TNPSC Thervupettagam

சிந்துவெளி அகழாய்வு நூற்றாண்டு

September 1 , 2024 87 days 143 0

சிந்துவெளி அகழாய்வு நூற்றாண்டு

  • சிந்​துவெளி நாகரிகம் கண்டறியப்​பட்டு நூறு ஆண்டுகள் ஆகின்றன. இந்தியத் தொல்லியல் துறையின் இயக்குநராகப் பொறுப்பு வகித்த ஜான் ஹுபெர்ட் மார்ஷல், 1924இல் ஹரப்பாவில் ஆய்வுசெய்து, ஒரு புதிய பண்பாடு கண்டறியப்​பட்டது குறித்து அறிவித்​தார். ஹரப்பா​விலும் மொகஞ்​ச​தா​ரோ​விலும் நடந்த ஆய்வு, அதுவரை முன்வைக்​கப்பட்ட இந்திய வரலாற்றையே மாற்றியமைத்தது.
  • திராவிட இனம் குறித்த கருத்​தி​யலுக்குச் சிந்துவெளி நாகரிகம் குறித்த அறிதல்கள் கதவைத் திறந்​து​விட்டன. இதைக் கொண்டாடும் வகையில் ‘சிந்​துவெளி அகழாய்வு நூற்றாண்டுக் கருத்​தரங்​கம்’, சென்னை பச்சையப்பன் கல்லூரியில் அண்மையில் நடந்தது. தமிழ் மரபு அறக்கட்டளை அமைப்பும் பச்சையப்பன் அறக்கட்​டளைக் கல்லூரி​களும் இணைந்து இந்நிகழ்வை நடத்தின.
  • நிகழ்வில் ஆர்.பால​கிருஷ்ணன் ஐஏஎஸ் (ஓய்வு) பேசுகையில் “ஒடிஷா, சத்தீஸ்கர் போன்ற மாநிலங்​களில் பணிபுரிந்த​போது, அங்குள்ள கிராம மக்களையும் பழங்குடி மக்களையும் அடிக்கடி சந்திப்​பேன். நம்முடைய சங்க இலக்கி​யங்​களில் கூறப்​படுகிற ‘செவிலித்​தாய்’ என்கிற உறவுமுறையை அவர்களது சில பண்பாட்டுக் கூறுகள் ஒத்திருக்​கின்றன. இது ‘சங்க இலக்கியப் பண்பாட்டுக்கான ஆய்வகங்கள்’ என்கிற புரிதலுக்குப் பல விஷயங்கள் என்னை உந்தித் தள்ளின.
  • வணிகத்தில் பெண்களின் பங்களிப்பு இருந்​ததைப் பழந்தமிழ் இலக்கியப் பாடல்​களின் வழியே அறிய முடிகிறது. சிந்து​வெளிச் சமூகத்தில் பெண்கள் ஆளுமையோடு விளங்​கியதை, அப்பண்​பாட்டுக்குச் சான்றுகளாகக் கிடைத்த பொருள்கள் வெளிப்​படுத்து​கின்றன. பழந்தமிழரால் காளையும் எருமையும் முக்கியமான கால்நடைகளாக வளர்க்​கப்​பட்டன. ஆரியருக்கு நன்கு பழக்கமான குதிரை, சிந்துவெளி மக்கள் அறிந்திராதது. முசிறியி​லிருந்து அலெக்​சாண்ட்​ரி​யா​வுக்கு நம்மவர்கள் வணிக ஒப்பந்தம் செய்ததற்கான சான்றுகளை இன்று காண முடிகிறது. சிந்து​வெளிப் பண்பாடு நிலவிய லோத்தல், ஹரப்பா போன்ற இடங்களைப் போலவே, கீழடி​யிலும் ஒரே மாதிரியான பகடைக்​காய்கள் கண்டெடுக்​கப்​பட்​டுள்ளன.
  • சிந்து​வெளியில் வாழ்ந்த மக்கள் எங்கு சென்றனர்? தமிழக மக்களின் தொன்மம் எங்கு தொடங்கு​கிறது? இவ்விரு கேள்வி​களும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்​கள்​தான். ஒடிஷாவுக்கும் கீழடிக்கும் தொலைவு அதிகமிருக்​கலாம். ஆனால், பண்பாட்டு நோக்கில் இடைவெளி இல்லை. பன்றி​யாறு, வராக நதி எனப் பெயர் மாற்றப்​படு​கிறது. நம் வரலாற்றை அறிந்​து​கொள்ள​வில்லை எனில், நம் பண்பாட்டுக்கு மற்றவர்கள் பெயர் வைத்து​விடு​வார்கள். தொன்மையான சமூகத்தைச் சேர்ந்​தவர்கள் என்கிற வரலாறு வெறுப்பு​ணர்வை அளிக்​காமல், நமக்குப் பொறுப்பு​ணர்வை அளிக்க வேண்டும்” என்றார்.
  • சங்கம் பீடியா (sangampedia.net) வலைப்​பக்கம் நிகழ்வில் வெளியிடப்​பட்டது. தமிழ் இலக்கியம் குறித்து அறிஞர் ப.பாண்​டியராஜா உருவாக்கிய மூன்று தொடரடைவுகள் இந்த வலைப்​பக்​கத்தில் இணைக்​கப்​பட்​டுள்ளன. பாலகிருஷ்ணனின் ஆய்வுரை நூலாக​வும் சுபாஷிணியின் ‘மக்கள்​ வரலாறு: தொடக்​க​மும் தொடர்ச்​சி​யும்’ நூலும் வெளி​யிடப்​பட்டன. தமிழ் மரபு அறக்​கட்​டளை​யின் தலைவர்​ க.சுபாஷிணி, ​மானுட​வியல் ஆய்​வாளர் பக்​தவத்சல பாரதி, பேராசிரியர் அரசு செல்​லையா உள்​ளிட்​டோரும் ஆய்வுரை வழங்​கினர்​.

நன்றி: இந்து தமிழ் திசை (01 – 09 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்