- சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் ப.சிதம்பரம்!
- மேற்கு வங்க அரசிடமிருந்து சலுகை பெற்றுக்கொண்டு, 'மெட்ரோ டைரி' என்கிற நிறுவனத்தில் இருந்த பங்குகளைச் சலுகை விலையில் வாங்கிய ‘கெவின்டர்ஸ்’ நிறுவனம், அரசிடமிருந்து பெற்ற பங்குகளின் ஒரு பகுதியைத் தனியார் ஒருவருக்கு லாபத்துடன் விற்றது என்ற குற்றச்சாட்டுடன் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. வழக்கைத் தொடுத்தவர் மேற்கு வங்க காங்கிரஸ் கட்சியின் தலைவர் அதிர் ரஞ்சன் சௌத்ரி. இந்த ஊழல் குற்றச்சாட்டானது, மம்தா பானர்ஜியின் தலைமையிலுள்ள மேற்கு வங்க அரசின் மீது கூறப்பட்டிருக்கிறது.
- இந்த வழக்கு விசாரணையில் மேற்கு வங்க அரசுக்காக ஆஜரானார், காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியத் தலைவர்களில் ஒருவரான மேனாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம். சீனியர் வக்கீலாக இந்த வழக்கு விசாரணைக்கு அவர் வந்தபோது கொல்கத்தா உயர் நீதிமன்ற வளாகத்தில் குழுமியிருந்த அவருடைய சொந்தக் கட்சியினரே சிதம்பரத்துக்கு எதிராகக் கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதைக் கண்டுகொள்ளாததுபோல் ப.சிதம்பரம் தனது முகமூடியுடன் கார் நிறுத்தத்தை நோக்கிச் செல்லும் காணொளிக் காட்சிகளை இணையத்தில் பார்க்க முடிந்தது.
- இது தொடர்பாகவே சர்ச்சை உருவாகியிருக்கிறது. தொழில் அடிப்படையில் ஒருவர் தான் சார்ந்திருக்கும் சொந்தக் கட்சிக்கு எதிராகவே வழக்காடுவது சரியா என்பதே சர்ச்சை! ‘வக்கீல் என்கிற முறையில் வழக்குகள் நடத்துவேன்; அது நான் சார்ந்திருக்கும் கட்சிக்கு எதிரானதாகவும் இருக்கலாம்; அதை எவரும் குறை கூற முடியாது; என் தொழில் வழக்கு நடத்துவதே!’ எனும் போக்கில் செயல்படுவது காங்கிரஸுக்குப் புதிதல்ல.
- இதுபோன்ற ஒரு சம்பவம் 1980இல் கேரளாவில் நடைபெற்றது. மத்திய சட்ட அமைச்சராகவும், அதற்கு முன் மேற்கு வங்க முதல்வராகவும், பின்னர் பஞ்சாப் ஆளுநராகவும் இருந்த காங்கிரஸ் தலைவர் சித்தார்த்த சங்கர் ராய் தனது பதவி காலத்திற்குப் பின் உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராகப் பணியாற்றினார்.
- அப்போது கேரளாவில், பிர்லாவுக்குச் சொந்தமான ரேயான் தொழிற்சாலையில் (மாவூர்) ஒரு தொழில் தகராறு ஏற்பட்டது. தொழிலாளிகள் ஆலையை மூடிவிடும் நிர்வாகத்தின் முயற்சியை எதிர்த்து காங்கிரஸ், கம்யூனிஸ்ட் தொழிற்சங்கங்கள் போராடிவந்தன. அதையொட்டி அங்குள்ள உரிமையியல் நீதிமன்றத்தில் பிர்லா நிர்வாகம் சார்பில் வாதாடுவதற்கு சித்தார்த்த சங்கர் ராய் அழைக்கப்பட்டிருந்தார். அவருக்கு எதிராக இளைஞர் காங்கிரஸார் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதைச் சட்டை செய்யாத ராய், ‘நான் காங்கிரஸ்காரனாக வழக்கு நடத்த வரவில்லை. ஒரு வக்கீலாகவே வந்துள்ளேன்!’ என்று சமாளித்தார்.
- இப்பிரச்சினை இன்று நேற்று ஏற்பட்டதல்ல.
- தொழில் நடத்தக்கூடிய வழக்கறிஞர் ஒருவர் அரசியல் கட்சியில் தலைவராகவும் அல்லது அக்கட்சிப் பொறுப்பில் இருந்த அரசின் அங்கமாகவும் இருந்துவிட்டு பின்னர் வழக்கறிஞராக அக்கட்சி நடவடிக்கைகளுக்கு விரோதமாகச் செயல்படும் செயல்கள் பலவற்றைப் பட்டியலிடலாம்.
- 1978இல் காங்கிரஸ் போக்குவரத்துத் தொழிலாளர்கள் சங்கத்தில் அக்கறை செலுத்திவந்த ப.சிதம்பரம், போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு ஏற்படுத்தப்பட்ட நிரந்தர நிலையாணைச் சட்டத்தை எதிர்த்து, பல்லவன் போக்குவரத்துக் கழகம் போட்ட வழக்கில் தொழிலாளர்களுக்கு ஆஜரான அதேநேரத்தில், அதேபோன்ற பிரச்சினையில் பாண்டியன் போக்குவரத்துக் கழக நிலையாணை வழக்கில் நிர்வாகத்திற்கும் ஆஜரானது கடுமையாக விமர்சிக்கப்பட்டது. 'பல்லவனில் தொழிலாளர் நண்பர், பாண்டியனில் நிர்வாக வக்கீல் என்று இரு நிலைப்பாடா?' என்று அவரை விமர்சித்து தொழிற்சங்கங்கள் துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டன.
- அதேபோல், எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் உள்ளாட்சித் தேர்தலில் இடஒதுக்கீடு செய்யப்பட்டதைக் காங்கிரஸ் கட்சி ஆதரித்தது. ஆனால், இடஒதுக்கீட்டுக்கு எதிராகப் போடப்பட்ட வழக்கொன்றில் ப.சிதம்பரம் ஆஜரானதோடு, உள்ளாட்சித் தேர்தலில் இடஒதுக்கீடு செய்வது அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதம் எனக் கூறி வாதாடினார். கட்சியின் நிலைப்பாடு ஒருபுறம், மறுபுறம் வக்கீல் தொழில் நடத்த வேண்டிய நிர்ப்பந்தம். இப்படியொரு இக்கட்டான சூழ்நிலையில், ‘கல்கி’ இதழில் அப்போது ‘பசியும் பஞ்சாயத்துராஜும்!’ என்கிற தலைப்பில் நான் ஒரு கட்டுரை எழுதினேன்.
- சாந்தி பூஷண், கபில் சிபல், அசோக் சென், ப.சிதம்பரம், அருண் ஜெட்லி இவர்களுக்கெல்லாம் ஓர் ஒற்றுமை உண்டு. மத்திய அமைச்சரவையில் பதவி வகிக்கும்போது வக்கீல் தொழிலை அவர்களால் செய்ய முடியாது. ஆனால், பதவிக் காலம் முடிந்த அடுத்த நிமிடமே வக்கீல் உடுப்பை மாட்டிக்கொண்டு நீதிமன்றத்தில் நிற்பார்கள். அச்சமயத்தில் அவர்கள் தங்களது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள். நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், வக்கீல்களாக இருக்கும்பட்சத்தில் அவர்கள் நீதிமன்றத்திலும் வழக்கு நடத்தலாமா என்கிற கேள்வி எப்பொழுதுமே எழுப்பப்பட்டுவந்துள்ளது.
- சில மாதங்களுக்கு முன்புகூட எம்பிக்களும், எம்எல்ஏக்களும் அவர்கள் பதவிக் காலத்தில் வக்கீல் தொழில் நடத்தக் கூடாது என்று ஒரு பொதுநல வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ளது. அதையொட்டி அகில இந்திய பார் கவுன்சில் ஒரு சுற்றறிக்கையையும் அனுப்பியுள்ளது.
- ஒருவர் வக்கீலாக இருக்க வேண்டும் என்றால் எந்த நிறுவனத்திலும் (அரசு மற்றும் அரசு சாரா) வேலை பார்க்கக் கூடாது. மேலும், அப்படிப்பட்ட நிறுவனங்களில் அவர்கள் தங்களது சட்டப் படிப்பின் காரணமாக சட்ட ஆலோசகராகவோ, சட்ட மேலாளராகவோ இருப்பினும் அவர்களால் நேரடியாக நீதிமன்றங்களில் வழக்கு நடத்த முடியாது. அதேபோல், முழு நேரமும் வேறொரு தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள் தங்களை வக்கீல்களாகப் பதிவுசெய்துகொள்ள முடியாது.
- இன்றைய உயர் நீதிமன்ற நீதிபதிகளின் நியமன நடைமுறை உருவாவதற்கு முன்னால் (1993க்கு முன்) மத்திய சட்ட அமைச்சர்கள் மிகவும் பலம் வாய்ந்தவர்களாக இருந்தார்கள். சட்ட அமைச்சரைக் காண்பதற்கு சட்ட அமைச்சகத்தின் வராந்தாக்களில் நீதிபதிகள் கைகட்டி நின்றதாகக் கூறுவார்கள். அப்பதவிக் காலம் முடிந்த பின்னரும் அவருக்கு உண்டான செல்வாக்கு குறைவதில்லை. ஏனென்றால், மீண்டும் அவர் அமைச்சர் ஆகிவிடுவாரோ (அ) தற்போதைய அமைச்சரிடம் அவருக்கு நல்ல உறவு இருக்கும் என்று பயப்படும் நீதிமன்ற நடுவர்கள் உண்டு. இதுதான் நம்மூர் நிதர்சனம்.
- இந்த விஷயத்தை சட்டரீதியாக அணுகுவதற்கு முன்னதாக தார்மிகரீதியாக அணுக வேண்டும்.
- மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று நேரடி அரசியலில் நுழைந்து நாடாளுமன்றத்தின் உறுப்பினராக சேவை புரிய வேண்டும் என எண்ணக்கூடிய வக்கீல்கள் மீண்டும் தாங்கள் இழந்த சொர்க்கத்தை மீட்டிட வேண்டும் என்று பணம் என்னும் இயந்திரங்களாக நீதிமன்ற வளாகத்தில் உலவக் கூடாது. நாடாளுமன்றப் பதவிக் காலத்தில் அதற்குண்டான சேவைகளைச் செய்வதற்கே நேரம் போதாது. இதில் அவர்கள் கோப்புகளுடனும், அதனை ஒப்படைத்த இளம் வக்கீல்களுடனும் வழக்கு நடத்துவதற்குப் பெரும் நேரத்தைச் செலவிடுவது அவர்களை எந்தக் காரணத்திற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்களோ அக்காரணத்தையே முறியடித்துவிடும்.
- கண்ணியமான வக்கீல் தொழிலைப் பாதுகாக்க வேண்டும் என்றால் நாடாளுமன்ற உறுப்பினர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் தங்களது பதவிக் காலத்தில் நீதிமன்றங்களில் உலவுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் அல்லது அது சட்டரீதியாகவே தடைசெய்யப்பட வேண்டும்!
நன்றி: அருஞ்சொல் (08 – 05 – 2022)