- இந்தியாவில் ஆண்டொன்றுக்கு 2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் சிறு நீரகப் பாதிப்புக்கு ஆளாகின்றனர். கட்டுப்பாடற்ற நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், முறையற்ற உணவுப் பழக்கம், வாழ்க்கை முறை, மரபணு உள்ளிட்ட காரணங்களால் சிறுநீரகம் தொடர்பான நோய்கள் மக்களிடம் அதிகரித்துவருகின்றன.
- குறிப்பாக இளம் வயதினரிடம் சிறுநீரகப் பாதிப்பு அதிகரித்துவருவது மருத்துவ உலகில் எச்சரிக்கை உணர்வுடன் அணுகப்படுகிறது. இத்தகைய சூழலில் தமிழ்நாடு சிறுநீரக ஆராய்ச்சி அறக்கட்டளை (Tamilnadu Kidney Research Foundation-TANKER), சிறுநீரகப் பாதிப்புக்குள்ளாகும் மக்களுக்கு முறையான சிகிச்சையை இலவசமாக அளிப்பதோடு விழிப்புணர்வையும் ஏற்படுத்திவருகிறது.
மருத்துவ சேவை:
- சிறுநீரகம் தொடர்பான தீவிரப் பிரச்சினைகளால் பாதிக்கப்படுகிற, பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களை அடையாளம் கண்டு, அம்மக்க ளுக்கு முறையான சிகிச்சைகளை வழங்கிவருகிறது தமிழ்நாடு சிறுநீரக ஆராய்ச்சி அறக்கட்டளை.
- சிறுநீரகச் சிறப்பு சிகிச்சை நிபுணர் மருத்துவர் ஜார்ஜி ஆபிரகாம் முன்மொழிந்த ஆலோசனையின் அடிப்படையில், மருத்துவ சேவை நோக்கில் 1993ஆம் ஆண்டு இந்த அமைப்பு தொடங்கப்பட்டது. சிறுநீரகப் பாதிப்புக்குள்ளான ஏழை, எளிய மக்களுக்குச் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, மருத்துவ உதவி, டயாலிசிஸ் போன்றவற்றை இவ்வமைப்பு இலவசமாக வழங்கிவருகிறது.
14 சிகிச்சை மையங்கள்:
- தமிழ்நாடு சிறுநீரக ஆராய்ச்சி அறக்கட்டளை, 14 மருத்துவச் சிகிச்சை மையங்களைக் கொண்டுள்ளது. இவற்றில் 11 மையங்கள் சென்னையில் அமைந்துள்ளன. திருப்பூர், மதுரை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு சிகிச்சை மையம் அமைந்துள்ளது. இதில் 8 மருத்துவ மையங்கள் சென்னை மாநகராட்சியுடன் இணைந்து பணியாற்றிவருகின்றன. மற்ற ஆறு மருத்துவ மையங்கள் ரோட்டரி சங்கத்துடன் இணைந்து செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.
- இதில் தமிழக முதல்வர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், பிரதம மந்திரி ஜன் ஆரோக்கிய திட்டம், சென்னை மாநகராட்சி, தன்னார்வ அமைப்புகள், கார்ப்பரேட் நிறுவனங்கள், தனி மனிதர்கள் மூலம் கிடைக்கும் மருத்துவ உதவிகள், நிதிகளைக் கொண்டு தமிழ்நாடு சிறுநீரக ஆராய்ச்சி அறக்கட்டளை மருத்துவ உதவிகளைச் செயல்படுத்தி வருகிறது.
7 லட்சம்:
- தமிழ்நாடு சிறுநீரக ஆராய்ச்சி அறக்கட்டளை மூலம் இதுவரை 7 லட்சத் துக்கும் அதிகமான டயாலிசிஸ் சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. தங்களிடம் மருத்துவ உதவி நாடிவரும் மக்களிடம் பொருளாதாரப் பின்புலம் தவிர்த்து, முதன்மையாகக் கவனிப்பது சிகிச்சை பெறுபவர்களின் உடல்நிலையைத்தான் என்கிறார் தமிழ்நாடு சிறுநீரக ஆராய்ச்சி அறக் கட்டளை நிறுவனர்களில் ஒருவரான லதா குமாரசாமி.
- “அதற்குக் காரணம் எங்கள் சிகிச்சை மையங்கள் மருத்துவமனைகளோடு இணைந்தவை அல்ல; அதனால், அவசர சிகிச்சைப் பிரிவுகள் போன்ற வசதிகள் இருப்பதில்லை. இதன் காரணமாகவே சிகிச்சை பெறுபவர்கள் பிற நோய்களால் பாதிக்கப்படாதவர்களாக இருப்பது அவசியம்” என லதா குமாரசாமி தெரிவித்தார்.
மருத்துவர்கள் குறைவு:
- “எங்களிடம் சிகிச்சை பெறுபவர்களில் 16% இளைஞர்கள். அந்த அளவு இளம் தலைமுறையினரிடத்தில் சிறுநீரகப் பாதிப்பு பிரச்சினை அதிகரித்து வரு கிறது. ஆனால், அதிகரிக்கும் சிறுநீரகப் பாதிப்புகளுக்கு ஏற்ற சிறுநீரகச் சிறப்பு சிகிச்சை மருத்துவர்கள் நம்மிடம் எண்ணிக்கையில் குறைவாகவே உள்ளனர். இந்திய அளவிலும் சிறுநீரகச் சிறப்பு மருத்துவர்களின் எண்ணிக்கை குறைவு. இதனால் மருத்துவர்களுக்குக் கூடுதல் பணிச்சுமை ஏற்படு கிறது” எனவும் லதா குமாரசாமி தெரிவித்தார்.
விழிப்புணர்வு:
- மருத்துவ உதவி அளிப்பதுடன் சிறுநீரக ஆராய்ச்சிகளுக்கும் தமிழ்நாடு சிறுநீரக ஆராய்ச்சி அறக்கட்டளை நிதியுதவி அளித்துவருகிறது. சிறுநீரகப் பாதிப்புகளுக்குச் சிகிச்சைகள் வழங்குவதுடன், ‘வரும் முன் காப்போம்’ என்கிற பெயரில் விழிப்புணர்வு நடவடிக்கைகளிலும் இவ்வமைப்பு ஈடுபட்டுள்ளது.
- இவ்வமைப்பின் ஆலோசகர் ராஜலஷ்மி ரவி தலைமையில் பள்ளிகள், கல்லூரிகளில் சிறுநீரகத்தின் பணி என்ன, அதன் முக்கியத்துவம் என்ன, உடல் உறுப்பு தானத்தின் அவசியம் என்ன என்பது போன்ற விழிப்புணர்வை மாணவர்களிடத்தில் தமிழ்நாடு சிறுநீரக ஆராய்ச்சி அறக்கட்டளை ஏற்படுத்திவருகிறது. மேலும், வாரத் திற்கு ஒரு முறை மருத்துவ முகாம்களும் நடத்தப்படுகின்றன.
- தமிழகக் குக்கிராமங்களில் உள்ள மக்களுக்கும் தங்கள் சேவை சென்றடைய வேண்டும் என்பதே தமிழ்நாடு சிறுநீரக ஆராய்ச்சி அறக் கட்டளையின் நோக்கம்.
நன்றி: இந்து தமிழ் திசை (06 – 07 – 2024)