TNPSC Thervupettagam

சிபில் ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் அமல்

January 6 , 2025 5 days 62 0

சிபில் ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் அமல்

  • இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்ள், வாடிக்கையாளருக்கு தனி நபர் கடன், வீட்டுக் கடன், வாகனக் கடன் வழங்குவதற்கு ஒரு முக்கிய காரணியாக ‘சிபில்’ (Credit Information Bureau (India) Limited) மதிப்பெண்ணை கணக்கில் எடுத்துக் கொள்கின்றன.
  • சிபில் மதிப்பெண் 300 முதல் 900 வரை வழங்கப்படும். இதில் 750-க்கு மேல் இருந்தால் வாடிக்கையாளர் கேட்டபடி கடன் கிடைக்கும். 650 முதல் 749 வரை இருந்தால் கடன் கிடைக்கும். ஆனால் கூடுதல் வட்டி விதிக்க வாய்ப்பு உள்ளது. 550 முதல் 649 வரை இருந்தால் கடன் கிடைப்பதற்கான வாய்ப்பு குறைவு.
  • இந்நிலையில், நாடாளுமன்ற மக்களவையில் தமிழக காங்கிரஸ் உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் சமீபத்தில் பேசும்போது, “சிபில் மதிப்பெண்ணை வழங்கும் அமைப்புகள் தனியார் நிறுவனங்களால் கட்டுப்படுத்தப்படுகின்றன.இந்த மதிப்பெண்ணை கணக்கிடுவதில் வெளிப்படைத் தன்மை இல்லை.
  • நம்முடைய முந்தைய கடன்கள் பற்றிய விவரங்களை முறையாக பராமரிக்கிறார்களா என்பதே சந்தேகமாக உள்ளது. இந்த நிறுவனங்களை சரியாக கட்டுப்படுத்த அரசு தவறிவிட்டது. சிபில் மதிப்பெண் குறைவாக இருக்கிறது எனக் கூறி கடன் மறுக்கும்போது, மேல்முறையீடு செய்ய வழியே இல்லை. இந்த அமைப்புக்கு கடிவாளம் போட வேண்டும்” என்றார்.
  • அமெரிக்காவைச் சேர்ந்த டிரான்ஸ்யூனியன் நிறுவனத்தின் ஒரு அங்கமான டிரான்ஸ்யூனியன் சிபில் (TransUnion CIBIL) இந்தியாவில் செயல்படும் ஒரு கடன் தகவல் நிறுவனம் ஆகும். இது 60 கோடி தனிநபர்கள் மற்றும் 3.2 கோடி வணிகங்களின் கடன் கோப்புகளை பராமரித்து மதிப்பெண் வழங்குகிறது.
  • இது இந்தியாவில் செயல்படும் நான்கு கடன் தகவல் பணியகங்களில் ஒன்றாகும். ஒரு நபரின் கடன் வரலாறு மற்றும் திருப்பிச் செலுத்தும் நடத்தை ஆகியவற்றின் அடிப்படையில் சிபில் மதிப்பெண் கணக்கிடப்படுகிறது, இது வங்கிகள் மற்றும் பிற கடன் வழங்குநர்களால் டிரான்ஸ்யூனியன் சிபில் நிறுவனத்துக்கு தெரிவிக்கப்படுகிறது.

சிபில் மதிப்பெண்ணைக் கணக்கிடும்போது கருத்தில் கொள்ளப்படும் சில காரணிகள் வருமாறு:

  • கடன் திருப்பிச் செலுத்திய வரலாறு: இந்த காரணி மதிப்பெண்ணில் 35% பங்களிக்கிறது. முந்தைய கடன்களை சரியானபடி திருப்பிச் செலுத்தினாரா என்றும் கடன் திருப்பி செலுத்துவதில் கால தாமதம் உண்டா என்பதையும் ஏதாவது கடன் தள்ளுபடி செய்யபட்டுள்ளதா என்பதை பொறுத்தும் இந்த மதிப்பெண் அமையும்.

கடன் பயன்பாடு:

  • இந்த காரணி மதிப்பெண்ணில் 30% பங்களிக்கிறது. ஒரு நபர் பயன்படுத்திய கடனின் அளவை, அவருக்குக் கிடைக்கும் மொத்தக் கடன் தொகையுடன் ஒப்பிடுவதன் மூலம் இது கணக்கிடப்படுகிறது. அதிக கடன் பயன்பாட்டு விகிதம் ஒரு நபர் கடனைச் சார்ந்திருப்பதைக் குறிக்கலாம் மற்றும் அவரதுகடனை சரியான நேரத்தில் செலுத்த முடியாமல் போகலாம். இதனால் மதிப்பெண் குறையலாம்.

கடன் விசாரணைகள்:

  • ஒரு நபர் கடன் பெறுவதற்காக பல்வேறு நிதி நிறுவனங்களை குறுகிய காலத்தில் அணுகினால் அந்த நபரின் மதிப்பெண் குறையும்.

பிரச்சினை எங்கே வருகிறது?

  • சில நேரங்களில் இதில் பங்கு பெறும் வங்கிகளும் மற்ற நிதி நிறுவனங்களும் சரியான நேரத்தில் தரவுகளை அளிக்காமல் போவதால்சிபில் மதிப்பெண் குறைகிறது. கடன் விண்ணப்பித்தவர்களுக்கு எதன் அடிப்படையில் மதிப்பெண் கணக்கிடப்படுகிறது என்பது புரியாததாலும் குழப்பம் உண்டாகிறது.
  • சிபில் மதிப்பெண்ணை ஒரு மாணவன் எழுதும் தேர்வுடன் ஒப்பிட முடியும். தேர்வு விடைத்தாளை திருத்துபவருக்கு சரியான வழிகாட்டுதல் உண்டு. எந்தெந்த பதிலுக்கு எந்தெந்த அளவில் மதிப்பெண் அளிக்க வேண்டும் என்ற அளவீடு உண்டு. பெரும்பாலான தேர்வுகளில் மதிப்பெண் சரியில்லை என்று மாணவன் கருதினால் அந்த விடைத்தாளை மறுபரிசீலனை செய்ய வழி உண்டு. மேலும் அந்த விடைத்தாளின் நகலைப் பெற்று சரிபார்க்கவும் செய்யலாம்.
  • அதுபோன்று சிபில் மதிப்பெண்ணை சரிபார்க்க எந்த வழிமுறையும் இல்லாமல், அதன் அடிப்படையில் ஒருவருக்கு கடன் கொடுக்கலாமா அல்லது வேண்டாமா என்று தீர்மானிப்பதும் எந்த அளவுக்கு கடன் வழங்கலாம் என்று முடிவு செய்வதும் குறைபாடே. சிபில் மதிப்பெண்ணையும் அது எவ்வாறு கணக்கிடப்பட்டது என்பதையும் கடன் விண்ணப்பதாரருக்கு தெரிவிப்பதே சரியான நடைமுறையாக இருக்க முடியும்.

15 நாட்களுக்கு ஒரு முறை..

  • இந்நிலையில், சிபில் தொடர்பான ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் கடந்த ஜனவரி 1 முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன்படி, வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களின் கடன் மதிப்பெண்ணை 15 நாட்களுக்கு ஒரு முறை (மாதத்தின் 15 ஆம் தேதியிலும், கடைசி தேதியிலும்), கட்டாயம் புதுப்பிக்க வேண்டும். இதை கடன் தகவல் நிறுவனங்களுக்கும் அனுப்ப வேண்டும்.
  • வாடிக்கையாளர்களின் கடன் அறிக்கையை வங்கிகளும் அல்லது வங்கி அல்லாத நிதி நிறுவனங்களும் பார்க்கும் ஒவ்வொரு முறையும், வாடிக்கையாளருக்கு அதுபற்றி மின்னஞ்சலிலோ அல்லது எஸ் எம் எஸ் வழியாகவோ தெரிவிக்க வேண்டும். இதுபோல, கடன் அல்லது கடன் அட்டை மறுக்கப்பட்டாலும் அதற்கான காரணத்தை வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
  • கடன் தகவல் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஆண்டுதோறும் கடன் அறிக்கையை இலவசமாக கட்டாயம் அனுப்ப வேண்டும். கடனை திருப்பிச் செலுத்தாத வாடிக்கையாளர் பற்றிய தகவலை பதிவிடுவதற்கு முன் அவருக்கு வங்கிகள் தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும் வாடிக்கையாளர்களின் குறைகளை தீர்க்க தனி அதிகாரியை நியமிக்க வேண்டும். கடன் பற்றிய புள்ளிகளை வழங்கும் நிறுவனங்கள் 30 நாட்களுக்குள் புகார்களுக்கு தீர்வு காண வேண்டும் எனவும் ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறையில் கூறப்பட்டுள்ளது.

நன்றி: இந்து தமிழ் திசை (06 – 01 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்