- அடுத்த (2023) ஆண்டை உலக சிறுதானிய ஆண்டாக ஐ.நா. சபை அறிவித்துள்ளது. இதையடுத்து, சிறுதானிய உற்பத்தியை அனைத்து மாநிலங்களிலும் விரிவுபடுத்தும் முயற்சியில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.
- இதன்மூலம் ஊட்டச்சத்து மிகுந்த சிறுதானியங்களின் பயன்பாடு பொதுமக்கள் மத்தியில் புத்துயிர் பெறுவதோடு, உலக நாடுகளில் அது சார்ந்த சந்தைப் பொருளாதாரம் மேம்படவும் வாய்ப்பு ஏற்படும். எதிர்காலத்தில் பருவநிலையால் உணவு உற்பத்தியில் ஏற்படும் பாதிப்புகளை சமாளிக்க இந்தச் செயல் திட்டம் கைகொடுக்கும்.
- இந்தியாவில், கோதுமை, நெல் உற்பத்தியை மட்டுமே மையப்படுத்தி வேளாண் சமூகம் இயங்கி வருகிறது. இதனால் சோளம், கம்பு, கேழ்வரகு, சாமை, தினை, குதிரைவாலி போன்ற நமது பாரம்பரிய சிறுதானியங்களின் சாகுபடி அருகிவிட்டது.
- மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதிகளில் மட்டுமே தற்போது சிறுதானிய சாகுபடி உயிர்ப்புடன் உள்ளது. ராஜஸ்தான், மத்திய பிரதேச மாநிலங்களில் பழங்குடியினர் சிறுதானிய விதைகளைப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்குத் தருவதை வழக்கமாக வைத்துள்ளனர். தமிழகத்தில் சிறுதானியங்கள் அதிக அளவில் விளைவிக்கப்படும் சேலம், தருமபுரி மாவட்ட மக்கள் பானைகளில் சிறுதானிய விதைகளை பத்திரப்படுத்தி பாதுகாக்கின்றனர்.
- உலக அளவில் 131 நாடுகள் சிறுதானிய சாகுபடி குறித்து அறிந்துள்ளன. உலக மக்கள்தொகையில் 60 கோடி பேர் மட்டுமே இன்றளவும் சிறுதானியங்களை பிரதான உணவாகப் பயன்படுத்தி வருகின்றனர்.
- உலக உணவு உற்பத்தியில் இரண்டாம் இடத்தில் உள்ள இந்தியா, உலகின் மிகப் பெரிய அரிசி ஏற்றுமதி நாடாகவும் உள்ளது. 2021-22 -இல் 21.21 மில்லியன் டன் அரிசியை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது.
- நாட்டின் மத்திய தானிய தொகுப்பில் நிகழாண்டு ஆகஸ்ட் மாதம் கோதுமை கையிருப்பு 26.65 மில்லியன் டன் ஆகக் குறைந்துள்ளது. எனவே தொகுப்பில் உள்ள 40.99 மில்லியன் டன் அரிசியைக் கொண்டு பொது விநியோகத் திட்டத்தை மத்திய அரசு சமாளித்து வருகிறது.
- மழையின்றி வறட்சி, அதிக மழைப்பொழிவு, நிலத்தடி நீர்மட்டம் சரிவு, ரசாயன உரங்களால் மண்வள பாதிப்பு போன்ற காரணங்கள் இந்தியாவின் நீடித்த வேளாண் வளர்ச்சிக்கு சிக்கல்களாக உள்ளன. எனவே, அனைத்து காலநிலையிலும் தாங்கி வளரும் சிறுதானியப் பயிர் சாகுபடியை ஊக்குவிக்கும் முயற்சியை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
- 2020 - இல் உலக அளவில் 74 மில்லியன் ஹெக்டேரில் 89.17 மில்லியன் டன் சிறுதானியங்கள் உற்பத்தி செய்யப்பட்டன. இதில் ஆப்பிரிக்க நாடுகளுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் 12.45 மில்லியன் ஹெக்டேரில் 15.53 மில்லியன் டன் சிறுதானியங்கள் விளைவிக்கப்பட்டுள்ளன. இதில் தமிழகத்தின் பங்களிப்பு 3.74 சதவீதம்.
- நெல், கோதுமை, பணப் பயிர்கள் இவற்றை நோக்கியே நமது விவசாயம் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதனால் பல இழப்புகளைச் சந்தித்தாலும் பெரும்பாலான விவசாயிகள் இதிலிருந்து வெளியேறவில்லை. மாற்றுப் பயிர் சாகுபடி குறித்த அடிப்படை தொழில்நுட்பம் அவர்களுக்குத் தெரிவதில்லை என்பது ஒருபுறம். அரசின் ஊக்குவிப்பு கிடைக்காதது மறுபுறம்.
- உலக அளவில் சிறுதானிய ஏற்றுமதியில் இந்தியா 5-ஆவது பெரிய நாடாக உள்ளது. 2020-21நிதியாண்டில் இந்தியா 26.97 மில்லியன் டாலர் மதிப்புக்கு ஏற்றுமதி செய்துள்ளது. உலக அளவில் சிறுதானிய ஏற்றுமதி 2019-இல் 380 மில்லியன் டாலராகவும், 2020-இல் 402.7 மில்லியன் டாலராகவும் அதிகரித்துள்ளது.
- நெல்லுக்கு அதிக அளவு தண்ணீர் தேவைப்படும். ஆனால், சிறுதானியங்களுக்கு குறைந்த அளவு தண்ணீர் இருந்தாலே போதுமானது. தவிர, குறுகிய காலத்தில் (65-90 நாள்களுக்குள்) அறுவடைக்கு வந்துவிடும். இவை மானாவாரி சாகுபடிக்கு ஏற்றவை. அதுமட்டுமல்ல, சிறுதானிய சாகுபடியில் பூச்சியும் நோய்த் தாக்குதலும் குறைவு.
- இந்தியாவில் அதிக அளவு சிறுதானிய சாகுபடி செய்யும் 21 மாநிலங்களில் 2021-இல் ராஜஸ்தான் 29.05 சதவீதத்துடன் முதலிடத்தில் இருந்தது. மத்திய பிரதேசம், கர்நாடகம், ஆந்திரம், தமிழகம் ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களைப் பெற்றுள்ளன.
- சத்தீஸ்கர் மாநில அரசு, வரகு, சாமை, ராகி ஆகிய பயிர்களின் உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக, அவற்றுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை அறிவித்துள்ளது. அதேபோல அனைத்து மாநிலங்களிலும் சிறுதானிய உற்பத்திக்கு ஆதரவு விலையை நிர்ணயிப்பதோடு காப்பீடும் அளிக்கப்பட்டால் பெரும்பாலான விவசாயிகள் சிறுதானியத்தைப் பயிரிட முன்வருவர்.
- கர்நாடகத்தில் சிறுதானியம் பயிரிடும் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு 10 ஆயிரம் ஊக்கத்தொகை, ராஜஸ்தானில் வேளாண் கருவிகள் வாங்குவதற்கு மானியம், தெலங்கானாவில் சிறுதானியப் பொருள்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்யும் திட்டம், ஆந்திரத்தில் கர்ப்பிணிகளுக்கு சிறுதானிய சத்துமாவு வழங்கல் என சிறுதானிய உற்பத்திக்கு பல்வேறு மாநில அரசுகள் தீவிரம் காட்டிவருகின்றன.
- தமிழகத்தில் சென்னை, கோவையில் சோதனை அடிப்படையில் நியாயவிலைக் கடைகளில் சிறு தானியங்களை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் இது தொடரவில்லை. சிறுதானிய உற்பத்தியை அதிகரிக்காமல் இது சாத்தியமாகாது. தமிழகத்தில் அதிக அளவில் சிறுதானியங்கள் உற்பத்தியாகும் சேலம், தருமபுரி மாவட்டங்களில் உள்ள நியாயவிலைக் கடைகளில் சிறுதானிய விநியோகத்தை சோதனை முறையில் தொடங்கலாம்.
- 2012-ஆம் ஆண்டு தமிழகம் உள்பட 14 மாநிலங்களில் "சிறுதானிய இயக்கம்' அறிமுகப் படுத்தப் பட்டது. அப்போது மாநில திட்டக்குழு துணைத் தலைவராக இருந்த சாந்தஷீலா நாயர் தமிழகத்தில் சிறுதானிய விதைத் திருவிழா, மதிப்புக்கூட்டலுக்குப் பயிற்சி என பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்தார். ஆனால் ஆட்சி மாற்றத்துக்குப் பின் அந்தப் பணிகள் கைவிடப்பட்டன.
- வரும் நாட்களில் பொதுவிநியோகத் திட்டம், பள்ளிகளில் சத்துணவுத் திட்டம், மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கான சீரான உணவுத் திட்டம் போன்றவற்றின் மூலமாக சிறுதானியப் பயன்பாட்டை ஊக்குவித்தால் தமிழகம் சிறுதானிய உற்பத்தியில் முன்னிலை பெறும் என்பதில் ஐயமில்லை.
நன்றி: தினமணி (15 – 12 – 2022)