TNPSC Thervupettagam

சிறார் பாலியல் சுரண்டல் தளங்கள்: வக்கிரத்துக்கு முடிவு என்ன?

October 3 , 2024 100 days 153 0

சிறார் பாலியல் சுரண்டல் தளங்கள்: வக்கிரத்துக்கு முடிவு என்ன?

  • அண்மையில் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தீர்ப்பை வழங்கியிருக்கிறது உச்ச நீதிமன்றம். குழந்தைகள் தொடர்பான ஆபாசப் படங்களைப் பதிவிறக்கம் செய்வதும் பார்ப்பதும் குற்றம்தான் என்கிறது அத்தீர்ப்பு.

தவறைத் திருத்திய உச்ச நீதிமன்றம்:

  • தமிழக இளைஞர் ஒருவர் குழந்தைகள் தொடர்பான ஆபாசப் படங்களைத் தனது திறன்​பேசியில் பதிவிறக்கம் செய்து பார்த்ததாக ஒரு வழக்கு. அதனை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி , “தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000த்தின் பிரிவு 67பி-யின்படி குழந்தைகள் தொடர்பான ஆபாசப் படங்களைப் பார்ப்பது மட்டும் குற்றம் என்ற வரையறைக்குள் வரவில்லை” என்று கூறியிருந்தார்.
  • இத்தீர்ப்பை எதிர்த்து நீதிமன்​றத்தில் மேல்முறையீடு செய்யப்​பட்டது. அதனை விசாரித்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வுதான் மேற்கண்​டவாறு தீர்ப்பு வழங்கி​யிருக்​கிறது. அதில், ‘குழந்தை​களின் ஆபாசப் படங்களைப் பார்ப்​பதால் ஏற்படும் விளைவுகளை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அப்படங்களை ஒருவர் பகிர்ந்​திருக்​கா​விட்​டாலும்கூட அதனைப் பதிவிறக்கம் செய்து பார்ப்​பதும் குற்றம்​தான்.
  • இவ்விஷ​யத்தில் குற்றத்​தை​விடக் குற்றத்​துக்கான நோக்கத்தைக் கவனிக்க வேண்டும்’ என்றும் உச்ச நீதிமன்றம் கூறியிருக்​கிறது. கூடவே, ‘குழந்தை​களின் ஆபாசப் படங்கள் என்ற சொற்பிரயோகத்​துக்குப் பதிலாக ‘குழந்தை​களைப் பாலியல்​ரீ​தி​யாகச் சுரண்​டக்​கூடிய, தகாத முறையிலான சித்தரிப்பு’ என்று மாற்ற வேண்டும்; இது தொடர்பாக போக்ஸோ சட்டத்தில் திருத்தம் செய்யவோ, அவசரச் சட்டம் இயற்றவோகூடச் செய்ய​லாம்.
  • அதேபோல, பாலியல் கல்வி தொடர்பான நமது பழைய கண்ணோட்​டத்தைத் தகர்த்து​விட்டு, அதனை முறையாகக் குழந்தை​களுக்குக் கற்றுத்​தரலாம்’ என்றும் நீதிமன்றம் அறிவுறுத்​தி​யிருக்​கிறது. இதன் மூலம், குழந்தைகளை வைத்து எடுக்கப்பட்ட ஆபாசப் படங்களைக் காண்பது என்னும் வக்கிரமான செயல்பாடு சட்டரீதியாகத் தண்டிக்கப்பட வேண்டிய குற்றம் என்பதை உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.

விழிப்பு​ணர்வு இன்மை:

  • உச்ச நீதிமன்​றத்தின் இந்த உறுதியான கருத்​துக்குக் காரணம் இல்லாமல் இல்லை. தகவல் தொழில்​நுட்பச் சட்டத்தின் பிரிவு 67 பி-இன்படி குழந்தை​களைத் தவறான நோக்கத்​துடன் சொற்களாலோ, டிஜிட்டல் படங்களாகவோ சித்தரிப்பது, அவற்றைச் சேகரிப்பது, தேடுவது, பதிவிறக்கம் செய்வது, விளம்பரம் செய்வது, பரிமாறுவது, முறையற்ற உறவுக்கு அவர்களைத் தூண்டுவது ஆகியவை குற்றங்​களாகும்.
  • இக்குற்​றவாளி​களுக்கு அதிகபட்சமாக 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.10 லட்சம்வரை அபராதமும் விதிக்​கப்​படலாம். அதேபோல, போக்ஸோ சட்டத்தின் 13-16 வரையிலான சட்டப்​பிரிவுகள் குழந்தை​களுக்கு எதிரான பாலியல் இணையத் தாக்குதல் குறித்துப் பேசுகின்றன. அச்சட்​டத்தின் பிரிவு 17இன்படி இக்குற்​றங்​களில் ஈடுபடு​வோருக்கு அதிகபட்சம் 10 ஆண்டு​கள்வரை சிறையும் அபராதமும் விதிக்​கப்​படும். ஆனால், இச்சட்​டங்கள் குறித்த விழிப்பு​ணர்வு பரவலாக இல்லை என்பதையே உச்ச நீதிமன்​றத்தின் இந்தத் தீர்ப்பு உணர்த்து​கிறது.

பாதிப்பும் போராட்​டமும்:

  • தற்போது உலக ஆபாச வலைதளச் சந்தையின் மதிப்பு 102 பில்லியன் டாலர் என்கிறது ஒரு செய்தி. இதில் குழந்தைகள் தொடர்பான உள்ளடக்கச் சந்தையும் அடங்கும். இணையவழி​யிலும் நிஜ வாழ்க்கை​யிலும் பாலியல் துன்புறுத்​தலால் எவ்வளவோ குழந்தை​களும் அவர்தம் பெற்றோரும் சொல்லொணாத் துயரத்​துக்கு உள்ளாகின்​றனர். பொதுவெளிக்கு வந்து சட்டரீதியில் போராடி நீதி பெறுவது நமது சமூகத்தில் இன்னும் வழக்க​மாகி​விட​வில்லை. இதனால் படிப்பில் பின்னடைவு, தற்கொலை மனோபாவம், உளவியல் பாதிப்பு போன்ற​வற்றுக்குக் குழந்தைகள் ஆளாகின்​றனர்.
  • தமிழ்நாடு காவல் துறையின் 100 என்ற எண்ணுக்கு அல்லது குழந்தை​களுக்கான ‘ஹெல்ப்​லைன்’ எண்ணான 1098க்கும் தொலைபேசியில் அழைத்தால் உடனடியாக உதவி கிடைக்​கிறது​தான். ஆனால், அது குறித்த விழிப்பு​ணர்வு இன்னும் துல்லிய​மாகப் போய்ச் சேரவில்லை. பெற்றோர்​-பள்​ளி​கள்​-அரசு-சமூக ஆர்வலர்கள் என்று கூட்டாகச் செய்ய வேண்டிய விழிப்புணர்வுப் பணி அது.

இந்தியாவின் கடமை:

  • குழந்தைகள் தொடர்பான பாலியல் வன்கொடுமை உள்ளடக்கம் இருக்கும் இணையதளங்களைத் தடைசெய்த உடனேயே வேறு ஒரு பெயரில் அத்தளங்கள் இயங்கத் தொடங்​கு​கின்றன. உலக அளவில் இணையதளப் பெயர்களை வழங்குவதை ஐகேன் (Internet Corporation for Assigned Names and Numbers -ICANN) என்ற அமைப்பு கட்டுப்​படுத்து​கிறது. அவ்வமைப்​புக்கு அழுத்தம் கொடுத்து இதனைத் தடுத்து நிறுத்த முயல வேண்டும்.
  • அதற்கான அதிகாரம் இந்தியா​வுக்கு உண்டு. ஆம்... குழந்தை விற்பனை, அவர்களைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்​துதல், குழந்தை​களின்​மீதான இணையப் பாலியல் சுரண்டல் ஆகியவற்றி​லிருந்து அவர்களைக் காக்கும் ஐ.நா.வின் தீர்மானத்தில் (The Optional Protocol to the Convention on the Rights of the Child on the Sale of Children, Child Prostitution and Child Pornography - OPSC) இந்தியாவும் கையெழுத்​திட்​டிருக்​கிறது.
  • பல நாடுகளில் வயதுவந்​தோருக்கான பாலியல் இணையதளங்கள் அரசு அனுமதி​யுடன் இயங்கு​கின்றன. இச்சூழலில், ஒவ்வொரு பதிவேற்​றத்​துக்கும் அரசாங்க அடையாள அட்டை, ஓடிபி சரிபார்த்தல் கட்டாயம் என்று உலக அளவில் ஆக்கி​விட்டாலே பாதிக்கும் மேல் பிரச்​சினைகள் குறைந்​து​விடும். மூன்றாம் நபரின் உள்ளடக்​கத்தைத் தமது அடையாளத்​துடன் பதிவேற்ற எவருக்கும் துணிச்சல் வராது.

நாணயத்தின் மறுபக்கம்:

  • ஒருபக்கம் குழந்தை​களைக் குறிவைப்​போரைத் தடுக்க வேண்டிய தேவை இருக்​கிறது. அதேவேளை​யில், புதிய சட்டங்களோ, சட்டத்​திருத்​தங்களோ அதன் நோக்கத்தை விட்டு விலகாமல் காக்க வேண்டிய தேவையும் இருக்​கிறது. அதனைச் சாத்தி​யப்​படுத்த வேண்டு​மானால், சிறார் உரிமைச்சட்ட வரைவுப் பணியில் மக்கள் பிரதி​நி​திகள், சிறார்​/மனித உரிமை ஆர்வலர்கள், பத்திரி​கை​யாளர்கள், கல்வி​யாளர்கள், மாணவர் பிரதி​நி​திகள், சட்ட வல்லுநர்கள், உளவிய​லா​ளர்கள், சமூகவிய​லா​ளர்கள் என்று எல்லோரையும் உள்ளடக்கிய ஒரு குழு அமைக்கப்​பட்டு, அதன் பரிந்​துரைகளை விவாதித்துச் சட்டமாக்​கலாம்.
  • எந்த ஒரு சட்டமும் அதன் நோக்கத்தைத் துல்லியமாக எட்டும் வகையில் வடிவமைக்​கப்பட வேண்டும். இல்லை​யேல், அதனால் அப்பாவிகள் பலியிடப்பட அவை பயன்பட்டு​விடும். இன்றைய தொழில்​நுட்ப யுகத்தில் எவரும் ஒருவரின் திறன்பேசி / கணினிக்குள் ஊடுருவி சட்ட விரோத உள்ளடக்​கத்தைத் தரவிறக்​கிவிட முடியும். எவரேனும் விளையாட்​டாகக்​கூடப் பகிர்ந்​துவிட முடியும். அவ்வாறு நேர்ந்தால் இன்றைய சட்டப் பிரிவு​களின்படி அந்த நபர் தண்டனைக்கு ஆளாக நேரிடும். இதனைச் சட்டமியற்றுவோர் கருத்​தில்​கொண்டு சட்டப்​பிரிவுகளை நுணுக்கமாக வரையறுக்க வேண்டும்.

சமூகத்​துக்குச் சிகிச்சை:

  • சிறார் மீதான டிஜிட்டல் பாலியல் தாக்குதல்கள் குறித்து சமூகத்​துக்குக் கூடுதல் தெளிவு தேவை. அதற்காகப் பெரிய அளவுக்கு அரசுகள் முதலீடு செய்ய வேண்டும். பெண்கள்​-சிறாருக்கு எதிரான தமிழகக் காவல் துறையின் சிறப்புப் பிரிவு, இணையக் குற்றப்​பிரிவு ஆகியவற்றுக்குத் தேவையான தொழில்​நுட்பம், துறைசார் வல்லுநர்கள் ஆகியவற்றுக்குப் போதுமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். தமிழ்நாடு சிறார் ஆணையம் உயிர்ப்​பிக்​கப்​பட்டு, உடனடியாக அது முழு அதிகாரத்​துடன் செயல்பட வேண்டும்.
  • அதேபோல, இன்றைய டிஜிட்டல் யுகத்தில் பாலியல் உள்ளடக்​கத்​துக்கு அடிமை​யாதல் ஒரு புதிய நோயாக உருவெடுத்​திருக்​கிறது. அதில் பாதிக்​கப்​பட்​டோருக்கு உளவியல் சிகிச்சை தேவைப்​படும். saa-recovery.org​ போன்ற புகழ்​பெற்ற இணையதளங்கள், வெளிநாடு​களில் இச்சேவைகளை வழங்கிவரு​கின்றன. நம் ஊரிலும் இக்கோணத்தில் சிந்திக்கத் தொடங்​கினால், சிறார் பாலியல் உள்ளடக்கச் சந்தையின் தேவையைச் (demand) சுருக்​கிவிட முடியும். தேவை குறைந்தால் அளிப்பு (supply) தானாகவே குறையும்.

நன்றி: இந்து தமிழ் திசை (03 – 10 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்