TNPSC Thervupettagam

சிறார் இலக்கியம் 2024

January 5 , 2025 5 days 73 0

சிறார் இலக்கியம் 2024

  • தமிழ்ச் சிறார் இலக்கியத்தில் 2010ஆம் ஆண்டுக்குப் பிறகு கவனம் கொள்ளத் தக்க படைப்புகள் அதிகளவில் வெளிவருகின்றன. பழமையான நீதிநெறிக் கதை சொல்லல் முறையில் இருந்து விலகிப் புதிய பாடுபொருள்கள், புதிய மொழிநடையில் பல படைப்புகள் வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த 2024ஆம் ஆண்டிலும் சிறார் இலக்கியச் சூழலில் ஆக்கபூர்வமான முயற்சிகள் நடைபெற்றன.
  • முன்மாதிரியான சிறார் கதைகளைக் கொண்ட யூமா வாசுகியின் ‘தன்வியின் பிறந்த நாள்’ நூலுக்கு 2024ஆம் ஆண்டுக்கான பாலசாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது. அதற்கான பாராட்டு விழாவில் கலந்துகொண்ட மலையாள எழுத்தாளர் பி.வி.சுகுமாரன், ‘யூமாவின் படைப்புகளை மிகுந்த மகிழ்ச்சியோடு மொழிபெயர்ப்பதாக’ பகிர்ந்துகொண்டார்.
  • கறுப்பு நிறம் அசுத்தமானது; அழுக்கான மனிதர்கள் குற்றவாளிகள் எனும் பொதுப்பிம்பத்தை உடைக்கும் வகையிலான படைப்புகள் பெரியவர்களுக்கான இலக்கியத்தில் அதிகம் உள்ளன. சிறார் இலக்கியத்திலும் அது நீள்கிறது. எருமைமாட்டை இழிவாகப் பார்ப்பதை உடைத்து, மாற்றுப் பண்பாடாக எருமையைக் கொண்டாடி எழுதப்பட்ட சிறார் கதைகளின் தொகுப்பு ‘எருமையின் நிழல்’. நீதிமணி எழுதிய இந்நூலில் சின்னஞ்சிறு கதைகள் கவித்துவம் நிரம்பியவையாக உள்ளன.
  • உதயசங்கரின் 150ஆவது சிறார் நூலான ‘மந்திரத் தொப்பி’ வெளியானதும் கடந்த ஆண்டே. காட்டுயிர்களை மையமாகக் கொண்ட கதைகளின் தொகுப்பு இது. யெஸ்.பாலபாரதியின் ‘அபூவின் செல்லக்குட்டி’யில் ஒரு சிறுவனுக்கு டைனசர் முட்டை கிடைக்கிறது. அதிலிருந்து வெளிவரும் டைனசர் குட்டியும் சிறுவர்களும் என ஃபேன்டஸியாகக் கதை விரியும். கதை மனிதர்களில் ஒருவராக மாற்றுத்திறனாளியும் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.
  • தமிழில் குழந்தைகளின் வயதுவாரியான நூல்கள் வெளிவருவது சொற்பமே. அந்தக் குறையைப் போக்கும் விதத்தில் இந்த ஆண்டில் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் 119 நூல்களை வெளியிட்டுள்ளது. 8 முதல் 15 வயது வரையிலான குழந்தைகளை மூன்று பிரிவுகளாகப் பிரித்து, அவர்களுக்கு ஏற்றவகையில் படைப்புகளைப் பதிப்பித்துள்ளது. ஒரு பூங்காவை அறிமுகப் படுத்துவதில் தொடங்கி திருநர் குறித்த உரையாடல் வரை பல்வேறு கதைகள் இடம்பெற்றுள்ளன.
  • கும்பகோணம் அறிஞர் அண்ணா அரசுப் பள்ளி மாணவர்கள் 25 பேர் ஆளுக்கொரு கதை எழுதி ‘என் கனவின் கதை’ என வெளிவந்தது குறிப்பிடத்தக்க முயற்சி.
  • ஹெர் ஸ்டோரிஸ் பதிப்பகம், ‘மா’ பத்மாவதி, சாலை செல்வம், கோகிலா, யாமினி, நிவேதிதா லூயிஸ் உள்ளிட்ட பெண் படைப்பாளிகளின் சிறார் நூல்களை வெளியிட்டது. ‘உலகிலேயே சிறந்த டீ’, ‘ஆன் உடல்’, ‘ராஜம்மாள்’ உள்ளிட்டவை குறிப்பிடத்தக்கவை.
  • நிவேதிதா பதிப்பகம் ஒரே விழாவில் 25 சிறார் நூல்களை வெளியிட்டது. அதில், மு.முருகேஷ், ஞா.கலையரசி, ஆர்.வி.பதி, கன்னிக்கோவில் ராஜா, பல்லவிகுமார், ராசி அழகப்பன் உள்ளிட்டோர் பங்களித்திருந்தனர். பெரியவர்களுக்கு எழுதும் நாறும்பூ
  • நாதன், ஏகாதசி உள்ளிட்டோர் சிறார் இலக்கியம் பக்கம் வந்துள்ளனர். இந்த வரிசையில் ஏற்கெனவே எழுதி வரும் எஸ்.ராமகிருஷ்ணனின் ‘தபால் பெட்டி எழுதிய கடிதம்’ நூல் வெளியானது. மேலும், வா.மு.கோமு, சுப்ரபாரதிமணியன் உள்ளிட்டோரின் நூல்களும் வெளிவந்துள்ளன.
  • பாரதி தொடங்கி சமகாலம் வரையிலான 100 சிறார் கதைகளின் பெரும் தொகுப்பை சிறார் எழுத்தாளர் தொகுக்க டிஸ்கவரி புக் பேலஸ் வெளியிட்டுள்ளது. தமிழ்ச் சிறார் இலக்கியத்தை உள்வாங்க இது உதவும்.
  • சிறார் பாடல்களில் முத்துராஜா, உமையவன், கார்த்திகா கவின்குமார் உள்ளிட்டோரின் நூல்கள் வெளியாகின. சிறார் இலக்கியத்தில் நாடக நூல் வருவது அபூர்வம். இந்த ஆண்டில் நாடகக் கலைஞர் சந்திரமோகனின் ‘சிவப்பு யானை’ எனும் சிறார் நாடகப் பிரதி வெளியாகிக் கவனம் பெற்றது. சிறார் இலக்கியப் படைப்புகளை நாடகமாக்கும் முயற்சிகளிலும் இவரும், சிவபஞ்சவன், மாயக்கிருஷ்ணன் உள்ளிட்டோரும் தீவிரம் காட்டுகிறார்கள்.
  • அபுனைவுகளில் உலகளவில் சமகாலச் சிறார் இலக்கிய எழுத்தாளர்களைப் பற்றிய நல்லதொரு அறிமுகத்தை ‘கதை சொல்லிகளின் கதை’ நூல்வழியாகத் தந்துள்ளார் இ.பா.சிந்தன். ‘தேநீரில் மிதக்கும் கணிதம்’ மூலம் கணிதத்தை இனிமையாக்கும் வழிகளைக் காட்டியுள்ளார் விழியன்.
  • ‘இந்து தமிழ் திசை’ பதிப்பகம் கடந்த ஆண்டில் மாணவர்களின் வாசிப்புக்காக ‘நானும் கதாசிரியரே’, ‘டிங்கு கேள்வி பதில்’ உள்ளிட்ட நூல்களை வெளியிட்டது. சிறார் இலக்கியத்தில் தொடர்ச்சியாகப் பங்களித்து வரும் கொ.ம.கோ.இளங்கோ, சூடாமணி, அமுதா செல்வி, ஈரோடு ஷர்மிளா, சரிதா ஜோ உள்ளிட்டோரின் நூல்களும் இவ்வாண்டு வெளிவந்துள்ளன.
  • மாவட்டந்தோறும் நடைபெறும் புத்தகக் கண்காட்சிகள் சிலவற்றில் சிறார் இலக்கியம் பற்றிப் பேசப்பட்டன. காவிரி மற்றும் பொருநை இலக்கியத் திருவிழாக்களில் சிறார் இலக்கிய அமர்வுகள் நடைபெற்றன.
  • இன்னும் பல்வேறு முன்னெடுப்புகள் கடந்த ஆண்டில் சிறார் இலக்கியத்தில் நடந்தன. ஆயினும், முன்மாதிரியாகக் கருதக்கூடிய சிறார் இலக்கியப் படைப்புகள் ஓரிரண்டே வெளியாயின என்பதையும் குறிப்பிட வேண்டும். பேசப்படாத கதைக் கருக்கள், புதிய கதைக் களங்கள் எனத் தேடல் மிகுந்த படைப்புகள் மிகமிகச் சொற்பமாகவே வெளியாயின. அக்குறையை 2025 ஆம் ஆண்டு போக்கும் என நம்புவோம்.

நன்றி: இந்து தமிழ் திசை (05 – 01 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்