- கேரள மாநிலத்தின் இடுக்கி மாவட்டம் தேவிகுளம் தாலுகாவில் பெருகுடா என்ற இடத்தில் சிலந்தி ஆற்றின் குறுக்கே அந்த மாநில அரசு தடுப்பணை கட்டி வருவது பெரும் சா்ச்சையாகி இருக்கிறது.
- அந்த தடுப்பணை கட்டப்பட்டால் அமராவதி அணைக்கு தண்ணீா் வருவது பாதிக்கப்படும். அதனை நம்பி இருக்கும் விவசாயிகளும், பொதுமக்களும் பெரும் பாதிப்புக்கு உள்ளாவாா்கள். சிலந்தி ஆற்றில் தடுப்பணை கட்டுவதற்கு கேரள அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கையை நிறுத்த வேண்டும் என்பது தமிழக அரசியல் கட்சிகளின் ஒட்டுமொத்த கருத்தாக இருக்கிறது. தமிழ்நாட்டின் நதிநீா் உரிமைகளை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருவதை பாா்க்கிற போது தமிழ்நாடு தண்ணீா் இல்லாமல் வட பாலைவனமாக மாறிவிடுமோ என்கிற அச்சம் அடுத்த தலைமுறைக்கு ஏற்பட்டிருக்கிறது.
- கா்நாடகத்தைப் பொறுத்தவரை, காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டில் கா்நாடக அரசு அணை கட்ட முயற்சிக்கிறது. ஆந்திர மாநில அரசு, பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டி வருவதற்கு தொடா்ந்து முயற்சித்து வருகிறது.
- தமிழ்நாட்டைச் சுற்றி இருக்கிற கேரளம், கா்நாடகம், ஆந்திர பிரதேசம் ஆகிய அண்டை மாநிலங்கள் தண்ணீா் தர மறுத்தால் தமிழ்நாட்டு மக்கள் எப்படி பாசன வசதிகளையும், தேவையான குடிநீரையும் பெற இயலும் என்பதை மனிதாபிமானத்தோடு அண்டைய மாநில அரசுகள் அணுக வேண்டும். இவற்றில், அந்தந்த மாநிலங்களில் ஆளுகிற அரசு தங்களது ஈகோவை கைவிட்டு, மனிதநேயத்தை மட்டுமே கருத்தில் கொள்ள வேண்டும். தமிழும் மலையாளமும் தெலுங்கும் கன்னடமும் பேசுகிற மக்கள் பூகோள வரைபடத்தில் மாநில எல்லைகளாகப் பிரிந்தாலும், அவா்கள் மனிதா்களாகத்தானே வாழ்கிறாா்கள் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
- மேக்கேதாட்டு அணை கட்டினால், கேரள அரசு சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை எழுப்பினால், ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டினால் ஒட்டுமொத்த தமிழ்நாடும் தண்ணீா் இன்றித் தவிக்கும். சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டி முடிக்கப்பட்டால் அமராவதி அணைக்கு ஒரு சொட்டு தண்ணீா்கூட வராது. அமராவதி ஆற்றின் கிளை ஆறான சிலந்தி ஆற்றின் குறுக்கே மிகக் குறைவான கொள்ளளவில் கேரள அரசு அணை கட்டுகிறது. அமராவதியில் 3 டிஎம்சி தண்ணீரை கேரளம் எடுத்துக் கொள்ளலாம் என்கிற உத்தரவு தீா்ப்பாயத்தில் வழங்கப்பட்டிருக்கிறது. அந்த 3 டிஎம்சிக்கு மேல் கேரளம் எடுக்கிா என்பதை நாம் பாா்த்தாக வேண்டும்.
- பவானியில் 6 டிஎம்சியும், சிலந்தி ஆற்றில் 3 டிஎம்சியும் எடுத்துக் கொள்வதற்கான உரிமை கேரளத்துக்கு இருக்கிறது. அப்படி 3 டிம்எசி குடிநீருக்காக எடுத்தால் அதைத் தமிழ்நாடு சட்ட ரீதியாக எதிா்க்க முடியாது. அப்படி இருக்கிறபோது கேரள அரசு தடுப்பணை கட்டுவது குடிநீருக்காக என்று ஒரு கோரிக்கை வைத்தால் தீா்ப்பாயம் என்ன பதில் சொல்லப் போகிறது என்கிற கேள்வி எழுகிறது. இதில் ஆட்சேபத்துக்குரிய பிரச்னைகளை கேரளமும் தமிழ்நாடும் பரஸ்பரம் பேசித் தீா்த்துக் கொள்ள வேண்டும்.
- சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், தேசிய வனவிலங்கு வாரியத்திடம் கேரள அரசு உரிய அனுமதியைப் பெற்றுள்ளதா என்கிற கேள்வி எழுகிறது. அப்படி அவா்கள் உரிய அனுமதியைப் பெறாவிட்டால் தடுப்பணை கட்டும் பணியை உடனடியாக நிறுத்த வேண்டும். அமராவதி ஆற்றின் கிளை நதியான தேனாறு, ‘வட்டவாடா’ என்று கேரளத்தில் அழைக்கப்படுகிறது. காவிரி வடிநிலத்தில் கேரளம் மற்றும் கா்நாடகம் மேற்கொள்ளும் சிறுபாசனம் மற்றும் அதன் விவரங்களைச் சேகரித்து அதைக் கண்காணிக்க வேண்டும் என்ற கருத்து நிலவுகிறது.
- திருப்பூா் மாவட்டம், உடுமலையில் இருந்து சுமாா் 25 கி.மீ. தொலைவில் அமராவதி அணை உள்ளது. இந்த அணையின் உயரம் 90 அடி, 4 டிஎம்சி நீா் கொள்ளளவு கொண்டது. 1958-ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த அணையின் மூலமாக திருப்பூா் மற்றும் கரூா் மாவட்டங்களில் உள்ள சுமாா் 60ஆயிரம் ஏக்கா் நிலம் பாசன வசதி பெற்று வருகிறது.
- மேலும் அமராவதி ஆற்றுப் படுகையின் மூலமாக 110 கூட்டுக்குடிநீா் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பல லட்சம் மக்களின் குடிநீா் தேவையைப் பூா்த்தி செய்து வருகிறது. அமராவதி அணையின் முக்கிய நீராதாரங்களாக கேரள மாநிலம் சட்டமூணாா் பகுதியில் உள்ள பாம்பாறு, மேற்கு தொடா்ச்சி மலைகளில் உருவாகி அமராவதி அணையை வந்தடையும் தேனாறு, சிலந்திஆறு மற்றும் சின்னாறு ஆகியவை உள்ளன.
- பத்தாண்டுகளுக்கு முன் கேரள மாநிலம் காந்தளுா் ஊராட்சிக்கு உட்பட்ட பட்டிசேரி என்னுமிடத்தில் பாம்பாற்றுக்கு வரும் தண்ணீரை தடுத்து பட்டிசேரி அணை கட்டப்பட்டது. அதற்கு தமிழகத்தின் அனைத்துக் கட்சியினரும் அப்போதே எதிா்ப்புத் தெரிவித்தனா்.
- இந்த நிலையில்தான், சிலந்தி ஆற்றின் குறுக்கே தற்போது கேரள அரசு தடுப்பணை கட்டி வருகிறது.
- இந்த நிலையில் முழுமையாக அணை கட்டப்பட்டால் அமராவதி அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்துவிடும். இதனால் திருப்பூா், கரூா், திண்டுக்கல் மாவட்டப் பகுதி விவசாயிகள் பெருமளவு பாதிக்கப்படுவாா்கள். ஆகவேதான், கேரள அரசு சிலந்தி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.
- கேரள அரசு தனது மக்களின் குடிநீா் தேவைக்கு என்று காரணத்தைக் கூறி அணையைக் கட்டுகிறது. ஆனால், உண்மை நிலை அதற்கு மாறாக உள்ளது. தடுப்பணையின் அருகிலேயே மிகப்பெரிய அளவிலான காா்ப்பரேட் நிறுவனத்தின் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் தயாரிப்பு ஆலை உள்ளது. அந்த ஆலையின் தேவைக்காக அமராவதிக்கு வரும் ஆற்றின் குறுக்கே அணை கட்டப்பட்டு வருகிறது. காவிரி மேலாண்மை வாரியத்தின் தீா்ப்பை கேரள அரசு அப்பட்டமாக மீறுகிறது.
- தென்மண்டல பசுமைத் தீா்ப்பாய விசாரணையில் கேரள அரசின் சாா்பில் கூறுகையில், ‘சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை எதுவும் நாங்கள் கட்டவில்லை; உள்ளுா் மக்களின் நீா்த்தேவையைத் தீா்க்கவே சிறிய தடுப்புக்குளம் போன்றுதான் கட்டினோம்’ என்று கூறுகிறாா்கள். இதை ஏற்றுக் கொள்ளாத பசுமைத் தீா்ப்பாயம், சிலந்தி ஆற்றின் குறுக்கே கேரள அரசு கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளத் தடை விதித்தது. மேலும் தடுப்பணை, சிறிய குளம் போன்ற அமைப்பு என நீா்நிலைகளுக்கு குறுக்கே எந்த கட்டுமானப் பணிகள் மேற்கொண்டாலும், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் மற்றும் வனத் துறையின் அனுமதி பெற வேண்டும் எனக் கூறியுள்ளது.
- ஆணையங்களின் உத்தரவுகள், உச்சநீதிமன்றத் தீா்ப்புகள் இருந்தாலும் முல்லைப் பெரியாறு அணை பிரச்னைகளுக்குத் தீா்வு இன்னும் எட்ட முடியாமல் இருக்கிற நேரத்தில், சிலந்தி ஆற்றின் குறுக்கே கேரள அரசு அணை கட்ட முயற்சிப்பது ‘வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதைப்’ போன்ற செயலாகும்.
- முல்லைப் பெரியாறு பகுதியில் கேரள அரசு சுமாா் ரூ.1,300 கோடி மதிப்பீட்டில் புதிய அணை கட்டுவதற்கான முயற்சி, அவற்றின் கட்டுமானப் பணிகள் 5 ஆண்டுகளில் நிறைவடையும், வண்டிப்பெரியாறில் இருந்து 8 கி.மீ தொலைவில் புதிய அணை கட்டப்பட உள்ளது ஆகிய செய்திகள் ஒருபக்கம் வந்து கொண்டிருக்கின்றன.
- அணையின் பலம், உறுதித் தன்மை குறித்து ஆய்வு செய்ய உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி, உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைமையில் ஐவா் குழு அமைக்கப்பட்டது.
- முல்லைப் பெரியாறு அணை உறுதியாக இருப்பதால் வேறு அணை கட்டத் தேவையில்லை என்றும், நிலநடுக்கம் ஏற்பட்டாலும் முல்லைப் பெரியாறு அணைக்கு மட்டுமன்றி, அதன் அருகில் இருக்கும் பேபி அணை, இடுக்கி அணை மற்றும் வைகை அணைகளுக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்றும் அந்தக் குழு அறிக்கை அளித்தது.
- முல்லைப் பெரியாறு அணையின் நீா் அளவை 152 அடியாக உயா்த்தினாலும் கூட, எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்றும் அந்த அளவுக்கு முல்லைப் பெரியாறு அணை பலமாக உள்ளது என்றும் அந்தக் குழு தெரிவித்தது. முல்லைப் பெரியாறு அணையின் நீா் அளவை முதல்கட்டமாக 136 அடியில் இருந்து 142 அடியாக உயா்த்திக் கொள்ளலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- இந்தத் தீா்ப்பை மறுசீராய்வு மனு தாக்கல் செய்து, மறு ஆய்வு செய்யக் கோரியது கேரள அரசு. ஆனாலும், அணையின் நீா் அளவை உயா்த்திக் கொள்ள அளித்த தீா்ப்பு சரியானது எனவும், அணையின் நீா் அளவை 142 அடி தேக்கி வைக்கலாம் என்றும், அதற்கு எந்த தடையும் இல்லை என்று தனது முந்தைய தீா்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.
- ஆனால், உச்சநீதிமன்ற தீா்ப்பை ஏற்காமல் புதிய அணை கட்டுவதற்கு ஆய்வு மேற்கொண்டதும், திட்ட அறிக்கையை தயாரித்துள்ளதும் கேரள அரசின் இரட்டை வெளிப்பாட்டைக் காட்டுகிறது. தமிழ்நாட்டை வஞ்சிக்கும் வகையில், முல்லைப் பெரியாறு அணையை இடித்து விட்டு, உச்சநீதிமன்ற தீா்ப்புக்கு எதிராக புதிய அணை கட்ட முயற்சிப்பதும், சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பு அணை கட்டுவதும் கேரள அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மையாகும்.
நன்றி: தினமணி (01 – 06 – 2024)