- ‘சென்னை மாநகராட்சியும் காவல் துறையும் இந்த ஆக்கிரமிப்பை எங்ஙனம் அனுமதிக்கிறது? இதுதான் சிங்காரச் சென்னையா?’ - சென்னை மெரினா கடற்கரையின் அருகில் உள்ள லூப் சாலையில் மீன் விற்பனையின் காரணமாகப் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதாக, ஏப்ரல் 11 அன்று உயர் நீதிமன்றம் தானாக வழக்குப் பதிவுசெய்து எழுப்பிய கேள்வி இது.
- அதன் தொடர்ச்சியாக மாநகராட்சி அடுத்த நாளே அந்தச் சாலையில் மீன் கடைகளை அப்புறப்படுத்தியது. மீன்களைக் கீழே கொட்டி வாழ்வாதாரத்தை முடக்கிவிட்டதாகக் குமுறுகிறார்கள் மீன் விற்பனயாளர்கள். மாநகராட்சி நிர்வாகம் காட்டிய வேகம் வெறும் நீதிமன்றக் கேள்வி சார்ந்தது மட்டுமல்ல.
முன்னோடித் தீர்ப்புகள்:
- ஆக்கிரமிப்பு அகற்றம் என்பதைக்கூட மீன் விற்பனையாளர்கள், அப்பகுதி மக்களின் பிரதிநிதிகள் ஆகியோருடன் ஓர் உரையாடலை மேற்கொண்டு மனிதாபிமானத்துடன் செய்திருக்க முடியும். லூப் சாலை ஒரு குறியீடு மட்டுமே. நாடு முழுதும் இதுபோன்றே சாலையோர வியாபாரிகள் தங்களின் கண்ணியமான வியாபார உரிமையைப் பறிகொடுத்து குற்றவாளிகளைப் போல விரட்டியடிக்கப்படுவது தொடர்கதையாக உள்ளது. இப்பிரச்சினையில் நீதிமன்றம் ஒரு கட்சியாக மாறி நிற்பதுதான் இதில் வேதனை. காரணம், நீதிமன்றம் மக்களின் அடிப்படை உரிமையைக் காக்கும் அமைப்பு.
- தெருவோர வியாபாரம், குடிமக்களுக்கு அரசமைப்பு வழங்கிய வியாபாரம் செய்யும் உரிமை சார்ந்தது. டெல்லி சாலையோர வியாபாரிகள் பாதிக்கப்படுவது தொடர்பான ‘சோதன் சிங் எதிர் டெல்லி மாநகராட்சி’ வழக்கில், சாலையோர வியாபாரம் அடிப்படை உரிமை என 1989இல் உச்ச நீதிமன்றம் அங்கீகரித்தது.
- சாலை நடைபாதை நடப்பதற்கு மட்டுமல்ல, ஓரமாக வியாபாரம் செய்யவும் மக்களுக்கு உரிமை உண்டு எனக் குறிப்பிட்டது. 2010ஆம் ஆண்டு, ‘செண்டா ராம் எதிர் டெல்லி மாநகராட்சி’ வழக்கில் உச்ச நீதிமன்றம் சாலையைப் பயன்படுத்துவோரும், சாலையில் வியாபாரம் செய்பவரும் சுமுகமாக அவரவர் பணிகளைச் செய்ய வழிவகை செய்யும்படி உள்ளாட்சி அமைப்புக்கு உத்தரவிட்டது. இத்தீர்ப்பு இருவரின் நலனும் முக்கியம் என்றது.
முறைப்படுத்துதலின் அவசியம்:
- மேற்கண்ட தீர்ப்புக்கள் சாலையோர வியாபாரிகளைக் கண்ணியத்துடன் நடத்த வழிகாட்டின. இந்த வழிகாட்டுதல்களைப் பின்பற்றினால் ஓர் ஆரோக்கியமான உரையாடலைப் பாதிக்கப்படுவோரிடம் மேற்கொள்ள முடியும். அவர்களைக் குற்றவாளிகளாகவும் ஆக்கிரமிப்பாளர்களாகவும் பார்க்கும் அதிகாரத்தனம் மற்றும் அதன் நீட்சியாக நிகழும் அத்துமீறலையும் தவிர்க்கலாம். அது எவரும் பாதிக்கப்படாத தீர்வை எட்ட உதவும்.
- சாலையோர மீன் வியாபாரிகள் போன்ற முறைசாரா வணிகத்தின் மூலமே நாட்டின் உற்பத்தி வருவாயில் பாதி ஈட்டப்படுகிறது. நகர்ப்புறத்தில் உள்ள மக்கள்தொகையில் 2.5% தெருவோர வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள். பெல்லாஜியோ சர்வதேச சாலை வணிகத்துக்கான பிரகடனத்தில் (Bellagio International Declaration of Street Vendors) இந்திய அரசு 1995இல் கையெழுத்திட்டது.
- அதன் அடிப்படையில் தேசிய சாலையோர வியாபாரிகளுக்கான கொள்கை வெளியிடப்பட்டது. இந்தக் கொள்கையில் தெருவோர வியாபாரிகளை அப்புறப்படுத்துவது என்பதற்குப் பதிலாக ஒழுங்குபடுத்தி, முறைப்படுத்துதல் முன்வைக்கப்பட்டது. 2014இல் தெருவோர வியாபாரிகள் சட்டம் உருவாக்கப்பட்டது.
- சட்டத்தின்கீழ் இவ்வியாபாரிகள், அவர்களின் பிரதிநிதிகள் கொண்ட விற்பனைக் குழு உள்ளாட்சி நிர்வாகத்துடன் பேசி தெருவோர வியாபாரத்தை முறைப்படுத்துவார்கள். ஆக்கிரமிப்பு அகற்றம் என்பது விதிவிலக்காக மட்டுமே இருக்கும்.
பாரபட்ச மனநிலை:
- இந்த உரையாடல்கள், சட்ட வழிகாட்டுதல்கள் அனைத்தையும் முரட்டுத்தனமான ஓர் அதிகாரக் கரம் தள்ளிவிட்டுப் போவதே வழக்கமாக உள்ளது. இதில் ஒரு பாரபட்ச மனநிலை உள்ளது. சாலையில் கொட்டப்பட்ட மீன்கள் எளிய மக்களின் வாழ்வாதாரம் மட்டுமல்ல, அரசமைப்பு வழங்கும் அடிப்படை உரிமையான தொழில் செய்யும் உரிமையைப் பறிப்பதும்தான். மேலும் இது சாலையோர உணவுப் பொருள்களை வாங்கும் ஏழை, நடுத்தர மக்கள் அனைவர்மீதும் நடத்தப்படும் மறைமுகத் தாக்குதலும்கூட.
- சிங்காரச் சென்னைகளில் மீனவர்களும், குடிசைவாழ் ஏழைகளும் இல்லையா? அவர்களுடன் உரையாடலுக்கான எல்லா கதவுகளும் நீதிமன்றத்தின் ஒரு சொல்லில் அடைக்கப்பட்டுவிட்டனவா? இப்படியான கேள்விகளும் தற்போது எழுந்திருக்கின்றன. சிங்கார நகரங்கள் என்பவை ஏழைகளின் வாழ்வாதாரத்தை அழித்து உருவாக்கப்படும் அழகு என்றால், அது ஒரு வெற்று ஒப்பனையாக மட்டுமே மிஞ்சும். தெருவோர வணிகர்கள் சமூகநீதியோடு நடத்தப்பட வேண்டும்.
- மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாது எனத் தமிழ்நாடு அரசு உறுதியளித்ததன் பேரில் மீனவர்களின் போராட்டம் கைவிடப்பட்டிருக்கிறது. போக்குவரத்துக்கு இடையூறு இருக்கக் கூடாது என்று நீதிமன்றமும் அறிவுறுத்தியிருக்கிறது. இதுபோன்ற தருணங்களில் சட்டத்தின் சரியான வழிகாட்டுதலுடன், மனிதாபிமான அணுகுமுறையும் கைக்கொள்ளப்பட்டால் சங்கடங்கள் நேராது.
நன்றி: தி இந்து (21 – 04 – 2023)