TNPSC Thervupettagam

சீன - அமெரிக்க வர்த்தகப் போரும் இந்தியாவும்

August 27 , 2019 1958 days 974 0
  • அமெரிக்க - சீன வர்த்தகம் கடந்த ஓராண்டுக்கும் மேலாகப் பெரும் அழுத்தத்துக்குள்ளாகியிருக்கிறது. வல்லுநர்கள் இரண்டு நாடுகளுக்கிடையில் ஒரு போரே நிகழ்வதாகச் சொல்கிறார்கள். இந்தச் சூழலில்தான் கடந்த ஜூன் இறுதியில், உலகின் 20 பெரிய பொருளாதார நாடுகளின் கூட்டமைப்பான ‘ஜி-20’ மாநாட்டில் அமெரிக்க - சீன அதிபர்கள் சந்தித்தனர். பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்தேறியது. ஆனால், இந்தத் தற்கால இணக்கம் விரைவில் முறிந்தது.
  • இரண்டு நாடுகளுக்கு இடையேயான வணிகப் பிணக்கு ஏன் ஒரு போர் என்று வர்ணிக்கப்பட வேண்டும்? அது ஏன் உலக நாடுகள் பலவற்றையும் பாதிக்க வேண்டும்? மேலும், இந்தியாவுக்கு இந்த வர்த்தகப் போர் சார்ந்து வேறு ஒரு பாடம் கிடைத்திருக்கிறது. அது என்ன?
சீனா மீதான ட்ரம்பின் புகார்
  • டொனால்ட் ட்ரம்ப் 2016-ல் தனது பரப்புரையின்போதே சீனாவின் வணிகக் கொள்கைகளைக் கடுமையாகச் சாடினார். 2017-ல் சீனா அறிவுசார் சொத்துரிமையை மதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டின்பேரில், ஒரு விசாரணை ஆணையத்தை அமைத்தார். ‘சீன நிறுவனங்கள், அமெரிக்காவின் புகழ்பெற்ற வணிக நிறுவனங்களின் தயாரிப்புகளைப் போலி செய்கின்றன, உரிமம் இன்றி அமெரிக்க மென்பொருட்களைப் பயன்படுத்துகின்றன, வணிக ரகசியங்களைக் கையாடுகின்றன’ போன்ற குற்றச்சாட்டுகளை ஆணையம் முன்வைத்தது. மேலும், சீனா கணிசமான பொருட்களை குறைந்த விலையில் அமெரிக்கச் சந்தையில் விற்கிறது. இதனால், அமெரிக்காவின் உள்நாட்டு உற்பத்தி பாதிக்கப்படுவதாகவும் கருதினார் ட்ரம்ப்.
  • அமெரிக்காவுக்கு சீனா ஏற்றுமதிசெய்யும் பொருட்களின் மதிப்பு சுமார் 55,000 கோடி டாலர் (ரூ.39 லட்சம் கோடி). 2018-ல் மட்டும் இதில் 25,000 கோடி டாலர் பொருட்களுக்கு 25% வரை கூடுதல் தீர்வைகள் விதித்தார் ட்ரம்ப். கூடுதல் வரிகள் விதிக்கப்பட்டால் சீனப் பொருட்களின் விலையும், அதனால் உள்ளூர் பொருட்களின் விற்பனையும் அதிகரிக்கும் என்று கருதினார் ட்ரம்ப். ஆனால், அப்படி நடக்கவில்லை. நான்கு விளைவுகள் ஏற்பட்டன.
  • முதலாவதாக, சீனாவில் உற்பத்திசெய்பவை சீன நிறுவனங்கள் மட்டுமல்ல. பல வெளிநாட்டு நிறுவனங்களும் சீனாவின் அபரி
    மிதமான மனித வளத்தாலும், கட்டுப்பாடான உற்பத்தியாலும், குறைந்த செலவினங்களாலும் கவரப்பட்டு, கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சீனாவில் உற்பத்தியில் ஈடுபட்டுவருகின்றன. சீனா உலகின் தொழிற்சாலையாக விளங்குகிறது. அமெரிக்க அதிபரின் நடவடிக்கையால், சீனாவிலுள்ள இப்படியான சில நிறுவனங்கள், தங்களது தொழிற்சாலைகளை இடம் மாற்றின. இதனால் வியட்நாம், தைவான், மலேசியா, அர்ஜென்டினா, வங்காளதேசம் ஆகிய நாடுகள் பயன்பெற்றன. ஆனால், இந்த நாடுகளின் பரப்பும் மனித வளமும் பொருளாதாரமும் சிறியவை. உள்கட்டமைப்பு பலவீனமானது. தொழிலாளர்கள் திறன் குறைந்தவர்கள். ஆகவே, இவற்றால் சீனாவின் உற்பத்தியை ஈடுசெய்ய முடியாது.
  • இரண்டாவதாக, உலகின் இரண்டு பெரிய பொருளாதாரங்களுக்கு இடையேயான வணிகத்தில் பல நாடுகள் நேரடியான உற்பத்தியின் வாயிலாகவோ, மூலப்பொருட்கள் அல்லது உதிரி பாகங்கள் அல்லது தொழில்நுட்ப ஆதரவு வழங்குவதன் மூலமாகவோ தொடர்புகொண்டிருந்தன. அவை பாதிக்கப்பட்டன. மூன்றாவது விளைவு, அமெரிக்கத் தொழில்துறையும் பயனர்களும்கூடப் பாதிக்கப்பட்டனர். நான்காவதாக, சீன நாணயத்தின் வீழ்ச்சி, உலகின் பல நாணயங்களின் மதிப்பைப் பதம் பார்த்துவிட்டது. அமெரிக்கா உட்படப் பல நாடுகளின் பங்குச் சந்தை வீழ்ச்சிப் பாதையில் பயணிக்கிறது.
  • கூடுதல் தீர்வைகள் இப்போது விதிக்கப்பட மாட்டாது என்று உறுதிகூறியபடி ட்ரம்ப் நடந்துகொள்ளவில்லை. ஆகஸ்ட் முதல் வாரத்தில், முன்னர் கூடுதல் தீர்வைகள் விதிக்கப்படாத 30,000 கோடி டாலர் மதிப்புள்ள சீன ஏற்றுமதிப் பொருட்களுக்கு 10% தீர்வை விதித்தார். இதற்கு சீனா கொடுத்த பதிலடியை அமெரிக்கா எதிர்பார்க்கவில்லை. சீனாவின் மத்திய வங்கி தனது நாணயத்தின் மதிப்பைக் குறைத்தது. மதிப்புக் குறைந்த யுவான் என்பது சீனப் பொருட்களை மலிவாகக் கிடைக்கச் செய்யும். இது ஏற்றுமதிகளைச் சார்ந்திருக்கும் சீனப் பொருளாதாரத்துக்கு உதவும். ட்ரம்ப் வெகுண்டார். ஆகஸ்ட் 24 அன்று இன்னும் சில ஆயுதங்களை ஏவினார். ஏற்கெனவே 25% தீர்வை விதித்திருந்த 25,000 கோடி டாலர் சீனப் பொருட்களுக்கு 35% தீர்வையும், 10% தீர்வை விதித்திருந்த 30,000 கோடி டாலர் பொருட்களுக்கு 15% தீர்வையும் விதித்தார். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை இந்தப் போர் ஓய்வதற்கான அறிகுறிகள் தென்படவில்லை.
இந்திய-அமெரிக்கப் பேச்சுவார்த்தை
  • சீனாவைப் போலவே இந்தியப் பொருட்கள் மீதும் அமெரிக்கா கூடுதல் தீர்வை விதித்திருந்தது. இந்தியாவும் பதிலுக்கு அமெரிக்கப் பொருட்கள் மீது தீர்வை விதித்தது. ஜி-20 மாநாட்டின்போது அமெரிக்கா, பேச்சுவார்த்தைகளின் மூலம் பிணக்குகளைத் தீர்த்துக்கொள்ளலாம் என்று சொல்லியிருந்ததது. ஆனால், அப்படி நடந்துகொள்ளவில்லை. இந்திய - அமெரிக்க இரு தரப்பு வணிகத்தின் மதிப்பு 87,500 கோடி டாலர் (ரூ.6 லட்சம் கோடி). இது சீன-அமெரிக்க வணிக மதிப்பில் (ரூ.47.6 லட்சம் கோடி) 13%தான். ஆகவே, இந்திய - அமெரிக்க வணிகப் பிரச்சினையானது போர் என்று அழைக்கப்படவில்லை.
  • இந்தியாவும் சீனாவைப் போல் மனித வளம் மிக்க நாடு. சீனாவைக் காட்டிலும் தொழிலாளர் ஊதியம் குறைவான நாடும்கூட. ஆனாலும், சீனாவில் உற்பத்தியான பொருட்களுக்கு அமெரிக்கா கூடுதல் தீர்வை விதித்தபோது, பல நாடுகளின் தொழிற்கூடங்கள் இந்தியாவை நோக்கியல்ல, தென்கிழக்காசிய நாடுகளை நோக்கியே இடம்பெயர்ந்தன. ஏன்? பொருளாதார வல்லுநர்கள் இந்தியாவின் உள்கட்டமைப்பு (சாலை, ரயில், துறைமுகம், நீர், மின்சாரம்) மேம்படுத்தப்பட வேண்டும் என்கின்றனர். இருக்கலாம். நமது மத்திய - மாநில அரசுகளால் இதைச் சாதிக்க முடியும். ஆனால், சமூக ஆர்வலர்கள் சொல்கிற இன்னொரு காரணமும் கவனிக்கத்தக்கது. அவர்கள் கல்வியிலும் ஆரோக்கியத்திலும் இந்தியா முன்னேற வேண்டும் என்கின்றனர்.
  • சீனா 1979-ல் புதிய பொருளாதாரக் கொள்கையை வகுத்தது. அப்போது சீனாவில் படித்தவர்கள் 66% ஆக இருந்தனர். கடந்த 40 ஆண்டுகளில் இது 96% ஆகியிருக்கிறது. இதே காலவெளியில் இந்தியாவும் முன்னேறியிருக்கிறது. அதாவது, 44%-ல் இருந்தது 74% ஆகியிருக்கிறது. ஆனால், படித்த படிப்பு தொழில் கலாச்சாரத்தில் பிரதிபலிப்பதில் பெரும் இடைவெளி இருப்பதாக வணிக நிறுவனங்கள் நினைக்கின்றன.
இந்தியா என்ன செய்ய வேண்டும்?
  • தொழில் பெருகுவதற்கு ஒரு நாடு திட்டமிட்ட முறையில் நகரமயமாக வேண்டும். தொழிலாளர்களுக்குக் கல்வியும் அவர்தம் குடும்பத்தினருக்கு இலவச மருத்துவமும் கிடைக்க வேண்டும். நமது நாடு கல்வியிலும் மருத்துவத்திலும் முன்னேறியிருக்கிறது என்பதில் ஐயமில்லை. ஆனால், இந்த முன்னேற்றம் எல்லாத் தரப்பு மக்களையும் சென்றடைய வேண்டும். இந்த இரண்டு துறைகளும் தனியார்மயமாவது கட்டுப்படுத்தப்பட வேண்டும். பல வளர்ந்த நாடுகளில் அடிப்படைக் கல்வியையும் மருத்துவத்தையும் அரசுகள்தான் வழங்குகின்றன.
  • சீன - அமெரிக்க வணிகப் போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்துவருகிறது. சீனாவின் பொருளாதாரம் அதன் அளப்பரிய உற்பத்தியிலும் அதைச் சந்தைப்படுத்துவதைப் பொறுத்தும் அமைந்திருக்கிறது. இதை சீனா அறியும். அதற்கான உள்கட்டமைப்பு சீனாவிடம் இருக்கிறது; தொழிற்கல்வியும் ஆரோக்கியமும் மிக்க தொழிலாளர் சமூகமும் அதனிடம் இருக்கிறது. நமக்கு முன்னால் எடுத்துக்காட்டுகள் விரிந்து கிடக்கின்றன. நாம் நமக்கான பாடத்தை அதிலிருந்து பெற வேண்டும். அப்போது நமது நாடும் சர்வதேச அரங்கில் புறக்கணிக்க முடியாத பொருளாதார சக்தியாக உருக்கொள்ளும்.

நன்றி: இந்து தமிழ் திசை(27-08-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்