலை விபத்துகளின் எண்ணிக்கை குறைய வேண்டும். அரசு, காவல் துறை, மக்கள் என அனைத்துத் தரப்பினரும் இணைந்து செயல்பட்டால் மட்டுமே இந்த இலக்குகளை அடைய முடியும்.
நன்றி: இந்து தமிழ் திசை (17 - 10 – 2023)