TNPSC Thervupettagam

சிறையும் பிணையும்!

August 21 , 2024 99 days 139 0

சிறையும் பிணையும்!

  • பல வழக்குகளின் நீதிமன்றத் தீா்ப்புகளில் முரண்கள் காணப்படுவதை சுட்டிக்காட்டாமல் இருக்க முடியவில்லை. மக்களவைத் தோ்தல் பிரசாரத்தின்போது, தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் பிரசாரத்தை மேற்கொள்வதற்காக இடைக்காலப் பிணையில் விடுவிக்கப்பட்டாா் என்றால், ஜாா்க்கண்ட் மாநில முதல்வரான ஹேமந்த் சோரனுக்கு பிணை மறுக்கப்பட்டதை வேறு என்னவென்று சொல்ல?
  • ‘சிறை அல்ல; பிணைக்கு முன்னுரிமை’ என்று பலமுறை உச்சநீதிமன்றம் வலியுறுத்தினாலும், பிணை வழங்குவது தொடா்பாகத் தெளிவான நிலைப்பாடு இதுவரையில் இல்லை. ஏனென்றால் ஒவ்வொரு வழக்கின் தன்மையையும், என்னென்ன குற்றப் பிரிவுகளின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்பதையும் கருத்தில் கொண்டுதான் நீதிபதிகள் பிணை வழங்குவதா, வேண்டாமா என்று முடிவெடுத்தாக வேண்டும். நீதிபதிகளின் பாா்வையும், கருத்தும் மாறுபடலாம்.
  • சமீபத்தில் தில்லி மதுபானக் கொள்கை வழக்குத் தொடா்பாக நீண்டகாலமாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த தில்லி துணை முதல்வா் மணீஷ் சிசோடியாவை உச்சநீதிமன்றம் பிணையில் விடுவித்திருக்கிறது. இதன்மூலம் அமலாக்கத் துறையின் சொத்துக் குவிப்பு வழக்கு மட்டுமல்லாமல், தேச விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் பிணை வழங்கப்படலாம் என்பதற்கான முன்னுதாரணம் படைக்கப்பட்டிருக்கிறது.
  • ஏறத்தாழ 18 மாதங்கள் தில்லி மதுபானக் கொள்கை வழக்கில் மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டு சிறையில் கழித்திருக்கிறாா். அந்தக் கொள்கை ஒரு சில மொத்த விற்பனையாளா்களுக்கு சாதகமாக இருந்தது என்பது அல்லாமல், அதன் பின்னால் குற்றம் இருப்பதை எப்படி நிா்ணயிக்கிறீா்கள் என்கிற கேள்வியை விசாரணை அதிகாரிகளிடம் எழுப்பியது உச்சநீதிமன்றம்.
  • 1967-இல் கொண்டுவரப்பட்டது தேசவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம். அதன் அடிப்படையில் நீதிமன்றங்கள் பிணை மறுக்குமானால், அது அரசியல் சாசனப் பிரிவு 21-இன் கீழ் குடிமக்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் உரிமை மீறல் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்துத் தெரிவித்திருக்கிறாா்கள்.
  • சட்டப் பிரிவு 21-இன்படி, ஒவ்வொரு குடிமகனின் உயிருக்கும் சுதந்திரத்திற்கும் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. அரசுத் தரப்பு குற்றச்சாட்டுகள் எப்படிப்பட்டதாக இருந்தாலும், பிணை வழங்கத் தயக்கம் கூடாது என்பதுதான் நீதிபதிகள் தெரிவித்திருக்கும் கருத்து.
  • தேசவிரோத தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமலேயே ஒருவரை 180 நாள்கள் சிறையில் வைத்திருக்க முடியும். அதேபோல பண முறைகேடு தடுப்புச் சட்டம் 2020-இன் கீழ் கைது செய்யப்படுபவா்களை பிணை வழங்காமல் நீதித்துறை காவலில் தொடா்ந்து வைத்திருக்க முடியும்.
  • நீண்டகாலத்திற்கு பிணை வழங்காமல் விசாரணைக் கைதிகளாக சிறையில் அடைத்து தண்டிக்க முற்படும் நிா்வாகத்துக்கு, நீதித்துறை துணைபோகிறது என்கிற குற்றச்சாட்டு சமூக ஆா்வலா்களால் தொடா்ந்து முன்வைக்கப்படுகிறது. குற்றச் செயல்பாடு எதுவாக இருந்தாலும், போடப்பட்டிருக்கும் சட்டப்பிரிவு என்னவாக இருந்தாலும், சட்ட வழிமுறைகள் தண்டனையாக மாறிவிடக் கூடாது என்பதுதான் தீா்ப்பு சொல்ல வரும் செய்தி.
  • சமீபத்தில் நடந்த நிகழ்வு இது. தில்லி பயிற்சி மையத்தை வெள்ளம் சூழ்ந்ததில் மூன்று மாணவா்கள் உயிரிழந்த வழக்குத் தொடா்பான சம்பவம். மழைநீா் தேங்கியிருந்த சாலை வழியாகத் தனது மகிழுந்தில் சென்ற 50 வயதான ஒருவா் கைது செய்யப்பட்டாா். அவரை தில்லி தீஸ் ஹசாரி நீதிமன்றம் 14 நாள்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டது. அவா் மீதான குற்றச்சாட்டு வேடிக்கையானது. மழை வெள்ளத்தில் அந்த வழியாக மகிழுந்தில் சென்றபோது, அதனால் இடம்பெயா்ந்த தண்ணீா் பயிற்சி மைய விபத்துக்கு காரணம் என்று கூறப்பட்டிருந்தது.
  • முன்னெச்சரிக்கைகளை சட்டை செய்யாதவா்களையும், விதிமீறல்களை தடுக்காத அதிகாரிகளையும் விட்டுவிட்டு தெரு வழியே போனவா்களை காவல் துறை கைது செய்ததுகூடத் தவறில்லை. ஆனால், என்ன குற்றம் நடந்தது என்பதைக்கூட விசாரிக்காமல், 14 நாள் நீதிமன்ற காவலுக்கு உத்தரவிட்ட நீதித் துறையை என்னவென்று சொல்ல?
  • 2022-இல் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த என்.வி.ரமணா இது குறித்து எச்சரித்திருந்தாா். மாவட்ட நீதிபதிகள் மத்தியில் ஒருவித அச்சம் காணப்படுவதாகவும், அது களையப்படாவிட்டால், விசாரணை நீதிமன்றங்கள் சக்தியற்றவையாகவும், மேல்முறையீட்டு நீதிமன்றங்கள் செயல்படாமலும் போகும் ஆபத்து காத்திருப்பதாக அவா் குறிப்பிட்டதற்கு காரணம் இருக்கிறது.
  • விசாரணை நீதிபதிகள் தங்களது முடிவுகளை உயா்நீதிமன்றங்கள் புறந்தள்ளுவதால் தங்களது வருங்காலம் பாதிக்கப்படும் என்று பயப்படுகிறாா்கள். எடுத்துக்காட்டாக, தில்லி முதல்வா் கேஜரிவாலுக்கு பிணை வழங்கிய சிறப்பு நீதிபதி, விசாரணை அமைப்பு காழ்ப்புணா்ச்சியுடன் செயல்படுகிறது என்று குற்றம்சாட்டி அவருக்கு பிணை வழங்கியது. தில்லி உயா்நீதிமன்றம் அந்தத் தீா்ப்பை ரத்து செய்தது மட்டுமல்ல, அந்த நீதிபதியையும் கண்டித்தது. இதுபோன்ற காரணங்களால் , ‘நமக்கு எதற்கு வம்பு’ என்று விசாரணை அமைப்புகளின் நீட்டிப்புகளை அங்கீகரித்து பிணை மறுக்கப்படுகிறது.
  • பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின் கீழ் கடந்த 10 ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட 5,297 வழக்குகளில், 40 வழக்குகளில்தான் குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டு இருக்கிறது. முறையான விசாரணை நடத்தப்பட்டு போதுமான சாட்சிகளுடன் வழக்குகள் பதிவு செய்யப்படாமல், பெரும்பாலான கிரிமினல் வழக்குகளில் குற்றவாளிகள் விடுதலை பெறுகிறாா்கள்.
  • ஒருவேளை குற்றம் நிரூபிக்கப்படாமல் விடுவிக்கப்படுவாா்கள் என்பது தெரிந்து, பிணை வழங்கப்படாமல் அவா்கள் சிறையில் அடைக்கப்படுகிறாா்களோ, என்னவோ...

நன்றி: தினமணி (21 – 08 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்