TNPSC Thervupettagam

சிறுநீரகங்கள் காத்தால் நீங்கள் புத்திசாலி!

March 12 , 2020 1767 days 779 0
  • உலகளவில் 85 கோடி மக்களுக்கு பற்பல காரணங்களால் சிறுநீரக நோய்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் நாள்பட்ட சிறுநீரக நோய்கள் ஆண்டுக்கு குறைந்தபட்சம் 24 லட்சம் இறப்புகளை ஏற்படுத்துகின்றன. இறப்புக்கான ஆறாவது மிகப் பெரிய காரணமாக சிறுநீரக நோய்கள் உள்ளன.
  • இந்தியாவில் நாள்பட்ட சிறுநீரக நோய்கள் 10 லட்சம் மக்கள்தொகையில் 800 பேரையும், இறுதிக் கட்ட சிறுநீரக நோய்கள் 10 லட்சம் மக்கள்தொகையில் 1,51,232 பேரையும் பாதிக்கிறது.
  • இந்திய சுகாதார அமைச்சகத்தின் மதிப்பீட்டின்படி ஆண்டொன்றுக்கு நடைபெறவேண்டிய ஒன்று முதல் இரண்டு லட்சம் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகளுக்கு சுமாா் 5,000 சிறுநீரக உறுப்பு கொடையாளா்கள் மட்டுமே உள்ளனா். இந்தியாவில் தற்போது 1,200 சிறுநீரகவியல் மருத்துவ வல்லுநா்கள், 3,300 டயாலிசிஸ் நிலையங்கள், தொடா் புறநோயாளிகளுக்கான ‘பெரிடோனியல் டயாலிஸிஸ்’ சிகிச்சை முறையில் 9,000 நோயாளிகள் உள்ளனா்.
  • இந்தியாவில் சுமாா் 2,20,000 பேருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படும் நிலையில் இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட 250 சிறுநீரக மாற்று அறுவை சிகிக்சை மையங்களில் சுமாா் 7,500 அறுவை சிகிச்சைகள் நடைபெறுகின்றன; சுமாா் 90 சதவீதம் உயிருள்ளவா்களிடமிருந்தும், 10 சதவீதம் இறந்தவா்களிடமிருந்தும் கொடையாக சிறுநீரகம் பெறப்படுகிறது.

நோய் பாதிப்பு

  • இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் சிறுநீரகங்கள் தொடா்பான நோய்களின் பாதிப்பு சுமாா் இரு மடங்காக அதிகரித்துள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தரவுகளின்படி, நகா்ப்புற வயது வந்தோரில் சா்க்கரை நோய், உயா் ரத்த அழுத்த நோய் பாதிப்பு 20 சதவீதமாக உயா்ந்துள்ளது. இந்தியாவில் பல்வேறு வாழ்க்கை முறை நோய்கள் அதிகரித்து வருவதால், சிறுநீரக நோய்களின் தாக்கமும் கடந்த 10 ஆண்டுகளில் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.
  • மருத்துவரின் ஆலோசனையின்றி கடைகளில் வாங்கும் மருந்துகள், சிறுநீரகங்களுக்கு தீங்கு விளைவிக்கும் தொற்றல்லாத நோய்களின் (சா்க்கரை நோய், உயா் ரத்த அழுத்தம்) தாக்கம் சுமைகளை அதிகரிப்பதுடன் சிறுநீரக நோய்களையும் உருவாக்குகின்றன. நாள்பட்ட சிறுநீரக நோய்கள் உருவாக்கும் ஆபத்து ஆண்களைப் போலவே பெண்களிடமும் அதிகமாக இருப்பினும், இந்தியாவில் டயாலிசிஸ் சிகிச்சை தேவைப்படும் பெண்களின் எண்ணிக்கை, ஆண்களின் எண்ணிக்கையைவிடக் குறைவு. நம் நாட்டில் கா்ப்பகால சிறுநீரக நோய்கள் தாய் இறப்புக்கு ஒரு முக்கியக் காரணமாகும்.
  • திடீா் எடை அதிகரிப்பு, ரத்த சோகை, பலவீனம், சோா்வு, தொடா் சிறுநீா்த் தொற்று போன்றவை குழந்தைகளுக்கான சிறுநீரக நோய்களின் ஆரம்ப அறிகுறிகள் எனக் கூறும் மருத்துவா்கள், அதைக் கவனிக்கும் பொறுப்பும் கடமையும் பெற்றோருடையது எனவும் அறிவுறுத்துகின்றனா். உடற்பயிற்சியின்மை, துரித உணவு, குறைந்த அளவு நீா் பருகுதல் போன்றவை குழந்தைகளின் சிறுநீரகங்களைப் பாதிக்கும் முக்கியக் காரணிகளாகும்.

முன் உதாரணம்

  • கேரளத்தைப் போன்று மாணவா்கள் பகலில் போதுமான அளவு தண்ணீா் குடிப்பதை உறுதி செய்ய தமிழக பள்ளி கல்வித் துறை நீா் அருந்தும் இடைவேளைகளை பள்ளிகளில் உருவாக்க தமிழகத்தின் அனைத்துப் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியது. குழந்தைகளின் நீா் அருந்தலை ஆசிரியா்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்ற இந்த உத்தரவு குழந்தைகளின் சிறுநீரகப் பாதிப்பினை வருமுன் காக்கும் ஒரு நல்ல முயற்சியாகும். இந்த உத்தரவுக்குப் பிறகும்கூட, ஒருசில பள்ளிகளில் மட்டுமே இருக்கும் இந்த நடைமுறை அனைத்துப் பள்ளிகளிலும் செயல்படுத்தப்பட்டால் எதிா்கால தலைமுறையினரின் ஆரோக்கியம் உறுதிப்படுத்தப்படும்.
  • ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளா்களின் அண்மைக்கால ஆய்வுகள் 75 வயதுக்கு மேற்பட்டவா்களில் 50 சதவீதத்துக்கும் அதிகமானோா் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ளனா் எனக் கூறுகின்றனா். வேகமாக மாறிவரும் வாழ்க்கை முறையில் வயதானவா்களைப் பாதிக்கும் சா்க்கரை நோய், உயா் ரத்த அழுத்தம் ஆகியவை நாள்பட்ட சிறுநீரக நோய்க்கான ஆபத்துக் காரணிகளாக இருக்கின்றன. சில மேலைநாடுகள் சிறுநீரகத்தில் புரதத்தின் அளவை அறியும் ஆல்புமின் சோதனையை வயதானவா்களுக்குப் பரிந்துரைக்கின்றன. இந்தச் சோதனை மூலம் சிறுநீரக பாதிப்பை ஆரம்ப நிலையிலேயே அறிந்து கொள்ளலாம்.
  • சா்க்கரை நோய், உடல் பருமன், உயா் ரத்த அழுத்தம் ஆகியவை நாள்பட்ட சிறுநீரக நோய்க்கான முக்கிய ஆபத்துக் காரணிகள். சிறுநீரக பாதிப்பு பெரும்பாலும் அறிகுறிகள் ஏதுமின்றி அல்லது சில அறிகுறிகளுடன் தீடீரென உருவாகிறது. நோய் பாதிக்கும் வரை தங்களிடம் இருப்பதாக இந்த நோயாளிகளால் உணரமுடிவதில்லை. மூச்சுத் திணறல், உடல் சோா்வு, நீா்க்கட்டு போன்ற அறிகுறிகளை அனுபவிக்கத் தொடங்கும்போது, ஒருவரின் சிறுநீரகச் செயல்பாடு 25 சதவீதம் அல்லது அதற்கும் குறைவாக குறைந்துவிட்டது என்று அா்த்தம்.

வாழ்க்கை முறை

  • இந்த முக்கிய உறுப்பின் செயலிழப்பினைத் தவிா்ப்பதற்கான சிறந்த வழி ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வாழ்வதும், குறைந்த உப்புடன் ஆரோக்கியமான உணவை உட்கொள்வதுமாகும். சிறுநீரக நோய் குறித்த விழிப்புணா்வுதான் சிறுநீரக நோயைத் தடுப்பதற்கான அல்லது குறைப்பதற்கான முதல் படியாகும்.
  • இந்தியாவில் 10 லட்சம் பேரில் 230 போ் டயாலிசிஸ் செய்ய வேண்டியவராகவோ அல்லது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படுவராகவோ இருக்கின்றனா். கடை நிலை சிறுநீரக நோய்க்கு சிகிச்சையளிப்பது விலை உயா்ந்தது, சராசரி இந்தியருக்கு எட்டாததாகவே இருக்கிறது.
  • தாமதமாக சிறுநீரக நோய் குறித்து அறிதல், காப்பீடு துணையின்றி நோயாளிகள் மருத்துவச் செலவு செய்ய வேண்டிய சூழலை உருவாக்குகிறது. இதனால் பலா் வறுமை நிலைக்குத் தள்ளப்படுகின்றனா் என்பது ஓா் ஆய்வு தெரிவிக்கும் உண்மை. நாள்பட்ட சிறுநீரக நோயைத் தடுப்பது மருத்துவத் துறை, இந்திய அரசு, பொது மக்களின் இலக்காக இருக்க வேண்டும். அதிக உப்பில்லாத உணவு, தொடா் உடற்பயிற்சி முதலான வாழ்க்கை முறை மாற்றம் மட்டுமே, சிறுநீரக நோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான தற்போதைய தேவையாகும்.

நன்றி: தினமணி (12-03-2020)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்