- கரோனா நோய்த்தொற்றுப் பரவலால் நிலைகுலைந்திருக்கும் தமிழகப் பொருளாதாரத்தை மீட்டெடுப்பது குறித்து, ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் சி.ரங்கராஜன் தலைமையிலான உயர்நிலைக் குழு அளித்த அறிக்கையிலுள்ள ஆக்கபூர்வப் பரிந்துரைகளுக்கு முழுச் செயல் வடிவம் கொடுப்பதில் தமிழக அரசு அக்கறை செலுத்த வேண்டும்.
- கரோனாவுக்கு முன்பிருந்த இயல்பான நிலைக்கு பொருளாதாரரீதியாக சில மாதங்களில் தமிழகம் திரும்பிவிடும் என்று நம்பிக்கை தெரிவித்த ரங்கராஜன் அதேநேரத்தில், தமிழக அரசு அதற்குச் செய்ய வேண்டியன என்ன என்பதை இந்த அறிக்கையில் விவரித்திருந்தார்.
- மிக முக்கியமானதாக அவர் சுட்டிக்காட்டுவது, வேலைவாய்ப்புகளை உருவாக்குவதையும், இதற்காகவே தமிழக அரசு ரூ.10,000 கோடியைச் செலவிட வேண்டும் என்பதையும்.
- மாநிலத்தின் பொருளாதார நிலை குறித்து ஆராய்ந்ததில், நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி விகிதம் 1.71% ஆக இருக்கும் என்று ஒரு மதிப்பீட்டில் தெரிந்ததாகவும் மற்றொரு மதிப்பீட்டின்படி பொருளாதார வளர்ச்சி எதிர்மறையாக இருக்கும் என்று தெரிந்ததாகவும் சி.ரங்கராஜன் கூறியிருக்கிறார்.
- எனினும் சரக்கு மற்றும் சேவை வரி வசூல், எரிபொருட்களின் மீதான வரிகள், மின்சாரப் பயன்பாடு ஆகிய அளவீடுகளைக் கொண்டு பார்க்கும்போது, கரோனா தொற்றுக்கு முன்பிருந்த நிலைக்குத் தமிழகம் வெகுவிரைவில் முன்னேறிவிடும் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.
- இந்த அறிக்கை ஊரகங்களில் மகாத்மா காந்தி வேலை உறுதித் திட்டத்தைப் போல நகர்ப்புறங்களிலும் திட்டங்களை உருவாக்க வேண்டியதன் அவசியத்தைச் சரியாகவே சுட்டிக்காட்டியிருக்கிறது.
- பிரபலப் பொருளியலாளரும் ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் வரைவில் பங்கெடுத்துக்கொண்டவரான ழீன் தெரசேவும் இந்தக் கருத்தை வலியுறுத்திவருகிறார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
- நகர்ப்புறங்களில் அரசு நிறுவனங்கள் தங்களது முன்முயற்சியில் நிறைவேற்றும் வகையில் அவர் ஒரு எளிய திட்டத்தையும் பரிந்துரைக்கிறார்.
- இத்திட்டத்துக்கு அவர் ‘பரவலாக்கப்பட்ட நகர்ப்புற வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் திட்டம்’ என்று பெயரும் சூட்டியிருக்கிறார்.
- ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட இந்தத் திட்டமானது, கரோனா காலத்துக்கான பொருளாதார மீட்பு நடவடிக்கை மட்டுமில்லை, நகர்ப்புற வறுமை ஒழிப்புக்கான நிரந்தரத் திட்டமும்கூட. அதே வழியில் சி.ரங்கராஜன் பரிந்துரைத்துள்ள இந்தத் திட்டத்தைத் தமிழகம் முதல் மாநிலமாக செயல்படுத்தி, இந்தியாவுக்கு வழிகாட்டவும் முடியும்.
- இந்தக் குழு மேலும் சில முக்கியமான பரிந்துரைகளையும் அளித்துள்ளது. வேலையிழப்பைச் சந்தித்திருக்கும் கட்டுமானத் தொழிலாளர்களுக்கான நலத் திட்டங்களுக்காக ரூ.3,200 கோடி செலவிடவும் மருத்துவ, சுகாதாரப் பணிகளுக்காக ரூ.5,000 கோடியைச் செலவிடவும் வேண்டும் என்று அது தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
- இந்தியா மட்டுமில்லை, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அனைத்து நாடுகளுமே நிதிப் பற்றாக்குறை என்ற பிரச்சினையை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும்.
- ஆனால், அது அடுத்தடுத்த நிதியாண்டுகளில் சரியாகிவிடும். வறுமையின் கொடுமையிலிருந்து மக்களை உடனடியாகக் காப்பாற்றுவதே முதன்மையான சவால்; அதற்கான ஒரே வழி வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்காக அரசு ஓய்வின்றி உழைப்பதுதான்!
நன்றி: தி இந்து (01-10-2020)