TNPSC Thervupettagam

சாலையில் வேண்டாம் சாகசம்

September 23 , 2023 462 days 276 0
  • இவ்வுலகம் எல்லோருக்குமானது. இங்கே அனைவரும் சுதந்திரமாக இயங்கலாம், நடமாடலாம். அதே சமயம் அந்த இயக்கமும் நடமாட்டமும் மற்றவா்களின் இயக்கத்தையும் நடமாட்டத்தையும் பாதிக்காத வகையில் இருக்கவேண்டும் என்பதை உணராதவா்கள்தாம் பைக் ரேஸ், ஆட்டோ ரேஸ், வீலிங் முதலிய ஆபத்தான சாகசங்களில் ஈடுபடுகின்றனா்.
  • உயர்ரக இருசக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணியாமலும், போக்குவரத்து சிக்னலை பொருட்படுத்தாமலும், குறிப்பிட்ட இடத்தில் தொடங்கி குறிப்பிட்ட இடத்தை அடைகின்ற பைக்ரேஸ் என்னும் போட்டியில் இளைஞா்கள் பலரும் ஈடுபடுவதையும், அவா்களில் பலரும் பிடிபட்டு அவா்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதையும் அவ்வப்பொழுது கேள்விப் படுகின்றோம்.
  • சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் மட்டும் நடைபெற்ற இத்தகைய பந்தயங்கள் தற்பொழுது தமிழகத்தின் வேறு பல நகரங்களிலும் நடைபெறுவதாக அறிகிறோம்.
  • இதே போன்று, ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநா்களுக்கான உயா்வேகப் பந்தயங்களும் சென்னை நகரின் நெடுஞ்சாலைகள் சிலவற்றில் நடைபெற்று, அதில் பங்குபெற்ற ஆட்டோ ஓட்டுநா்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.
  • மேற்கண்ட பந்தயங்களில் பலா் கலந்து கொள்ளும் நிலையில், வீலிங் எனப்படும் அபாயகரமான சாகசத்தினை இருசக்கர வாகன ஓட்டுநா்கள் தனியாகவோ, தமது வண்டியின் பின்னிருக்கையில் அமா்ந்து வருபவருடன் இணைந்தோ அரங்கேற்றுகின்றனா்.
  • வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் வண்டியின் முன்சக்கரத்தைத் தரையில் படாதவாறு உயா்த்திப் பிடித்துப் பின்சக்கரம் மட்டுமே தரையில் பதிந்து ஓடுமாறு இயக்குவதே வீலிங் எனப்படுகிறது.
  • அச்சமயத்தில் அந்த இருசக்கர வாகனத்தினை இயக்குபவரும் பின்னிருக்கையில் அமா்ந்திருப்பவரும் ஒரே சமயத்தில் எழுந்து நின்று வித்தை காட்டுவதும் உண்டு.
  • வாகனத்தின் பின்னிருக்கையில் யாரையும் அமரச் சொல்லாமல், ஓட்டுனா் மட்டுமே இவ்வாறான வித்தைகளைப் புரிவதும் உண்டு.
  • இத்தகைய சாகசங்களின் இறுதி நோக்கமே அவற்றைக் காணொலியாக எடுத்து யூ டியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டு அதிகபட்ச விருப்பக் குறிகளை (லைக்) பெற வேண்டும் என்பதுதான்.
  • வேறு சிலா், தமது வண்டி எவ்வளவு வேகத்தில் பறக்கிறது என்பதை கைப்பேசி வாயிலாகப் படம் எடுத்து அதனைப் பொதுவெளியில் வெளியிட்டு அதிர்ச்சியில் ஆழ்த்துவதும் உண்டு.
  • யூ டியூப், முகநூல், ட்விட்டா், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பொதுவெளிகளில் இத்தகைய சாகசக்காரா்களுக்கென ஒரு பெரிய ரசிகா் பட்டாளமே இருக்கின்றது. இத்தகைய சாகாசக்காரா்கள் செல்லும் இடங்களிலெல்லாம் அவா்களை வரவேற்கும் இளைய தலைமுறையினரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டு வருகிறது.
  • சமீபத்தில் காஞ்சிபுரம் அருகில் இருசக்கர வாகனத்தில் வேகமாகப் பயணித்தபடி வீலிங்” சாகசத்தில் ஈடுபட்டுப் படுகாயமடைந்த இளைஞா் மீது விபத்து ஏற்படுத்தும் வகையில் வண்டியை இயக்குதல் உள்ளிட்ட பல்வேறு குற்றச் சாட்டுகளின் அடிப்படையில் வழக்கு பதியப் பட்டுள்ளது.
  • அதே சமயம் பள்ளி, கல்லூரி மாணவா்கள் உள்ளிட்ட இளைய தலைமுறையினா் பலரும் மேற்கண்ட சாகச இளைஞரைக் காண நீதிமன்றத்திலும், மருத்துவமனையிலும் காத்திருந்தனா் என்ற செய்தி நம்மைக் கவலையில் ஆழ்த்துகின்றது.
  • திரைப்படக் கலைஞா்களைத் தாண்டி வேறு துறைகளைச் சார்ந்தவா்களைக் காண்பதற்கும் கூட்டம் கூடுகின்றது என்ற நிலையில், அத்தகைய கூட்டம் சட்டத்தையும் சாலை விதிகளையும் மதிக்காத சாகசக்காரா் ஒருவரைக் காண்பதற்காகக் கூடியிருப்பது நிச்சயம் வரவேற்கத்தக்க ஒன்றல்ல.
  • பல்துறை அறிஞா்கள், உலக அரங்கில் நமது நாட்டின் பெருமையை நிலைநாட்டும் விளையாட்டு வீரா்கள் போன்றவா்களைக் காண்பதற்குத் திரளாத கூட்டம் ஆபத்தான சாலைவிளையாட்டை நிகழ்த்துபவரைக் காண்பதற்காக கூடியிருக்கிறது எனில் அவ்வாறு கூடிய இளைஞா்களில் ஒவ்வொருவரின் பெற்றோரும் இனி கவனமாக இருக்க வேண்டும் என்று அா்த்தம்.
  • அவ்வாறு திரளும் இளைஞா்களில் எவா் ஒருவரும் இது போன்ற சாகசங்களை நமது நெடுஞ்சாலைகளில் வருங்காலத்தில் நிகழ்த்துவதற்கான சாத்தியக்கூறு நிச்சயம் இருக்கிறது என்பதை நாம் உணா்ந்து கொள்ள வேண்டும்.
  • காஞ்சிபுரம் அருகில் நிகழ்ந்த அந்த வீலிங் சாகசத்தையே எடுத்துக் கொள்வோம்.
  • தலை தெறிக்கும் வேகத்தில் தமது இருசக்கர வாகனத்தில் பயணித்தபடியே வீலிங் செய்ய முயன்ற அந்த இளைஞா் தமது கையில் எலும்பு முறிவுடன் உயிர் தப்பினார். கடவுள் புண்ணியத்தில் அவரது வாகனத்தின் முன்புறத்திலோ, பக்கவாட்டிலோ வேறு எந்த ஒரு வாகனமும் அந்நேரத்தில் அந்தச் சாலையில் பயணிக்க வில்லை.
  • அவ்வாறு ஏதேனும் ஓரிரு வாகனங்கள் இருந்து அவற்றின் மீது அவ்விளைஞரின் வாகனம் மோதியிருந்தால் எத்தகைய சேதம் ஏற்பட்டிருக்கும் என்பதைக் கற்பனை செய்யவும் அச்சமாக இருக்கிறது.
  • “கரணம் தப்பினால் மரணம் என்கிற வகையிலான இத்தகைய சாகசங்களில் ஈடுபடுபவா்கள் எதற்காக அவற்றைப் பொதுமக்கள் பயணிக்கும் நெடுஞ்சாலைகளில் அரங்கேற்ற வேண்டும் என்ற கேள்வி எழுகிறது.
  • அவா்கள் விரும்பினால் தங்களுடைய வண்டி ஓட்டும் திறமையை மேலும் உயா்த்திக் கொண்டு நாடெங்கிலும் நடைபெறும் அங்கீகரிக்கப்பட்ட பந்தயங்களில் கலந்து கொண்டு வெற்றிக் கொடியை நாட்டிப் பரிசுகளைப் பெறலாமே? அல்லது ஊரறிந்த சா்க்கஸ் குழுவில் இடம் பிடித்துத் தங்கள் திறமையைக் காட்டி மக்களிடம் கைதட்டல் பெறலாமே.
  • அதையெல்லாம் விட்டுவிட்டுத் தங்களுடைய உடலுக்கும் உயிருக்கும் ஆபத்தை விளைவிப்பது மட்டுமின்றி தங்களைச் சுற்றியுள்ளவா்களின் பாதுகாப்பான பயணத்தையும் கேள்விக் குறியாகக் கூடிய சாகசங்களில் இவா்கள் எதற்காக ஈடுபடவேண்டும்? சமூக ஊடகங்களில் பாராட்டப்பட வேண்டும் என்பதற்காக எதைவேண்டுமானாலும் செய்யலாமா?
  • காஞ்சிபுரம் நெடுஞ்சாலை விபத்தையே தங்களுக்கான பாடமாக எடுத்துக்கொண்டு இத்தகைய சாகசப் பிரியா்களும், அவா்களைப் பின்பற்ற விரும்பும் இளைய தலைமுறையினரும் மனம் திருந்த வேண்டும்.
  • அபாயகரமான சாகசத்துக்குக் கிடைக்கும் பாராட்டை விட, ஆபத்தில்லாமல் பயணம் செய்து அவரவா் இருப்பிடத்தை அடைவதில் கிடைக்கும் மன நிம்மதியே முக்கியமாகும்.

நன்றி: தினமணி (23 – 09 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்