- காவல்துறையுடன் இணைந்து சாலைப் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டுவந்த "போக்குவரத்து காப்பாளர்கள்' (டிராபிக் வார்டன்ஸ்) என்ற அமைப்பு மும்பை பெருநகரில் இனி செயல்படாது என்ற அறிவிப்பை மும்பை பெருநகர காவல் ஆணையர் சமீபத்தில் வெளியிட்டுள்ளார்.
- "போக்குவரத்து காப்பாளர்கள்' என்ற அமைப்பு முதன் முதலில் இங்கிலாந்து நாட்டில் 1960-ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்டது. சாலை ஓரங்களில் மோட்டார் வாகனங்களை நிறுத்தி, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துவதைத் தடுப்பதும், வாகனங்கள் நிறுத்த ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இடங்களை வாகன ஓட்டுநர்களுக்குத் தெரியப்படுத்துவதும் அவர்களின் பணிகள் ஆகும்.
- இங்கிலாந்தைத் தொடர்ந்து, இந்தியப் பெருநகரங்களான கொல்கத்தாவில் 1975-ஆம் ஆண்டும், சென்னையில் 1977-ஆம் ஆண்டும் போக்குவரத்து காப்பாளர்கள் செயல்படத் தொடங்கினர். தற்பொழுது பல இந்திய நகரங்களில் போக்குவரத்து காப்பாளர்கள் காவல்துறையுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.
- நகர போக்குவரத்தை சீர்படுத்துவதில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள விரும்புபவர்களை அந்தந்த நகர காவல் உயரதிகாரிகள் போக்குவரத்து காப்பாளர்களாக நியமனம் செய்வார்கள். அந்த நகரத்தைச் சார்ந்த தொழிலதிபர்கள், வணிக நிறுவனங்கள் நடத்துபவர்கள், பொறியாளர்கள் போன்றவர்கள் போக்குவரத்து காப்பாளர்களாக தங்களை ஈடுபடுத்திக் கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
- வாரத்திற்கு ஓரிரு நாட்கள் காவல்துறையுடன் இணைந்து சாலைகளில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் போக்குவரத்து காப்பாளர்கள் ஈடுபடுகின்றனர். பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு போத்துவரத்து விதிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளிலும் அவர்கள் பங்கெடுத்துக் கொள்வார்கள். காவல் அதிகாரிகள் போன்று காக்கி சீருடையில் பணியில் ஈடுபடும் போக்குவரத்து காப்பாளர்ளுக்கு அரசு ஊதியம் எதுவும் வழங்கப்படுவது இல்லை.
- அதிகரித்துவரும் சாலை விபத்துகளையும், உயிரிழப்புகளையும் கட்டுப்படுத்தும் உயர்ந்த லட்சியத்திற்காக, சேவை மனப்பான்மையுடன் காவல்துறையுடன் இணைந்து பணியாற்றுவதற்காக அமைக்கப்பட்ட போக்குவரத்து காப்பாளர்களின் செயல்பாடுகள் காலப்போக்கில் மாறத் தொடங்கின.
- மக்களுக்கு சேவை செய்ய கிடைத்த வாய்ப்பை தவறாகப் பயன்படுத்துவதாகவும், போக்குவரத்து காவல்துறையினருக்கு கையூட்டு வசூலித்துக் கொடுப்பதாகவும் போக்குவரத்து காப்பாளர்கள் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதன் விளைவுதான் போக்குவரத்து காப்பாளர்கள் இனி மும்பை பெருநகரில் செயல்படமாட்டார்கள் என்ற அறிவிப்பு.
- போக்குவரத்து காப்பாளர்கள் என்ற அமைப்பின் பிறப்பிடமான இங்கிலாந்து நாட்டில் 2015-ஆம் ஆண்டில் இந்த அமைப்பு முற்றிலுமாக அகற்றப்பட்டுவிட்டது. இந்திய மாநிலங்களுக்கு முன்னோடியாக, மும்பை பெருநகரத்தில் போக்குவரத்து காப்பாளர்கள் அகற்றப்பட்டு, போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணி முழுமையாக போக்குவரத்து காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இச்செயல் இதர மாநிலங்களுக்கும் வழிகாட்டியாக அமையும் என்ற கருத்து நிலவுகிறது.
- "காவல் நண்பர்கள் குழு' என்ற அமைப்பு தமிழ்நாட்டில் 1990-களில் ஏற்படுத்தப்பட்டது. அக்குழு உறுப்பினர்கள் அரசாங்கத்திடம் ஊதியம் எதுவும் பெறாமலும், சீருடை அணியாமலும் காவல் நிலைய பொறுப்பு அதிகாரிகள் மற்றும் காவலர்களுடன் இணைந்து இரவு ரோந்து, வாகனத் தணிக்கை, கள்ளச்சாராய வேட்டை, திருவிழா பாதுகாப்பு உள்ளிட்ட சட்டம்-ஒழுங்கு பணிகளில் ஈடுபட்டுவந்தனர்.
- சேவை மனப்பான்மையுடன், காவல்துறையுடன் இணைந்து காவல் நண்பர்கள் குழுவினர் செயல்படுகின்றனர் என்ற கருத்து காவல்துறை வட்டாரங்களில் பேசப்பட்டாலும், சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்களுக்கும், உள்ளுர் காவல்துறையினருக்கும் இடையே பாலமாக காவல் நண்பர்கள் குழுவினர் செயல்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டும் அவர்கள் மீது கூறப்பட்டு வந்தது.
- 2020-ஆம் ஆண்டில் சாத்தான் குளம் காவல்நிலையத்தில் நிகழ்ந்த காவல் மரணங்களில் காவல் நண்பர்கள் குழுவினருக்குத் தொடர்புண்டு என்பது உறுதியானதைத் தொடர்ந்து, காவல் நண்பர்கள் குழுவின் செயல்பாடுகளுக்கு தமிழ்நாடு அரசு தடை விதித்தது.
- "இளைஞர் படை' (யூத் பிரிகேட்) என்ற அமைப்பை தமிழ்நாடு அரசு 2013-ஆம் ஆண்டில் ஏற்படுத்தியது. காவலர்கள் போன்று சீருடை அணிந்த இவர்களுக்கு ஒரு மாதம் பயிற்சி அளிக்கப்பட்டு, பின்னர் தொகுப்பு ஊதிய பணியாளர்களாக காவல் நிலையங்களில் இவர்கள் பணி நியமனம் செய்யப்பட்டனர். காவல் வாகனங்களை ஓட்டுதல், காவல் நிலைய கணினியைக் கையாளுதல், இரவு ரோந்து போன்ற பணிகளில் காவலர்களுடன் இணைந்து இவர்கள் செயல்பட்டனர். சில ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெற்ற சிறப்புத் தேர்வு மூலம் இவர்கள் அனைவரும் காவலர்களாக பணி நியமனம் செய்யப்பட்டனர்.
- காவலர் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டவர்கள் ஆறு மாதப் பயிற்சியை காவலர் பயிற்சிப் பள்ளியிலும், அதைத் தொடர்ந்து ஒரு மாதம் காவல் நிலையங்களிலும் பயிற்சி எடுக்க வேண்டும். அதன் பின்னர், மாநகர அல்லது மாவட்ட ஆயுதப்படையில் பணி நியமனம் செய்யப்படுவார்கள். அங்கு சில ஆண்டுகள் பணிபுரிந்த பின்னர்தான், காவல் நிலையங்களில் பணிபுரியும் வாய்ப்பு அவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
- ஆனால், காவலர்களுக்கான பயிற்சியை "இளைஞர் படை' எனத் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு வழங்காமல், காவல் நிலையங்களில் காவலர்கள் மேற்கொள்ளும் பணிகளில் அவர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். அதன் விளைவாக பணியில் அத்துமீறிய செயல்பாடுகள் அவர்களிடம் வெளிப்பட்டன. சிறப்புத் தேர்வின் மூலம் காவலர்களாக பணி நியமனம் செய்யப்பட்ட இளைஞர் படையினர் எப்படி பணியாற்றுகிறார்கள் என்பதை சமீபத்தில் நிகழ்ந்த சம்பவம் ஒன்று வெளிப்படுத்துகிறது.
- சில தினங்களுக்கு முன்பு கஞ்சா விற்பனை செய்த நபர் ஒருவரை புதுக்கோட்டை மாவட்ட காவல்துறையினர் பிடித்தனர். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், கோவை மாநகர ஆயுதப்படைக் காவலர் ஒருவரும் கஞ்சா விற்பனையில் சம்பந்தப்பட்டுள்ளார் என்ற தகவல் உறுதிபடுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, அந்த
- காவலரின் வீட்டில் மேற்கொண்ட சோதனையில் இரண்டு கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது.
- சட்டம் ஒழுங்கைப் பேணிக்காக்க வேண்டிய காவலரின் வீட்டில் கஞ்சா இருக்க வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்விக்கான விடை தேடல் மற்றொரு தகவலை வெளிப்படுத்துகிறது. இளைஞர் படை மூலம் காவலராக பணி நியமனம் செய்யப்பட்ட இந்த காவலர், 2020-ஆம் ஆண்டில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட குற்றச் செயலுக்காக பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர் என்பதும், தன்னுடைய செல்வாக்கைப் பயன்படுத்தி சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் ஆயுதப்படையில் பணியில் சேர்ந்தவர் என்பதும் தெரியவருகிறது.
- கஞ்சா விற்பனை செய்த குற்றச் செயலுக்காக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காவலர் மீது முறையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்காமல், அவரை மீண்டும் பணிக்கு எடுத்துக் கொண்டது, காவல்துறையின் ஒழுங்கு நடவடிக்கை விதிகள் பலவீனமாகிவிட்டனவா என்று சந்தேகிக்கத் தோன்றுகிறது.
- கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக அரசு, தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஆண், பெண் இருபாலரும் அவர்களின் ஓய்வு நேரங்களில் காவல்துறையுடன் இணைந்து இரவு ரோந்து, போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல், திருவிழா பாதுகாப்பு உள்ளிட்ட பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளும் வகையில் உருவானது "ஊர்க்காவல் படை' என்ற அமைப்பாகும்.
- காவலர்களைப் போன்று சீருடையில் பணிபுரியும் ஊர்க்காவல் படையினருக்கு அரசு நிதியிலிருந்து பணிக்கொடையும், சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு ஆண்டுதோறும் பதக்கங்களும் வழங்கப்படுகின்றன.
- அரசு அதிகாரிகள் பலரிடம் நிலவும் கையூட்டு கலாசாரம், சேவை மனப்பான்மையுடன் பணிபுரியவந்த ஊர்க்காவல் படையினர் இடையேயும் பெருமளவில் பரவிய நிலையைக் காணமுடிகிறது. பெருநகரங்களில் தினசரி நடைபெறும் இரவு ரோந்து, வாகனத் தணிக்கை போன்ற பணிகளுக்கு காவல்துறையினருடன் செல்லும் ஊர்க்காவல் படையினருக்கு, அன்றைய தினம் காவல்துறையினர் வசூல் செய்யும் கையூட்டு பணத்திலிருந்து ஒரு பங்கு கொடுக்கும் பழக்கம் தற்பொழுது நடைமுறையில் இருந்து வருகிறது.
- சேவை மனப்பான்மையுடன் காவல்துறையுடன் இணைந்து பணியாற்றிவந்த ஊர்க்காவல் படையினர், "கையூட்டில் பங்கு' என்ற நிலையை நோக்கி பயணிக்கத் தொடங்கிவிட்டனர். இந்த சூழலில், ஊர்க்காவல் படையினரை காவலர்களாக பணி நியமனம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தற்பொழுது பொதுவெளியில் எழுந்துள்ளது.
- காவல்துறையுடன் இணைந்து சட்டம்-ஒழுங்கைப் பராமரிக்கும் பணியில் ஈடுபடும் பொழுது, கையூட்டு பெறும் பழக்கம் உள்ளவர்களை காவல்துறையில் காவலர்களாக பணி நியமனம் செய்வது காவல்துறையின் செயல்பாட்டை சீர்குலைக்கும் முயற்சியாக அமைந்துவிடும்.
- சமீபத்தில் புதுதில்லியில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா ஆற்றிய உரையில், "காவல்துறையில் சீர்திருத்தம் என்பது நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வருகிறது. ஊழல், பாரபட்சமற்ற தன்மை இல்லாதது, அரசியல்வாதிகளுடன் நெருங்கிய உறவு போன்ற காரணங்களால் காவல்துறையின் நன்மதிப்பு களங்கமடைந்துள்ளது' என்று குறிப்பிட்டுள்ளார்.
- காவல்துறையில் நிர்வாக சீர்திருத்தங்கள் கொண்டுவருவது குறித்து காலம் தாழ்த்துவது, குற்றம் நிகழ்த்துபவர்கள் தங்களை நிலைப்படுத்திக்கொள்ள வழங்கும் வாய்ப்பாக அமைந்துவிடும் என்பதை உணர வேண்டும்.
நன்றி: தினமணி (17 – 04 – 2022)