சிவனைக் கேள்வி கேட்ட பெண்
- எழுத்தாளர் ம.இராசேந்திரன் எழுதியுள்ள ‘மகாமகம்’ என்ற கதை தொன்ம மதிப்பீட்டை மறுவாசிப்புக்கு உள்ளாக்கும் சிறந்த கதை. இக்கதையில், அவர் உருவாக்கியிருக்கும் ‘இறைச்சிப் பொருள்’ தொண்ணூறுகளில் நிகழ்ந்த ஒரு பெருந்துயர வரலாற்றுடன் தன்னை இணைத்துக்கொள்கிறது. சோழ நாட்டில் உள்ள திருச்செங்கட்டாங்குடியில் பிறந்தவர் பரஞ்சோதியார். இவர் பல்லவ மன்னனான முதலாம் நரசிம்மவர்மனிடம் படைத் தளபதியாகப் பணியாற்றியவர். அவனது வாதாபிப் போரில் பெரும் பங்காற்றியவர்.
- சிறந்த சிவத் தொண்டர். தம்மைச் சிறியவராகக் கருதிக்கொண்டு அடியவர்களுக்குத் தொண்டுசெய்வதால் ‘சிறுதொண்டர்’ என்று அனைவரும் இவரை அழைத்தனர். சிவபெருமான் சிவனடியார் வேடத்தில் சிறுதொண்டரின் பக்தியைச் சோதிக்க நினைக்கிறார். அடியவர் உருவத்தில் வந்த சிவபெருமான், ஐந்து வயதிற்கு உள்பட்ட பிள்ளையையே உணவாகக் கேட்கிறார். அத்தம்பதியினர் அதற்குச் சம்மதிக்கின்றனர் என்பது புராணக் கதை.
- இந்தப் புராணக் கதையைத்தான் இராசேந்திரன் மீள் வாசிப்புக்கு உட்படுத்தியிருக்கிறார். இக்கதையில் வரும் பரஞ்சோதியார் சேக்கிழாரின் பரஞ்சோதியாராகவே வருகிறார். அவருடைய மனைவி நங்கைதான் யதார்த்தத்தை உள்வாங்கிக் கொண்டவராகவும் சிவனடியாரோடு உரையாடலை நிகழ்த்துபவராகவும் வருகிறார். பிள்ளைக்கறி கேட்ட அடியாரிடம், “நரபலியா சுவாமி?” என்று கேட்கிறார். “ஆம் மகளே!” என்கிறார் அடியார். சிவனடியாரிடமிருந்து தன் மகனைப் பிடுங்கிக்கொள்கிறார் நங்கை. “நீ சிவனடியாரே இல்லை... கொலைகாரன்!” என்கிறார் நங்கை. நங்கையின் செயலைக் கண்டு பரஞ்சோதியின் கண்கள் சிவக்கின்றன. அடியாரிடம் மரியாதையாக நடந்துகொள்ளச் சொல்கிறார். “இவரு சிவனடியாரே இல்லீங்க... இவரை நம்பாதீங்க. இன்னைக்குக் குழந்தையைக் கேப்பாங்க... நாளைக்கு என்னையே கேப்பாங்க...” என்கிறார். “அப்படிக் கேட்டால்தான் என்ன தவறு மகளே?” என்கிறார் அடியார். அடியார் நங்கையை “மகளே!” என்பதையும் இங்கு கவனிக்க வேண்டும்.
- ம.இராசேந்திரன் சிறுதொண்டர் புராணத்தை மீள் வாசிப்பு செய்திருக்கிறார். “அப்படிக் கேட்டால்தான் என்ன தவறு?” என்று சொல்லும் அடியாரிடம், “டேய்! மரியாதையாக வெளியே போடா... இனுமே நின்னே மரியாதை கெட்டுப் போவும்” என்கிறார் நங்கை. பிள்ளைக்கறி கேட்டு அடம்பிடிக்கும் சிவனடியார், சிறுதொண்டரின் குடும்பத்தையே பிரித்துவிடுகிறார். எனக்கென்னவோ சேக்கிழார்தான் பெரும் புனைகதைக்காரராகத் தெரிகிறார். அந்தப் புனைவின்மீது பெரும் உடைப்பை ஏற்படுத்தியிருக்கிறார் ம.இராசேந்திரன்.
- யதார்த்தத்தில் நங்கை நடந்துகொண்டதுதான் சரி. தன் குழந்தையையே கொல்லும்போது அந்தப் பெண்ணின் மனம் எப்படித் துடித்துப்போகும் என்பதைப் பெரியபுராணம் பகிர்ந்துகொள்ளவில்லை. பக்தி என்கிற ஒற்றைப் போர்வையில் அந்த உணர்வுகளை மூடிவிட்டனர் என்றே தோன்றுகிறது. நவீன இலக்கியங்கள்தாம் அந்தப் பழம்போர்வையை விலக்கிப் பார்க்கின்றன. அப்படியொரு கதைதான் ‘மகாமகம்’.
- ‘மகாமகம்’ என்கிற சொல் ஒரு குறியீடு. இதற்குப் பின்னால் மறைந்திருப்பது பன்னிரண்டு ஆண்டு கால மூடநம்பிக்கை. நங்கைதான் நிதானமானவர். அதனால், நங்கை இருக்கும்வரை அடியாருக்குப் பிள்ளைக்கறி கிடைக்காது. அதனால், நங்கையை மகாமகத்துக்கு அழைத்து வருகிறேன் என்று சிறுதொண்டர் கூறுவதாகப் புனைவை முடிக்கிறார் ம.இராசேந்திரன். பக்தியின் அதிதீவிரம் என்பது ஒரு புனைவு; நாடகீயத்தன்மை வாய்ந்தது. அந்த நாடகத்தின் முடிவைத்தான் இக்கதை பேசுகிறது.
நன்றி: இந்து தமிழ் திசை (27 – 10 – 2024)