TNPSC Thervupettagam

சிறிதும் கவனம் பெறாத ஒளி மாசு

March 9 , 2024 315 days 222 0
  • காற்று மாசு, ஒலி மாசு அளவிற்கு ஒளி மாசு குறித்துப் பொதுத் தளத்தில் விவாதிக்கப் படுவதில்லை. ஆனால், மற்ற மாசுகளைப் போல் ஒளி மாசுவும் சுற்றுச்சூழலுக்கும், மனித ஆரோக்கியத்துக்கும் பெரும் தீங்கை உண்டாக்குகிறது. செயற்கை ஒளியினால் ஒவ்வோர் ஆண்டும் இரவு வானத்தின் வெளிச்சம் 7 – 10% வரை அதிகரித்துவருவதாகச் சமீபத்திய ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.
  • முன்பெல்லாம் நகர்ப்பகுதிகளுக்கு வெளியே சென்றாலே நட்சத்திரங்களை, ஏன் சில இடங்களில் பால்வெளியையே பார்க்க முடிந்தது. ஆனால், இன்றைக்குக் கிராமப்பகுதிகளிலும்கூட அளவுகடந்த ஒளி மாசின் காரணமாக நட்சத்திரங்களே தெரிவதில்லை.

ஒளிமாசு என்றால் என்ன

  • அதிகரித்து வரும் நகரமயமாக்கல், தொழில்மயமாக்கலின் காரணமாக செயற்கை ஒளியின் அளவு அதிகரித்து அது ஒளி மாசாக மாறிவருகிறது. கடந்த 100 வருடங்களில் பூமி, சுற்றுச்சூழல் சார்ந்து பெரும் மாற்றத்திற்கு உள்ளாகியுள்ளது. அதிலும் குறிப்பாக, இரவு வானம் அதற்கே உரிய இயற்கையான வெளிச்சத்தை இழந்து வருகிறது.
  • மனிதர்கள் பயன்படுத்தும் செயற்கை ஒளியினால் இரவு நேரத்தில் வானம் கூடுதல் வெளிச்சமாக இருப்பதால் நட்சத்திரங்கள் தெரிவது குறைந்து வருவதாகவும், இதனால் வானியல் ஆராய்ச்சிகள் மேற்கொள்வது தடைப்படுவதாகவும் ஜெர்மனியின் ஒளி மாசு ஆராய்ச்சியாளரான கிறிஸ்டோபர் கிபா கூறுகிறார். இவ்வாறு ஒளிமாசானது அனைத்துத் தரப்பிலும் பாதிப்பை ஏற்படுத்திச் சுற்றுச்சூழல் நெருக்கடியாக மாறிவருகின்றது.

உலகளாவிய பிரச்சினை

  • சமீப ஆண்டுகளில் உலகளாவியபிரச்சினையாக ஒளிமாசு உருமாறியிருக்கிறது. 2016இல், 1000க்கும் அதிகமான செயற்கைக்கோள் ஒளிப்படங்களை அடிப்படையாகக் கொண்டு, 'உலக நாடுகளின் இரவு ஒளி பற்றிய வரைபடம்' கணினி மூலம் தயாரிக்கப்பட்டது. அவ்வரைபடம் இரவிலும் நமது பூமி எப்படி ஒளிர்கிறது என்பதைத் துல்லியமாகக் காட்டுகிறது.
  • அதில் வட அமெரிக்கா, ஐரோப்பா, மத்திய கிழக்கு, ஆசியப் பகுதிகள் ஒளியால் பிரகாசமாகக் காட்சி அளித்தன. சைபீரியா, சஹாரா, அமேசான் போன்ற பகுதிகள் இருளால் முழுமையாக சூழப்பட்டிருந்தன. இவ்வரைபடத்தில் காட்டப்பட்டுள்ள வேறுபாட்டின் மூலம் ஒளிமாசின் தீவிரத்தை உணர்ந்துகொள்ள முடியும்.
  • உலக நாடுகளில் சிங்கப்பூர், கத்தார், குவைத் போன்ற நாடுகள் அதிக ஒளிமாசைக் கொண்ட நாடுகளாக அறியப்படுகின்றன. இந்தியாவைப் பொறுத்தவரை புதுடெல்லி, தெலங்கானா, மகாராஷ்டிரம், உத்தரப்பிரதேசம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் ஒளிமாசு அதிகரித்திருக்கிறது.

ஒளி மாசின் வகைகள்

  • ஒளிரும் வானம் (Glow sky), ஒளி அத்துமீறல் (Light trespass), கண்னை உறுத்தும் / கூசும் ஒளி (Glare), அதீத வெளிச்சம் (Over-illumination) என்கிற நான்கு வகைகளாக ஒளி மாசு உள்ளது.

ஒளிரும் வானம்

  • இரவில் நிலா, நட்சத்திரங்களால் உருவாகும் இயற்கையான ஒளியை, நகரப் பகுதிகளில் வெளிப்படும் செயற்கை வெளிச்சம் கவசம்போல் படர்ந்து மறைத்துவிடுகிறது. இவ்வகை செயற்கையான ஒளியால் வானம் பிரகாசமாக காணப்படுவதையே ஒளிரும் வானம் என்கிறோம்.
  • ஒளிச்சிதறல்களால் ஏற்படும் இத்தகைய பிரகாசமானது மாசுபாட்டை உண்டாக்குகிறது. உலக மக்களில் 80% பேர் இவ்வகை ஒளி மாசால் பாதிக்கப்படுகின்றனர்.

ஒளி அத்துமீறல்

  • பொதுவாக மைதானங்களில் உள்ள ராட்சத விளக்குகளிலிருந்து வரும் ஒளியானது அம்மைதானங்களுக்கு மட்டும் ஒளியைத் தருவதில்லை, மாறாக மற்ற பகுதிகளுக்கும் ஊடுருவுகின்றன. இத்தகைய ஊடுருவலே ஒளி அத்துமீறல் எனப்படுகிறது.

கண்ணை உறுத்தும் ஒளி

  • இவ்வகையான ஒளி கண்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது. வாகன முகப்பு, தெருவிளக்கிலிருந்து வரும் ஒளியை இதற்கு உதாரணமாகக் கொள்ளலாம்.

அதீத வெளிச்சம்

  • ஓரிடத்திற்குத் தேவைப்படும் ஒளியைவிட அதிக அளவு ஒளியைப் பயன்படுத்துவது இவ்வகையிலான மாசுபாட்டைக் குறிக்கும். உதாரணத்திற்கு, ஆள் இல்லாத அலுவலகக் கட்டிடத்தில் இரவு முழுவதும் எரியும் விளக்குகள்.

ஒளி மாசின் விளைவுகள்

  • மாலையில் சூரியன் மறைந்து, வானம் குறைந்த வெளிச்சத்துடன் காணப்படும்போது, நம் உடல் இயற்கையாகவே மெலடோனின் என்கிற ஹார்மோனைச் சுரக்கிறது. மெலடோனின் ஹார்மோன், மூளையில் உள்ள பீனியல் சுரப்பியில் இருந்து வெளிப்பட்டு, நமது உடலில் சோர்வை அதிகரிக்கவும், உறக்கச் சுழற்சியை சீராக்கவும் உதவுகிறது.
  • ஆனால், ஒளி மாசானது மூளையில் மெலடோனின் உற்பத்தியைக் கட்டுப்படுத்துகிறது. இது தூக்கமின்மைக்கு வழிவகுப்பதுடன், நமது நோயெதிர்ப்பு மண்டலத்தைப் பாதித்து மன அழுத்தத்தை அதிகரிப்பதாக பிரிட்டன் சுகாதார அமைப்பு கூறுகிறது.
  • இதைத் தவிர்த்து ஒளி மாசினால் மனப்பதற்றம், நீரிழிவு நோய், இதயப் பிரச்சினைகள், புற்றுநோய் போன்றவை ஏற்படுவதாக அமெரிக்க மருத்துவச் சங்கம் எச்சரிக்கைவிடுக்கிறது.
  • மேலும், இரவு நேர வேலைகளில் அதிகப்படியான செயற்கை ஒளியினை உள்வாங்கும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோயும் ஆண்களுக்கு புராஸ்டேட் புற்றுநோயும் வருவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

விலங்குகள், தாவரங்களில் பாதிப்பு

  • மனிதர்களின் ஆரோக்கியத்தை மட்டும் ஒளி மாசு பாதிப்பதில்லை. காட்டுயிர்கள், தாவரங்களின் வாழ்க்கை முறையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
  • பிரகாசமான ஒளியினால் வெளவால் போன்றவற்றின் இடப்பெயர்வு பாதிக்கப்படுவதுடன் கடல் ஆமைகளின் இடப்பெயர்வும் திசைதிருப்பப்பட்டு அவை உயிரிழக்கும் அபாயம் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஒளி மாசினால் மின்மினிப் பூச்சிகளின் இனப்பெருக்கம் பாதிக்கப்பட்டு, தாவரங்களின் மகரந்தச் சேர்க்கை குறைவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
  • மேலும், செயற்கை ஒளியினை நீண்ட காலத்திற்கு உள்வாங்கும் மரங்களால் பருவகால மாறுதல்களுக்கு ஏற்ப உரிய மாற்றத்துக்கு உள்ளாவது பாதிக்கப்படுவதாக அமெரிக்கத் தாவர உயிரியலாளரான வின்ஸ்லோ பிரிக்ஸ் குறிப்பிடுகிறார்.

விழிப்புக்கான நேரம்

  • ஒளி மாசைத் தவிர்க்கவும், இரவு வானத்தின் இயற்கையான வெளிச்சத்தை மீட்டெடுக்கவும் பல்வேறு நாடுகளில் சட்டங்கள் இயற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்தியாவிலும் ஒளி மாசு குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தி, ஆக்கப்பூர்வமான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்.
  • ஒளி மாசு ஏற்படுவதற்கு முக்கியக் காரணிகளில் ஒன்றான எல்..டி விளக்குகளின் பயன்பாட்டைக் குறைத்து, சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிக்காத மின்விளக்குகளின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும். திருவிழாக்கள், திருமணங்கள், கலை நிகழ்ச்சிகளில் ஒளிப் பயன்பாட்டுக்கான முறையான வரையறைகளை அரசு உருவாக்க வேண்டும்.
  • நீல நிற ஒளியை வெளியிடும் கணினி, கைபேசி, தொலைக்காட்சி ஆகியவற்றை இரவு நேரத்தில் பயன்படுத்துவதில் தனிமனிதக் கட்டுப்பாடுகளைப் பின்பற்றி நம்மால் முடிந்த பங்களிப்பை அளிப்பதன் மூலமும் ஒளி மாசினைக் குறைக்கலாம்.

நன்றி: இந்து தமிழ் திசை (09 – 03 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்