சிந்துவெளி: இந்திய வரலாற்றின் புத்தொளி
- சிந்து நதிக் கரையில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் செழித்து வளர்ந்த சிந்துவெளி நாகரிகம், தொல்லியல் ஆய்வின் மூலம் உலகுக்கு அறிவிக்கப்பட்டு இன்றுடன் நூறாண்டுகள் ஆகின்றன. இந்திய வரலாற்றின் மீதான பார்வையில் புதிய ஒளியைப் பாய்ச்சிய இந்நிகழ்வைக் கொண்டாடும் இத்தருணத்தில், தொல்லியல் ஆய்வுகளின் முக்கியத்துவத்தையும் உறுதியான சான்றுகளுடன் வரலாற்றை அணுக வேண்டிய தேவையையும் நாம் பேசியாக வேண்டும்.
- 1920களில் இந்தியத் தொல்லியல் துறை இயக்குநர் சர் ஜான் மார்ஷல் தலைமையிலான குழு மேற்கொண்ட அகழாய்வில், வெண்கலக் கால ஹரப்பா, மொகஞ்சதாரோ உள்ளிட்ட நகரங்கள் (பொ.ஆ.மு. (கி.மு.) 3500 - 1700) குறித்த தகவல்கள் கிடைத்தன. 1924 செப்டம்பர் 20இல், ‘தி இல்லஸ்ட்ரேடட் லண்டன் நியூஸ்’ இதழில் ஜான் மார்ஷல் எழுதிய ‘A Forgotten Age Revealed’ என்னும் கட்டுரை, சிந்துவெளி நாகரிகம் கண்டறியப்பட்டதை உலகத்துக்கு அறிவித்தது.
- எகிப்து, மெசபடோமியா, சீனா எனக் குறிப்பிடத்தக்க இடங்களில் பரவியிருந்த நதிக்கரை நகர நாகரிகங்களுடன் ஒப்பிட்டால் சிந்துவெளி நாகரிகம் பல்வேறு தளங்களில் இன்று வரை ஒரு பேசுபொருளாக நீடிக்கிறது. சிந்துவெளிப் பண்பாட்டின் எச்சங்கள் குஜராத், பஞ்சாப், ஹரியாணா போன்ற மாநிலங்களிலும், பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தானிலும் காணப்படுகின்றன. சிந்துவெளியில் வாழ்ந்த மக்கள் என்னவாயினர், அங்கு வாழ்ந்தவர்கள் எந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் எனப் பல்வேறு விவாதங்கள் தொடர்கின்றன.
- கீழடிக்கும் சங்க இலக்கியப் பதிவுகளுக்கும் இடையிலான தொடர்பு குறித்தும் ஆய்வாளர்கள் தொடர்ந்து பேசிவருகின்றனர். சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படும் நகரப் பண்பாடு, சிந்துவெளித் தொல்லியல் சான்றுகளுடன் பொருந்திப்போவதாகச் சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர். கீழடிக்கும் சிந்துவெளிக்கும் தொடர்பு இருப்பதாகவும் வலுவான கருதுகோள்கள் முன்வைக்கப்படுகின்றன. மறுபுறம் ரிக் வேதத்திலும் புராணங்களிலும் குறிப்பிடப்படும் சரஸ்வதி நதியை சிந்துவெளிப் பண்பாட்டுடன் தொடர்புபடுத்தி, அது ஒரு வேதகாலப் பண்பாடு என நிறுவும் முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றன.
- சிந்துவெளி முத்திரைகளின் எழுத்துகள் வலது புறத்திலிருந்து இடது புறமாக எழுதப்பட்டிருப்பதாகவே பொதுவாக நம்பப்படுகிறது. எனினும், இடதிலிருந்து வலமாக அவை எழுதப்பட்டிருப்பதாகவும் அவை தமிழ் எழுத்துக்கள்தான் என்றும் சிலர் வாதிடுகிறார்கள். ஹரப்பா, மொகஞ்சதாரோ முத்திரைகளில் பொறிக்கப்பட்ட எழுத்துச் சேர்ப்புகளைத் தமிழகப் பாறை ஓவியங்களுடன் ஒப்பிட்டு வாதிடுபவர்கள் இருக்கிறார்கள்.
- தொல்லியல் அகழாய்வு என்பது நீண்ட கால அவகாசத்தையும், கடும் உழைப்பையும், பொறுமையையும் கோருவது. எத்தனையோ பண்பாட்டு எச்சங்கள் காலப்போக்கில் மண்மூடி நவீனக் குடியிருப்புகளாக மாறியிருக்கும் என்பதால், அதுபோன்ற இடங்களில் அகழாய்வு மேற்கொள்வதில் நடைமுறைச் சிக்கல்களும் இருக்கின்றன. அகழாய்வில் கிடைக்கும் சான்றுகளை ஆய்வுசெய்து அந்தப் பண்பாட்டின் காலத்தை நிர்ணயிக்கும் பணியும் சவால்கள் நிறைந்தது.
- உதாரணமாக, கீழடி அகழாய்வு தொடங்கப்பட்டபோது, கீழடி நகர்ப்புற நாகரிகத்தின் காலம் பொ.ஆ.மு. 300 எனக் கருதப்பட்ட நிலையில், அடுத்தடுத்த கட்ட ஆய்வுகளின் மூலம் அதன் காலம் பொ.ஆ.மு. 600 என அனுமானிக்கப்பட்டது. தொடர்ந்து விரிவான ஆய்வுகளை நடத்துவதன் மூலம் அதன் காலத்தை இன்னும் துல்லியமாகத் தீர்மானிக்க முடியும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். ஆக ஒரு பண்பாட்டின் வரலாற்றுச் சான்றுகளை அறிவியல்பூர்வமாக நிறுவுவதன் மூலம், தத்தமது கருத்தாக்கங்களின் அடிப்படையில் அதை உரிமை கொண்டாடும் போக்கை முடிவுக்குக் கொண்டுவர முடியும்.
நன்றி: இந்து தமிழ் திசை (20 – 09 – 2024)