TNPSC Thervupettagam

சிறுதானியத்தால் சிறப்புறும் ஆண்டு!

March 31 , 2021 1394 days 2036 0
  • தமிழ் ஆண்டுகள் மொத்தம் அறுபது. இவ்வாண்டுகளில் பனிரண்டாவதாக வரும் வெகுதானிய ஆண்டு கூலவளம் மிக்க ஆண்டாக விளங்கும். "கூலம்' என்றால் "தானியம்' என்று பொருள்.
  • திருநெல்வேலி நகரில் மேலவீதியை அடுத்துக் கூழைகடைத் தெரு என்று ஒரு தெரு உள்ளது. அங்கு நெல் உட்பட வெகுதானியங்களின் விற்பனை அமோகமாக நடைபெறும். கூலக்கடைத் தெரு என்பதே மருவி கூழைக்கடை தெருவாகி விட்டது என்று கூறுவார்கள்.
  • தமிழ் ஆண்டுகளில் வெகுதானிய ஆண்டுக்கு சிறப்பு கிடைத்துள்ளது.
  • "யானைக்கு ஒரு காலம் வந்தால், பூனைக்கு ஒரு காலம் வராமலா போகும்?' "சிறு துரும்பும் பல் குத்த உதவும்' போன்ற முதுமொழிகளுக்கு ஏற்ப, வரவிருக்கும் 2023-ஆம் ஆண்டை "சர்வதேச சிறுதானிய ஆண்டு' என ஐ.நா. சபை அறிவித்துள்ளது.
  • உலக மக்கள் நலன் வேண்டி ஐ.நா. சபை ஒவ்வொரு ஆண்டையும் ஒவ்வொரு நோக்கத்துக்கான ஆண்டாக அறிவித்து அதை நிறைவேற்ற ஆண்டு முழுவதும் பல முயற்சிகளில் ஈடுபடுகிறது.
  • வரும் 2023-ஆம் ஆண்டை சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டாக அறிவிக்கக் கோரி கடந்த 4.3.2021 அன்று, ஐ.நா. பொதுச்சபையில் இந்தியா தாக்கல் செய்த தீர்மானம் எதிர்ப்பு ஏதுமின்றி ஒருமனதாக நிறைவேறியது.
  • இந்தியாவுடன், ரஷியா, வங்கதேசம், கென்யா, நேபாளம், நைஜீரியா, செனகல் ஆகிய நாடுகள் இணைந்து அறிமுகப்படுத்திய இந்தத் தீர்மானத்தை 70 நாடுகள் வழிமொழிந்தன.
     
  • ஐ.நா. சபையின் 193 உறுப்பு நாடுகளும் இந்தத் தீர்மானத்தை ஒருமனதாக ஆதரித்ததால், இந்தியாவின் பாரம்பரியமிக்க சிறுதானிய வகைகளை உலக மக்களிடையே பிரபலப்படுத்தும் வகையில் 2023-ஆம் ஆண்டு சர்வதேச சிறுதானிய ஆண்டாகக் கடைப்பிடிக்கப்படும் என ஐ.நா. சபை அறிவித்துள்ளது.
  • சிறுதானியங்கள் என்பவை குதிரைவாலி, கேழ்வரகு, தினை, வரகு, சாமை, கம்பு, பனிவரகு, சோளம் ஆகிய உருவில் சிறியதாக உள்ள தானிய வகைகளைக் குறிக்கும். இவை மிகக் குறுகிய காலத்தில் சாதாரண மண்ணில், வறட்சிக் காலத்திலும் வளரக் கூடியவை. இவற்றில் புரதம், நார்ச்சத்து, கால்ஷியம், இரும்புச் சத்து, வைட்டமின்கள் போன்ற ஊட்டச்சத்துகள் அதிக அளவில் உள்ளன.
     
  • இந்தியா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகளில் அரிசியும், கோதுமையுமே முக்கியமான உணவுப் பொருள்களாக இருக்கின்றன. இவற்றில் மாவு சத்து அதிகம் என்பதாலும், புரதம் மற்றும் நார்ச்சத்து குறைவு என்பதாலும், மக்கள் ஊட்டச் சத்து குறைபாட்டாலும், ஆரோக்கியமற்ற உணவு பழக்கத்தாலும் பல நோய்களுக்கு உள்ளாகின்றனர்.
     
  • எனவே, ஊட்டச்சத்து மிகுந்த உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்காத, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, கெட்ட கொழுப்புகளைக் குறைத்து, இதய நோய்களைத் தடுக்கும் சிறுதானியங்களை உணவு பழக்க வழக்கத்தில் அதிகம் பயன்படுத்த வேண்டும் என்ற கருத்தை முன்னிறுத்தி ஒரு ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவிக்க வேண்டுமென 2017-ஆம் ஆண்டிலிருந்தே இந்தியா, ஐ.நா. சபையை வலியுறுத்தி வந்துள்ளது.
     
  • இது தொடர்பாக அப்போதைய வேளாண்துறை அமைச்சர் ராதா மோகன் சிங் ஐக்கிய நாடுகள் சபைக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதனும் இது குறித்து அவ்வப்போது வலியுறுத்தி வந்துள்ளார். இது தொடர்பான பரிந்துரைகளையும் மத்திய அரசு ஐக்கிய நாடுகள் சபைக்கு அனுப்பியிருந்தது. அதன் நீட்சியாகத்தான் இப்போது ஐக்கிய நாடுகள் பொதுச்சபை சிறுதானிய ஆண்டு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
     
  • மனிதர்கள் உயிர் வாழ அடிப்படையானது உணவு. இது உடலில் சக்தியை உருவாக்குவதற்கும், திசுக்களை மேம்படுத்துவதற்கும், ஆரோக்கியமாக உடல் உறுப்புகள் இயங்கவும் வழிவகை செய்கிறது. இந்த இயற்கை வழி உணவானது தானியம், சிறுதானியம், பருப்பு என பலவற்றை உள்ளடக்கியது. இது மட்டுமல்லாமல் பழங்கள், காய்கள், கீரை வகைகள், எண்ணெய் வித்துகள் ஆகியனவும் மனிதனுக்கு உணவாகின்றன. சிறு தானியங்கள் எளிதில் செரிமானம் ஆகக் கூடிய தன்மைக் கொண்டவை. சிறுதானியங்கள் பொலிவுறு பயிர்கள் (ஸ்மார்ட் க்ராப்ஸ்) என்ற பெயரையும் பெற்றிருக்கின்றன.
     
  • சிறுதானியங்கள் உடல் நலத்திற்கு ஆரோக்கியமானவை என்பது மட்டுமல்லாது மாறி வரும் பருவ நிலைக்கு ஏற்பட பயிரிடுதலிலும் அவை முக்கிய பங்கு வகிக்கின்றன. எனவே, 2023-ஆம் ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவிக்க கோரிய இந்தியாவின் முன் முயற்சியால், விவசாயிகளின் நலன் பாதுகாக்கப்படுவதோடு, சிறுதானியங்கள் அதிகளவில் பயிரிடுதல், அது தொடர்பான ஆராய்ச்சிகள், அத்துறையில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான நடவடிக்கைகள், அவற்றைப் பதப்படுத்துதல், உணவுப் பாதுகாப்பு, மதிப்புக்கூட்டு பொருள்கள் தயாரித்தல் உள்ளிட்டவை பற்றி சர்வதேச அளவில் விரிவான ஆய்வுகள் நடக்கும் வாய்ப்புகளும் ஏற்பட்டுள்ளன.
     
  • உலக மக்கள் ஆரோக்கியமான உணவு உண்டு, உடல்நலத்துடன் நிறை வாழ்வு வாழவும் சிறுதானியங்கள் வழிவகுக்கும் என்பதால் இந்தியாவின் இந்த முயற்சியை உலக நாடுகள் அனைத்தும் பாராட்டியுள்ளன. இது இந்திய திருநாட்டு மக்களுக்குக் கிடைத்த வெற்றி. கொழுப்புச் சத்து அதிகமுள்ள உணவு வகைகளை அதிகம் சாப்பிடும் வெளிநாட்டினர் கூட இப்போது சிறுதானியங்கள் பக்கம் தங்கள் கவனத்தைத் திருப்பியிருக்கிறார்கள். அதனால், சிறுதானியங்களுக்கான ஏற்றுமதி வாய்ப்பும் அதிகரிக்கக் கூடும்.
     
  • நாடு முழுவதும் 50 சதவீத மக்கள் ஊட்டச்சத்துப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளர் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. முன்பெல்லாம், பெரும்பாலும் வீட்டுத் தேவைக்காக மட்டுமே விளைவிக்கப்பட்டு வந்த சிறுதானியங்கள், இன்று வாழ்க்கை முறையாலும், தேசிய அளவில் ஏற்பட்டிருக்கும் ஊட்டச்சத்துப் பற்றாக்குறையை ஈடுகட்டவும் முக்கியத்துவம் பெற்று வருகின்றன. பயிர் செய்வதற்கும், உணவாக பயன்படுத்துவதற்கும் சிறுதானியங்கள் எளிதானவை, சிறந்தவை.
     
  • பிற உணவுப் பயிர்களைப்போல் இவற்றை சாகுபடி செய்ய அதிக நீர் தேவைப்படாது என வேளாண் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். தெலங்கானா மாநிலம், ஹைதராபாதில் இயங்கி வரும் இந்திய சிறுதானிய ஆராய்ச்சிக் கழகத்தின் இயக்குநர் விலாஸ் ஏ தொனபி, "சிறுதானியங்கள் சுமார் 3000 ஆண்டுகளிலிருந்து 5000 ஆண்டுகள் வரை பழைமையானவை. குதிரைவாலி, வரகு, சாமை ஆகிய சிறுதானியங்கள் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டவை.
     
  • வறண்ட பகுதிகளில் வாழும் மக்களையும் வாழ வைப்பவை சிறுதானியங்கள்தான். சிறுதானியங்கள் குறித்து அதிக ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுவது நமது இந்தியாவில்தான். பருவ நிலை மாற்றத்தால் 2050-ஆம் ஆண்டுக்குள் இரண்டு டிகிரி முதல் மூன்று டிகிரி வரை வெப்பநிலை உயரக்கூடும். வெப்பநிலை உயரும்போதும் சிறுதானிய சாகுபடி முக்கிய இடத்தை வகிக்கும்.
  • ஒரு கிலோ அளவிலான அரிசியை உற்பத்தி செய்ய 5000 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. ஆனால், ஒரு கிலோ சிறுதானியத்தை விளைவிக்க 300 லிட்டர் தண்ணீரே போதுமானது. குறைந்த அளவு வேலை, எளிய பராமரிப்பு, நம் நாட்டு தட்பவெப்ப சூழலுக்கு உகந்தது. இன்றைய வாழ்க்கை முறையில் மருத்துவத்துக்கு நாம் செலவிடும் தொகை அதிகம். அதைப் பெருமளவில் குறைக்கும் திறன் சிறுதானியங்களுக்கு மட்டுமே உண்டு' என்று கூறினார்.
     
  • "சிறுதானியம் நமது உடலுக்கு மிகவும் நல்லது. அவற்றைப் பயிரிடும் விவசாயிகளுக்கும் நல்லது. சுற்றுச்சூழலுக்கும் நல்லது. தமிழ்நாட்டில் சிறுதானிய சாகுபடி செய்வதற்கு நிறைய வாய்ப்புகளும் வசதிகளும் உள்ளன' என்று உறுதிபடக் கூறுகிறார் இந்திய சிறுதானிய ஆராய்ச்சிக் கழக ஊட்டச்சத்து மையத்தின் முதன்மை நிர்வாக இயக்குநர் தயாகர் ராவ்.
     
  • இன்றைய காலகட்டத்தில், கரோனா தீநுண்மி பாதிப்பிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள சத்து மிகுந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி வருவதால், நவீன முறையிலான உணவுகளைத் தவிர்த்து, பராம்பரிய உணவுகளை நோக்கி மக்களின் கவனம் திரும்பியுள்ளது. இப்போது சிறுதானிய உணவு வகைகளை பலரும் விரும்பி உண்கிறார்கள். இதனால், தமிழ்நாட்டில் சிறுதானிய சாகுபடி அதிகரித்து வருகிறது.
     
  • சிறுதானியங்களைப் பயன்படுத்தி, உழவர் உற்பத்தியாளர் குழுக்களால் தயாரிக்கப்பட்ட மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்கள், பொது முடக்கக் காலத்தில் அதிகம் விற்பனையாகியுள்ளன. நடப்பு ஆண்டில் 42 லட்சம் மெட்ரிக் டன் அளவிற்கு சிறுதானியங்களை உற்பத்தி செய்ய வேளாண்துறை இலக்கு நிர்ணயித்துள்ளது. தற்போது சாகுபடி பரப்பு இரண்டு லட்சம் ஏக்கராக அதிகரித்துள்ளதால் உற்பத்தி இலக்கை அடைவதற்கான வாய்ப்பு கனிந்து வருகிறது.
  • பிற உணவுப் பொருள்களைவிட கேழ்வரகில் 300 மடங்கு அதிகம் கால்சியம் சத்து உள்ளது. இது பெண்களுக்கும், முதியவர்களுக்கும் மிகவும் ஏற்றது. சாமையிலுள்ள இரும்புச் சத்து நமது தினசரி உணவில் சேரும்போது நாள்பட்ட ரத்த சோகை இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும். தினையில் இருக்கும் அதிக அளவிலான புரதம் குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு சிறந்த மருந்தாகும். கால்சியம் அதிகம் தேவைப்படும் கர்ப்பிணிகளுக்கும், குழந்தைகளுக்கும் கேழ்வரகு மிகவும் நல்லது.
     
  • சர்க்கரை நோயாளிகளுக்கு அருமருந்து கேழ்வரகு. சீனாவில் அதிகமாக உற்பத்தி செய்யப்படும் தினை இதயத்தை வலுப்படுத்த உதவும். அரிசியை விட கம்பு அதிக அளவு இரும்பு சத்தினை கொண்டுள்ளது. இதில் கால்சியம், புரத சத்து அதிக அளவில் உள்ளன. உடல் எடையைக் குறைக்க சிறந்த உணவுப் பொருள் வரகு என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
     
  • ஐ.நா. சபையின் "சிறுதானிய ஆண்டு' அறிவிப்பால், நுகர்வோர், வேளாண் கொள்கைகளை வகுப்போர், சிறு தொழில் முனைவோர், வேளாண் ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ளோர், ஊட்டச் சத்து நிபுணர் ஆகியோரிடையே சிறுதானியங்களின் தேவை, பயன் குறித்து விழிப்புணர்வு ஏற்படும் என்பது திண்ணம். இதன் மூலம் இந்தியா, உலக அரங்கில் உணவு உற்பத்தியில் பீடு நடை போடும் என்பதில் ஐயமில்லை.

நன்றி: தினமணி (31 – 03 – 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்