TNPSC Thervupettagam

சீனாவின் எழுச்சியும் வீழ்ச்சியும்

November 5 , 2020 1537 days 887 0
  • பலம் பொருந்திய ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீனா, பிரான்ஸ், ரஷியா, பிரிட்டன், அமெரிக்கா ஆகிய ஐந்து நாடுகள் நிரந்தர உறுப்பு நாடுகளாக கோலோச்சுகின்றன. ஐ.நா.வில் சீனாவின் செல்வாக்கு அண்மைக் காலமாக மேலோங்கிக் காணப்பட்டது.
  • இந்நிலையில், இந்தியாவின் திடீர் எழுச்சி, சீனாவுக்கு பலத்த அடியாக அமைந்துள்ளது. பெண்களின் நிலை குறித்த ஐ.நா.வின் ஆணையத்தில் சீனாவைப் புறந்தள்ளி, இந்தியா உறுப்பு நாடாக, கடந்த செப்டம்பரில் தேர்வானது.
  • இது கடந்த ஒன்பது ஆண்டுகளில் இல்லாத வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.
  • அந்த அதிர்ச்சியிலிருந்து சீனா மீள்வதற்குள், ஐ.நா. புள்ளியியல் கமிஷன் தேர்தலில் மிகச்சிறிய நாடான சமோவாவிடம் சீனா தோல்வியை சந்திக்க நேர்ந்தது. சி
  • ல நாள்களுக்கு முன்புதான், ஐ.நா.வுக்கான மனித உரிமைக் குழுவுக்கு சீனா போராடி தேர்வானது. அதுவும் தேர்வான நான்கு நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தான் (169 வாக்குகள்), உஸ்பெகிஸ்தான் (164 வாக்குகள்), நேபாளம் (150 வாக்குகள்) ஆகியவற்றுக்கு அடுத்தபடியாகத்தான் சீனாவால் 139 வாக்குகளைப் பெற்று கடைசி இடத்தைப் பெற முடிந்தது.
  • இது தவிர கடந்த மே மாதத்தில் நடந்த உலக அறிவுசார் சொத்து அமைப்பின் நிர்வாக இயக்குநர் தேர்தலில் சிங்கப்பூரை சேர்ந்த தரண்டாங்கிடம் சீனா தோல்வியடைந்தது.
  • இதற்கு முன்பாக கடந்த 2011-இல் ஐ.நா.வின் கூட்டு ஆய்வு யூனியன் தேர்தலில், சீனாவும், இந்தியாவும் நேருக்கு நேர் மோதின. அதில் இந்தியா வெற்றி பெற்றது.
  • பின்னர், தனது நிரந்தர உறுப்பினர் அந்தஸ்தை கேடயமாகப் பயன்படுத்திக்கொண்ட சீனா, ஐ.நா.வின் உணவு - வேளாண் அமைப்பு (எப்.ஏ.ஓ), ஐ.நா. தொழிற்சாலை மேம்பாட்டு அமைப்பு (யூஎன்ஐடிசிஓ), சர்வதேச தொலைத்தொடர்பு யூனியன் (ஐடியு), சர்வதேச விமானப் போக்குவரத்து அமைப்பு (ஐசிஏஓ) ஆகியவற்றுக்கான தேர்தல்களில் வெற்றி பெற்று உயரிய இடங்களைப் பிடித்து தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்தது.
  • முதல் உலகப் போருக்குப் பின், பல நாடுகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டதால்தான்  சீனாவால் ஐ.நா.வில் முக்கியத்துவம் பெற முடிந்தது.
  • அதே வேளையில், இந்தப் போரில் ஜெர்மனி, துருக்கிக்கு எதிராக ஏராளமான படைவீரர்களை அனுப்பி வைத்து மிகப்பெரிய பங்களிப்பை நல்கிய இந்தியா, அப்போது காலனிஆதிக்கத்துக்கு உட்பட்டிருந்தபோதிலும், "லீக் ஆஃப் நேஷன்ஸ்' என அறியப்படும் உலக நாடுகள் சங்கத்தின் நிறுவன உறுப்பினராகவும் திகழ்ந்தது.
  • இதேபோல், இரண்டாம் உலகப் போரின் முடிவில், ஐ.நா. சபையின் மூன்று மாநாடுகளிலும் பங்கு வகித்த இந்தியா, அதன் சாசன உறுப்பினராகவும் சுதந்திரம் பெறுவதற்கு முன்பே விளங்கியது.
  • பாகிஸ்தான் 1947-இல் சுதந்திரம் பெற்ற பின்னரே ஐ.நா.வில் உறுப்பினரானது.
  • ஜெர்மனியின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த தனது பகுதிகளை விடுவித்துக் கொள்ளும் வாய்ப்பாக, முதல் உலகப் போரைப் பயன்படுத்திக் கொண்ட சீனா, இதற்காக இங்கிலாந்து, பிரான்ஸýடன் கூட்டு சேர்ந்தது.
  • ஆனால், அதே சீனப் பகுதிகளுக்காக ஜெர்மனியை ஜப்பான் எதிர்கொண்டதாலும், ஜெர்மனிக்கு எதிரான அணியில் ஜப்பான் இடம்பெற்றிருந்ததாலும், சீனா தனது துருப்புகளை அனுப்பவில்லை.
  • மாறாக, ஜெர்மனிக்கு எதிரான மேற்கத்திய போர் முயற்சிக்கு ஏராளமான தொழிலாளர்களை அனுப்பி சீனா ஆதரவு கொடுத்தது. இதன் விளைவாக, வெர்செயில்ஸ் அமைதி உடன்படிக்கையில் பங்கெடுக்க சீனாவுக்கு அழைப்பு கிட்டிய போதிலும்,  ஜப்பானின் கரம் ஓங்கியதால் உடன்படிக்கையில் கையெழுத்திட சீனா மறுத்தது.
  • இந்தச் சூழலில் சீனாவின் மீது அனுதாபம் கொண்ட அமெரிக்கா, சீனா- ஜெர்மனி இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்பட உதவியது. இவ்வாறாக, இரண்டாம் உலகப் போரில் ஜப்பானுக்கு எதிராக அமெரிக்கா- சீனா இடையே வலுவான பிணைப்பு ஏற்பட்டது.
  • இதன்மூலம் போர் முடிந்ததும், அமைதியை நிலைநாட்டுவதற்காக நிறுவப்பட்ட ஐ.நா.வின் "ஃபோர் போலீஸ்மென்' என அறியப்படும் அமெரிக்கா, ரஷியா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகளின் கூட்டமைப்பில் சீனாவை உறுப்பினராக அமெரிக்கா சேர்த்தது.
  • இதுவே பிறகு பி-5 எனப்படும் நிரந்தர உறுப்பு நாடுகளாக மாறியது. அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் 1945-இல் நடைபெற்ற மாநாட்டில் ஐ.நா. சாசனம் இறுதிவடிவம் பெற்றது.
  • கடந்த அரை நூற்றாண்டு காலமாக சர்வதேச பொருளாதாரத்தில் அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்த சீனா, தற்போது கரோனா தீநுண்மிப் பரவலால் உலக நாடுகளின் கண்டனத்துக்கு ஆளாகியுள்ளது.
  • இதுமட்டுமன்றி, லடாக்கில் இந்திய ராணுவத்துடன் கடந்த ஆறு மாதமாக தொடர்ந்து மோதல் போக்கில் ஈடுபட்டு, இந்தியாவின் வெறுப்பையும் சம்பாதித்தது. அத்துடன் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பு நாடாக, தொடர்ந்து தடை ஏற்படுத்தி வருகிறது.
  • இத்தகைய சூழலில், இந்தியா, ஜெர்மனி, ஜப்பான், பிரேஸில் ஆகியவற்றை உள்ளடக்கிய ஜி-4 நாடுகள்,  ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தம் மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை அண்மையில் எடுத்துரைத்தது வரவேற்கத்தகுந்தது.
  • ஏற்கெனவே 184 நாடுகளின் ஒருமித்த ஆதரவுடன் ஆசிய- பசிபிக் பிராந்தியத்திலிருந்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தரமற்ற உறுப்பு நாடாக இந்தியா எட்டாவது முறையாகத் தேர்வானது.
  • பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய ஐந்து நாடுகள் அங்கம் வகிக்கும் "பிரிக்ஸ்' மாநாட்டை 2021-லும், ஜி 20 மாநாட்டை 2022-லும் இந்தியா  வழங்க இருக்கிறது.
  • தற்போது உலகை அச்சுறுத்திவரும் பருவகால மாற்றம், நோய்த்தொற்றுப் பரவல், பயங்கரவாதம் ஆகிய விவகாரங்களில் உலக நாடுகளை ஒன்றிணைத்து தீர்வு காணவும், ஐ.நா.வில் சீர்திருத்தங்களைக் கொண்டு வரவும் இதைத் தகுந்த வாய்ப்பாக இந்தியா பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே அரசியல் நோக்கர்களின் எதிர்பார்ப்பாகும்.

நன்றி : தினமணி (05-11-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்