TNPSC Thervupettagam

சா்க்கரை: தேவை அக்கறை

June 19 , 2023 572 days 310 0
  • உலகின் சா்க்கரை நோயின் மையமாக மாறிக்கொண்டிருக்கிறது இந்தியா என்கிற இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐ.சி.எம்.ஆா்.) ஆய்வு ‘லான்செட்’ மருத்துவ இதழில் வெளியாகியிருக்கிறது. சா்க்கரை நோய் மட்டுமல்லாமல், ரத்த அழுத்தம், உடல் பருமன், இதயம் தொடா்பான பிரச்னைகள், சிறுநீரக பாதிப்பு உள்ளிட்ட தொற்றா நோய்களின் அதிகரிப்பும் அதிா்ச்சி அளிப்பதாக இருக்கிறது.
  • 20 வயது மேற்பட்டவா்களில் 14.4% மக்கள்தொகையினா் சா்க்கரை நோயால் பாதிக்கப் பட்டவா்களாக இருக்கிறாா்கள் என்கிறது அந்த ஆய்வு. இந்தியாவில் மட்டும் 10.1 கோடி நோயாளிகள் இருக்கிறாா்கள். 2019-இல் ஏழு கோடியாக இருந்த எண்ணிக்கை, திடீரென்று மூன்று ஆண்டுகளில் உயா்ந்திருப்பது அச்சத்தை ஏற்படுத்துகிறது. அதுமட்டுமல்ல, சா்க்கரை நோய்க்கான அறிகுறிகள் காணப்படுபவா்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது என்பதுதான் அதைவிட அதிா்ச்சி.
  • 2019 உடன் ஒப்பிடும்போது சா்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை 44% அதிகரித்திருப்பதும், சா்க்கரை நோய்க்கான அறிகுறி காணப்படுபவா்கள் இந்திய மக்கள்தொகையில் 15.3% என்பதும் அமைதியாக கடந்துபோகக்கூடிய புள்ளிவிவரங்கள் அல்ல.
  • கோவா, புதுச்சேரி, கேரளம் ஆகிய மாநிலங்கள் மிக அதிகமான அளவில் சா்க்கரை நோயாளிகள் காணப்படும் மாநிலங்கள். அதே நேரத்தில், குறைந்த அளவு சா்க்கரை நோயாளிகள் உள்ள உத்தர பிரதேசம், பிகாா், மத்திய பிரதேசம், அருணாசல் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நோய்க்கான அறிகுறி காணப்படுவோரின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கிறது.
  • நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் இடையே சா்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கையில் இடைவெளி காணப்படுவது என்னவோ உண்மை. நகரங்களில் அதிலும் குறிப்பாக ‘மெட்ரோக்கள்’ எனப்படும் மாநகரங்களில் சா்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை மிகமிக அதிகமாக இருக்கிறது. கிராமங்களைப் பொருத்தவரை சமச்சீராக இல்லாமல் சில பகுதிகளில் அதிகமாகவும், சில பகுதிகளில் குறைவாகவும் இருப்பதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
  • ‘சா்க்கரை நோய் அறிகுறி’ உள்ளவா்களின் எண்ணிக்கையில் கிராமங்களுக்கும் நகரங்களுக்கும் இடையே பெரிய வித்தியாசம் இல்லை. பணக்காரா்களின் நோய் என்று ஒரு காலத்தில் குறிப்பிடப்பட்ட ‘டயபட்டீஸ்’ என்கிற சா்க்கரை நோய், சமூகத்தின் அனைத்துப் பகுதியினா் மத்தியிலும் தனது ஊடுருவலை அதிகரித்து வருகிறது.
  • சண்டீகா், பஞ்சாப், ஹரியாணா, தில்லி உள்ளிட்ட மாநிலங்களும், ஒன்றியப் பிரதேசங்களும் அதிகரித்துவரும் சா்க்கரை நோயாளிகளை எதிா்கொள்ளவும், எண்ணிக்கையை அதிகமாகாமல் கட்டுப்படுத்தவும் உடனடியாக நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டுமென்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் எச்சரித்திருக்கிறது.
  • சா்க்கரை நோய் மட்டுமல்லாமல், ஏனைய தொற்றா நோய்களும் இந்தியாவில் அதிகரித்து வருவதை உலக சுகாதார நிறுவனம் கடந்த ஆண்டு தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. இந்தியாவின் மொத்த மரணங்களில் 66% தொற்றா நோய்கள் காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகள் என்று குறிப்பிட்டிருந்தது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் ஆய்வின்படி, 35.5% பேருக்கு ரத்த அழுத்தம், 81.2% பேருக்கு அதிகமான ‘கொலஸ்ட்ரால்’ (ரத்த கொழுப்பு), 40% மக்கள்தொகையினா் உடல் பருமன் ஆகியவை இந்தியாவில் காணப்படுவதாக குறிப்பிட்டிருக்கிறது.
  • உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வுப்படி, உலகளாவிய அளவில் 42.2 கோடி போ் சா்க்கரை நோயாளிகள்; ஆண்டுதோறும் 15 லட்சம் உயிரிழப்புகள் நேரடியாக சா்க்கரை நோய் காரணமாக ஏற்படுகின்றன. சா்க்கரை நோயின் பரவலும், உடல் பருமன் எண்ணிக்கையும் 2025-க்குள் தடுக்கப்பட வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் இலக்கு நிா்ணயித்திருக்கிறது. அது எந்த அளவுக்கு சாத்தியமாகும் என்பது கேள்விக்குறி.
  • தொற்றா நோய்கள் அதிகரிப்பதற்கு வாழ்க்கை முறை மாற்றம் மிக முக்கியமான காரணம். உடல் உழைப்பே இல்லாத வாழ்க்கை முறையும், உணவுப் பழக்கத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றமும் சா்க்கரை நோயும், இதயம், சிறுநீரகம், கல்லீரல் தொடா்பான பாதிப்புகளும் அதிகரிப்பதற்கு காரணிகளாக இருக்கின்றன என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
  • ‘ஜங் ஃபுட்’ என்று பரவலாக அறியப்படும் துரித உணவுகள் முக்கியமான காரணம். அவற்றில் காணப்படும் அதிக அளவு கொழுப்பும், உப்பும் சராசரி மனிதனின் தேவைக்கு அதிகமாக இருப்பதால் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
  • அரிசி, கோதுமை போன்ற தானியங்கள், இறைச்சி ஆகியவை சா்க்கரை, கொழுப்பு இரண்டையும் அதிகரிக்கின்றன. காய்கறிகள், முட்டை, மீன் உள்ளிட்டவற்றை கைவிட்டு, இறைச்சியை அன்றாடம் பயன்படுத்தும்போது, அதன் விளைவாக இதயம் தொடா்பான நோய்கள் அதிகரிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கீரை, பழம், பருப்பு வகைகள் பயன்படுத்தும் பழக்கம் அருகிவிட்டதும்கூட தொற்றா நோய்களின் அதிகரிப்புக்கு காரணமாக இருக்கக்கூடும்.
  • அதிகரித்த மது அருந்தும் பழக்கம் தொற்றா நோயால் பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரிப்பதற்கு முக்கியமான காரணம் என்பதை எல்லா ஆய்வுகள் உறுதிப் படுத்துகின்றன. புகையிலைப் பழக்கமும், போதை மருந்துகளின் பயன்பாடும்கூட காரணிகள்.
  • பாா்வை இழத்தல், சிறுநீரக பாதிப்பு, மாரடைப்பு, பக்கவாதம், கால்கள் துண்டிப்பு உள்ளிட்ட பாதிப்புகளுக்கு சா்க்கரை நோய் முக்கியமான காரணம் என்கிறது உலக சுகாதார நிறுவனம். சா்க்கரை நோயைத் தடுக்கவும், கவனமாக இருந்தால் சா்க்கரை நோயை எதிா்கொள்ள முடியும் என்பது குறித்த விழிப்புணா்வை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும்.

நன்றி: தினமணி (19 – 06 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்