- உலகமே கரோனா தீநுண்மி நோய்த்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் இருக்கும்போது, தென்சீனக் கடலில் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் நீண்டகால நோக்கத்தை நிறைவேற்ற சீனா மூர்க்கத்தனமாக செயல்பட்டு வருவது, வலு குறைந்த அண்டை நாடுகளுக்கு மட்டுமின்றி, அமெரிக்கா, இந்தியாவுக்கும் அதிர்ச்சியான செய்தியாகும்.
- பசிபிக் பெருங்கடலின் ஒரு பகுதிதான் தென்சீனக் கடல். உலகின் கப்பல் போக்குவரத்தில் மூன்றில் ஒரு பங்கு இதன் வழியே நடைபெறுகிறது. அதாவது, ஆண்டுக்கு 3.37 டிரில்லியன் டாலர் (ரூ.253 லட்சம் கோடி) மதிப்புள்ள வர்த்தகப் பொருள்கள் இந்தக் கடல் வழியாக கொண்டு செல்லப்படுகின்றன.
- தனது எண்ணெய் இறக்குமதியில் 80 சதவீதத்தை இந்தக் கடல் வழியாகத்தான் சீனா மேற்கொள்கிறது. இந்தக் கடலுக்கு அடியில் எண்ணெய், இயற்கை எரிவாயு வளம் நிறைந்திருப்பதாகக் கூறப்படுவதால் இப்பகுதி முக்கியத்துவம் பெறுகிறது.
- தென்சீனக் கடல் பகுதி முழுமைக்குமே சீனாவும், தைவானும் உரிமை கோரி வருகின்றன. அதேபோல, இந்தக் கடல் பகுதியில் உள்ள நபர்கள் இல்லாத ஏராளமான தீவுகளுக்கு இந்தோனேசியா, பிலிப்பின்ஸ், வியத்நாம், புருணை, மலேசியா, கம்போடியா, தாய்லாந்து, சிங்கப்பூர் ஆகிய நாடுகளும் சொந்தம் கொண்டாடி வருகின்றன.
- இந்தக் கடல் பகுதியில் ஏராளமான செயற்கைத் தீவுகளை உருவாக்கி, அவற்றில் தனது கடற்படை நிலைகளையும் சீனா அமைத்து வருவதற்கு ஏற்கெனவே அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.
- இருப்பினும், சீனா தனது நடவடிக்கைகளில் பின்வாங்குவதாக இல்லை. இம்முறை தென்சீனக் கடலில் வியத்நாம், பிலிப்பின்ஸ் நாடுகளுக்கு இடையேயுள்ள ஸ்பார்ட்லி, பராசெல் ஆகிய தீவுக்கூட்டங்களைக் குறிவைத்து காய் நகர்த்தத் தொடங்கியுள்ளது. இத்தீவுக் கூட்ட பகுதியில் தான் அமைத்துள்ள செயற்கைத் திட்டுகளில் இரு ஆராய்ச்சி நிலையங்களை சீனா அண்மையில் திறந்தது. மேலும், தென்சீனக் கடல் பகுதியில் இரு மாவட்டங்களை முறையாக நிறுவியதாகவும் அறிவித்தது.
- இதையடுத்து, சீனாவின் அத்துமீறல் குறித்து ஐ.நா.வில் வியத்நாம் புகார் தெரிவித்தது. சீனா அறிவித்துள்ள இரு மாவட்டங்கள் தனது இறையாண்மைக்குட்பட்ட பகுதியில் வருவதாக பிலிப்பின்சும் எதிர்ப்புத் தெரிவித்தது. ஆனால், இதையெல்லாம் சீனா பொருட்படுத்தவில்லை.
- அடுத்த சில நாள்களிலேயே இக்கடல் பகுதியில் வியத்நாமை சேர்ந்த மீன்பிடிப் படகு ஒன்றை சீனாவின் ரோந்துக் கப்பல் மோதி மூழ்கடித்தது. தனது கடல் பகுதியில் அத்துமீறி வியத்நாம் படகு நுழைந்ததாகவும், சீன கப்பல் மீது மோதும் நோக்கத்தில் வந்ததால் அப்படகு மூழ்கடிக்கப்பட்டதாகவும் சீனா காரணம் சொன்னது.
தென்சீனக் கடல்
- அத்துடன் நின்றுவிடாமல் தென்சீனக் கடல் பகுதியில் அமைந்துள்ள 25 தீவுகள், திட்டுகள் மற்றும் கடலுக்கு அடியில் அமைந்துள்ள 55 புவியியல் அமைப்புகளுக்கும் சீன மொழியில் பெயரைச் சூட்டியது பதற்றத்தை அதிகரித்தது. மேலும், கிழக்கு சீனக் கடல் பகுதியையும் விட்டுவைக்கவில்லை சீனா.
- அக்கடல் பகுதியில் செங்காக்கு என ஜப்பான் மொழியிலும், டையாயூ என சீனத்திலும் அழைக்கப்படும் தீவுப் பகுதிக்கு தனது கப்பலை அனுப்பியது சீனா. இதற்கு ஜப்பான் எதிர்ப்பு தெரிவித்தது.
- சீனாவின் நடவடிக்கைக்குப் பதிலடியாக அமெரிக்காவின் தாக்குதல் கப்பல் ஒன்றும், ஏவுகணை தாங்கிய கப்பல் ஒன்றும் தென்சீனக் கடல் பகுதிக்குள் நுழைந்தன. தனக்கு பிராந்திய உரிமை இல்லாதபோதும், தென்சீனக் கடல் ராணுவமயமாவதைத் தடுத்து அமைதியை நிலைநாட்டவும், தனது நட்பு நாடுகளின் பொருளாதார நலனுக்காகவும் கப்பல்களை அனுப்பியதாக அமெரிக்கா தெரிவித்தது.
- தென்சீனக் கடல் பகுதியில் சீனா வலுப்பெற்றுவிட்டால் கிழக்கிந்திய பெருங்கடலில் தனது ராணுவ பலத்தைப் பெருக்க இத்தீவுக் கூட்டங்களில் அமைத்துள்ள தளங்களை சீனா பயன்படுத்தக் கூடும் என்பது இந்தியாவைப் பொருத்தவரை கவலை தரும் விஷயம்.
- தென்சீனக் கடலில் சீனாவின் உரிமை கோரல் அனைத்தையுமே சர்வதேச தீர்ப்பாயம் ஏற்கெனவே நிராகரித்துள்ளது. ஆனால், அத்தீர்ப்பை ஏற்றுக்கொள்ளாத சீனா, சர்ச்சைக்குரிய தீவுகளில் தொடர்ந்து கடற்படை தளங்களை உருவாக்கி வருகிறது. இக்கடல் பகுதியில் கச்சா எண்ணெய், எரிவாயு எடுப்பதற்கான சோதனைகளையும் சீனா பலமுறை நடத்தியிருப்பது அதன் நோக்கத்தை தெளிவுபடுத்துகிறது.
- கரோனா தீநுண்மி நோய்த்தொற்றுக்கு எதிராக உலக நாடுகள் போராடிவரும் சூழ்நிலையைச் சாதகமாகப் பயன்படுத்தி சர்வதேச சட்டத்துக்கு எதிராக தென்சீனக் கடலில் தனது ஆதிக்கத்தை சீனா விரிவுபடுத்தப் பார்ப்பதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது.
- கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி "ஏசியன்' தலைவர்களுடன் காணொலி மூலம் பேசிய அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பேயோ, "சீனாவின் நடவடிக்கைகள் கரோனா தீநுண்மிக்கு எதிரான உலக நாடுகளின் போராட்டத்தை திசைதிருப்புவதாகும்' எனக் கண்டனம் தெரிவித்தார்.
- தென்சீனக் கடல் விவகாரத்தைப் பொருத்தவரையில், இப்பிராந்தியத்துக்கு சம்பந்தம் இல்லாத அமெரிக்காவோ வேறு நாடுகளோ தலையிடுவதை சீனா விரும்பவில்லை என்பது தெளிவு. ஆனால், சர்ச்சை தீவிரமானால் பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மைக்கு கடுமையான பாதிப்பு ஏற்படும் என ஆசிய-பசிபிக் ஆராய்ச்சியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
- கரோனா தீநுண்மி நோய்த்தொற்றால் உலக நாடுகள் துயரத்தில் இருக்கும் வேளையில், தனது அத்துமீறலை நிறுத்திவிட்டு இப்பிரச்னையில் தொடர்புடைய நாடுகளுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துவதுதான் சிறந்த தீர்வாக இருக்கும்.
நன்றி: தி இந்து (30-04-2020)