TNPSC Thervupettagam

சிறுதானிய சாகுபடிப் பரப்பை அதிகரிப்பதன் அவசியம்

June 29 , 2023 561 days 442 0
  • சிறுதானியங்களின் முக்கியத்துவத்தை மீட்டெடுக்கும் நோக்கில் இந்திய அரசால் எடுக்கப்பட்ட முன்முயற்சிகளால், ஐக்கிய நாடுகளின் பொது அவை 2023ஆம் ஆண்டை சர்வதேச சிறுதானியங்களின் ஆண்டாக அறிவித்துள்ளது. சிறுதானியங்களில் கால்சியம், நார்ச்சத்து, புரதம், இரும்புச்சத்து போன்ற நுண்ணூட்டச் சத்துகள் அதிகமாக உள்ளன. அதிக அளவிலான இந்திய மக்கள் நுண்ணூட்டச் சத்துக் குறைபாடுகளுடன் இருப்பதால், சிறுதானியங்களின் பயிர்ச் சாகுபடி மிகவும் முக்கியமாகக் கருதப்படுகிறது.
  • பெரும்பான்மை மக்களின் ஊட்டச்சத்துப் பாதுகாப்பையும், சிறுதானியப் பயிர்களின் முக்கியத்துவத்தையும், நுகர்வோர் மத்தியில் பிரபலப்படுத்துவதற்காக இந்திய அரசு 2018இல், சிறுதானியங்களின் பெயரை ஊட்டச்சத்துத் தானியங்கள் (nutri-cereals) என மாற்றுவதற்கான அறிவிப்பை வெளியிட்டது.
  • இப்பயிர்களைச் சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிப்பதற்காக, மத்திய அரசால் அறிவிக்கப்படும் குறைந்தபட்ச ஆதரவு விலைகளும் (எம்.எஸ்.பி.), இப்பயிர்களுக்குக் கடந்தபத்து ஆண்டுகளில் அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால், பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதிலும், சிறுதானியங்களின் மொத்தச் சாகுபடிப் பரப்பளவு இந்தியாவில் தொடர்ந்து குறைந்துவருகிறது. சிறுதானியப் பயிர்களின் பரப்பளவு குறைந்துவருவதற்கான காரணங்களைப் பார்க்க வேண்டும்.

பசுமைப் புரட்சியின் தாக்கம்:

  • 1960களின் மத்தியில் பசுமைப் புரட்சியின் அறிமுகம், இந்திய விவசாயத்தின் முகத்தையே மாற்றியது. பயிர்ச் சாகுபடியில் தொழில்நுட்பம், மகசூலை அதிகரிக்கும் இடுபொருள்களை அதிகமாகப் பயன்படுத்திய காரணத்தால், பல்வேறு உணவு தானியப் பயிர்களின் மொத்த உற்பத்தி கணிசமாக அதிகரித்தது.
  • 1965-66இல் சுமார் 7.2கோடி டன்களாக இருந்த உணவு தானியங்களின் உற்பத்தி, 2021-22ல் 31.6 கோடி டன்களாக அதிகரித்துள்ளது. உணவு தானியங்களின் அதிகரித்த உற்பத்தி, எழுபதுகளில் கடுமையாக நிலவிவந்த கிராமப்புற வறுமையைக் கணிசமாகக் குறைக்கவும் உதவியது.
  • நாட்டின் உணவுப் பாதுகாப்பை அதிகரித்த அதேவேளையில், பயிரிடும் முறையில் (cropping pattern) சில விரும்பத்தகாத மாற்றங்களையும் பசுமைப் புரட்சி கொண்டுவந்துள்ளது. தண்ணீர் அதிகம் தேவைப்படும் பயிர்களின் (நெல், கரும்பு, வாழை, கோதுமை) சாகுபடிப் பரப்பளவு பன்மடங்கு அதிகரித்துள்ளது. அதேவேளை, குறைந்த நீர் தேவைப்படும் சிறுதானியப் பயிர்களின் பரப்பளவு வெகுவாகக் குறைந்துள்ளது.
  • உதாரணமாக, 1965-66இல் 44.34 மில்லியன் ஹெக்டேராக இருந்த இந்தியாவின் மொத்த சிறுதானியப் பயிர்களின் சாகுபடிப் பரப்பளவு, 2021-22இல் 22.65 மில்லியன் ஹெக்டேராகக் குறைந்துள்ளது. இதே காலகட்டத்தில், நெல் மற்றும் கோதுமை சாகுபடிப் பரப்பளவு 48.04 மில்லியன் ஹெக்டேரிலிருந்து 76.85 மில்லியன் ஹெக்டேராக அதிகரித்துள்ளது.

குறைந்த லாபம்:

  • சிறுதானியப் பயிர்களின் பரப்பளவு குறைவுக்குப் பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், இப்பயிர்களின் மூலம் கிடைக்கும் வருவாய் சாகுபடிப் பரப்பளவு குறைவதற்கு முக்கியக் காரணமாக உள்ளது. விவசாயச் செலவுகள்-விலைகளுக்கான ஆணையத்தால் (Commission for Agricultural Costs and Prices), 1971-72 முதல் 2019-20 வரை வெளியிடப்பட்ட சாகுபடிச் செலவு, வருமானம் பற்றிய கணக்கெடுப்புத் தரவுகளின்படி, மூன்று முக்கிய சிறுதானியப் பயிர்களான இருங்குசோளம், கம்பு, கேழ்வரகு ஆகிய பயிர்களில், பெரும்பாலான ஆண்டுகளில் விவசாயிகள் நஷ்டங்களைச் சந்தித்துள்ளார்கள்.
  • உதாரணமாக, இருங்குசோளம் (Jowar) அதிகம் பயிரிடும் மாநிலமான மகாராஷ்டிரத்தில், 1971-72 முதல் 2019-20 வரையிலான தரவுகள் கிடைத்துள்ள 37 ஆண்டுகளில், வெறும் 10 ஆண்டுகளில் மட்டுமே விவசாயிகள் லாபம் ஈட்டியுள்ளனர். இதே போல, கம்பு (Bajra) அதிகமாகப் பயிரிடப்படும் ராஜஸ்தானில், 41 ஆண்டுகளில் 2 ஆண்டுகளில் மட்டுமே விவசாயிகள் லாபம் ஈட்டியுள்ளனர்.
  • கேழ்வரகு (Ragi) அதிகமாகப் பயிரிடப்படும் கர்நாடகத்தில் 19 ஆண்டுகளில் 6 ஆண்டுகளில் மட்டுமே விவசாயிகள் லாபம் ஈட்டியுள்ளனர். இன்னும் சொல்லப்போனால், மத்திய அரசின் விவசாயச் செலவுகள், விலைகளுக்கான ஆணையத்தால் கடைசியாக வெளியிடப்பட்டுள்ள 2023 கரீப் பருவத்துக்கான அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ள தரவுகளின்படி, சிறுதானியங்களை அதிகமாகப் பயிரிடும் மாநில விவசாயிகள் பெரும் நஷ்டத்தைச் சந்தித்துள்ளார்கள் எனத் தெரியவந்துள்ளது.

ஏன் லாபம் குறைவு?

  • சிறுதானியங்களுக்கு அறிவிக்கப்படும் குறைந்தபட்ச ஆதரவு விலையே (எம்எஸ்பி), குறைந்த லாபம் கிடைப்பதற்குக் காரணமாக இருக்கக்கூடும் எனச் சிலருக்குக் கேள்வி எழக்கூடும். ஆனால், குறைந்த லாபத்துக்கு எம்எஸ்பி முக்கியக் காரணமாக இருக்காது என்பதைத் தரவுகள் காட்டுகின்றன.
  • 2000-01 முதல் 2010-11 வரையிலான எம்எஸ்பி பற்றிய தரவுகளை, 2010-11 முதல் 2022-23 வரையிலான தரவுகளுடன் ஒப்பிடுகையில், சிறுதானியப் பயிர்களுக்கான எம்எஸ்பி கடந்த 10 ஆண்டுகளில் மிக அதிகமாகக் கொடுக்கப்பட்டுள்ளது. 2010-11 முதல் 2022-23 வரையிலான காலகட்டத்தில் இருங்குசோளத்துக்கு 237%, கம்புக்கு 167%, கேழ்வரகுக்கு 271% என எம்எஸ்பி அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் 2000-01 முதல் 2010-11 இடையிலான காலகட்டத்தில், இப்பயிர்களுக்காக உயர்த்தி வழங்கப்பட்ட எம்எஸ்பி 97% முதல் 116% வரை மட்டுமே.
  • உயர்த்தி வழங்கப்படும் எம்எஸ்பியுடன் அரசு நிறுவனங்கள் மூலம் பயிர் கொள்முதல் செய்தால் மட்டுமே சிறுதானியங்களைப் பயிரிட விவசாயிகளை ஊக்குவிக்க முடியும். இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாக நெல், கோதுமைப் பயிர்களைக் கூறலாம். அரசு நிறுவனங்கள் மூலமாகச் செய்யப்பட்ட நெல் கொள்முதல் 1970-71இல் 3.46 மில்லியன் டன்னிலிருந்து, 2021-22இல் 57.58 மில்லியன் டன்களாக அதிகரித்துள்ளது. இதே காலத்தில், கோதுமை கொள்முதல் 5.09 மில்லியன் டன்னிலிருந்து 43.34 மில்லியன் டன்களாக அதிகரித்துள்ளது.
  • இதன் காரணமாக, நெல், கோதுமைப் பயிர்களின் சாகுபடிப் பரப்பளவு 1970களுக்குப் பிறகு தொடர்ந்து அதிகரித்துவருகிறது. ஆனால், சிறுதானியப் பயிர்களின் கொள்முதல் பற்றிய தரவுகளோ தேசிய அளவில் முற்றிலும் இல்லை. இவற்றின் கொள்முதல் குறித்த தரவுகளை இந்திய உணவுக் கழகம் (FCI) இதுவரை வெளியிடவில்லை. இருப்பினும் குஜராத், ஹரியாணா, கர்நாடகம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் சமீப ஆண்டுகளில் சிறுதானியப் பயிர்களைக் கொள்முதல் செய்ய சில முயற்சிகளை மேற் கொண்டுள்ளன.

புரிதல் அவசியம்:

  • இந்திய அளவில் தேசியப் புள்ளியியல் அலுவலகத்தால் 2018-19இல் நடத்தப்பட்ட வேளாண் குடும்பங்களின் நிலை பற்றிய மதிப்பீட்டு ஆய்வின்படி (Situation Assessment Survey of Farming Households) எம்எஸ்பிக்குக் கீழ் விற்கப்படும் சிறுதானியப் பயிர்கள் அதிகபட்சமாக வெறும் 2.9% மட்டுமே.
  • ஆனால், நெல், கோதுமை பயிரிடும் விவசாயிகள் அதன் உற்பத்தியில் 21-24% வரை எம்எஸ்பிக்குக் கீழ் விற்றுப் பயனடைந்துள்ளார்கள். அரசுத் துறைகள் மூலமாகப் பயிர்களைக் கொள்முதல் செய்யாவிட்டால், ஒவ்வோர் ஆண்டும் அதிகரித்து வழங்கப்படும் எம்எஸ்பியை விவசாயிகள் எப்படிப் பெற முடியும்?
  • சமீப காலமாகச் சிறுதானியங்களின் நுகர்வு குறித்த விழிப்புணர்வு அதிகரித்துவருவதால், இவற்றின் தேவை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே, மத்திய - மாநில அரசுகள், நெல் - கோதுமைக்குப் பின்பற்றுவதுபோல, இப்பயிர்களின் உற்பத்தியில் 15-20% வரை எம்எஸ்பி-யின் கீழ் கொள்முதல் செய்ய முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
  • அப்படிச் செய்தால், இப்பயிர்களின் சந்தை விலை அதிகரித்து, அனைத்து சிறுதானிய விவசாயிகளுக்கும் பலன் கிடைக்கும். 1965-66 முதல் 2021-22 வரையிலான காலகட்டத்தில், மொத்தமாக 21.69 மில்லியன் ஹெக்டேர் சிறுதானிய சாகுபடிப் பரப்பளவை இந்தியா இழந்துள்ளது. இது மிகப்பெரிய இழப்பாகும்.
  • மேம்படுத்தப்பட்ட கொள்முதல் மூலம் சிறுதானியப் பயிர்ச் சாகுபடியை லாபகரமாக மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளாவிட்டால், இப்பயிர்களின் சாகுபடிப் பரப்பளவு குறைவதைத் தடுக்க முடியாது. சிறுதானியங்களின் சாகுபடிப் பரப்பளவுக் குறைவு மானாவாரி விவசாயிகளின் வருமானத்தைக் குறைப்பது மட்டுமல்லாமல், இந்தியாவில் உள்ள பெரும்பான்மையான மக்களின் நுண்ணூட்டச் சத்துப் பாதுகாப்பைப் பறித்துவிடும் என்பதைக் கொள்கை வகுப்பாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

நன்றி: தி இந்து (29  – 06 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்