TNPSC Thervupettagam

சாலையில் திரியும் மாடுகள் அரசு செய்ய வேண்டியது என்ன

November 24 , 2023 414 days 362 0
  • சென்னையிலும் அதன் புறநகர்ப் பகுதிகளிலும் தெருவில் மேயவிடப்படும் மாடுகளால் பொதுமக்கள் தாக்கப்படுவது தொடர்கதையாகிவருகிறது. மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கும் இந்தப் பிரச்சினைக்கு உரிய தீர்வு காண்பது அவசியம். சாலையில் திரியும் மாடுகள் தாக்கி பாதசாரிகளும் வாகன ஓட்டிகளும் அவதிக்குள்ளாகிவருகின்றனர். நவம்பர் 19 இரவு செங்கல்பட்டு அருகே இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த ஒருவரை மாடு முட்டியதால் அவருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு 18 தையல்கள் போடப்பட்டன. ஆகஸ்ட் மாதம் சென்னை எம்.எம்.டி.. பகுதியில் பள்ளி முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த 9 வயதுச் சிறுமியைச் சாலையில் சுற்றித்திரிந்த மாடு மிகக் கொடூரமாகத் தாக்கியது.
  • திருவல்லிக்கேணி பகுதியில் மட்டும் கர்ப்பிணி உள்பட மூன்று பேர் மாடுகளால் அடுத்தடுத்து தாக்கப்பட்டுள்ளனர். கடந்த ஐந்து ஆண்டுகளில் ஏழு பேர் மாடுகளால் தாக்கப்பட்டு இறந்துள்ளனர். பொது இடங்களில் மாடுகள் அலைவதைக் கட்டுப்படுத்துவதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. சாலையில் மாடுகளை விடுவோருக்கான அபராதத் தொகை ரூ.2,000 என்பதிலிருந்து ரூ.5,000ஆக உயர்த்தப்பட்டுள்ளது. சாலைகளில் தொடர்ச்சியாக மேயவிடப்படும் மாடுகள் அரசு கால்நடை-மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்திடம் ஒப்படைக்கப்படும் எனவும் அரசு தெரிவித்துள்ளது. சென்னையில் மட்டும் இந்த ஆண்டு இதுவரை 3,737 மாடுகள் பிடிக்கப்பட்டுள்ளன. செப்டம்பர் மாத நிலவரப்படி ரூ.62.90 லட்சம் அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது.
  • மாடுகளைப் பிடித்து அடைப்பதும் அபராதத் தொகையை அதிகரிப்பதும் இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வல்ல. கால்நடை வளர்ப்பு என்பது செல்லப் பிராணிகளை வளர்ப்பது போன்றதல்ல. பொருளாதாரத் தேவைக்காகவே கால்நடைகளை வளர்க்கின்றனர். மாடு வளர்ப்போர் ஒவ்வொரு மாட்டுக்கும் 36 சதுர அடி இடம் ஒதுக்க வேண்டும் என விதிமுறை இருந்தாலும் சென்னை போன்ற நெரிசல் மிக்க பகுதிகளில் தங்களது வீட்டைச் சுற்றியும் பொது இடங்களிலுமே பலர் மாடுகளைக் கட்டிவைக்கின்றனர்.
  • மாடுகளுக்கு ஏதுவான மேய்ச்சல் நிலம் இல்லாததாலும் மாடுகளுக்குத் தீவனம் வாங்கிப்போட முடியாததாலும் பலர் மாடுகளைச் சாலைகளில் மேயவிடுகின்றனர். இதைத் தடுக்க, சென்னையில் உள்ள கால்நடைகளின் எண்ணிக்கை குறித்த கணக்கெடுப்பை நடத்தி, மாடுகளுக்குப் பொதுவான இடத்தில் மேய்ச்சல் நிலம் அமைத்துத்தருவது குறித்து அரசு முடிவெடுக்க வேண்டும். கைவிடப்பட்ட நிலங்களை அடையாளம்கண்டு அவற்றை மேய்ச்சல் நிலமாக மேம்படுத்த வேண்டும். மாடு வளர்ப்போருக்கு நவீன முறைகளைப் பயிற்றுவிக்க வேண்டும்.
  • மாடுகள் சாலைகளில் மேய்வது அவற்றின் உடல்நலனுக்கும் ஆபத்தாக அமைகிறது. சாலையில் கிடக்கும் ஞெகிழிக் கழிவு உள்ளிட்டவற்றைச் சாப்பிடுவதாலும் போதிய பராமரிப்பு இல்லாததாலும் அவை நோய்த்தொற்று உள்ளிட்ட பல்வேறு பாதிப்புக்குள்ளாகின்றன. அவற்றின் பாலை அருந்தும் மக்களும் பாதிப்படைகின்றனர். 2019இல் திருமுல்லைவாயிலில் இருந்து அழைத்துவரப்பட்ட மாட்டின் வயிற்றில் இருந்து 52 கிலோ ஞெகிழிக் கழிவை வேப்பேரி அரசு கால்நடை மருத்துவமனை மருத்துவர்கள் நீக்கியது குறிப்பிடத்தக்கது. மாடு வளர்ப்போர், போதுமான தீவனமும் நீரும் தராமல் மாடுகளைத் துன்புறுத்துவதோடு அவற்றைச் சாலைகளில் மேயவிட்டு பொதுமக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதன் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதோடு, இவற்றை நிரந்தரமாகத் தடுப்பதற்கான திட்டங்களையும் அரசு முன்னெடுக்க வேண்டும்.

நன்றி:இந்து தமிழ் திசை (24 – 11 - 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்