TNPSC Thervupettagam

சிறைகளிலும் கூடாது சாதிப் பாகுபாடு!

October 11 , 2024 96 days 147 0

சிறைகளிலும் கூடாது சாதிப் பாகுபாடு!

  • இந்தியச் சிறைகளில், சிறைவாசிகளைச் சாதி அடிப்படையில் பிரித்துவைப்பதும் அவர்களுக்கான பணிகளை ஒதுக்குவதும் நிறுத்தப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது.
  • தமிழ்நாடு, கேரளம், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மாநிலங்களின் சிறைக் கையேடுகளில் சாதிய ஏற்றத்தாழ்வுகளை அங்கீகரிக்கும் விதிமுறைகள் இருப்பதற்கு எதிராக, பத்திரிகையாளர் சுகன்யா சாந்தா உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
  • தமிழ்நாட்டில் பாளையங்கோட்டை சிறைக்குள், தென் தமிழகப் பகுதிகளில் பரவலாக உள்ள மூன்று சாதிகளைச் சேர்ந்த கைதிகள் தனித் தனியாகப் பிரித்துவைக்கப்பட்டிருப்பதை இந்த மனுதாரர் கவனப்படுத்தியிருந்தார். மேலும், ராஜஸ்தான் சிறை விதிகள் 151இன்படி, சிறைக் கழிப்பறைகளைச் சுத்தப்படுத்தும் பணி ‘மேஹ்தர்’ என்கிற பட்டியல் சாதியைச் சேர்ந்த கைதிகளுக்கும் சமையல் பணி பிராமணர்கள் உள்ளிட்ட உயர் சாதிக் கைதிகளுக்கும் ஒதுக்கப்பட வேண்டும் என்று விதிக்கப்பட்டுள்ளது. பல இந்திய மாநிலங்களின் சிறைக் கையேடுகளில் இதுபோன்ற சாதி சார்ந்த வேலைப் பகுப்பு முறை பின்பற்றப்படுகிறது.
  • குற்றப்பரம்பரைச் சட்டம் 1871 ஒடுக்கப்பட்ட சமூகத்தினரில் சில குறிப்பிட்ட பிரிவினரைப் பிறவிக் குற்றவாளிகளாக அடையாளப்படுத்தியது. சுதந்திர இந்தியாவில் இந்தக் கொடிய சட்டம் நீக்கப்பட்டுவிட்டது. ஆனால், சிறைக் கையேடுகள் இந்தச் சமூகங்களைச் சேர்ந்த கைதிகளை ‘வாடிக்கைக் குற்றவாளிக’ளாகவே நடத்துகின்றன.
  • மேற்கு வங்கம், ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் சிறை விதிமுறைக் கையேடுகள் நாடோடிச் சமூகத்தினரை ‘தப்பிச் செல்லும் மனநிலையை இயல்பாகக் கொண்டவர்கள்’ என்றும் ‘ஆபத்தானவர்கள்’ என்றும் அடையாளப்படுத்துகின்றன. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு, சாதி அடிப்படையில் கைதிகளைப் பிரித்துவைப்பது, சாதி அடிப்படையிலான வேலைப் பகுப்புமுறை, அசுத்தமானவையாகக் கருதப்படும் வேலைகளை ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்கு ஒதுக்குவது ஆகியவை அரசமைப்புச் சட்டக் கூறுகள் 14, 15, 17 ஆகியவற்றுக்கு எதிரானவை என்று கூறியுள்ளது.
  • இத்தகைய பாகுபாடுகளும் பாகுபடுத்தும் விதிகளும் மூன்று மாதங்களுக்குள் களையப்பட்டு சிறைக் கையேடுகள் திருத்தி அமைக்கப்பட வேண்டும் என்று அனைத்து மாநில, மத்திய ஆட்சிப் பகுதி அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசின் சிறைக் கையேடு 2016, சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் சட்டம் 2023 ஆகியவற்றிலும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
  • சிறைக் கைதிகளுக்கான பதிவேடுகளில் அவர்களின் சாதி குறிப்பிடப்படக் கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சாதியப் பாகுபாட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கான திட்டங்களுக்கான பயனாளிகளை அடையாளம் காண்பதற்கு மட்டுமே சாதி அடிப்படையிலான தகவல்கள் கேட்கப்பட வேண்டும் என்பதை உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
  • அரசமைப்புச் சட்டம் உறுதிப்படுத்தியுள்ள அடிப்படை உரிமைகள் சிறைக் கைதிகளுக்கும் வழங்கப்பட வேண்டும். எவ்வளவு கொடிய குற்றம்புரிந்தவருக்கும் எந்த நிலையிலும் சமஉரிமை மறுக்கப்படக் கூடாது. அனைத்து வகையான சாதிப் பாகுபாடுகளையும் களைவது, சமத்துவ சமுதாயத்தைப் படைப்பது, அனைத்து வகையிலும் தீண்டாமையை ஒழிப்பது ஆகியவற்றை இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மைய நோக்கங்களாகக் கருதலாம்.
  • ஆனால், இந்தியச் சிறைகள் இந்த நோக்கங்களுக்கு எதிராகவே செயல்பட்டுவந்துள்ளன. சிறை அதிகாரிகளும் அரசுகளும் இதனை மாற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவில்லை என்பதும் வேதனைக்குரியது. சிறைக் கையேடுகள் தொடர்பான உச்ச நீதிமன்ற உத்தரவை முழுமையாக நடைமுறைப்படுத்திச் சிறையில் நிலவும் அனைத்து வகையான சாதிப் பாகுபாடுகளும் முற்றிலும் களையப்படுவதை உறுதிப்படுத்த வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் தலையாய கடமை.

நன்றி: இந்து தமிழ் திசை (11 – 10 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்