TNPSC Thervupettagam

சீரமைக்க வேண்டிய காவல் கட்டமைப்பு

February 11 , 2023 548 days 313 0
  • சட்ட விழிப்புணர்வு அதிகரித்துள்ள இன்றைய சூழலில், குற்ற நிகழ்வு குறித்து காவல் நிலையத்தில் கொடுக்கப்படும் புகார் மீது உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, புலன் விசாரணை மேற்கொள்வதில்லை என்ற வருத்தம் பொதுமக்களிடம் நிலவிவருகிறது.      
  • நீதிமன்றம் பிறப்பிக்கும் பிடியாணையின்றி கைது செய்யக்கூடிய குற்ற நிகழ்வு குறித்து காவல் நிலையத்தில் கொடுக்கப்படும் புகார் மீது காவல் நிலையப் பொறுப்பு அதிகாரி உடனடியாக வழக்கு பதிவு செய்ய காவல்துறை இயக்குநர் ஆணை பிறப்பிக்க வேண்டும் என்ற பரிந்துரையை தமிழ்நாடு அரசுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் 2020-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வழங்கியுள்ளது.
  • முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது குறித்து விவரிக்கும் குற்றவியல் நடைமுறை சட்டப்பிரிவு 154 குறித்து காவல் நிலைய பொறுப்பு அதிகாரிகளுக்கு பயிற்சி மற்றும் விழிப்புணர்வை காவல்துறை இயக்குநர் ஏற்படுத்த வேண்டும் என்றும் மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் பரிந்துரையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
  • காவல்துறையில் பணியாற்றத் தேர்வு செய்யப்படும் காவலர் முதல் இந்திய காவல் பணி (ஐ.பி.எஸ்.) அதிகாரி வரையிலான அனைவருக்கும் வழங்கப்படும் பயிற்சியில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது தொடர்பான சட்ட விதிகள் கற்பிக்கப்படுகின்றன.
  • இந்தச் சூழலில், தென்மாவட்டம் ஒன்றில் அண்மையில் காதல் திருமணம் செய்து கொண்ட ஒரு இளம் பெண்ணை, அவரின் உறவினர்கள் கடத்திச் சென்றது குறித்தும், அப்பெண்ணின் கணவருக்கு கொலை மிரட்டல் விடுத்தது குறித்தும் காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகார் மீது வழக்கு பதிவு செய்யாமல் காவல்துறையினர் காலம் கடத்தி வந்தனர்.
  • இளம்பெண் கடத்தப்பட்ட நிகழ்வு தொடர்பான விடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியானதால் ஏற்பட்ட அழுத்தத்தைத் தொடர்ந்து, இளம்பெண் கடத்தல் குறித்து முதல் தகவல் அறிக்கை காலதாமதமாகப் பதிவு செய்யப்பட்டு, புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
  • இளம்பெண் கடத்தல் தொடர்பான புகார் மீது வழக்குப் பதிவு செய்து, புலன் விசாரணை மேற்கொள்ள மாவட்ட எஸ்.பி. அனுமதி வழங்காததால், இக்கொடுங்குற்ற நிகழ்வு குறித்து உடனடியாக வழக்குப் பதிவு செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.
  • சட்டத்தின் பிடியிலிருந்து குற்றவாளிகள் பல நேரங்களில் தப்பி விடுவதற்குக் காரணம் காவல்துறையினரிடம் அவர்கள் வெளிப்படுத்தும் கனிவான பார்வையும், கைமாறும் கையூட்டும் என்பதில் ஐயமில்லை. அதே சமயம், அனைத்து குற்ற நிகழ்வுகள் மீது வழக்கு பதிவு செய்யாமல் இருப்பதன் பின்னணியில் ஒருவகையான அரசியலும் உண்டு.
  • திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர்,  திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய ஆறு மாவட்டங்களில் 10 ஆண்டுகளுக்கு முன்பு நடத்திய ஆய்வில், காவல் நிலையங்களில் பெறப்பட்ட குற்ற நிகழ்வுகள் தொடர்பான புகார்களில் 30 %-க்கும் சற்று அதிகமான புகார்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை என்பது தெரியவந்தது.
  • கொலை வழக்குகளை சந்தேக மரணம் என்றும், கொலை முயற்சி வழக்குகளை காய வழக்குகள் என்றும், கொள்ளை வழக்குகளை சிறுதிருட்டு வழக்குகள் என்றும் குற்றங்களின் தன்மையைக் குறைத்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டதும் ஆய்வில் தெரியவந்தது. பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்டதாக கூலி வேலை செய்த பெண் கொடுத்த புகாரை உதாசீனப்படுத்தியதும் ஆய்வில் தெரியவந்தது.
  • காவல் இயக்குநர் அலுவலகத்திலுள்ள உயரதிகாரிகள் இந்த ஆய்வறிக்கையைப் பரிசீலனை செய்தனர். அனைத்து குற்ற நிகழ்வுகள் மீதும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தால், கடந்த ஆண்டைக் காட்டிலும் நடப்பு ஆண்டில் குற்ற வழக்குகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துவிடும் என்றும், குற்றங்களைக் கட்டுப்படுத்த காவல்துறை தவறிவிட்டது என்ற குற்றச்சாட்டை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும், கணிசமாக உயரும் குற்ற வழக்குகளின் எண்ணிக்கையால் அரசுக்கு அவப்பெயர் ஏற்படும் என்றும் விவாதித்த உயரதிகாரிகள், இந்த ஆய்வறிக்கை தொடர்பாக மேல்நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.
  • அனைத்து குற்ற நிகழ்வுகள் மீதும் உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதால் உயரும் புள்ளிவிவரங்கள் குறித்து பீதியடைய வேண்டாம் என்றும், பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளிலும் புலன் விசாரணையை துரிதமாக முடிக்க வேண்டும் என்றும் 'காவல் இலாகா'வை தன்னகத்தே கொண்டுள்ள முதலமைச்சர் வழிகாட்டுவதுதான் இப்பிரச்னைக்குத் தீர்வாகும்.
  • குற்றங்கள் நிகழாமல் தடுக்க காவலர்களை ரோந்துப் பணிக்கு அனுப்பி வைக்கப்படும் நடைமுறை நீண்ட காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது. காவல்துறையினரின் வேலைப் பளுவைக் காரணம் காட்டி, ரோந்துப் பணிக்கு காவலர்கள் அனுப்பி வைக்கப்படுவது தற்போது குறைந்து வருகிறது. ரோந்துப் பணிக்கு அனுப்பி வைக்கப்படும் காவலர்கள் முறையாக ரோந்துப் பணியில் ஈடுபடுவதில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.
  • ரோந்துப் பணியின் முக்கியத்துவத்தை உணர்ந்த சில மாநிலங்களில் 'இ-ரோந்து முறை' நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது. ரோந்து காவலர்களின் பணியைக் கண்காணிக்கும் விதத்தில் அவர்களின் கைப்பேசியில் 'தடங்காட்டி' (ஜி.பி.எஸ் - க்ளோபல் பொஸிஷனிங் சிஸ்டம்) பொருத்தப்பட்டு, ரோந்து காவலர்களின் பணியை பயனுள்ள முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. காவலர்களின் இ-ரோந்து முறைக்கு தமிழ்நாடு காவல்துறையும் மாற வேண்டிய கட்டாய சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது.
  • கடந்த காலங்களில் நிகழ்ந்த தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்வது என்பது சிறந்த நடைமுறையாகும். மாணவி இறந்தது தொடர்பாக கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி வளாகத்தில் நிகழ்ந்த சட்டம் - ஒழுங்கு பிரச்னையும், எருது விடும் நிகழ்ச்சி நடத்துவது தொடர்பாக ஒசூரில் நிகழ்ந்த சட்டம் - ஒழுங்கு பிரச்னையும் கடந்த கால தவறுகளில் இருந்து காவல்துறை பாடம் கற்றுக்கொள்ளாத நிலையை வெளிப்படுத்துகின்றன.
  • சமுதாயத்தில் புகைந்து கொண்டிருக்கும் பிரச்னை சட்டம் - ஒழுங்கு பிரச்னையாக உருமாறுமா என்பதைக் கண்டறிந்து, உயரதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு உளவுத்துறை என்றழைக்கப்படும் மாவட்ட தனிப்பிரிவுக்கும் எஸ்.பி.சி.ஐ.டி. பிரிவுக்கும் உண்டு.
  • உளவறிந்து தகவல் திரட்டுவதோடு மட்டுமின்றி, நிகழவிருக்கும் சட்டம்-ஒழுங்கு பிரச்னையைத் தடுத்து நிறுத்துவதற்கான வழிமுறைகளையும் கண்டறிந்து, உயரதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பும் உளவுத்துறைக்கு உண்டு. காலப்போக்கில் வெளிப்படையான தகவல்களைத் திரட்டி, உயரதிகாரிகளுக்கு தெரியப்படுத்துவதுதான் தங்களின் பணி என்ற மனநிலை உளவுத்துறையினரிடம் நிலவுவதைக் காணமுடிகிறது.
  • திறமையான உளவுப்பிரிவு காவலர்களை உருவாக்கும் பொறுப்புடைய தனிப்பிரிவு பயிற்சி பள்ளியும், அதன் பாடத்திட்டமும் தீவிரவாதிகளின் செயல்பாடுகள், சமூக ஊடகங்களின் ஆதிக்கம் போன்றவை அதிகரித்து வருகின்ற இன்றைய சூழலுக்கு ஏற்ப சீரமைக்கப்படாத நிலையிலேயே செயல்பட்டு வருகின்றன.
  • மாநில அரசின் கண்களாகவும், காதுகளாகவும் கருதப்படுகின்ற உளவுத்துறையின் தரம் குறைந்தால், அது மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலையக் காரணமாகிவிடும் என்பதில் ஐயமில்லை.
  • குற்ற வழக்குகளில் மேற்கொள்ளப்படும் முறையான புலன் விசாரணையும், நீதிமன்றத்தில் குற்ற வழக்குகள் தண்டனையில் முடிவடைவதும் சட்டம் - ஒழுங்கை நிலைநாட்ட பெரிதும் துணைபுரியும். ஆனால், நீதிமன்றத்தில் விடுதலையாகும் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் காணமுடிகிறது.
  • குற்றவாளிகளைக் கண்காணிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட 'சி.சி.டி.என்.எஸ்.' என்ற வலைதளம் தற்பொழுது அனைத்து காவல் நிலையங்களிலும் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்த வலைதளத்தின் மூலம் முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்படுகின்றன.
  • கடந்த காலத்தில் புலனாய்வு அதிகாரிகள், சாட்சிகளின் வாக்குமூலங்களை கைப்பட எழுதி, நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். அதன் பின்னர் தட்டச்சு செய்யப்பட்ட வாக்குமூலங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். கணினி பயன்பாட்டுக்கு வந்த பின்னர், சாட்சிகளின் வாக்குமூலங்களை கணினி உதவி கொண்டு தயார் செய்தனர்.
  • தற்பொழுது சாட்சிகளின் வாக்குமூலங்கள் சி.சி.டி.என்.எஸ். வலைதளத்தில் நேரடியாக பதிவேற்றம் செய்யப்படுகிறது. காவல் நிலைய கணினியை இயக்கும் காவலர்களிடம் இப்பணி ஒப்படைக்கப்பட்டுள்ளது. புலன் விசாரணை தொடர்பான சட்ட நுணுக்கங்கள் முழுமையாகத் தெரியாத காவலர்கள் சாட்சிகளின் வாக்குமூலங்களை சி.சி.டி.என்.எஸ். வலைதளத்தில் பதிவேற்றம் செய்து வருகின்றனர். 
  • இத்தகைய ஆவணங்களின் அடிப்படையில் நடைபெறும் நீதிமன்ற விசாரணையில் பெரும்பாலான வழக்குகள் எளிதில் விடுதலையில் முடிகின்றன. இது குறித்த ஆய்வும், வழிகாட்டுதலும் இன்றியமையாதவை ஆகும்.
  • மாவட்ட எஸ்.பி., சரக டி.ஐ.ஜி. உள்ளிட்ட காவல் உயரதிகாரிகள், காவல் நிலையங்களைப் பார்வையிட்டு, மேற்கொள்ளும் ஆய்வுகள் கண்துடைப்புக்காக நடத்தப்படும் ஆய்வுகளாக மாறிவருகின்றன.
  • காவல்துறையினரின் செயல்பாடுகளில் ஏற்பட்டுள்ள மெத்தனப்போக்கையும், அவர்கள் துறைசார்ந்த விதிகளுக்கு முரணாக செயல்படுவதையும் கண்டறிந்து, உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியது அவசர அவசியம் ஆகும்.

நன்றி: தினமணி (11 – 02 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்