TNPSC Thervupettagam

சிசேரியன்: ஏன், எதற்கு, எப்படி

June 10 , 2023 582 days 403 0
  • சிசேரியனின் வரலாறு நான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே தொடங்குகிறது. இருப்பினும், இறப்புக்கான சாத்தியம் அதிகம் இருந்ததால் 1926 வரை அது பெருமளவில் தவிர்க்கப்பட்டது. 1926இல், மன்ரோ கெர் (Munro Kerr) அடிவயிற்றின் குறுக்காகக் கருப்பையைக் கீறி குழந்தையை வெளியே எடுக்கும் முறையை அறிமுகப்படுத்தினார். அடுத்த 50 ஆண்டுகளுக்கு இந்த முறையே உலகெங்கும் பின்பற்றப்பட்டது.
  • 1970களில் நடைமுறைக்கு வந்த மருத்துவ அறிவியலின் புதிய அறுவைசிகிச்சை வழிமுறைகள், சிசேரியனால் நிகழும் இறப்பு விகிதத்தை பெருமளவு குறைத்தன. இதன் பின்னர் நிகழ்ந்தவை எல்லாம் வரலாறு. இன்று உலக அளவில் நிகழும் பிரசவங்களில் நான்கில் ஒன்று சிசேரியனாகவே உள்ளது. மகப்பேற்றின்போது நிகழும் தாய்-சேய் இறப்புகளை சிசேரியன் பெருமளவில் குறைத்துள்ளது.

சிசேரியன் பிரசவம் என்பது என்ன?

  • சிசேரியன் என்பது அறுவைசிகிச்சையின் மூலம் குழந்தைகளைப் பிரசவிக்கும் ஒரு மருத்துவ முறை. பிரசவத்தின்போது தாய், சேயின் உடல்நிலைக்கு ஆபத்து இருந்தாலோ, சுகப்பிரசவத்துக்குச் சாத்தியம் இல்லாதபோதோ இம்முறை தேர்வு செய்யப்படும்.

தேர்வுக்கான முக்கியக் காரணங்கள்:

  • இரட்டைக் குழந்தை
  • உயர் ரத்த அழுத்தம்
  • குழந்தை திரும்பி இருத்தல்
  • தொப்புள்கொடி குழந்தையின் தலையைச் சுற்றுதல்
  • தாயின் உயரம், இடுப்பு வடிவம்

வகைகள்:

திட்டமிடப்பட்டது:

  • பிரசவ காலத்திலேயே இவர்களுக்குச் சுகப்பிரசவம் செய்வதற்குச் சாத்தியம் இல்லை என்று மருத்துவரால் தீர்மானித்து முன்பே அறுவைசிகிச்சைக்குத் தயாராவது ’தேர்ந்தெடுக்கப்படும்’ சிசேரியன் முறை. இம்முறையில் தாய்க்கு வலி வரும் வரை காத்திருக்காமல், குறித்த தேதியில் நேரடியாக அறுவைசிகிச்சை செய்யப்படும்.

திட்டமிடப்படாதது (அவசர நிலை):

  • இம்முறையில் குழந்தை சுகப்பிரசவத்தில் பிறக்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டு, முடியாத நிலையில் அவசரமாக அறுவைசிகிச்சைக்கு ஏற்பாடு செய்து தாய்-சேய் உயிர் காப்பாற்றப்படும்.

சிசேரியன் எவ்வாறு செய்யப்படுகிறது?

  • பொதுவாக, இந்த அறுவைசிகிச்சை 45 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை நடக்கும். இது பெரும்பாலும் தண்டுவடத்தில் செலுத்தப்படும் மயக்க மருந்துகளின் உதவியால் நடைபெறும். இதில், தாயின் அடிவயிற்றிலும் (ஆறு அங்குல அளவு) கருப்பையிலும் மேற்கொள்ளப்படும் அறுவைசிகிச்சை மூலம் கருப்பை திறக்கப்பட்டு, குழந்தை வெளியே எடுக்கப்படும். இறுதியாக, அறுவைசிகிச்சைக்குப் பின்னர் கருப்பையிலும் அடிவயிற்றிலும் தையலிடப்படும்.

என்ன நடக்கும்?

  • பெரும்பாலான திட்டமிடப்பட்ட சிசேரியன் பிரசவங்களில் கொடுக்கப்படும் மயக்க மருந்தானது அறுவைசிகிச்சை நடைபெறும் பகுதியை மட்டுமே மரத்துப்போக வைக்கும். இதன் காரணமாக, பிரசவத்தின்போது கர்ப்பிணிகள் விழிப்புநிலையில்தான் இருப்பார்கள்.
  • குழந்தை பிறந்த சில நிமிடங்களுக்குள் அவர்களால் குழந்தையின் முகத்தைப் பார்க்க முடியும். சிசேரியனின்போது மயக்க மருந்தின்கீழ் இருப்பதால், அவர்களுக்கு எவ்வித வலியும் இருக்காது. இருப்பினும், சில தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் மட்டும் பொது மயக்க மருந்துகளின் மூலம், அவர்கள் முழு மயக்கநிலைக்கு இட்டுச் செல்லப்படுகிறார்கள்.

எதில் வலி அதிகம்?

  • சுகப்பிரசவத்தில் ஏற்படும் வலியின் அளவு தனித்துவ மானது; மிகுந்த வீரியம் கொண்டது. இருப்பினும், அந்த வலியும் சோர்வும் சில மணிநேரத்துக்குள் நின்றுவிடும். சிசேரியன் பிரசவத்தின்போது எவ்வித வலியும் இருக்காது. ஆனால், அந்த வலி மயக்க மருந்தின் வீரியம் குறையத் தொடங்குவதிலிருந்து அதிகரிக்கும். சிசேரியனின் வலியும் சோர்வும், உபாதையும் சில நாள்கள் முதல் வாரங்கள் வரை நீடிக்கும்.

சிசேரியன் பிரசவத்தின் நன்மைகள்

  • சிக்கலுடன் கூடிய சுகப்பிரசவத்தில் தாய், சேயின் உயிரைக் காப்பாற்றும்.
  • பிறக்கும் குழந்தைக்கு ஏற்படக்கூடிய பிரசவ அதிர்ச்சியைத் தவிர்க்கும்.
  • தாய்க்கும் சேய்க்கும் நோய்த்தொற்று ஏற்படும் ஆபத்தைத் தவிர்க்கும்.
  • தாய், சேயின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்தும்.
  • கர்ப்பிணிகளுக்கு உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட சிக்கல்கள் ஏதாவது இருக்கும் - சூழலில் தாய், சேயின் உயிரைக் காக்கும் வாய்ப்பை ஏற்படுத்தித்தரும்.
  • சிசேரியனில் நன்மைகள் உள்ளன என்றாலும், அபாயங்கள் இருப்பதையும் மறுக்க முடியாது. மருத்துவரிடம் நன்கு ஆலோசிப்பது மட்டுமே அதன் அபாயத்தைக் குறைக்க உதவும்.

என்ன செய்ய வேண்டும்?

  • மனத்தையும் உடலையும் தயார்நிலையில் வைத்திருக்க வேண்டும். முக்கியமாக மனவலிமையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
  • எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் எழுந்து நாம் நடக்க ஆரம்பிக்க வேண்டும். 24 மணி நேரத்துக்கு மேலும் படுக்கையில் இருப்பது, எதிர்காலத்தில் தேவையற்ற பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.
  • நிறைய தண்ணீர் அருந்த வேண்டும். ’பிரசவத்துக்குப் பிறகு தண்ணீர் குடிக்கக் கூடாது, தண்ணீர் குடித்தால் புண் விரைவில் ஆறாது’ என்பது போன்ற கற்பிதங்களைப் புறந்தள்ள வேண்டும். தண்ணீர் அருந்துவது, ரத்த ஓட்டத்தைச் சீராக்கும்; மலச்சிக்கலைக் குறைக்கும்.
  • காரம் குறைவான, நார்ச்சத்து அதிகமாக உள்ள உணவு வகைகளைச் சாப்பிடுவது நல்லது.
  • வயிற்றில் தையல் இருப்பதால், இயற்கை உபாதையைக் கழிக்கும்போது முக்கவோ, வயிற்றுக்கு மிகுந்த அழுத்தமோ கொடுக்கக் கூடாது.
  • கண்டிப்பாக வயிற்றில் துண்டு வைத்துக் கட்ட வேண்டும்.இல்லையென்றால், வயிறு மட்டும் பெரிதாகிவிடும்.
  • அதிக எடை உள்ள பொருள்களைத் தூக்கக் கூடாது. அப்படித் தூக்கினால், எதிர்காலத்தில் நிறைய உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படலாம்.
  • இவை அனைத்தையும்விட முக்கியமானது, சிசேரியன் பிரசவத்துக்குப் பிறகு பெண்கள் மனச்சோர்வுடனும் கவலையுடனும் இருப்பார்கள். இதிலிருந்து மீள்வதற்குக் குடும்ப உறுப்பினர்களின் அக்கறையும் ஆதரவும் அவசியம் தேவை.

நன்றி: தி இந்து (10 – 06 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்