- திகைக்க வைக்கும் தகவல் தொழில்நுட்பத் துறை வளர்ச்சியை மிக சாதுர்யமாகவும் சாதகமாகவும் பயன்படுத்தத் தெரிந்திருக்கும் சீனாவின் செயல்பாடுகள் நம்மை மிரள வைக்கின்றன. சீனாவால் நாம் எதிர்கொள்ளும் ஆபத்து, எல்லையில் மட்டுமல்ல.
- கடந்த வாரம் கசிந்திருக்கும் செய்தி சர்வதேச அளவில் அதிர்வலைகளை உருவாக்கியிருக்கிறது.
- சாமானிய மக்களின் பார்வையை எட்டவில்லை என்றாலும், ஆட்சியாளர்களை கதிகலங்க வைத்திருக்கிறது. சர்வதேச தினசரிகளில் இது குறித்த தகவல்கள் வெளிவந்தும்கூட, இந்திய ஊடகங்களால் அரசியலுக்கு தரப்படும் முக்கியத்துவம் இதற்கு தரப்படாமல் இருப்பது வியப்பாக இருக்கிறது.
- இந்தியாவிலுள்ள முக்கியமான நபர்கள் அனைவரையும் சீனா இணைய வழியில் கண்காணித்து வருகிறது என்பதுதான் அந்த செய்தி.
- சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொடர்புடைய சென்ஹுவா தரவு தகவல் தொழில்நுட்ப நிறுவனம், செயற்கை நுண்ணறிவு (ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ஸ்), தரவு சிதைத்தல் (டேட்டா கிரஷிங்) தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி ஆயிரக்கணக்கான இந்தியர்கள் குறித்த தகவல்களை சேகரித்து வருகிறது என்கிறது அந்த செய்தி.
- அந்தப் பட்டியலில் இந்தியாவின் முக்கியமான அரசியல் தலைவர்கள், ராணுவ அதிகாரிகள், பாதுகாப்பு வல்லுநர்கள், விஞ்ஞானிகள், ஊடகத்தினர் உள்ளிட்டோர் அடங்குவர்.
- அந்த நிறுவனம் உருவாக்கியிருக்கும் முக்கிய வெளிநாட்டு தகவல் தரவுத் தொகுப்பு (டேட்டா பேஸ்) தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களின் இணையதள செயல்பாடுகளைப் பதிவு செய்கிறது.
- சமூக ஊடகங்களில் அவர்கள் குறித்த தகவல்களையும், அவர்களது பங்களிப்பையும் கண்காணிக்கிறது. சுருக்கமாகச் சொல்வதாக இருந்தால் இந்தியாவின் முக்கியப் பிரமுகர்கள் அனைவரும் கண்காணிக்கப்படுகிறார்கள்.
டேட்டா திர(ரு)ட்டு
- அதிர்ச்சி அளிக்கும் தகவல் என்னவென்றால், அந்த நிறுவனத்தால் கண்காணிக்கப்படும் நபர்களில் பிரதமர் அலுவலகத்தின் முக்கியமான அதிகாரிகள் இடம் பெற்றிருக்கிறார்கள் என்பதுதான்.
- பாதுகாப்பு, கட்டமைப்புத் துறை, நிதித்துறை சார்ந்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள், பிரதமர் அலுவலக அதிகாரிகள், மாநில தலைமைச் செயலாளர்கள், காவல் துறைத் தலைவர்கள் உள்ளிட்ட பலர் சீனாவின் குவாங்டாங் மாநிலத்தைச் சேர்ந்த ஷென்சென் நகரத்தில் இயங்கும் சென்ஹுவா டேட்டா என்கிற தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் தரவுத் தொகுப்பில் இடம் பெறுகிறார்கள்.
- உலக அளவில் 25 லட்சம் பேர் கண்காணிக்கப்படுகிறார்கள் என்றும், அவர்களில் குறைந்தது 10,000 பேர் இந்தியர்கள் என்றும் அந்தத் தகவல் தெரிவிக்கிறது.
- மத்திய லஞ்ச ஒழிப்புத் துறையின் கூடுதல் செயலாளர் அர்ச்சனா வர்மா, மத்திய உள்துறை இணையமைச்சர் கிஷண் ரெட்டியின் தனிச்செயலர் ஸ்ரீகாந்த், உலக வங்கியின் நிர்வாக இயக்குநர் எஸ். அபர்ணா போன்றோரும், பிரதமர் அலுவலகத்தைச் சேர்ந்த அமர்தீப் சின்ஹா, சுனிதா மிஸ்ரா, ஆஸிஷ் குமார் உள்ளிட்டோரும் அந்தப் பட்டியலில் இருப்பதாகத் தெரிகிறது.
- சேவையிலுள்ள, பணி ஓய்வு பெற்ற 325 அதிகாரிகள் அந்த நிறுவனத்தின் தரவுத் தொகுப்பில் இடம் பெற்றிருக்கிறார்கள் என்கிறது சர்வதேச அளவில் வெளியாகியிருக்கும் தகவல் கசிவு.
- சீன நிறுவனத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் அந்த நபர்களின் எண்மப் பதிவுகள் அனைத்துமே கண்காணிக்கப்படுகின்றன.
- சமூக ஊடகங்களான முகநூல், சுட்டுரை போன்றவற்றிலும், அவர்களது தனிப்பட்ட வலைப்பூவிலும் செய்யப்படும் பதிவுகள் கூர்ந்து கவனிக்கப்படுகின்றன.
- அது மட்டுமல்லாமல், நாளேடுகள், காட்சி ஊடகங்கள், சமூக அமைப்புகள் போன்றவற்றில் அவர்கள் குறித்து வெளிவரும் தகவல்கள் அனைத்தும் சேகரிக்கப்பட்டு "தொடர்புடைய தரவுத் தொகுப்பு' என்கிற பெயரில் பாதுகாக்கப்படுகிறது.
- அதன் மூலம் குறிப்பிட்ட நபர்களின் தொடர்புகள், அவர்களுடன் தொடர்புடைய நிறுவனங்கள், சமூக அமைப்புகள் போன்றவை அந்த நிறுவனத்தின் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்படுகின்றன.
- இதுபோன்று குறிப்பிட்ட நபர்களை மையப்படுத்தி சேகரிக்கப்படும் தகவல்கள், தவறாகப் பயன்படுத்தவும் அதைப் பயன்படுத்தி தேசிய, சர்வதேச அளவில் தவறான தகவல்களைப் பரப்பவும் ஏதுவாகும் என்பதை நாம் உணர வேண்டும்.
- இது ஓர் உயர்ரக யுத்த முறை. தகவல்களைப் பயன்படுத்தி சமூக அமைதியை குலைக்கவும், பொருளாதார நடவடிக்கைகளை தடம்புரளச் செய்யவும், நிறுவனங்களை சீர்குலைக்கவும், அரசியல் தலைமையை களங்கப்படுத்தவும் முடியும் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
- ஏற்கெனவே ஏற்றுமதி - இறக்குமதியில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே சீனாவுக்குச் சாதகமான மிகப் பெரிய வர்த்தக இடைவெளி காணப்படுகிறது.
- கடந்த நான்கு ஆண்டுகளில் 1,600 இந்திய நிறுவனங்கள் 1 பில்லியன் டாலர் (சுமார் ரூ.7,346 கோடி) அளவில் அந்நிய நேரடி முதலீட்டை சீனாவிலிருந்து பெற்றிருக்கின்றன.
- ஆட்டோமொபைல் துறை, மின்னணு துறை, சேவைத் துறை போன்ற 46 துறைகளில் சீன முதலீடு இந்தியாவுக்கு வந்திருக்கிறது. சீனாவால் உடனடியாக இந்த முதலீடுகளை திரும்பப் பெற முடியாது என்றாலும்கூட, இந்தியாவின் தொழில்துறைக்கு கடுமையான அழுத்தத்தை ஏற்படுத்த முடியும்.
- செயலிகளைத் தடை செய்ததுபோல, சென்ஹுவா போன்ற நிறுவனங்கள் தகவல்களை திரட்டுவதைத் தடுத்துவிட முடியாது. சுதந்திர ஜனநாயக நாடான இந்தியாவில், கம்யூனிஸ சர்வாதிகார நாடான சீனா, எல்லா திசைகளிலும் எல்லா துறைகளிலும் ஊடுருவி இருக்கிறது - எல்லையில் மட்டுமல்ல.
நன்றி: தினமணி (17-09-2020)