சிறார் பாலியல் சுரண்டல் தளங்கள்: வக்கிரத்துக்கு முடிவு என்ன?
- அண்மையில் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தீர்ப்பை வழங்கியிருக்கிறது உச்ச நீதிமன்றம். குழந்தைகள் தொடர்பான ஆபாசப் படங்களைப் பதிவிறக்கம் செய்வதும் பார்ப்பதும் குற்றம்தான் என்கிறது அத்தீர்ப்பு.
தவறைத் திருத்திய உச்ச நீதிமன்றம்:
- தமிழக இளைஞர் ஒருவர் குழந்தைகள் தொடர்பான ஆபாசப் படங்களைத் தனது திறன்பேசியில் பதிவிறக்கம் செய்து பார்த்ததாக ஒரு வழக்கு. அதனை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி , “தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000த்தின் பிரிவு 67பி-யின்படி குழந்தைகள் தொடர்பான ஆபாசப் படங்களைப் பார்ப்பது மட்டும் குற்றம் என்ற வரையறைக்குள் வரவில்லை” என்று கூறியிருந்தார்.
- இத்தீர்ப்பை எதிர்த்து நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதனை விசாரித்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வுதான் மேற்கண்டவாறு தீர்ப்பு வழங்கியிருக்கிறது. அதில், ‘குழந்தைகளின் ஆபாசப் படங்களைப் பார்ப்பதால் ஏற்படும் விளைவுகளை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அப்படங்களை ஒருவர் பகிர்ந்திருக்காவிட்டாலும்கூட அதனைப் பதிவிறக்கம் செய்து பார்ப்பதும் குற்றம்தான்.
- இவ்விஷயத்தில் குற்றத்தைவிடக் குற்றத்துக்கான நோக்கத்தைக் கவனிக்க வேண்டும்’ என்றும் உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது. கூடவே, ‘குழந்தைகளின் ஆபாசப் படங்கள் என்ற சொற்பிரயோகத்துக்குப் பதிலாக ‘குழந்தைகளைப் பாலியல்ரீதியாகச் சுரண்டக்கூடிய, தகாத முறையிலான சித்தரிப்பு’ என்று மாற்ற வேண்டும்; இது தொடர்பாக போக்ஸோ சட்டத்தில் திருத்தம் செய்யவோ, அவசரச் சட்டம் இயற்றவோகூடச் செய்யலாம்.
- அதேபோல, பாலியல் கல்வி தொடர்பான நமது பழைய கண்ணோட்டத்தைத் தகர்த்துவிட்டு, அதனை முறையாகக் குழந்தைகளுக்குக் கற்றுத்தரலாம்’ என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியிருக்கிறது. இதன் மூலம், குழந்தைகளை வைத்து எடுக்கப்பட்ட ஆபாசப் படங்களைக் காண்பது என்னும் வக்கிரமான செயல்பாடு சட்டரீதியாகத் தண்டிக்கப்பட வேண்டிய குற்றம் என்பதை உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.
விழிப்புணர்வு இன்மை:
- உச்ச நீதிமன்றத்தின் இந்த உறுதியான கருத்துக்குக் காரணம் இல்லாமல் இல்லை. தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 67 பி-இன்படி குழந்தைகளைத் தவறான நோக்கத்துடன் சொற்களாலோ, டிஜிட்டல் படங்களாகவோ சித்தரிப்பது, அவற்றைச் சேகரிப்பது, தேடுவது, பதிவிறக்கம் செய்வது, விளம்பரம் செய்வது, பரிமாறுவது, முறையற்ற உறவுக்கு அவர்களைத் தூண்டுவது ஆகியவை குற்றங்களாகும்.
- இக்குற்றவாளிகளுக்கு அதிகபட்சமாக 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.10 லட்சம்வரை அபராதமும் விதிக்கப்படலாம். அதேபோல, போக்ஸோ சட்டத்தின் 13-16 வரையிலான சட்டப்பிரிவுகள் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் இணையத் தாக்குதல் குறித்துப் பேசுகின்றன. அச்சட்டத்தின் பிரிவு 17இன்படி இக்குற்றங்களில் ஈடுபடுவோருக்கு அதிகபட்சம் 10 ஆண்டுகள்வரை சிறையும் அபராதமும் விதிக்கப்படும். ஆனால், இச்சட்டங்கள் குறித்த விழிப்புணர்வு பரவலாக இல்லை என்பதையே உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு உணர்த்துகிறது.
பாதிப்பும் போராட்டமும்:
- தற்போது உலக ஆபாச வலைதளச் சந்தையின் மதிப்பு 102 பில்லியன் டாலர் என்கிறது ஒரு செய்தி. இதில் குழந்தைகள் தொடர்பான உள்ளடக்கச் சந்தையும் அடங்கும். இணையவழியிலும் நிஜ வாழ்க்கையிலும் பாலியல் துன்புறுத்தலால் எவ்வளவோ குழந்தைகளும் அவர்தம் பெற்றோரும் சொல்லொணாத் துயரத்துக்கு உள்ளாகின்றனர். பொதுவெளிக்கு வந்து சட்டரீதியில் போராடி நீதி பெறுவது நமது சமூகத்தில் இன்னும் வழக்கமாகிவிடவில்லை. இதனால் படிப்பில் பின்னடைவு, தற்கொலை மனோபாவம், உளவியல் பாதிப்பு போன்றவற்றுக்குக் குழந்தைகள் ஆளாகின்றனர்.
- தமிழ்நாடு காவல் துறையின் 100 என்ற எண்ணுக்கு அல்லது குழந்தைகளுக்கான ‘ஹெல்ப்லைன்’ எண்ணான 1098க்கும் தொலைபேசியில் அழைத்தால் உடனடியாக உதவி கிடைக்கிறதுதான். ஆனால், அது குறித்த விழிப்புணர்வு இன்னும் துல்லியமாகப் போய்ச் சேரவில்லை. பெற்றோர்-பள்ளிகள்-அரசு-சமூக ஆர்வலர்கள் என்று கூட்டாகச் செய்ய வேண்டிய விழிப்புணர்வுப் பணி அது.
இந்தியாவின் கடமை:
- குழந்தைகள் தொடர்பான பாலியல் வன்கொடுமை உள்ளடக்கம் இருக்கும் இணையதளங்களைத் தடைசெய்த உடனேயே வேறு ஒரு பெயரில் அத்தளங்கள் இயங்கத் தொடங்குகின்றன. உலக அளவில் இணையதளப் பெயர்களை வழங்குவதை ஐகேன் (Internet Corporation for Assigned Names and Numbers -ICANN) என்ற அமைப்பு கட்டுப்படுத்துகிறது. அவ்வமைப்புக்கு அழுத்தம் கொடுத்து இதனைத் தடுத்து நிறுத்த முயல வேண்டும்.
- அதற்கான அதிகாரம் இந்தியாவுக்கு உண்டு. ஆம்... குழந்தை விற்பனை, அவர்களைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்துதல், குழந்தைகளின்மீதான இணையப் பாலியல் சுரண்டல் ஆகியவற்றிலிருந்து அவர்களைக் காக்கும் ஐ.நா.வின் தீர்மானத்தில் (The Optional Protocol to the Convention on the Rights of the Child on the Sale of Children, Child Prostitution and Child Pornography - OPSC) இந்தியாவும் கையெழுத்திட்டிருக்கிறது.
- பல நாடுகளில் வயதுவந்தோருக்கான பாலியல் இணையதளங்கள் அரசு அனுமதியுடன் இயங்குகின்றன. இச்சூழலில், ஒவ்வொரு பதிவேற்றத்துக்கும் அரசாங்க அடையாள அட்டை, ஓடிபி சரிபார்த்தல் கட்டாயம் என்று உலக அளவில் ஆக்கிவிட்டாலே பாதிக்கும் மேல் பிரச்சினைகள் குறைந்துவிடும். மூன்றாம் நபரின் உள்ளடக்கத்தைத் தமது அடையாளத்துடன் பதிவேற்ற எவருக்கும் துணிச்சல் வராது.
நாணயத்தின் மறுபக்கம்:
- ஒருபக்கம் குழந்தைகளைக் குறிவைப்போரைத் தடுக்க வேண்டிய தேவை இருக்கிறது. அதேவேளையில், புதிய சட்டங்களோ, சட்டத்திருத்தங்களோ அதன் நோக்கத்தை விட்டு விலகாமல் காக்க வேண்டிய தேவையும் இருக்கிறது. அதனைச் சாத்தியப்படுத்த வேண்டுமானால், சிறார் உரிமைச்சட்ட வரைவுப் பணியில் மக்கள் பிரதிநிதிகள், சிறார்/மனித உரிமை ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள், கல்வியாளர்கள், மாணவர் பிரதிநிதிகள், சட்ட வல்லுநர்கள், உளவியலாளர்கள், சமூகவியலாளர்கள் என்று எல்லோரையும் உள்ளடக்கிய ஒரு குழு அமைக்கப்பட்டு, அதன் பரிந்துரைகளை விவாதித்துச் சட்டமாக்கலாம்.
- எந்த ஒரு சட்டமும் அதன் நோக்கத்தைத் துல்லியமாக எட்டும் வகையில் வடிவமைக்கப்பட வேண்டும். இல்லையேல், அதனால் அப்பாவிகள் பலியிடப்பட அவை பயன்பட்டுவிடும். இன்றைய தொழில்நுட்ப யுகத்தில் எவரும் ஒருவரின் திறன்பேசி / கணினிக்குள் ஊடுருவி சட்ட விரோத உள்ளடக்கத்தைத் தரவிறக்கிவிட முடியும். எவரேனும் விளையாட்டாகக்கூடப் பகிர்ந்துவிட முடியும். அவ்வாறு நேர்ந்தால் இன்றைய சட்டப் பிரிவுகளின்படி அந்த நபர் தண்டனைக்கு ஆளாக நேரிடும். இதனைச் சட்டமியற்றுவோர் கருத்தில்கொண்டு சட்டப்பிரிவுகளை நுணுக்கமாக வரையறுக்க வேண்டும்.
சமூகத்துக்குச் சிகிச்சை:
- சிறார் மீதான டிஜிட்டல் பாலியல் தாக்குதல்கள் குறித்து சமூகத்துக்குக் கூடுதல் தெளிவு தேவை. அதற்காகப் பெரிய அளவுக்கு அரசுகள் முதலீடு செய்ய வேண்டும். பெண்கள்-சிறாருக்கு எதிரான தமிழகக் காவல் துறையின் சிறப்புப் பிரிவு, இணையக் குற்றப்பிரிவு ஆகியவற்றுக்குத் தேவையான தொழில்நுட்பம், துறைசார் வல்லுநர்கள் ஆகியவற்றுக்குப் போதுமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். தமிழ்நாடு சிறார் ஆணையம் உயிர்ப்பிக்கப்பட்டு, உடனடியாக அது முழு அதிகாரத்துடன் செயல்பட வேண்டும்.
- அதேபோல, இன்றைய டிஜிட்டல் யுகத்தில் பாலியல் உள்ளடக்கத்துக்கு அடிமையாதல் ஒரு புதிய நோயாக உருவெடுத்திருக்கிறது. அதில் பாதிக்கப்பட்டோருக்கு உளவியல் சிகிச்சை தேவைப்படும். saa-recovery.org போன்ற புகழ்பெற்ற இணையதளங்கள், வெளிநாடுகளில் இச்சேவைகளை வழங்கிவருகின்றன. நம் ஊரிலும் இக்கோணத்தில் சிந்திக்கத் தொடங்கினால், சிறார் பாலியல் உள்ளடக்கச் சந்தையின் தேவையைச் (demand) சுருக்கிவிட முடியும். தேவை குறைந்தால் அளிப்பு (supply) தானாகவே குறையும்.
நன்றி: இந்து தமிழ் திசை (03 – 10 – 2024)