TNPSC Thervupettagam

சிந்துவெளிப் புதிர்களை விடுவிக்கக் காத்திருக்கும் கீழடிப் பானைகள்

January 13 , 2025 3 days 36 0
  • சிந்துவெளி நாகரிகம் கண்டறியப்பட்டு 100 ஆண்டுகள் ஆகின்றன. இது தொடர்பாக ஜான் ஹூபர்ட் மார்ஷல் (Sir John Hubert Marshall) அறிக்கையில் கூறப்பட்டுள்ள சான்றுகள் பற்றி நாம் அறிவோம். ஆனால், அதன் பிறகு இந்த 100 ஆண்டுகளில் சிந்துவெளிப் பகுதியில் நடைபெற்ற அகழாய்வுகள், அதில் வெளிப்பட்ட பொருள்கள், அவற்றின் மீதான அறிவியல் பரிசோதனைகள் குறித்துத் தெரிந்துகொள்வது அவசியம்.

சிந்​து​வெளிப் பொருள் பண்பாடு:

  • இந்த 100 ஆண்டு​களில் ஹரப்பா பகுதியில் வாழ்ந்த மக்கள், அவர்களது பொருள் பயன்பாட்டுப் பண்பாடு என ஏராளமான ஆய்வுகள் நடைபெற்றுள்ளன, நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, சிந்து​வெளிப் பகுதியில் இதுவரை 3,000க்கும் அதிகமான இடங்களில் தொல்லியல் எச்சங்கள் கண்டறியப்​பட்​டுள்ளன. அதாவது, 5 கி.மீ. இடைவெளியில் ஒரு சிந்து​வெளித் தொல்லியல் தடம் என்கிற அளவில் ஹரப்பா முதல் மொகஞ்​ச தாரோ வரை, ஆப்கானிஸ்தான் முதல் லோத்தல் (குஜராத்) வரை காணப்​படுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்​றனர்.
  • இப்பகு​தி​களில் பல்வேறு காலக்​கட்​டங்​களைச் சேர்ந்த தொல்லியல் எச்சங்​களைத் தேடும் பணிகளும் நடந்துள்ளன. அதாவது, லோத்தல் உள்ளிட்ட பகுதி​களில் மேற்கொள்​ளப்பட்ட அகழாய்​வு​களில் ஹரப்பா நாகரி​கத்​துக்கு முற்பட்ட காலம், தொடக்க நிலை, முதிர்ந்த நிலை, பிந்தைய நிலை, மத்தியக் கால இந்தியா எனப் பல்வேறு காலக்​கட்​டங்​களைச் சேர்ந்த தொல்லியல் எச்சங்கள் கண்டறியப்​பட்​டுள்ளன.
  • இதில் சிந்துவெளி மக்களின் பொருள் பண்பாடு குறித்த பல்வேறு தகவல்களை அறிய முடிகிறது. பல்வேறு பகுதி​களுக்கு இடம்பெயர்ந்த சிந்து​வெளிக் கைவினைஞர்​களின் சந்ததிகள் மூலம் சிந்து​வெளிப் பொருள் பண்பாட்டின் தொடர்ச்சி, பல்வேறு பகுதி​களுக்கு இடையிலான உள்நாட்டு வணிகம், மூலப்​பொருள்கள் போக்கு​வரத்து, மண்டல அளவிலான தொடர்​புகள் என இப்பகு​திகள் அறிஞர்​களால் பகுத்து ஆராயப்​பட்​டுள்ளன.
  • இதன்மூலம் சிந்து​வெளிப் பகுதி​களின் பொருள் பண்பாடு, அதற்குப் பிந்தைய காலக்​கட்​டங்​களிலும் தொடர்ந்து வந்துள்ளமையை ஊகிக்க முடிகிறது. இப்பகு​தி​களில் காணப்​படும் கட்டு​மானங்கள், மக்கள் பயன்பாட்டுப் பொருள்கள், கைவினைத் திறன்கள் ஆகியவற்றை மேலோட்டமாக ஒப்பு​நோக்​கினாலே ஹரப்பாவுக்குப் பிறகு சுமார் 1,000 ஆண்டுகள் அதன் தொடர்ச்சி நீடித்​திருப்​ப​தற்கான வாய்ப்புகள் இருக்​கலாம் என்கிற கருதுகோளும், அந்த மக்களே இரண்டாம் நகர நாகரி​கத்தைத் தோற்று​வித்​தவர்களாக இருக்​கலாம் என்கிற கருதுகோளும் வலுவாகின்றன.

முக்கிய ஆய்வு:

  • இதேபோலச் சிந்துவெளி எழுத்துகளை வாசிப்பது குறித்த பல்வேறு வாய்ப்புகள் குறித்தும் பல முனைகளில் ஆய்வுகள் நடைபெற்று​வரு​கின்றன. மேலும், சிந்துவெளி எழுத்​துமுறை திராவிட மொழிகளுக்கு முந்தைய வடிவங்களாக இருக்​கலாம் என்றும், அதற்கான சான்றுகள் தென்னிந்​தியப் பகுதி​களில் கிடைக்​கலாம் என்றும் பல்வேறு ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
  • அவற்றில் முக்கியமான ஆய்வு சிந்துவெளி வரிவடிவங்​களையும் தமிழ்​நாட்டில் காணப்பட்ட பானை ஓடுகளில் பொறிக்​கப்​பட்​டுள்ள குறிகளையும் வடிவ இயல் அடிப்​படையில் ஒப்பு​நோக்கி மேற்கொள்​ளப்பட்ட ஆய்வே. மதிப்பு​மிக்க தொல்லியல் அறிஞர் பேராசிரியர் கா.ராஜனும் தமிழ்நாடு தொல்லியல் துறை இணை இயக்குநர் ஆர்.சி​வானந்​தமும் இணைந்து இந்த ஆய்வினை மேற்கொண்​டுள்​ளனர்.
  • பேராசிரியர் கா.ராஜன் போன்ற​வர்​களின் பெருமுயற்​சியால் கொடுமணல் முதல் கீழடிவரை வெளிக்​கொணரப்பட்ட 15,184 பானை ஓடுகளின் குறிகள் ஆவணப்​படுத்​தப்​பட்​டுள்ளன. இது இந்தியாவின் ஏனைய பகுதி​களில் கண்டறியப்பட்ட குறிகளின் மொத்த எண்ணிக்கை​யைவிட அதிகம். இந்தக் குறிகளை ஒப்பிட்டே இருவரும் ஆய்வில் இறங்கி​யுள்​ளனர். “தமிழ்​நாட்டில் காணப்​படும் பல குறியீடுகள் சிந்துவெளி எழுத்து​களின் இணையாக விளங்​கு​கின்றன. இதேபோல், சில குறியீடுகள் ஒத்த குறியீடுகளாக விளங்​கு​கின்றன.
  • இவை அடிப்​படைக் குறியீடு​களி​லிருந்து உருவாகி​யிருக்​கலாம். கிடைக்​கப்​பெற்றுள்ள 42 அடிப்​படைக் குறியீடுகள் அல்லது அவற்றை ஒத்த குறியீடு​களில் (மொத்தம் 2,107 குறியீடுகள்) ஏறக்குறைய 60% குறியீடுகள் சிந்துவெளி எழுத்​துக்​களின் இணையாகக் காணப்​படு​கின்றன. மிக முக்கிய​மாகத் தென்னிந்தியாவில் கிடைக்கும் 90%க்கும் அதிகமான குறியீடுகள் சிந்து​வெளிப் பண்பாட்டில் காணப்​படும் குறியீடு​களுடன் ஒத்துப்​போகின்றன அல்லது இணையாக விளங்​கு​கின்றன.
  • எனவே, தனியாக​வும், கூட்டாக​வும், இணையாகவும் கிடைக்கும் ஒரே வகைக் குறியீடு​களும், ஒத்த வடிவத்​துடன் கூடிய குறியீடு​களும் - இவை தற்செயலாக நிகழ்ந்​தவையல்ல என்பதைத் தெளிவாக உணர்த்து​கின்றன. பொதுவாக, சிந்துவெளி எழுத்துகள் அல்லது குறியீடுகள் எவ்விதத் தடயங்​களும் இல்லாமல் மறைந்​து​போ​யிருக்காது என்கிற அடிப்​படையில் இவை வெவ்வேறு வடிவங்களாக மாறியிருக்கும் அல்லது பரிணாம வளர்ச்​சி​யடைந்​திருக்கும் என்று நம்பப்​படு​கிறது.
  • எனவே, தற்போது மேற்கொள்​ளப்பட்ட ஒப்பீட்​டாய்வு என்பது மொழியியல் அடிப்​படையில் மேற்கொள்​ளப்பட்ட ஒப்பீட்​டாய்வு என்பதைக் காட்டிலும் உருவவியல்​/வடிவ​வியல் ஒப்பீட்​டாய்வு என்று கூறுவதே சாலச்​சிறந்​த​தாகும்” என்று தங்கள் ஆய்வில் அவர்கள் குறிப்​பிட்​டிருக்​கிறார்கள்.

பண்பாட்டுப் பரிமாற்​றங்கள்:

  • சிந்துவெளி வணிகம் மெசபடோமி​யாவில் பரவியது. சிந்துவெளி மக்களுக்கான மூலப்​பொருள்​களும் அடிப்​படைத் தேவைக்கான பொருள்​களும் இந்தியாவின் பிறபகு​தி​களில் இருந்து கொண்டு​செல்​லப்​பட்​டிருக்​கின்றன. எனினும் அங்கெல்லாம் சிந்துவெளி மக்களின் குடியேற்றத் தடங்கள் காணப்படாத நிலையில், சிந்து​வெளிக் குறியீடு​களைப் போன்ற குறியீடுகள் தென்னிந்தியாவில் கிடைப்பது சிந்து​வெளிப் பண்பாட்டுக்​கும், தென்னிந்தியா​வுக்கும் இடையே நிலவிய பண்பாட்டுத் தொடர்பைக் குறிக்​கிறது என்கிறார்கள் இருவரும்.
  • இதனை வலுப்​படுத்தக் கூடுதல் சான்றுகளும் உறுதியான தரவுகளும் தேவைப்​படு​கின்றன. அண்மைக் காலத்தில் பெறப்பட்ட அறிவியல் காலக்​கணக்​கீடுகள் சிந்துவெளி செப்புக் காலத்தில் இருந்த​போது, தென்னிந்தியா இரும்புக் காலத்தில் இருந்தது என்பதை உணர்த்து​கின்றன.
  • அந்த வகையில் தென்னிந்தியாவின் இரும்புக் காலமும் சிந்து​வெளியின் செப்புக் காலமும் சமகாலத்தவை. இரண்டும் சமகாலம் என்றால், சிந்து​வெளிக்கும் தென்னிந்தியா​வுக்கும் இடையே நேரடி​யாகவோ அல்லது இடைநிலை மண்டலங்கள் வழியாகவோ பண்பாட்டுப் பரிமாற்​றங்கள் இருந்​திருக்​கக்​கூடும். ஒரே வகையான குறியீடுகள் கிடைப்​பதைக் கொண்டு இதை உணரலாம்.
  • சூது பவளம் (கார்​னீலியன்), அகேட் மணிகள், செம்பு, உயர்ந்த ரக வெண்கலப் பொருள்கள் தென்னிந்தியாவில் கிடைப்​ப​தால், குறிப்பாக இரும்புக் காலக் கல்லறை​களில் இருந்து கிடைப்​பதால் இவை வடக்கி​லிருந்தோ அல்லது வேறு இடங்களி​லிருந்தோ தெற்கு நோக்கி வந்திருக்க வேண்டும் என்றே ஊகிக்​கப்​படு​கிறது.
  • அரிய கல்மணிகள், செம்பு ஆகியவற்றைத் தவிர, இன்னும் பிற தொல்லியல் பொருள்கள் இத்தொடர்பை உறுதிப்​படுத்தத் தேவைப்​படு​கின்றன. அந்த வகையில், குறியீடுகள் பொறிக்​கப்பட்ட மட்பாண்டங்கள் மிக முக்கி​யத்துவம் பெறுகின்றன. ஆக எதிர்​காலக் களஆய்வுகள், அகழாய்​வுகள், அறிவியல் ஆய்வுகள், வரலாற்று, மொழியியல் அடிப் படையிலான பகுப்​பாய்​வுகள் ஆகியவை உள்ளார்ந்த சிந்தனையைத் தூண்டி பண்பாட்டு - மொழியியல் சிக்கல்​களுக்கு உன்னதப் பங்களிப்பை வழங்கக்​கூடும்​.

நன்றி: இந்து தமிழ் திசை (13 – 01 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்