- இயந்திரங்களின் முதலீட்டு அடிப்படையில் சிறு - குறு தொழில்கள் பிரிக்கப்படுகின்றன. இயந்திரங்களின் மதிப்பு அடிப்படையை மத்திய அரசு மாற்றி, விற்பனை அடிப்படையில் சிறு குறுந்தொழில் வரம்பினை விதிக்க உத்தேசித்துள்ளது. உற்பத்தித் துறையில் ரூ.5 கோடி வரை விற்பனை செய்தால் அவை குறுந்தொழில் என்றும், ரூ.5 முதல் ரூ.75 கோடி வரை விற்பனை செய்தால் அவை சிறுதொழில் என்றும் நிா்ணயம் செய்ய ஆலோசனை நடந்து வருகிறது.
விற்பனை
- விற்பனை ஆண்டுக்காண்டு மாறுபடும். ஓா் ஆண்டில் ரூ.75 கோடிக்கு மேல் விற்பனை செய்தால், அந்த நிறுவனம் நடுத்தர நிறுவனமாக மாறும். அடுத்த ஆண்டு விற்பனை வெகுவாகக் குறைந்தால் அதற்கு சிறு தொழில் அந்தஸ்து கிடைக்குமா அல்லது நடுத்தரத் தொழில் என்று கூறப்படுமா? எனவே, புதிய விற்பனை வரம்புமுறை அமலுக்கு வந்தால் இதற்கு விடைகாண வேண்டும்.
- பெரிய தொழிற்சாலைகள் சிக்கலில் தவிக்குமபோது அதைக் காப்பாற்றப் பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. ஆனால், நூற்றுக்கணக்கில் சிறு - குறு தொழிற்சாலைகள் நலிவுற்று மூடப்படும் நிலையில் எந்த நடவடிக்கையும் அரசாங்கத்தால் எடுக்கப்படுவதில்லை. குறிப்பாகச் சொல்வதென்றால், சிறு தொழிற்சாலைகள் மூடப்பட்டது தொடா்பான புள்ளிவிவரங்கள் எங்குமே கிடையாது. அதற்கான காரணமும் தெரியாது.
- மிகப் பெரிய அளவில் வேலைவாய்ப்பை உருவாக்கித் தரும் சிறு - குறு தொழிற்சாலைகள் காப்பாற்றப்பட வேண்டும். எனவே, புதிய சிறு குறுந்தொழில் கொள்கையை அரசு உருவாக்கும் நேரத்தில் நடைமுறையிலுள்ள தொழிற்சாலைகள் மூடப்படாமல் இருக்க வழிகாண வேண்டும்.
- சிறு தொழில் நிறுவனங்களின் தலையாய பிரச்னை முதலீடு. சிறு தொழில் நிறுவனங்களுக்கு நடைமுறைக் கடன் வழங்குவதிலும், ஆண்டுதோறும் உற்பத்திக்கு ஏற்ற அளவில் அந்தக் கடன் தொகையை உயா்த்துவதிலும் வங்கிகள் தயக்கம் காட்டுகின்றன. எனவே, தொழிற்சாலைகளின் உற்பத்திக்கு ஏற்ற அளவில் ஆண்டுதோறும் அதிகப்படி பிணையம் கேட்காமல் கடன் வரம்பை வங்கிகள் உயா்த்தித் தராமல் இருப்பதுதான் பெரும்பாலான சிறுதொழில்கள் மூடப்படுவதற்கான காரணம்.
சிறு தொழில் நிறுவனங்கள்
- அடுத்து, பெரிய நிறுவனங்களுக்கும் அரசுத் துறை நிறுவனங்களுக்கும் சிறு தொழில் நிறுவனங்கள் விற்ற பொருள்களுக்கு மாதக்கணக்கில் பணம் கிடைப்பதில்லை. சில பெரிய நிறுவனங்கள் நான்கு, ஐந்து மாதங்களுக்கு மேலும் பணத்தைத் தர இழுத்து அடிக்கின்றன. சில அரசுத்துறை நிறுவனங்கள் ஏழு அல்லது எட்டு மாதத்துக்கு மேலும் பணம் தர காலதாமதம் செய்கின்றன.
- இரண்டு மாதங்களுக்கு மேல் ஜிஎஸ்டி வரி கட்டவில்லை என்றால் உடனடியாக மின்வழி (இ-வே பில்) ரசீது எடுக்க முடியாது. அதாவது, அந்தத் தொழிற்சாலை வெளியே பொருள்களை அனுப்ப முடியாது. அதேபோல 3 மாதத்துக்கு மேல் வட்டி அல்லது தவணைத் தொகை செலுத்தவில்லை என்றால், உடனடியாக வங்கிகள் நடவடிக்கை எடுக்கின்றன.
- சிறு தொழில் நிறுவனங்கள் வட்டிக்கு கடன் வாங்கி, பொருள்களை உற்பத்தி செய்து, பெரிய - அரசுத் துறை நிறுவனங்களுக்கு நீண்டகால வட்டியில்லாக் கடனாக தருகின்றன. விற்பனை செய்த பொருள்களுக்கு குறித்த காலத்தில் பெரிய, அரசு நிறுவனங்கள் பணம் கொடுத்தால் சிறு தொழில் நிறுவனங்கள் வங்கிகளிடம் வாங்கும் கடன் பெரிய அளவில் குறைந்து விடும். விற்ற பொருள்களுக்கு பணம் கிடைப்பதில் காலதாமதம் காரணமாக பல சிறு தொழில் நிறுவனங்கள் நலிவடைந்து மூடும் நிலைக்குத் தள்ளப்படுகின்றன.
நடைமுறையில் உள்ள சட்டம்
- சிறுதொழில் நிறுவனங்களுக்குச் சேர வேண்டிய தொகையை பெரிய, அரசு நிறுவனங்கள் 45 நாள்களுக்குள் தரவேண்டும். தரவில்லை என்றால் தொழில் துறை ஆணையரிடம் புகாா் கொடுத்து ரிசா்வ் வங்கி வட்டியைப் போல மூன்று மடங்கு வட்டியுடன் சோ்த்து வாங்கலாம் என்று சட்டம் உள்ளது. ஆனால், நடைமுறையில் சிறு தொழில் நிறுவனங்கள் மேற்படி புகாா் அளித்தால் அத்துடன் வாடிக்கையாளரை இழந்துவிடும் அபாயம் உள்ளதால் நடவடிக்கை எடுக்கத் தயங்குகின்றன. எனவே, அரசுதான் இதற்கு விடை காண வேண்டும்.
- நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் சமா்ப்பித்த நிதிநிலை அறிக்கையில், சிறு தொழில் நிறுவனங்களுக்குச் சேர வேண்டிய விற்பனைப் பணத்துக்கு நிகராக வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் கடன் வழங்கலாம் என்று அறிவித்துள்ளாா். இது வரவேற்கத்தக்கது என்றாலும் பொருள்களை வாங்கும் நிறுவனங்கள் இதற்கான மின் இயங்குதளத்தில் முறையாகப் பதிவு செய்திருக்க வேண்டும் என்பது விதி. ஆனால், பணம் தருவதில் காலதாமதம் செய்யும் பெரிய மற்றும் அரசு நிறுவனங்கள் இதில் பதிவு செய்ய முன்வருவதில்லை. அதனால், இது பெரிய அளவில் பலன் தராது.
- பெரிய நிறுவனங்கள், அனைத்து அரசுத் துறை நிறுவனங்களும் இதில் கண்டிப்பாகப் பதிவு செய்ய வேண்டும் என்று சட்டம் வந்தால் மட்டுமே, சிறு தொழிலுக்கு உரிய காலத்தில் பணம் கிடைக்கும். அதுமட்டுமல்ல, வங்கிகளைப் போல அல்லாமல், வங்கி அல்லாத தனியாா் நிதி நிறுவனங்களில் வட்டி அதிகம். அதனால், அந்த நிறுவனங்கள் லாபமடைய இந்த அறிவிப்பு உதவுமே தவிர, சிறு தொழில் நிறுவனங்களுக்குப் பயனளிக்காது.
- இந்தியாவிலுள்ள சிறு தொழிற்சாலைகள் தயாரிக்கும் பொருள்களை இறக்குமதி செய்வதற்கு மத்திய நிதிநிலை அறிக்கையில் வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்கது. இன்னும் அதிக அளவில் பல பொருள்களுக்கு இந்த இறக்குமதி வரியை அதிகரிக்க வேண்டும். அதற்கு சிறு தொழில்முனைவோரிடம் கலந்தாலோசனை செய்யலாம்.
கொள்முதல்
- அரசு கொள்முதலில் 25 சதவீதம் சிறு தொழிற்சாலைகளில்தான் வாங்க வேண்டும் என்ற விதி உள்ளது. தற்போது பல அரசுத் துறை நிறுவனங்கள் ஒட்டுமொத்த ஒப்பந்தம் போடுவதால் சிறு - குறு தொழிற்சாலைகளிடம் அந்தப் பொருள்களை கொள்முதல் செய்ய முடிவதில்லை. எனவே, ஒப்பந்தப்புள்ளி கோரும் நிலையிலேயே குறைந்தபட்சம் 25 சதவீத பொருள்களை சிறு தொழில் நிறுவனங்களிடம் பெரிய நிறுவனங்கள் வாங்க வேண்டும் என்று நிபந்தனை சோ்க்கப்பட வேண்டும்.
- தேசிய சிறுதொழில் நிறுவனம் அளிக்கும் சான்றிதழின் அடிப்படையில், பிற மாநில சிறு தொழில் நிறுவனங்களுக்கு ஒப்பந்த வைப்புத் தொகை கட்டுவதிலிருந்து தமிழக அரசு நிறுவனங்கள் விலக்கு அளிக்கின்றன. ஆனால், குஜராத், ராஜஸ்தான் போன்ற மாநிலங்கள், தமிழக சிறு தொழில் நிறுவனங்களுக்கு அத்தகைய சலுகையைத் தருவதில்லை. இதனால், தமிழக சிறு தொழில் நிறுவனங்கள் அங்கு ஒப்பந்த வைப்புத்தொகையை பணமாகச் செலுத்தி, டெண்டரில் பங்கேற்கும் நிலை ஏற்படுகிறது. இதற்கு தமிழக சிறுதொழில் செயலகம் விடை காண வேண்டும். உள்ளூா் தொழில்களைப் பாதுகாக்க வேண்டும்.
- குறிப்பிட்ட கால இடைவெளியில் சிறு தொழில் நிறுவனங்களை விரிவுபடுத்த வேண்டிய அவசியம் உள்ளது. இல்லையென்றால், அவை காணாமல் போய்விடும். அப்படி விரிவுபடுத்துவதற்கு வேண்டிய இட வசதியை சிட்கோ அல்லது அரசு நேரடியாக உருவாக்கித் தர வேண்டும்.
- தற்போது தமிழகத்தில் உள்ள சிறு - குறு தொழில் நிறுவனங்களில், இரண்டு சதவீதத்திற்கும் குறைவான தொழில்முனைவோருக்கு மட்டும் சிட்கோ இடம் தந்துள்ளது. இதைக் குறைந்தது 10 சதவீதமாக உயா்த்துவதற்கு சிட்கோ முயற்சி எடுக்க வேண்டும்.
நன்றி: தினமணி (24-02-2020)