TNPSC Thervupettagam

சித்திரை சிறப்பு | உலகெங்கும் சித்திரை

April 16 , 2023 591 days 308 0
  • சித்திரைத் திருநாளான ஏப்ரல் 14 தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல மாநிலங்களிலும் உலகின் சில நாடுகளிலும் முக்கியத்துவம் வாய்ந்த நாளாக உள்ளது.

விஷு, கேரளம்

  • உழவர்களுக்கான நாள் இது (ஏப்ரல் 14). கேரளத்தில் உழவுக்கான ஆயத்தப் பணிகள் இந்நாளில்தான் தொடங்கப்படும். கனிகாணல், விஷு கைநீட்டம், விஷு படக்கம் (பட்டாசு வெடித்தல்) போன்றவை இந்தக் கொண்டாட்டத்தின் முக்கிய நிகழ்வுகள். விஷு கைநீட்டம் என்பது வீட்டின் பெரியவர்கள் சிறுவர்களுக்கும் தம்மிடம் வேலை செய்வோருக்கும் வழங்கும் பண அன்பளிப்பு.

ரோங்காலி பிஹு, அசாம்

  • அசாம் மாநிலத்தில் பிஹு என்கிற அறுவடைத் திருவிழா ஆண்டில் மூன்று முறை கொண்டாடப்படுகிறது. இவற்றில் ரோங்காலி பிஹு (ஏப்ரல் 14 -15) முக்கியமானது. இந்நாளில்தான் நெல் பயிரிடுவதற்காக விவசாயிகள் வயல்களைத் தயார் செய்கின்றனர். அரிசியும் தேங்காயும் சேர்த்துச் சமைக்கப்படும் ‘லாரஸ்’ எனும் பாரம்பரிய உணவும் ‘ஜால்பன்’ பானமும் இல்லாமல் இந்தத் திருவிழா நிறைவுபெறாது. இதன் முதல் நாள் கோரு (மாடு) பிஹு. இந்நாளில் மக்கள் பசுக்களை அலங்கரித்து வணங்குவது வாடிக்கை. மூன்றாம் நாள் கோசாய் (கடவுள்களின்) பிஹு.

வைசாகி, பஞ்சாப்

  • நாம் கொண்டாடும் பொங்கல் பண்டிகையைப் போன்றதே பஞ்சாபில் உள்ள சீக்கியர்கள் கொண்டாடும் ‘வைசாகி’ பண்டிகை (ஏப்ரல் 14). பஞ்சாபில் இளவேனில் அறுவடை நாளின் ஆரம்பத்தையும் குறிக்கும் நாள் இது. சீக்கிய வரலாற்றின்படி, பத்தாவது சீக்கிய குருவான குரு கோவிந்த் சிங் உருவாக்கிய ‘கால்சா பந்த்’ என்கிற நிகழ்வு நடைபெற்ற நாள் இது. ‘கால்சா பந்த்’ நினைவு தினமே இந்த ‘வைசாகி’ என்றும் சீக்கியர்களால் கருதப்படுகிறது.

பொஹெலா பொய்ஷாக், மேற்கு வங்கம்

  • வங்காளிகள் அறுவடையைப் போற்றி மகிழும் நாள் இது (ஏப்ரல் 14). வங்கதேசத்திலும் இந்தியாவில் மேற்கு வங்கம், திரிபுரா ஆகிய மாநிலங்களிலும் இது வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இந்தத் திருவிழாவில் நடைபெறும் ஊர்வலங்களும் கண்காட்சிகளும் கண்களுக்கு விருந்து.

சோங்க்ரான், தாய்லாந்து

  • தாய்லாந்தில் மக்கள் தண்ணீரைப் பீய்ச்சியடித்து மகிழும் திருவிழா இது (ஏப்ரல் 13 -15). பௌத்தப் புத்தாண்டின் தொடக்கத்தைக் குறிக்கும் இந்நாளில் புத்தரின் திருவுருவப் படங்கள் தண்ணீரில் குளிப்பாட்டப்படுகின்றன. தங்கள் மரியாதையை வெளிப்படுத்தும்விதமாகப் பௌத்தத் துறவிகள் மீதும் முதியவர்கள் மீதும் மக்கள் தண்ணீரைத் தெளிப்பது சோங்க்ரான் திருவிழாவின் பாரம்பரிய அம்சம்.

லாவோ புத்தாண்டு, லாவோஸ்

  • பௌத்தப் புத்தாண்டின் தொடக்கத்தைக் குறிக்கும் இந்தப் பண்டிகை லாவோஸ் நாட்டில் மூன்று நாள்கள் (ஏப்ரல் 14 -16) கொண்டாடப்படுகிறது. சில நகரங்களில் இந்தக் கொண்டாட்டங்கள் பத்து நாள்கள் வரையும் நீளும். தாய்லாந்தின் சோங்க்ரானைப் போன்று இங்கும் மக்கள் ஒருவருக்கொருவர் தண்ணீரைப் பீய்ச்சியடித்து மகிழ்வர்.

பிஸ்கட் ஜாத்ரா, நேபாளம்

  • சுவாரசியமான சடங்குகளைக் கொண்ட இந்தத் திருவிழா (ஏப்ரல் 14), ‘பாம்பின் இறப்புக்குப் பிறகான திருவிழா’ என்றும் அழைக்கப்படுகிறது. இரண்டு பாம்புகளை வெட்டிப் பலியிடுவது இதன் முக்கியச் சடங்கு. நாள் முழுவதும் உற்சாகமான நிகழ்வுகள் நடைபெறும். பைரவர், பத்ரகாளி ஆகிய கடவுள்களைக் குறிக்கும் தேர்களின் மோதலுடன் இந்தக் கொண்டாட்டம் நிறைவுபெறும். தேர்களின் மோதல் என்பது கருவுறுதலை உணர்த்தும் குறியீடு.

நன்றி: தி இந்து (16 – 04 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்