TNPSC Thervupettagam

சிறைச்சாலைகள் கவனம்!

August 3 , 2020 1628 days 791 0
  • கொவைட் 19 நோய்த்தொற்று கிராமங்களை நோக்கிப் பரவத் தொடங்கியிருப்பது எந்த அளவுக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறதோ, அதேபோல இந்தியச் சிறைச்சாலைகள் நோய்த்தொற்று மையங்களாக மாறிக்கொண்டிருக்கும் நிலைமை கவலையளிக்கிறது.

  • இந்தியா முழுவதிலுமுள்ள பல்வேறு சிறைச்சாலைகளிலிருந்தும் நோய்த்தொற்று குறித்த தகவல்கள் வந்தவண்ணம் இருக்கின்றன.

சிறைகளில் பரவும் கரோனா

  • மகாராஷ்டிர சிறைச்சாலைகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகளுக்கு நோய்த்தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது.

  • அஸ்ஸாமில் 535 கைதிகள் கொவைட் 19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். கடந்த வாரம் ஆக்ராவிலுள்ள எடா சிறைச்சாலையில் 36 பேர் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்திருக்கிறது.

  • ஒடிஸா சிறைச்சாலைகளிலும் நோய்த்தொற்றுப் பரவல் அதிர்வை ஏற்படுத்தியிருக்கிறது.

  • கடந்த மாதம் பெங்களூருவிலுள்ள பரப்பன அக்ரஹாரம் மத்திய சிறைச்சாலையில் கைதிகள் நோய்த்தொற்றுக்கு ஆளாகியிருப்பது தெரிந்தபோது, எல்லா மாநிலங்களுமே விழித்துக்கொள்ளத் தொடங்கின.

  • 4,500-க்கும் அதிகமான கைதிகள் இருக்கும் பரப்பன அக்ரஹாரம் மத்திய சிறைச்சாலையில் 150-க்கும் அதிகமான கைதிகளுக்கு மட்டுமல்ல, கணிசமான சிறைச்சாலை ஊழியர்களுக்கும் நோய்த்தொற்று இருப்பது தெரியவந்ததுமுதல் கடுமையான தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

  • இந்தியாவிலேயே மிக அதிகமாக பாதிக்கப்பட்டிருப்பது மகாராஷ்டிரம்தான். அதற்குக் காரணம், மகாராஷ்டிரத்திலுள்ள எல்லா சிறைச்சாலைகளிலும் அனுமதிக்கப்பட்டதைவிட அதிக அளவில் கைதிகள் இருக்கிறார்கள். மும்பையிலுள்ள ஆர்தர் சாலை சிறைச்சாலையில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட மூன்று மடங்கு அதிக கைதிகள் இருக்கிறார்கள்.

  • சிறைச்சாலையை விரிவுபடுத்துவது, தரத்தை மேம்படுத்துவது போன்ற கோரிக்கைகள் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டதன் விளைவை பல மாநிலங்கள் எதிர்கொள்கின்றன.

  • அதனால், கொவைட் 19 போன்ற நோய்த்தொற்று சிறைக்குள் பரவும்போது கைதிகளும் சிறைச்சாலை ஊழியர்களும் பாதிக்கப்படுவதைத் தவிர்க்க இயலாது.

  • தமிழகத்திலும் பிரச்னை இல்லாமல் இல்லை. ஏறத்தாழ 150-க்கும் அதிகமான கைதிகளும் சுமார் 100 சிறைச்சாலை ஊழியர்களும் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.

  • பாதிப்பு ஏற்படத் தொடங்கியதும் தமிழகத்திலுள்ள 9 மத்திய சிறைச்சாலைகளிலும் உடனடியாக அனைத்துக் கைதிகளுக்கும் சோதனை தொடங்கியது.

  • கரோனா சோதனைக்குப் பிறகுதான் கைதிகள் சிறைச்சாலைக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள். அதுவரை அவர்களைத் தனிமையில் வைத்துவிடுகிறார்கள். ஆனாலும்கூட, நோய்த்தொற்றுப் பரவல் முழுமையாக கட்டுக்குள் வந்துவிட்டதாகச் சொல்ல முடியாது.

  • ஒடிஸாவில், சிறைச்சாலையில் இருக்கும் நெரிசலைக் குறைக்கும் முயற்சி நடந்து வருகிறது. 17,812 கைதிகளில் 1,162 கைதிகள் நெரிசல் இல்லாத சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டிருக்கிறார்கள். பிகாரில் கைதிகளும் சிறைச்சாலை அதிகாரிகளும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது மட்டுமல்ல, ஐந்துக்கும் அதிகமானோர் கொவைட் 19 நோய்த்தொற்றால் உயிரிழந்திருக்கிறார்கள். சத்தீஸ்கர், உத்தரகண்ட், மேற்கு வங்கம் உள்ளிட்ட பல மாநிலங்களில் சிறைச்சாலைக்குள் நோய்த்தொற்று பாதிப்பு நுழைந்திருக்கிறது.

  • நோய்த்தொற்றுப் பரவல் தொடங்கியபோதே உச்சநீதிமன்றம் சிறைச்சாலைகளில் காணப்படும் நெரிசலைக் குறைப்பதற்கு உத்தரவிட்டது. அனுமதிக்கப்பட்ட அளவைவிடக் கூடுதலான அளவில் இருக்கும் கைதிகள் வேறு இடத்திற்கு மாற்றப்பட வேண்டும் என்று வழிகாட்டுதல் வழங்கியது. ஏழு ஆண்டுகள் வரையில் தண்டனை பெற்ற கைதிகளை பரோலில் விடவும் உத்தரவிட்டது.

  • அதேபோல, அதிகபட்சம் ஏழு ஆண்டுகள்வரை தண்டனை பெறும் குற்றங்களுக்கான விசாரணைக் கைதிகள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

  • உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, ஆயிரக்கணக்கான கைதிகள் பல்வேறு மாநிலங்களில் பரோலில் அல்லது பிணையில் அல்லது சொந்தப் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

  • அப்படியிருந்தும்கூட, பெரிய அளவில் சிறைச்சாலைகளில் நெரிசல் குறைந்துவிட்டது என கூறிவிட முடியவில்லை. மகாராஷ்டிரத்தில் 10,000 பேர், அஸ்ஸாமில் 1,767 விசாரணைக் கைதிகள், உத்தரப் பிரதேசத்தில் 18,000 கைதிகள், சத்தீஸ்கர் சிறைச்சாலைகளிலிருந்து 6,000 கைதிகள் நோய்த்தொற்றுப் பரவல் காரணமாக பரோல் அல்லது பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

  • மேற்கு வங்கத்தில் நிலைமை மிகவும் மோசமாகக் காணப்படுகிறது. மொத்தம் 27,000 கைதிகளில் 12,000 கைதிகளை படிப்படியாக சிறைச்சாலையிலிருந்து அனுப்பியிருக்கிறார்கள். அடுத்த இரண்டு மாதங்களில் மேலும் 3,000 கைதிகளை பரோலில் அனுப்ப இருக்கிறார்கள். 9,000-க்கும் அதிகமான விசாரணைக் கைதிகளின் முறையீடுகளை எதிர்ப்பதில்லை என்று மேற்கு வங்க அரசு முடிவெடுத்திருக்கிறது.

காத்திருக்கும் பூகம்பங்கள்

  • சிறைச்சாலைகளில் தனிமனித இடைவெளியைக் கடைபிடிப்பது மிகவும் கடினம். போதுமான கழிப்பறை வசதிகள் இல்லாத நிலையில், இந்தியா முழுவதும் சிறைச்சாலைகள் ஏற்கெனவே நோய்த்தொற்றுகளின் மையமாகக் காட்சியளிக்கின்றன. சிறைச்சாலையில் இருக்கும் 70%-க்கும் அதிகமான கைதிகளும் கைதி

  • களின் குழந்தைகளும் மோசமான சூழலில் இருப்பதால் நோய்த்தொற்றுப் பரவல் அதிகரித்தால் கட்டுப்படுத்துவது மிகவும் கடினம்.

  • சிறைச்சாலைகளில் நோய்த்தொற்று பரவுகிறது என்பதை நாம் அசிரத்தையாக எடுத்துக்கொள்ளக் கூடாது. அவை வெடிக்கக் காத்திருக்கும் பூகம்பங்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.


 

நன்றி: தினமணி (03-08-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்