TNPSC Thervupettagam

சுகாதாரத்திற்கே முன்னுரிமை

September 8 , 2022 701 days 376 0
  • தமிழகத்தின் தலைநகரான சென்னையில் விளையாட்டு மைதானம், குடிநீர் வசதி, கழிப்பிட வசதி ஆகியவை இல்லாத பள்ளிகள் குறித்து சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஓர் அறிக்கை சற்றே அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
  • சென்னையில் மொத்தம் ஆயிரத்து நானூற்று முப்பத்துனான்கு பள்ளிகள் இருக்கின்றன.
  • அவற்றுள் முன்னூற்று அறுபத்தேழு பள்ளிகளில் விளையாட்டு மைதானமும், இருபத்தொன்பது பள்ளிகளில் குடிநீர் வசதியும் இல்லையாம். சென்னையைப் பொறுத்தவரை மாணவ-மாணவியருக்கான கழிப்பறைகள் எல்லாப் பள்ளிகளிலும் இருக்கின்றன.
  • ஆனாலும், அவற்றில் இருநூற்றுத் தொண்ணூறு பள்ளிகளிலுள்ள கழிப்பறை குப்பைகளைப் போடுவதற்கான வசதி எதுவும் இல்லை என்று கூறும் அந்த அறிக்கை சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரால் அளிக்கப்பட்டதாகும்.
  • பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு மைதானங்கள் போதிய அளவில் இல்லாதது குறித்துக் கடந்த 2018- ஆம் ஆண்டு தொடரப்பட்ட பொதுநல வழக்கு தொடர்பாகவே மேற்கண்ட அறிக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதிலும் உள்ள பள்ளிகளின் நிலைமை குறித்த அறிக்கையை ஒரு வாரத்திற்குள் தாக்கல் செய்யும்படி நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
  • தலைநகராம் சென்னையிலேயே இதுதான் நிலைமை என்றால் இதர மாவட்டங்களில், குறிப்பாக கிராமப்புறங்களில் இவ்வசதிகள் என்ன நிலையில் இருக்கக்கூடும் என்பதைக் கூற வேண்டியதில்லை.
  • விளையாட்டு மைதானம் ஒருபுறம் இருக்கட்டும், கிராப்புறப் பள்ளிகளில் தண்ணீர் வசதியுடன் கூடிய கழிப்பறைகளே போதிய அளவில் இல்லை என்ற குரல் அவ்வப்பொழுது எழத்தான் செய்கிறது. பல பள்ளிகளில் மாணவிகளுக்கென்று தனியான கழிப்பறைகள் இல்லை என்றும் கூறப்படுகிறது.
  • மேலும், கடந்த அக்டோபர் 2021-இல், தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு அரசுப் பள்ளிகளில் பள்ளிக்கல்வித் துறையின் மூலம் ஆயிரத்துமுந்நூறு கழிப்பறைகள் கட்டப்படவுள்ளதாகச் செய்தி ஒன்று வெளியானது.
  • அவற்றில் சுமார் முந்நூற்றுப் பத்து கழிப்பறைகள் மாணவிகளின் பயன்பாட்டுக்காக ஒதுக்கப்படும் என்றும் அவ்வறிக்கையில் கூறப்பட்டிருந்தது. அவ்வறிக்கையில் உள்ளபடி ஆயிரத்து முந்நூறு கழிவறைகளும் கட்டிமுடிக்கப் பட்டனவா என்பது விளையாட்டு மைதானங்கள் குறித்த வழக்கின் மூலம் தெரியவரலாம்.
  • இந்நிலையில், அனைத்துப் பள்ளிகளிலும் விளையாட்டு மைதானம் அமைப்பது சாத்தியம்தானா என்பதையும், அப்படியே அமைந்தாலும் ஒவ்வொரு பள்ளியின் மாணவர்கள் அனைவரும் அம்மைதானத்தைப் பயன்படுத்துவதென்பது நடைமுறை சாத்தியம்தானா என்ற கேள்வி எழத்தான் செய்கிறது.
  • ஆயிரம் மாணவர்கள் பயில்கின்ற ஒரு பள்ளிக்கென்று தனியாக விளையாட்டு மைதானம் ஒன்று உருவாக்கப்படும் என்று வைத்துக்கொள்வோம். அம்மாணவர்களுக்குள் விளையாட்டுகளில் ஆர்வம் உள்ள ஒருசிலருக்கே அம்மைதானம் முழுப்பயன் தரக்கூடியது. மற்ற மாணவர்களைப் பொறுத்தவரையில், உணவு இடைவேளையில் அமர்ந்து கூடிப் பேசி உணவு அருந்துவதற்கு மட்டுமே பயன்படக் கூடியதாகும்.
  • அப்பள்ளியின் விளையாட்டுத் துறைக்கென்று தனி ஆசிரியர் பணியமர்த்தப்படும் பட்சத்தில், அவ்வாசிரியரால் விளையாட்டுகளில் மிகுந்த ஆர்வமும், அதற்கேற்ற உடற்தகுதியும் உள்ள மாணவ மாணவிகள் அடையாளம் காணப்பட்டு, தனி கவனம் செலுத்திப் பயிற்சியளிக்கப்பட்டால் மட்டுமே அப்பள்ளியின் மைதானம் பயனுள்ளதாக இருக்கும்.
  • அவ்வாறு இனம் காணப்படும் மாணவர்களையும் மாவட்ட, மாநில அளவிலான சிறப்புப் பயிற்சிக் கூடங்களுக்கு அழைத்துச் சென்று அங்குள்ள சிறப்புப் பயிற்சியாளர்கள் மூலம் பயிற்சியளித்தால் மட்டுமே தலைசிறந்த விளையாட்டு வீரர்களை வார்த்தெடுப்பது சாத்தியமாகும்.
  • பள்ளிகளில் ஏற்கெனவே விளையாட்டு மைதானங்கள் உண்டெனில் அது நல்ல விஷயமே. ஆனால், மைதானமே இல்லாத பள்ளிகளுக்கென்று புதிதாக மைதானங்களை ஏற்படுத்துவதக் காட்டிலும், அம்மைதானங்களை உருவாக்குவதற்கான தொகையைக் கழிப்பறை இல்லாத பள்ளிகளில் அவ்வசதியை ஏற்படுத்துவதற்காகச் செலவழிப்பதே சாலச் சிறந்ததாகும்.
  • இது தவிர, ஏற்கெனவே இருக்கும் கழிப்பறைகளைச் செப்பனிடவும், அக்கழிப்பறைகளுக்கான போதிய தண்ணீர் வசதி, தூய்மைப் பணியாளர் ஊதியம் போன்றவற்றுக்கும் அத்தொகையினைச் செலவிடலாம்.
  • பள்ளிகளுக்கு மைதானங்களே தேவையில்லை என்பது நமது வாதமல்ல. இளம் பருவத்தினராகிய மாணவ மாணவியரின் உடல் ஆரோக்கியத்தைக் காக்க உடற்பயிற்சியும் விளையாட்டுகளும் இன்றியமையாதவையே. ஆனால், மாணவ சமுதாயம் முழுவதற்கும் நாள் தவறாமல் உடற்பயிற்சி அளித்திடவும் அவர்களில் ஒவ்வொருவரையும் ஏதாவதொரு விளையாட்டில் ஈடுபடுத்திச் சிறப்புப் பயிற்சி அளித்திடவும் நமது பள்ளி மைதானங்கள் போதுமானவை அல்ல.
  • இயல்பிலேயே சுறுசுறுப்பானவர்களாக விளங்கும் இளம் வயதினருக்குத் தனியாக உடற்பயிற்சி என்பது தேவையுமில்லை. பள்ளிகள் மூலம் அதனை வழங்குவதற்கான சாத்தியமும் இல்லை. உடலுடன் சேர்ந்து மனதையும் சமநிலைப் படுத்தும் யோகா பயிற்சிகளை வேண்டுமானால் விருப்பமுள்ள மாணவர்களுக்கு அளிக்கலாம்.
  • விளையாட்டுகளில் தனித்துவத்தைக் காட்டும் மாணவ மாணவியரிடம் மட்டும் சிறப்பு கவனம் செலுத்தலாம். அதற்குச் சொந்த மைதானம்தான் தேவை என்பதில்லை. பிற பள்ளிகளின் மைதானங்களையும் விளையாட்டுக் கூடங்களையும் உரிய அனுமதியுடன் பயன்படுத்தலாம்.
  • கடந்த இரண்டு வருடங்களாக கொள்ளை நோய்த்தொற்று நிலவிய சூழலில் சுற்றுப்புறச் சுகாதாரத்தின் முக்கியத்துவத்தை நாம் அனைவருமே உணர்ந்திருக்கிறோம்.
  • இந்நிலையில், அனைத்துப் பள்ளிகளிலும் கழிப்பறை வசதியை ஏற்படுத்தவும், அவை சுகாதாரமாகப் பராமரிக்கப்படவும் நமது பள்ளிக்கல்வித்துறை முன்னுரிமை வழங்க வேண்டும்.

நன்றி: தினமணி (08 – 09 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்