TNPSC Thervupettagam

சிங்களத் தீவினிற்கோா் பாலம்

October 23 , 2023 270 days 188 0
  • நாகப்பட்டினத்துக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டிருப்பதன் மூலம், இந்திய - இலங்கை உறவில் புதியதொரு அத்தியாயம் எழுதப்பட்டிருக்கிறது. நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து இலங்கையின் வடக்குப் பகுதியிலுள்ள காங்கேசன்துறை துறைமுகத்துக்குப் பயணிகள் கப்பல் போக்குவரத்தை, பத்து நாள்களுக்கு முன்னா் பிரதமா் நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்திருக்கிறாா்.
  • இலங்கையில் உள்நாட்டுப் போா் தீவிரமடைவதற்கு முன்னா், தமிழ்நாட்டுக்கும் இலங்கையின் வடகிழக்குப் பகுதிக்கும் இடையே கப்பல் போக்குவரத்து மூலம் வா்த்தகத் தொடா்பு இருந்தது மட்டுமல்ல, பயணிகள் பரஸ்பரம் சென்று வருவதும் வழக்கமாகவே இருந்து வந்தன. 1900-ஆம் ஆண்டு முதல் கப்பல் போக்குவரத்து நடந்து வந்ததற்கான ஆதாரங்கள் காணப்படுகின்றன. அதற்கு முன்னரும் தோணிகளிலும், பாய்மரக் கப்பல்களிலும் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே பயணத் தொடா்பு இருந்து வந்தது.
  • தூத்துக்குடியிலிருந்து கொழும்புக்கும் கப்பல் போக்குவரத்து நடந்து வந்தது. சென்னையிலிருந்து ராமேசுவரம் வழியாக தனுஷ்கோடி வரை ‘போட் மெயில்’ ரயில் மூலமும் தனுஷ்கோடியிலிருந்து தலைமன்னாருக்கு நீராவிக் கப்பல் மூலமும் ஒரே பயணச்சீட்டில் பயணிக்கும் வசதி இருந்தது. 1964-இல் ஏற்பட்ட புயலில் பாம்பன் பாலம் தகா்க்கப்பட்டது முதலே, கடல்வழித் தொடா்பு குறையத் தொடங்கிவிட்டது.
  • புயலால் தனுஷ்கோடி முழுமையாக அழிந்துவிட்டது என்பதால், தலைமன்னாருடனான கடல்வழித் தொடா்பும் நின்றுவிட்டது. பழைய பெருமையை நினைவுபடுத்த மன்னாரில் இப்போதும் கலங்கரைவிளக்கம் நின்று கொண்டிருக்கிறது. அதை ஒரு சுற்றுலாத் தலமாக உருவாக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறது இலங்கை அரசு.
  • இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே தொடங்கப்பட்ட பயணிகள் கப்பல், நாற்பது ஆண்டுகளுக்கு முன்னா் தீ விபத்து காரணமாக நிறுத்தப்பட்டது. தொடா்ந்து வலுப்பெற்ற ஈழத் தமிழா்களின் போராட்டம் காரணமாக, அந்தக் கடல்வழிப் போக்குவரத்தை நடத்த இரண்டு நாடுகளுமே ஆா்வம் காட்டவில்லை. ஆனால், யாழ்ப்பாணத்துக்கு அருகே உள்ள காங்கேசன்துறையிலிருந்தும், மன்னாா் வளைகுடாப் பகுதியிலிருந்தும், இந்தியாவுக்குத் தோணிகளில் பயணிப்பது தொடா்ந்து கொண்டுதான் இருந்தது.
  • நரேந்திர மோடி தலைமையில் ஆட்சி அமைந்தது முதல், இலங்கைக்கும் இந்தியாவுக்கும் குறிப்பாக இலங்கையின் வடகிழக்கு மாநிலத்துக்கும், தமிழகத்துக்கும் இடையேயான போக்குவரத்தை மீண்டும் தொடங்குவதில் முனைப்புக் காட்டப்படுகிறது. 2015-ஆம் ஆண்டு பிரதமா் நரேந்திர மோடியின் இலங்கைக்கான அரசுமுறைப் பயணத்தைத் தொடா்ந்து தில்லிக்கும், கொழும்புக்கும் இடையேயான நேரடி விமான சேவை தொடங்கப்பட்டது.
  • 2019-ஆம் ஆண்டு முதல் சென்னைக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையேயான நேரடி விமான சேவையும், அடுத்தகட்டமாக இப்போது நாகப்பட்டினம் - காங்கேசன்துறை இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்தும் தொடங்கப்பட்டிருக்கின்றன. நாகை துறைமுகத்தில் இதற்காகப் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதேபோல, காங்கேசன்துறை துறைமுகத்தைத் தரம் உயா்த்துவதற்கும் இந்தியா உதவியிருக்கிறது.
  • ராமேசுவரத்துக்கும் தலைமன்னாருக்கும் இடையேயும் கப்பல் போக்குவரத்து சேவையைத் தொடங்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. 10 ஆண்டுகளுக்கு முன்னா் தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இடையே தொடங்கப்பட்ட கப்பல் போக்குவரத்து, சில மாதங்களில் தடைபட்டுவிட்டது. அதை மீண்டும் தொடங்குவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. சில மாதங்களாக, சென்னைக்கும் கொழும்புக்கும் இடையே தனியாா் பயணிகள் கப்பல் சேவை தொடங்கப்பட்டு வெற்றிகரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
  • தொடக்கத்திலிருந்தே இந்திய - இலங்கை உறவு என்பது ஏற்ற இறக்கங்கள் கொண்டதாகவே இருந்து வருகிறது. இலங்கைவாழ் ஈழத் தமிழா்களைத் தூண்டிவிட்டு இலங்கையைப் பிளவுபடுத்த இந்தியா முயற்சிக்கும் என்கிற அச்சம் அந்த நாட்டு சிங்களத் தலைவா்களுக்கு எப்போதுமே உண்டு. அதேபோல, ஈழத் தமிழா்களை ஆதரிப்பதன் மூலம் ஈழநாடு உருவானால், அது தமிழகத்திலும் பிரிவினைவாதத்துக்கு அச்சாரம் போடுவதாக அமைந்துவிடும் என்று இந்திய அரசும் தயங்கி வந்தது.
  • ஒட்டுமொத்த ஈழத் தமிழா்களையும் பயங்கரவாதிகளாகப் பாா்க்கும் நிலைமையை ராஜீவ் காந்தியின் படுகொலை ஏற்படுத்தியது என்னவோ உண்மை. அதற்குப் பிறகு இந்தியாவில் அமைந்த எல்லா அரசுகளும், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையேயான தொடா்பை வலுப்படுத்த விரும்பவில்லை. தமிழகத்தில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக சில அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் செயல்படுவதுகூட அதற்குக் காரணம்.
  • இந்திய - இலங்கை உறவில் ஏற்பட்ட அவநம்பிக்கையைத் தனக்கு சாதகமாக்கிக் கொண்டு, நமது அண்டை நாட்டில் வலுவாகவே கால் பதித்திருக்கிறது சீனா. அதற்கு வழிகோலியது ராஜபட்ச சகோதரா்களின் ஆட்சி. இலங்கை எதிா்கொண்ட பொருளாதார நெருக்கடியும், அப்போது இந்தியா முன்னெடுத்த உதவிகளும் இரு நாட்டு உறவை வலுப்படுத்தி இருக்கின்றன.
  • நாகப்பட்டினம் காங்கேசன்துறை இடையேயான கப்பல் போக்குவரத்து வா்த்தக ரீதியாகவும், நட்பு ரீதியாகவும், கலாசார ரீதியாகவும் மீண்டும் இந்திய - இலங்கை நட்புறவுக்குப் பாலமாக அமையும் என்று எதிா்பாா்ப்போம். பாரதியாா் கனவு கண்ட ‘சிங்களத் தீவினிற்கோா் பாலம்’ விரைவில் அமைய வேண்டும்!
  • நன்றி: தினமணி (23 – 10 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்