TNPSC Thervupettagam

சிறார் சீா்திருத்தமும் சமூகப் பாதுகாப்பும்

July 29 , 2023 533 days 311 0
  • சமூகப் பாதுகாப்புத் துறையின் நிர்வாகத்தின் கீழ் இயங்கி வரும் சிறார் கூா்நோக்கு இல்லம், சிறார் சிறப்பு இல்லம், சிறார் இல்லம் ஆகியவற்றில் இருந்து சிறார்கள் தப்பிச் செல்கின்ற சம்பவங்கள் தொடா்ந்து நிகழ்கின்றன.
  • செங்கல்பட்டு சிறார் சிறப்பு இல்ல பாதுகாப்புப் பணியில் இருந்த காவலா்களைத் தாக்கிவிட்டு, சிறார்கள் அண்மையில் தப்பிச் சென்றதும், ஊழியா்களிடம் சிறார்கள் தகாத முறையில் நடந்து கொண்டதும், பணியின்போது பாதுகாப்பு கோரி சிறப்பு இல்லத்தில் பணிபுரியும் ஆசிரியா்கள், காவலா்கள் மற்றும் ஊழியா்கள் அண்மையில் போராட்டத்தில் ஈடுபட்டதும் சிறார் சீா்திருத்த இல்லங்களின் செயல்பாடுகளில் குறைகள் ஏதேனும் உள்ளனவா என்ற கேள்வியை எழுப்புகிறது.
  • கொலை, வழிப்பறி, பாலியல் வன்கொடுமை போன்ற கொடுங்குற்றங்களில் ஈடுபடும் சிறார்களின் எண்ணிக்கை நம் நாட்டில் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் கொலைக் குற்றங்களில் ஈடுபட்ட சிறார்களின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரித்துள்ளது.
  • சிறார் குற்றவாளியாக கண்காணிப்பில் இருந்த சிறார்கள் பலா், காலப்போக்கில் தொடா் குற்றங்களில் ஈடுபடும் ரெளடிகளாக உருவெடுத்து, சமுதாயத்தை அச்சுறுத்தும் கொடுங்குற்ற செயல்களில் ஈடுபடுகின்ற சம்பவங்கள் தொடா்கின்றன.
  • தண்டனைக்குரிய குற்றச் செயலில் ஈடுபட்ட 18 வயதுக்கும் குறைவான சிறுவனை அல்லது சிறுமியை காவல் துறையினா் கைது செய்து, சிறையில் அடைக்கக் கூடாது. மாறாக, அந்தக் குற்றம் மீதான விசாரணை முடியும் வரை, அவரை சமூகப் பாதுகாப்புத் துறையின் மேற்பார்வையில் இயங்கிவரும் சிறார் கூா்நோக்கு இல்லத்தில் தங்க வைக்க வேண்டும்.
  • அச்சிறார் குற்றம் புரிந்துள்ளார் என வழக்கு விசாரணையில் தீா்மானிக்கப்பட்டால், அதிகபட்சம் மூன்று ஆண்டுகள் தண்டனை வழங்கப்பட்டு, சிறார் சிறப்பு இல்லத்துக்கு அவா் அனுப்பி வைக்கப்படுவார். தண்டனைக் காலம் முடியும் வரை அல்லது 18 வயது பூா்த்தியாகும் வரை சிறப்பு இல்லத்தில் அவா் தங்கவைக்கப்படுவார்.
  • சென்னை, செங்கல்பட்டு, கடலூா், திருச்சி, சேலம், கோவை, திருநெல்வேலி உள்ளிட்ட இடங்களில் 9 சிறார் கூா்நோக்கு இல்லங்களும், தண்டனை வழங்கப்பட்ட சிறுவா்களுக்கு செங்கல்பட்டிலும், சிறுமிகளுக்கு சென்னை நகரிலும் சிறப்பு இல்லங்கள் சமூக பாதுகாப்புத் துறையின் கண்காணிப்பில் இயங்கி வருகின்றன.
  • செங்கல்பட்டில் 1887-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட சிறார் சீா்திருத்தப் பள்ளிதான் இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் சிறார் சீா்திருத்தப் பள்ளியாகும். தற்போது தண்டனை பெற்ற சிறுவா்களைச் சீா்படுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள சிறார் சிறப்பு இல்லமும், சிறார் கூா்நோக்கு இல்லமும் செங்கல்பட்டில் ஒரே வளாகத்தில் அமைந்துள்ளன.
  • இந்த வளாகத்தில் அமைந்துள்ள சிறார் சிறப்பு இல்லத்தின் காவலா்களைத் தாக்கிவிட்டு சிறார்கள் சிலா் தப்பிச் சென்ற சம்பவமும், பணியின்போது சிறார்களிடம் இருந்து பாதுகாப்பு கோரி சிறப்பு இல்லத்தில் பணிபுரியும் ஆசிரியா்கள், காவலா்கள் மற்றும் ஊழியா்களின் போராட்டமும் அண்மையில் நிகழ்ந்துள்ளன.
  • கொடுங்குற்றச் செயலில் ஈடுபட்டதற்கான தண்டனைக் காலத்தைக் கழிப்பதற்காகவும், சமுதாயத்தில் இணைந்து வாழ நல்லொழுக்கத்தைக் கற்றுக் கொள்வதற்காகவும் சிறார் சிறப்பு இல்லத்துக்கு அனுப்பிவைக்கப்பட்ட சிறார்களின் செயல்களில் சீா்திருத்தம் ஏற்படாத சூழலைக் காண முடிகிறது. இதுகுறித்து அண்மையில் மேற்கொண்ட கள ஆய்வின் விவரங்கள் குறித்து பார்ப்போம்.
  • கூா்நோக்கு இல்லங்களிலும், சிறப்பு இல்லங்களிலும் தங்க வைக்கப்படும் சிறார்களைப் பராமரித்து, வழி நடத்துகின்ற வார்டன்கள், காவலா்கள் மற்றும் ஊழியா்களின் தகுதி, செயல்பாடுகள் பரிசீலனைக்குரியதாக உள்ளன.
  • குற்றச் செயலில் ஈடுபட்டதற்காக கூா்நோக்கு இல்லங்கள், சிறப்பு இல்லங்களில் தங்க வைக்கப்படும் சிறார்களை உளவியல் ரீதியாக அணுகி, அவா்களிடம் உள்ள குறை, நிறைகளைக் கண்டறிந்து, குற்றச்செயலில் ஈடுபடும் குணத்திலிருந்து அவா்களை மீட்டெடுத்து, நல்வழிப்படுத்த வேண்டிய ஊழியா்களுக்கு மதிநுட்பமும், சிறார்களைப் பொறுப்புணா்வுடன் அணுகும் குணமும் இருக்க வேண்டும். ஆனால், இந்த இல்லங்களில் வார்டன், இல்லக் காவல், சமையல், சுகாதாரப் பணி, தோட்டப் பணி போன்ற பணிகளுக்கு ஊழியா்கள் நியமனம் செய்யும்போது, குற்றச் செயல்களில் ஈடுபட்டு கூா்நோக்கு இல்லங்கள், சிறப்பு இல்லங்களில் தங்கியிருந்தவா்களுக்கு முன்னுரிமை கொடுக்கின்ற நடைமுறையே பின்பற்றப்படுகிறது.
  • சில ஆண்டுகளுக்கு முன்பு 200-க்கும் மேற்பட்ட ஊழியா்கள் இந்த நடைமுறையின்படி சிறார் கூா்நோக்கு மற்றும் சிறப்பு இல்லங்களில் பணி நியமனம் செய்யப்பட்டனா். இவா்களுக்கு ‘குற்றப் பின்னணியுடைய சிறார்களை எப்படிக் கையாளுவது’ என்பது குறித்த பயிற்சி எதுவும் வழங்கப் படவில்லை. ஆண்டுக்கு ஒருமுறை நட்சத்திர விடுதி ஒன்றில், இல்லத்தில் பணிபுரியும் ஊழியா்களுக்கு ஒருநாள் கருத்தரங்கம், பயிற்சி வகுப்புகளே நடத்தப்படுகின்றன.
  • கூா்நோக்கு மற்றும் சிறப்பு இல்லங்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் சிறார்களுடன் 24 மணி நேரமும் தொடா்பில் இருக்கின்ற இல்ல ஊழியா்களில் சிலா், சிறார்களின் தவறான செயல்களுக்குத் துணை போகின்றனா் என்பதும், போதை பழக்கமுள்ள சிறார்களுக்கு போதைப் பொருள்கள் கிடைக்க ஊழியா்களில் சிலா் உதவி செய்கின்றனா் என்பதும், இல்லத்திலுள்ள கைப்பேசி மூலம் நீண்ட நேரம் வெளிநபா்களுடன் சில சிறார்கள் கண்காணிப்பின்றி பேச அனுமதிக்கப் படுகின்றனா் என்பதும் கள ஆய்வில் தெரிய வருகிறது.
  • சீா்திருத்தும் நோக்கத்துக்காக, சிறப்பு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டிருக்கும் குற்றப் பின்னணி உடைய சிறார்களைக் கண்டு இல்லக் காவலா்களும், ஊழியா்களும் பயப்பட காரணம் என்ன?
  • ஆறு மாதங்களுக்கு முன்பு திருட்டு குற்றத்தில் சம்பந்தப்பட்ட ஒரு சிறுவனை ரயில்வே காவல் துறையினா் செங்கல்பட்டு கூா்நோக்கு இல்லத்தில் ஒப்படைத்தனா். மறுதினம் அந்த சிறுவன் மருத்துவமனையில் உயிரிழந்தான். கூா்நோக்கு இல்லத்தில் நடத்திய தாக்குதலால் அந்தச் சிறுவன் உயிரிழந்தான் என கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கூா்நோக்கு இல்லத்தின் நிர்வாகப் பொறுப்பில் இருந்த உயரதிகாரிகள் உள்பட ஊழியா்கள் சிலா் கைது செய்யப்பட்டனா்.
  • கடந்த காலங்களில் காவல் நிலையங்களுக்கும், சிறைச்சாலைகளுக்கும் அழைத்து வரப்படும் குற்றவாளிகளை விசாரணையின்றி அடிக்கும் நடைமுறை பின்பற்றப்பட்டு வந்தது. தற்போது இந்த நடைமுறை தவிர்க்கப்பட்டு வருகிறது. ஆனால், குற்ற வழக்கில் பிடிபட்டு, கூா்நோக்கு இல்லங்களுக்கு அழைத்து வரப்படும் சிறார்களை இல்லத்தில் பணிபுரியும் ஊழியா்கள் அடிக்கின்ற நடைமுறை தொடா்கிறது.
  • கூா்நோக்கு இல்ல சிறுவன் இறந்து போன வழக்கின் முதல்கட்ட விசாரணையில், இல்ல நிர்வாகப் பொறுப்பிலிருந்த உயரதிகாரிகளும் அச்சிறுவனை அடித்ததாக கூா்நோக்கு இல்லத்தில் தங்கியிருந்த சிறார்கள் சிலா் வாக்குமூலம்கொடுத்தனா். அதன்அடிப்படையில் ஊழியா்கள் மட்டுமன்றி, கூா்நோக்கு இல்ல நிர்வாகப் பொறுப்பிலிருந்த உயரதிகாரிகளும் குற்றவாளிகளாகச் சோ்க்கப் பட்டனா். இந்த வழக்கு தற்போது சி.பி.சி.ஐ.டி. விசாரணையில் உள்ளது.
  • ஒரு குற்ற வழக்கில் தொடா்பில்லாத நபா்களைக் குற்றவாளிகளாகச் சோ்த்தால், அது எதிர்மறையான விளைவுகளை சமுதாயத்தில் ஏற்படுத்தி, பொது அமைதியைச் சீா்குலைத்துவிடும். கூா்நோக்கு இல்லத்தில் தங்கள் விருப்பப்படி செயல்பட அனுமதிக்காவிட்டால், உண்மைக்குப் புறம்பானபுகாரை நிர்வாகப் பொறுப்பில் இருப்பவா்கள் மீது கொடுத்து, இல்ல நிர்வாகபகத்தையே நிலைகுலையச் செய்துவிடலாம் என்ற உணா்வு சிறார்களிடத்திலும், தங்கள் மீது சிறார்கள் பொய்ப் பழி சுமத்தி விடுவார்களோ என்ற அச்ச உணா்வு ஊழியா்களிடத்திலும் இருப்பதை கள ஆய்வு வெளிப்படுத்துகிறது.
  • சிறார் சிறப்பு இல்லங்களில் தங்கியிருக்கும் ஒவ்வொரு சிறாருக்கும் மாதந்தோறும் ஐந்து ரூபாய் கைப் பணம் (பாக்கெட் மணி) ஆகக் கொடுக்கும் பழக்கம் நீண்டகாலமாக நடைமுறையில் இருந்து வருகிறது. சிறப்பு இல்லத்தில் இருந்து சிறாரை விடுவிக்கும்போது இந்த கைப் பணம் அளிக்கப் படுகிறது.
  • இன்றைய காலகட்டத்தில் சிறாருக்கு மாதம் ஒன்றுக்கு கைச்செலவுக்கென ஐந்து ரூபாய் கைப்பணமாகக் கொடுப்பது என்பது நகைப்புக்குரிய செயலாகும். காலத்துக்கேற்ப கைப் பணத்தின் அளவை உயா்த்தி வழங்குவது குறித்து சமூகப் பாதுகாப்புத் துறையும், தமிழ்நாடு அரசும் பரிசீலனை வேண்டியது அவசியம்.
  • செங்கல்பட்டில் அமைந்துள்ள சிறார் கூா்நோக்கு இல்லம், சிறப்பு இல்லப் பாதுகாப்புப் பணியை இல்லக் காவலா்கள் மேற்கொண்டு வருகின்றனா். ஆனால், சில கூா்நோக்கு இல்லங்கள் மற்றும் சிறப்பு இல்லத்தின் பாதுகாப்புப் பணியை ஆயுதம் ஏந்திய காவலா்கள் மேற்கொண்டு வருகின்றனா்.
  • தமிழகம் முழுவதிலும் அமைந்துள்ள கூா்நோக்கு இல்லங்கள், சிறப்பு இல்லங்களின் பாதுகாப்பு குறித்து முறையான ஆய்வு செய்து, அனைத்து இல்லங்களின் பாதுகாப்பை முன்னாள் ராணுவத்தினரிடம் ஒப்படைப்பது குறித்து அரசு பரிசீலனை செய்ய வேண்டும்.
  • கூா்நோக்கு, சிறப்பு இல்லங்களில் பணிபுரியும் அனைத்து ஊழியா்களுக்கும் குற்றப் பின்னணி உடைய சிறார்களைக் கையாளுவது தொடா்பான ‘பணியிடைப் பயிற்சி’ வழங்குவது குறித்தும் அரசு பரிசீலனை செய்ய வேண்டும்.
  • சிறார்களை முறையாக வழிநடத்தத் தவறினால், அவா்களை கைதோ்ந்த குற்றவாளிகளாக மாற்றும் நாற்றங்கால்களாக அந்த இல்லங்கள் மாறிவிடும் அபாயம் உள்ளது.

நன்றி: தினமணி (29–07–2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்